கல்வியில் பின் தங்கிய நாடுகள் எப்பாடுபட்டாவது தங்கள் நாட்டுக் குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டு வந்து சேர்க்க பல திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளன. தமிழகத்தில் காமராஜர் கொண்டு வந்த சத்துணவு திட்டம் உலகத்துக்கே ஒரு முன்னோடி திட்டம் ஆகும். சாப்பாட்டுக்குச் சிரமப்பட்டுக்கொண்டிருந்த குழந்தைகளை அழைத்து பள்ளிக்கூடத்தில் சாப்பாடு போட்டது அரசு. அதன்மூலம் பள்ளியில் சேர்ந்த குழந்தைகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. கிட்டத்தட்ட அதே போன்றதொரு திட்டம் நைஜீரியாவும் செயல்படுத்த முயற்சி செய்து இருக்கிறது. இம்முறை சாப்பாடு அல்ல, பணம். அதுவும் குழந்தைகளுக்கு அல்ல அவர்களது பெற்றோர்களுக்கு.
பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பினால் பெற்றோர்களுக்கு பணம்
பல்வேறு பிற்போக்குவாத சக்திகளால் தொடர்ந்து மிரட்டப்பட்டு வரும் நைஜீரியா நாட்டில், ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கல்வி அறிவு இல்லாமல் இருக்கின்றனர். பெண் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவரும், அதற்காக நோபல் பரிசு வென்றவருமான மலாலா நைஜீரியாவின் இந்த அவல நிலை குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.
இந்த நிலையை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று யோசித்த நைஜீரியா அரசு, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு பணம் கொடுக்க முடிவு செய்திருக்கிறது. இதன் படி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு ஆண்டுக்கு 41 டாலர்கள் வழங்க அந்த நாடு முன்வந்திருக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை பெரும் அளவுக்கு உயரலாம் என்று அந்த நாடு நம்புகின்றது.
ஏன் இல்லை நைஜீரியாவில் கல்வி அறிவு?
நைஜீரியாவில் ஏன் இந்தச் சிக்கல்? அங்கே பள்ளிக்கூடங்கள் இல்லையா அல்லது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கிறார்களா? இதற்கெல்லாம் ஒரே விடை போகோ ஹராம் என்ற பிற்போக்குவாத தீவிரவாத அமைப்பு.இவர்களை ஆப்ரிக்காவின் ஐஎஸ்ஐஎஸ் என்று சொல்லலாம்.
இவர்களைப் பொறுத்தமட்டில் கல்வி அறிவு என்பது அநாவசியமானது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு. பெண்களுக்குக் கல்வியறிவு அளிக்கப்பட்டால் அவர்கள் குழம்பிவிடுவார்கள். அதனால் அவர்களுக்கு ஒன்பது வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும் போன்ற பிற்போக்குத்தனமான கொள்கைகளால் ஆனது போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு.
இவர்கள் நைஜீரியாவின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வைத்திருந்தனர். பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளை கடத்தினர். அவர்களைச் சமையல் வேலைக்கும், பாலியல் தொழிலுக்கும் பயன்படுத்திக் கொண்டனர். பள்ளிகளைக் குறிவைத்து தாக்கி நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளை கொன்றனர். இஸ்லாம் அல்லாத வேற்று மதத்துக் குழந்தைகளை கண்டால் அவர்களைக் கட்டாய மதமாற்றம் செய்தனர். இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமலேயே வைத்திருந்தனர்.
2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு போகோ ஹராம் அமைப்புக்கு எதிராகப் பல தீவிர நடவடிக்கையை எடுத்த நைஜரிய அரசு, தற்போது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் பெற்றோர்களுக்கு பணம் தரும் இந்தத் திட்டம் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதே அமைதியை விரும்பும் அத்தனை பேரின் விருப்பம்.
Be the first to comment on "குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் பெற்றோர்களுக்கு பணம் தருகிறது நைஜீரியா"