கடந்த இரண்டு நாட்களாகவே ஊடகங்களில் ரஜினி பற்றிய செய்திதான் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு அவர் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். தூத்துக்குடி போராட்டத்தின் போது பாதிப்பு அடைந்த மக்களை நேரில் பார்வை இடச் சென்றார். போன இடத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு ( துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் செல்பி எடுப்பதை அவருடைய ரசிகர்கள் தவிர்த்திருக்கலாம் ) கிடைத்தது. அதே சமயம் அவமானமும் கிடைத்தது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் ராஜ் என்ற இளைஞர் ரஜினியைப் பார்த்து கேட்ட யார் நீங்க என்ற கேள்வியும் அதற்கு நான்தான்பா ரஜினிகாந்த் என்று ரஜினி பதில் அளித்ததும் சமூக வலைதளங்களில் பலவிதமாகப் பேசப்பட்டுவிட்டது. முதலில் சந்தோஷ் ராஜ் யார் என்று பார்ப்போம். அவர் SFI(Student Federation of India)ன் ஒரு உறுப்பினர். எப்போதுமே எழுச்சி உணர்வுடன் இருக்ககூடிய ஒரு இளைஞர். போராட்டம் நடத்திய போதெல்லாம் எட்டிப்பார்க்காத ரஜினி, வீழ்ந்து கிடந்தபோது துக்கம் விசாரிக்க வந்தபோது அவரைப் பார்த்து ” யார் நீங்க ” என்று கேள்வி எழுப்பியதில் தவறு எதுவும் இல்லை. சந்தோஷின் துணிச்சல் பாராட்டுக்கு உரியது. அதே சமயம் இந்தக் கேள்வியை மற்ற அரசியல்வாதிகளிடம் இதுவரை யாரேனும் எழுப்பி இருக்கிறார்களா? இனிவரும் காலங்களில் வேறு யாரிடமாவது எழுப்பப் போகிறார்களா?
நேற்று விஜய்சேதுபதி ஒரு டுவீட் போட்டார். ரஜினியால் எந்த நல்லதும் நடக்கக்கூடாது என்பதில் பலர் அதீத தீவிரம் காட்டுகிறார்கள் அவர் நல்ல மனிதர் என்பது தான் அவருடைய கருத்து. அதே போல் நேற்று மாலை சிவகங்கை சாதிவெறி பிரச்சினை குறித்து நேரில் விசாரிக்க சென்று அப்பகுதி மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார் பா.ரஞ்சித். அப்போது ரஜினியின் பேச்சு குறித்து வினா எழுப்பியதற்கு ” அவர் போராட்டமே வேண்டாம்னு சொல்லல… போராட்டத்தின் பெயரில் நடக்குற வன்முறை தான் வேணாம்னு சொல்றாரு… ” என்று பதில் அளித்தார். ஆக, ரஜினி சொன்ன கருத்தை தவறான புரிதலுடன் தங்கள் இஷ்டத்துக்கு திரித்துக் கொண்டு கண்மூடித்தனமாக எதிர்ப்பது முட்டாள் தனம்.
அவருடைய போராட்டம் குறித்த பேச்சை சற்று நிதானமாக யோசித்து பார்த்தால் அவர் பேசியதில் தவாறு ஏதும் இல்லை என்பது நன்கு புரியும். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் சரி, தூத்துக்குடி போராட்டத்தின் போதும் சரி, சில அரசியல் கட்சிகளின் அடியாட்கள் அல்லக்கைகள் முறையாக நடக்கும் போராட்டத்தை சிதைக்கும் வண்ணம் வன்முறையை தூண்டி விடுகிறார்கள். அது பெரிய அளவில் கொழுந்துவிட்டு எரிந்து பலரை காவு வாங்குகிறது. எந்தப் போராட்டமும் அரசியல்கட்சி ஆட்களை உள்ளே விடாதவரை அமைதியாகத் தான் நடந்து வந்து உள்ளது. ஆக, சமூக விரோதிகள் என்று ரஜினி சொன்னது உயிர் கொடுத்து போராடிய மக்களை அல்ல… மக்களின் உயிரை லேசாக எண்ணி அதை வைத்து அரசியல் செய்யும் சில அரசியல் கட்சிகளின் அடியாட்களை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இப்போது ரஜினியை சகட்டுமேனிக்கு எதிர்ப்பவர்கள், ஒரு காலத்தில் ரஜினியின் புகழை வைத்து அவருக்கு ஜால்ரா தட்டி பணம் சம்பாதித்தவர்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.
காலாவை புறக்கணிப்போம்!
சமூக வலைதளங்களில் காலாவை புறக்கணிப்போம் என்று ஒரு முட்டாள் கூட்டம் சுற்றி வருகிறது. படத்திற்கான டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகமாக இருந்தாலோ படத்தில் சமூகத்தைக் கெடுக்கும் காட்சிகள் வசனங்கள் இருந்தாலோ காலாவை புறக்கணிப்போம் என்று சொல்வதில் சிறிது நியாயம் இருக்கிறது. ஆனால் மக்களின் வாழ்வாதார பிரச்சினையைப் பேசும் ஒரு படத்தை புறக்கணிப்போம் என்று சொல்வது எல்லாம் மகா அரசியல். ( குறிப்பு: ரஜினியைக் காட்டிலும் ரஞ்சித் மேல உள்ள காண்டு. இவனையெல்லாம் எப்படி வளரவிடலாம் என்ற வயித்து எரிச்சல் ).
பத்திரிக்கையாளரிடம் மரியாதைக் குறைவாக “ஏய்” என்று பேசியது கண்டிக்கத்தக்கது தான். அதற்கு ரஜினி வருத்தம் தெரிவித்துவிட்டார். அதே சமயம் பத்திரிக்கைகள் அனைத்தும் நடுநிலைமையாக செயல்படுகிறதா என்பது கேள்விக்குறி. விஜயகாந்த் சொன்னது போல் பாதிக்கும் மேற்பட்ட பத்திரிக்கைகள் ஜிங்ஜக் வேலையை தான் செய்துகொண்டு இருக்கிறது. மொத்ததில் தவறு(போராட்டத்தின் போது வராதது) ரஜினி மீதும் உண்டு. அவருடைய கருத்தை தவறாகப் புரிந்துகொண்டு சகட்டுமேனிக்கு எதிர்ப்பவர்கள் மீதும் உண்டு. ஆனால் போராட்டம் குறித்த ரஜினியின் பேச்சில் நிச்சயம் தவறு இல்லை.
Be the first to comment on "தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினி சொன்னதில் தவறு ஏதும் இல்லை!"