தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட நிஜமான நம் வீட்டு தங்கைகள்! – நடிகர் விஜய்யும் அண்ணன் தங்கை பாச படங்களும்!

நூறு ஆண்டுகால பெருமை வாய்ந்த இந்த சினிமா உலகம் இந்த உலகில் உள்ள அத்தனை பெண்களின் இயல்பையும் தன்மையையும் விதவிதமாக காட்டியிருக்கிறது. 

ஆனால் வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் பெண்களை  இந்த சினிமா உள்ளதை உள்ளபடி காட்டி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினால் அவ்வளவாக இல்லை என்று தான் சொல்லவேண்டும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வந்த திரைப்படங்களில் களை வெட்டும் ஒரு பெண் லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு இருப்பார். களை வெட்டும் பெண்கள் உண்மையில் லிப்ஸ்டிக் வாங்கும் அளவுக்கு வசதிகளுடன் இருக்கிறார்கள்? மஞ்சள் பூசிய முகம் என்று காட்டினால் கூட அதை நம்பலாம்… ஆனால் ரோஸ் பவுடரும் கண் மையும் லிப்ஸ்டிக்கும் நிறைந்த ஒரு முகம் உடையவள் களை வெட்டும் பெண் என்று காட்டினால் அதை எப்படி நம்ப முடியும்? அந்த அளவுக்கு இயல்பற்ற தன்மையுடன் தான் நம் சினிமா இருந்து வந்திருக்கிறது…

ஏகப்பட்ட படங்களில் இப்படி சினிமாத்தனமான காட்சிகள் இருக்கின்றன. ஆனால் உண்மையில் வறுமையில் வாடும் பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை உண்மையாகவே காட்டிய சினிமாக்கள் இதே தமிழ் சினிமாவிலும் உள்ளது. தமிழ் சினிமா காட்டிய அந்த உண்மையான நம் வீட்டுப் பெண்களைப் பற்றி பார்ப்போம். 

குறிப்பாக தங்கையாக நடித்த நம் வீட்டுப் பெண்களை பற்றி பார்ப்போம். 

அண்ணன் தங்கை பாசம் என்றாலே கிழக்கு சீமையிலே என்ற படம்தான் முதலில் நினைவுக்கு வரும்.  அதற்கு முன்னர் எம்ஜிஆர் சிவாஜி போன்ற பலரும் நடித்து தள்ளி இருக்கிறார்கள். ஆனால் பாரதிராஜாவின் இந்த கிழக்குசீமையிலே, தாவணி கனவுகள் படங்களுக்குப் பிறகு நிறைய படங்கள் அண்ணன் தங்கை கதையை மையமாக வைத்து உருவாக தொடங்கின. 

அப்படி வெளிவந்த சமீபத்திய சினிமாக்களில் அண்ணன் தங்கை உறவு எந்த சினிமாக்களில் சிறப்பாக காட்டப்பட்டு இருக்கிறது என்றால் முதலில் விஜய் தான் நினைவுக்கு வருவார். நிஜ வாழ்க்கையில் தங்கையை இழந்தவர் என்பதால் நடிகர் விஜய்க்கு “அண்ணன் – தங்கை” என்கிற எமோஷன் ரொம்ப நன்றாகவே செட் ஆகிறது. 

கில்லி வேலாயுதம் போன்ற படங்களில் அவருடைய தங்கையாக நடித்து இருப்பார்கள் சில நடிகைகள்.  ஆனால் அவர்களைவிட திருப்பாச்சி படத்தில் தங்கையாக நடித்த அந்த மஞ்சள் பூசிய அந்த கிராமத்து தங்கை தான் நிறைய பேருடைய மனதை கவர்ந்து இருக்கிறார் என்பதே உண்மை. ஓஹோ கிராமத்து தங்கைதான் நம் வீட்டுப் பெண்கள் என்றால் கிராமமும் நகரமும் இணைந்த ஒரு பகுதியில் வாழும் பெண்கள், நகரத்தில் வாழும் பெண்கள், இவர்கள் எல்லாம் நம் வீட்டுப் பெண்கள் கிடையாதா? கிராமப் புறத்தில் இருக்கும் மஞ்சள் பூசிய முகங்கள் தான் உங்களுக்கு நம் வீட்டுப் பெண்களா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பலாம். இது முழுக்க முழுக்க கிராமப்புறத்தில் அறியாமையுடன் அப்பாவித் தனத்துடன் வாழும்  பெண்கள் பற்றிய கட்டுரை. 

கிராமப்புற பெண் என்றதும் உடனே “அண்ணே எங்க அண்ணே” என்று ஆடிப் பாடிய, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை ஐஸ்வர்யா ராஜேஷ்  கண்முன் வந்து நிற்பார். ஆனால் இங்கு  நம் வீட்டு தங்கை என்று சொல்ல வருவது ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து  ஒதுக்கப்பட்டவர்களையோ ஜாதி ரீதியாக கொஞ்சம் மேலானவர்களையோ சொல்லவில்லை. 

முழுக்க முழுக்க வசதி இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தங்கைகளை பற்றிய பதிவு இது.  இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை தங்கை, சிம்புவின் வாலு, உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், கில்லி, வேலாயுதம், “நீ படம் எடுன்னா… நான் வேலைக்கு போய் சம்பாதிச்ச காசு கொடுக்கிறேன்…” என்று சொன்ன ராட்சசன் தங்கை உட்பட எல்லோருமே வசதியான, ஓரளவுக்கு நிலபுலம் உடைய, படித்த அப்பா அம்மாக்களை, படித்த உறவினர்களை உடையவர்களாக இருந்தாலும் வசதி இல்லாதது போல் காட்டிக் கொண்ட “ஐயோ தங்கச்சி… என்று உருகி மருகிய” மிகைப்படுத்தப்பட்ட அண்ணன்-தங்கை சினிமாக்கள். இயக்குனர் சங்கரின் அந்நியன் படத்தில் விக்ரமின் இளம் வயது காலத்தில் அவருடைய தங்கை  மழைத்தண்ணீர் குட்டைக்குள் விழுந்து கரண்ட் ஷாக் அடித்தது இறந்து போவார். அது பார்ப்பதற்கு மனதை உருக்கும் காட்சியாக இருந்தாலும் அது மிகைப்படுத்தப்பட்ட ஒரு தங்கையை வர்ணித்ததாகத்தான் பார்க்கப்படுகிறது. 

ஆனால் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக இருந்து  நல்ல நல்ல சினிமாக்கள் எடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் வசந்தபாலன், இயக்குனர் பாலாஜி சக்திவேல் இருவரும் தான் உண்மையான தங்கைகளை திரையில் காட்டியிருக்கிறார்கள். 

அங்காடித்தெரு படத்தை பற்றி பார்ப்போம். இந்த படத்தில் கதாநாயகனாக லிங்குவுக்கும் கதாநாயகியான கனிமொழிக்கும் தங்கை இருப்பார்கள். கதாநாயகனின் தங்கை  மெட்ராஸில் இருக்கும் தன் அண்ணனிடம் போன் பேசி முடித்து விட்டு, அந்த பேருந்து நிலையத்தைச் சுற்றி பார்க்க  அந்த சிறுமியின் கண் முன்னே ஒரு பெண் துணி கடை பையை எடுத்துச் செல்கிறார். அந்தப் பையை வைத்திருக்கும் பெண்ணை பின்தொடர்ந்து செல்லும் அந்த சிறுமி  அக்கா இந்தப் பை… பை இருக்கிற கடையில தான் எங்க அண்ணன் வேலை செய்து… இந்த பைய எனக்கு தரீங்களா… என்று கேட்டு வாங்கி விட்டு அந்தப் பையை ஆசையாக இறுக்கி அணைத்துக் கட்டிக் கொண்டு வீட்டிற்கு ஓடி வந்து தன் அப்பா போட்டோவுக்கு பக்கத்தில் வைக்கிறாள் அந்தச் சிறுமி. 

இதேபோல கனிமொழியின் தங்கையும் வறுமையில்தான் வாடி வருகிறாள். அவள் ஒரு பணக்கார வீட்டில் வேலைக்காரியாக வேலை செய்ய, பருவம் எய்திய போது அந்த சிறுமியை ஒரு குப்பை குழிக்குள் தள்ளி வைப்பது போல்  ஒரு குப்பை அறைக்குள் தள்ளி வைத்திருக்கிறார்கள். அதை பார்த்த அக்கா கனிமொழி மனம் உடைந்து போய் அவளை அழைத்துக்கொண்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் அவளுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்துவிட்டு, தொடர் வறுமையினாலும் அதிகாரவர்க்கத்தின் தொடர் ஆதிக்கத்தினாலும் எதுவும் செய்ய முடியாமல் கையறு நிலையில் தன்னுடைய தங்கையான நாகம்மாவை வேறொரு மாநிலத்திற்கு வீட்டு வேலைக்காரியாக அனுப்பிவிட்டு சோகத்துடன் கனமொழியும் லிங்குவும் திரும்பி  மீண்டும் தங்களின் துன்பகரமான வேலையைப் பார்க்கத் தொடங்குகிறார்கள்.  

இதேபோல இயக்குனரும் பாலாஜி சக்திவேலின் கல்லூரி படத்தைப் பார்ப்போம். படத்தின் நாயகனான முத்துவை தேடி நாயகி தமன்னா ஸ்கூட்டியில் பயணிப்பார்.  முத்துவின் ஊருக்குள் நுழைந்ததும் மேடும் பள்ளமும் குண்டும் குழியும் இருக்கும் சாலையில் ஸ்கூட்டியை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி ஓட்டிச் செல்கிறார். வாட்டி எடுக்கும் வெயிலில் தலையில் துண்டை கட்டிக்கொண்டு, ஒடுக்கு விழுந்த முகத்துடன் செருப்பில்லாத கால்களுடன் கையில் காப்பு படிந்துபோக வேலை செய்யும் கிராமத்து மக்களை ஆச்சரியமாக பார்க்கிறார் நாயகி. தன் நண்பன் முத்துவை பற்றி அவர் விசாரிக்க, முத்துவின் தங்கை செல்வி வெறும் கால்களுடன்… கல் குவாரியில் இருந்து வேகமாக மலையேறி சாலைக்கு வருகிறார். எங்க அண்ணன தேடி வந்தீங்களா, வாங்க வீட்டுக்கு போய் பேசலாம்…  என்று சொல்லும் செல்வி,  ஸ்கூட்டியில் அமர சொன்னபோதும் இல்ல வேண்டாம் பரவாயில்ல என்று சொல்லி விட்டு வெறும் கால்களுடன் வீட்டிற்கு ஓடியே செல்கிறார். வீட்டிற்குள் அண்ணனைத் தேடி ஓடும் அந்த செல்வி, அண்ணன் இல்லை என்றதும் நாயகியிடம் அதை சொல்லி விட்டு, கலர் வாங்கி வரட்டுமா… காபி வைத்து தரட்டுமா… உள்ள யாச்சும் வாங்களேன் என்று அன்போடு அழைத்து தன் அம்மா இறந்ததை பற்றி சொல்கிறார். தான் ஏன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை என்பதை பற்றிச் சொல்கிறார்.  அண்ணனுடைய படிப்புக்காக தன் படிப்பைத் தியாகம் செய்துவிட்டு கல்லுடைக்கும் செல்வி போன்ற அந்த பிஞ்சு விரல்களை உடைய சிறுமிகள் இன்றும் நம் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். 

அதேபோல் ஏ.எல்.விஜய் அவர்களின் மதராசபட்டினம் படத்தில் ஆர்யாவின் தங்கையாக ஒரு சிறுமி வருவாள். அண்ணனை விரும்பும் அந்த இளவரசி சிலேட்டில் அண்ணன் பெயரை “பாதி” என்று எழுத அதை “பரிதி” என்று சிரித்துக்கொண்டே மாற்றும், நீங்க ரொம்ப நல்லவங்க எங்க அம்மா சொன்னாங்க…  நான் பிறக்கும்போது அவிங்க இறந்துட்டாங்க இது அவங்களோட தாலி எங்க சொத்து எங்க அண்ணன கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்காக வைச்சிருக்கிறது என்று சொல்லும் அந்த தங்கை நிச்சயம் நம் வீட்டுப் பெண் தான்.  அந்த படத்தில் உள்ள கதை சுதந்திரத்திற்கு முன்பு எழுதப்பட்டது போல் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளாகியும் அதே மாதிரி பெண்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா? 

அங்காடித்தெரு, கல்லூரி, மதராசபட்டினம் இந்த மூன்று படங்களிலும் காட்டப்பட்டது போல  சரியாக படிக்க வசதி இல்லாமல்… அங்கும் இங்கும் அலைந்து திரிந்து,  மற்ற சிறுமிகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் துள்ளலான வாழ்க்கையை வாழாமல்…  அண்ணன்களை நம்பி அண்ணன்களுக்காக தங்களுடைய வாழ்க்கையை விட்டுக்கொடுத்து… 2020லும் சில அப்பாவி இளம் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அவர்களை இந்த சமூகம் சுயம்புவாகவும் வாழ விடவில்லை.  முறையான கல்வியையும் கற்க விடுவதில்லை. 2019ஆம் ஆண்டு ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை பேட்டி கொடுக்கும்போது “எங்களுடைய கிராமத்தில் சரியான சாலை வசதி, மின்சார வசதி, தண்ணீர் வசதி, பஸ் வசதி” போன்றவை இல்லை என்று சொல்கிறார். நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி தன் அண்ணன் மீது அவ்வளவு உயிராக இருந்திருக்கிறார். மேற்கண்ட சினிமாக்களில் காட்டப்பட்டது போல அந்தப் பெண்ணின் அண்ணனும் விடாமுயற்சியும், முற்போக்கு சிந்தனையும்,  எதையும் எதிர்கொள்ளும் திறனுடனும் வளர்ந்திருக்கிறார்.  அப்படிப்பட்ட அண்ணனை உயிருக்குயிராக நேசித்த அந்த தங்கை தான் இறப்பதற்கு முந்தைய நாள் அண்ணனுக்கு பிடித்த உணவான கீரை வகைகளை எல்லாம் கேட்டு வாங்கி வந்து சமைத்து தந்திருக்கிறார். இப்படிப்பட்ட தங்கைகளை தான் இந்த சமூகம் தொடர்ந்து இருளுக்குள் தள்ளிக் கொண்டே இருக்கிறது. அவர்கள் சீரழிக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்த பிறகு நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து உச் கொட்டுகிறோமே தவிர அவர்கள் நம் கண்முன்னே கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் போது நாம் அவர்களுக்கு உதவ மறுத்து  கண்டும் காணாமல் செல்கிறோம் என்பது தான் உண்மை. 

 

Related Articles

“பர்த்டே செலிபிரேசன் வீடியோ லின்க்... கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளம் முழுக்க அதிகம் பேசப்பட்ட வார்த்தை "link bro" என்பது தான். இலங்கையை சேர்ந்த இளம் காதல் ஜோடியின் உல்லாச வீடிய...
இயக்குனர் லோகேஷ் கனகராஜ்! – இவருக்... இளமையும் சினிமாவிற்குள் நுழைந்த கதையும்:  மார்ச் 11 1984 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள கிணத்துக்கடவு என்னும் ஊரில் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர...
12வது நாளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்டது ... 12வது நாளாகத் தொடர்ந்து பெட்ரோலின் விலை 36 பைசா உயர்த்தப்பட்டு மும்பையில் லிட்டர் 85.65 ரூபாயாக விற்கப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்களாக உயர்த்தப்பட்டுக...
தீபாவளிப் பண்டிகை – அறிந்ததும் அறியாததும... தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதன் காரணம் – புராணப் பிண்ணனி, நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.நரகாசுரன் என்ற அசுரனது கொடுமைகள் தாங்காமல் அனைவரும் கிருஷ்ண பா...

Be the first to comment on "தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட நிஜமான நம் வீட்டு தங்கைகள்! – நடிகர் விஜய்யும் அண்ணன் தங்கை பாச படங்களும்!"

Leave a comment

Your email address will not be published.


*