விருமாண்டி படத்திற்கும் பாக்ஸர் வடிவேலுவிற்கும் என்ன சம்பந்தம்? பாக்ஸர் வடிவேலுவுக்கும் வடசென்னை படத்திற்கும் என்ன சம்பந்தம்?

Boxer Vadivelu Virumaandi VadaChennai

முதலில் பாக்ஸர் வடிவேலுவை பற்றி பார்த்து விடுவோம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை பாக்ஸர் வடிவேலு என்பவர் பெயர் அடிக்கடி பத்திரிக்கைகளில் வந்துள்ளது. சென்னையின் மிக முக்கியமான ரவுடியாக இருந்தார் அவர். அவரை சுற்றி எப்போதும் ஒரு பட்டாளம் இருந்துகொண்டே இருக்கும். 

ஒருகட்டத்தில் பாக்ஸர் வடிவேலு கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். அங்கேயும் அவருக்கு என்று ஒரு தனிப் பட்டாளம் ஒன்று உருவானது. ஜெயிலுக்கு உள்ளேயும் தனது ரவுடியிசத்தை தொடர்ந்தார். சிறைக்குள்ளயே போதைப் பொருட்கள் கடத்துவது, தன் நண்பர்களை சந்தோசமாக வைத்துக் கொள்வது என்று ஜெயிலிலும் கெத்து குறையாமல் வாழ்ந்தவர் பாக்ஸர் வடிவேலு. 

திடீரென ஒருநாள் அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட அவர் காவல்துறை அதிகாரிகளிடம் தன்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொல்லி வற்புறுத்துகிறார். ஆனால் காவலாளிகளோ ரொம்ப சீரியஸ் என்றால் தான் தனியார் மருத்துவமனை மற்றபடி அரசு மருத்துவமனை தான் என்கிறார்கள். ஆனால் பாக்ஸர் வடிவேலோ போகும் வழியிலயே உடல் வலுவிழந்து இறந்து போகிறார். போலீஸ்கள் பாக்ஸர் வடிவேலு இப்படித்தான் இறந்தார் என்று தகவல் தெரிவிக்கிறது. 

ஆனால் பாக்ஸர் வடிவேலுவின் நண்பர்கள் அதை நம்பவில்லை. காவல் அதிகாரிகள் பாக்ஸர் வடிவேலுவை அடித்துக் கொன்றுவிட்டு பொய் சொல்கிறார்கள் என்று அவருடைய நண்பர்கள் ஆவேசம் அடைகின்றனர். வன்முறையில் ஈடுபட தயார் ஆகிறார்கள். 

காவலாளிகளை அடித்து நொறுக்கிறார்கள். ஜெயிலுக்குள் இருந்த பெரும்பாலான இடங்கள், பொருட்கள் உடைத்து நொறுக்கப்படுகின்றன. கம்பிகள் வளைந்து கிடக்கின்றன. ரத்தம் ஒழுகும் தலையுடன் காவலாளிகள். சிலர் இறந்தும் விட்டனர். கேட்டை தூக்கிக் கொண்டு ஒரு படை விரைந்து வந்த காவல் படையை அடித்து நொறுக்குகிறது. இதோடு நிறுத்திக் கொள்வோம். இப்போது விருமாண்டி படத்திற்கு வருவோம். 

விருமாண்டி படம் ரிலீஸாவதற்கு முன்பு ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்துள்ளது என்பதை நாம் அறிவோம். ஆனால் அந்தப் படத்தில் நிறைய விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை என்பதை நாம் அறியவில்லை. நாம் அறியாமல் இருப்பது நம்முடைய குறைபாடு அல்ல. கமல் படங்கள் பொதுவாக அப்படித்தான் இருக்கும். 

ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் ஒவ்வொரு விஷயங்கள் தெரிய வரும். அதுபோல தான் அந்தப் படத்தில் வரும் ஜெயில் சண்டைக் காட்சியும். அவ்வளவு பெரிய சிறைக்குள் வன்முறை வெடிக்கும். 

அந்தக் காட்சிகள் எல்லாம் உண்மையிலயே நடந்தவை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? முன்பு சொன்ன பாக்ஸர் வடிவேலுவை பற்றி 90’s கிட்ஸ் தெரிந்திருக்கவில்லை. வட சென்னை பகுதியின் மிக முக்கியமான போதை கடத்தல் ரவுடி தான் இந்த பாக்ஸர் வடிவேலு. மேலே சொன்னது போல பல வழக்குகளின் காரணமாக அவரை சிறையில் அடைக்க நேரிட்டது. அப்படி இருந்தும் அவர் சிறைக்குள் கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு போதை கடத்தல் தொழிலை செய்து வந்தார். வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் வருமே அதைப் போல. அந்தப் படத்தில் காட்டப்படுவது போல, வெளியே இருந்து கடத்தல் பொருள்கள் சிறைக்குள் விதவிதமாக எப்படியெல்லாம் செல்கிறதோ, கிட்டத்திட்ட அதேபோல பாக்சர் வடிவேலுவின் சிறை காலத்திலும் நடந்திருக்கிறது. 

பாக்ஸர் வடிவேலு விஷயத்தில் நடந்த இந்த சம்பவங்கள் அனைத்தும் விருமாண்டி படத்தில் வரும் ஜெயில் சண்டைக்காட்சிகளை போலவே நடந்தவை. விருமாண்டி படம் பல காரணங்களால் பல பிரச்சினைகளை சந்தித்து. அதில் இந்த பாக்ஸர் வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சிகளும் இடம்பெற்றிருந்ததால் ஒரு வகையில் அது பிரச்சினைக்கு உள்ளானதா என்று யாரும் இதுவரை சொல்லவில்லை, பேசவில்லை. 

உண்மையில் பாக்ஸர் வடிவேலு விவகாரத்தை இன்ஸ்பிரேசனாக வைத்து தான் கமல் விருமாண்டி படத்தில் அந்த ஜெயில் காட்சிகளை உருவாக்கினாரா என்று தனது சந்தேகத்தை எழுப்பியிருந்தார் “ஜெயில், மதில், திகில்…” என்ற தொடர் எழுதி வரும் காவல்துறை அதிகாரி ஜி.ராமச்சந்திரன். அவர் குறிப்பிட்டிருப்பது போல இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்றோடு ஒன்று பொருந்திப் போகிறது வேற விஷயம் என்றால் விருமாண்டி படத்தின் கதைக்கருவும் இதோடு ஒன்றிப் போகிறது. அதாவது மனித உரிமை மீறல் தான் விருமாண்டி படத்தின் கரு. 

சில சமயங்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் கூட, எதிரிகளுக்கு விலைபோய் பொய் சாட்சியங்களாக மாறிவிட நேரும்போது அரசு தரும் தண்டனை அநீதி ஆகிவிடுகிறது என்பதே கரு. போலீஸ் தரப்பு வயிற்றுப் போக்கினால் பாக்ஸர் வடிவேலு இறந்தார் என்று சொன்னாலும் வெளியில் பேசிக் கொள்வது பாக்ஸர் வடிவேலு அடித்துக் கொள்ளப்பட்டார் என்பதே உண்மை என்று பேசி உள்ளனர். 

என்ன தான் சண்டித்தனம் பண்ணாலும் அவனுடைய உயிரை எடுக்கும் உரிமையை காவலாளிகளுக்கு அரசு வழங்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி அவரை அடித்துக் கொன்றிருக்கலாம் என்ற கேள்வி எழுகிறது. அதாவது பாக்சர் வடிவேலு மரணமடைந்த காலத்திலேயே இது குறித்து பலர் விவாதித்து இருக்கின்றனர். 

கமல் ஏனோ விருமாண்டி படம் குறித்து அவ்வளவாகப் பேச விரும்பவில்லை போல. அதுபோக யாரும் ஜெயில் சண்டைக்காட்சி மேக்கிங் குறித்தும், பாக்ஸர் வடிவேலு விவகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டதா என்ற கேள்வியை யாரும் அவரிடம் கேட்கவில்லை. விருமாண்டி படம் குறித்துப் பேசினால் ஜல்லிக்கட்டி சீன் பற்றி பேசுகிறார்கள், காருக்கு அடியில் ஒளிந்துகொண்டு தப்பிச் சென்றதை பேசுகிறார்கள், மரணதண்டனை எதிர்ப்பு குறித்து பேசுகிறார்கள், அந்தக் காளையை பற்றிப் பேசுகிறார்கள், இளையராஜாவின் இசையை பற்றிப் பேசுகிறார்கள். அன்னலட்சுமியைப் பற்றி, அப்பத்தாவைப் பற்றி, அகிரா குரோசாவின் ரோஷமான் பற்றி பேசுகிறார்கள். ஆனால்  ஒருவர் கூட அந்த ஜெயில் சண்டைக் காட்சியைப் பற்றி கேள்வி கேட்டதாக தெரியவில்லை. பாக்ஸர் வடிவேலு குறித்து யாரேனும் எழுதி இருக்கிறார்களா என்று துளாவி பார்த்த வரையில் எதுவும் கிடைக்கவில்லை. ஜூனியர் விகடனில் வெளிவந்து கொண்டிருக்கும் ஜி. ராமச்சந்திரன் எழுதும் “ஜெயில், மதில், திகில்” என்ற தொடரை ஒருமுறை வாசித்துப் பாருங்கள். பாக்ஸர் வடிவேலு விவகாரம் கலைஞர் கருணாநிதி வரை பரப்பரப்பாக சென்றது குறித்து அனல் பறக்க எழுதியுள்ளார் டிஜிபி ஜி. ராமச்சந்திரன். 

இப்போது விருமாண்டி படத்தையும் வடசென்னை படத்தையும் விட்டுவிடுவோம். வடசென்னை பகுதியில் வாழும் பாக்ஸர்களைப் பற்றி பதிவு செய்த முதல் தமிழ் படம் என்றால் அது ஜெயம் ரவி நடிப்பில், எஸ்பி ஜனநாதன் வசனத்தில், கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான “பூலோகம்” படம் தான். அந்தப் படத்தில் சேரிப்பகுதியில் வாழும் பாக்ஸர்களை அவர்களின் வாழ்வியலை நன்றாக காட்டி இருப்பார்கள். குறிப்பாக இரண்டு பரம்பரைக்கு இடைப்பட்ட பாக்சிங் சண்டையில்  பங்கேற்கும் அந்த பாக்சர்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் “கில்லர்” என்று பெயர் வைத்து, அவர்களை ரவுடிகள் போலவும் பொறுக்கிகள் போலவும் காட்டி பணம் சம்பாதிக்க முயற்சி செய்யும். அவர்களின் அரசியலை புரிந்து கொண்ட ஜெயம் ரவி, தன் பகுதி வாழ் மக்களுடன் இருக்கும் சண்டையை மறந்து விட்டு தங்களை அடிமைப்படுத்தி வேறொருவன்  பணம் சம்பாதிக்கும் நுட்பத்தை அவர்களுக்கு விளக்குவார்.  அந்தப் படத்திற்கு முன்பு வரை வடசென்னை பகுதி வாழ் பாக்ஸர்கள் எப்படி மற்ற பகுதிவாழ் மக்களால், ஊடகங்களால் பார்க்கப்பட்டார்கள்? அந்தப் படத்திற்குப் பிறகு எப்படி அவர்களின் வாழ்வு மாறியது என்பது குறித்து இதுவரை யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. 

ஒருவேளை யாராவது எழுதி இருப்பார்கள். ஆனால் அப்படி பாக்ஸர்களின் வாழ்வியலை எழுதப்பட்ட புத்தகங்கள் பெரிதாக வெளிச்சத்திற்கு வரவில்லையோ என்ற ஒரு கேள்வி எழுகிறது. வடசென்னை வாழ் பகுதி சிறுவர்கள், இளைஞர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்களுக்கு மற்ற பகுதி வாழ் மக்கள், அதிகார வர்க்கத்தினருக்கு துணை நிற்கும் போலீஸ்காரர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து எதுவும் தெரியாமல் மேம்போக்கான பார்வையில் இருந்து கொண்டு “ரவுடிகள்” என்று பட்டம் சூட்டி விடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் இந்த வடசென்னையில் சிறுவயது முதல் வாழ்ந்து பாக்ஸிங் கலையை தனது உயிருக்கு சமமாக நினைத்து வாழும் அந்த பகுதி இளைஞர்களை போலீஸ்காரர்களும் மற்ற  அப்பகுதி வாழ் மக்களும் எப்படி பார்க்கிறார்கள் என்ன நினைக்கிறார்கள்? சாதாரண இளைஞர்களையே ரவுடிகள், திருடர்கள் என்று சொல்லும் இந்த சமூகம் அவர்களை எளிதாக “கில்லர்கள்”, “கொலைகாரர்கள்” என்று சொல்லிவிடுகிறது. பாக்சர் வடிவேலு நல்லவரா? கெட்டவரா? அவர் உண்மையாலுமே ஒரு ரவுடியாக இருந்தாரா? அல்லது வேண்டுமென்றே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதா? இல்லை காசுக்காக அந்த மாதிரி கொலைத் தொழிலில் இறங்கினாரா? என்ற கேள்விகள் எல்லாம் தூக்கி ஓரமாய் வைத்து விடுவோம். 

ஒருவர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தில் இருந்து,  தவறான பாதையில் மேல் நிலைக்கு வந்துவிட்டார் என்றால் உடனே அந்தப் பகுதிவாழ் மக்கள் அந்த சமூக மக்கள் எல்லோருமே அப்படித்தான் இருப்பார்கள் என்று  நினைப்பது என்ன விதமான மனநிலை? “பூலோகம்” படத்தை தொடர்ந்து வடசென்னை பகுதி வாழ் பாக்சர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, ஆர்யாவை ஹீரோவாக நடிக்கவைத்து “சல்பேட்டா” என்னும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பா. ரஞ்சித். வடசென்னை பகுதி வாழ் சிறுவர்கள், இளைஞர்கள் என்றால் அவர்கள் காசுக்காக கஞ்சா விற்பது, காசுக்காக திருடுவது,  பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ரவுடி தொழிலில் இறங்குவது என்று  காலம் காலமாக காட்டிக்கொண்டிருந்த சினிமாக்களில் இருந்து விலகி வடசென்னை மீதான முற்றிலும் புதுமையான ஒரு பார்வையை  வெளிச்சம் போட்டுக் காட்டினார் இயக்குனர் பா. ரஞ்சித். பூலோகம் படத்தில் “எங்க ஏரியால வந்து பாரு” எத்தனை சச்சின் டெண்டுல்கர், எத்தனை  ரொனால்டோ இருக்கிறார்கள் என்று…  ஆனா இந்த மாதிரியான திறமைசாலிகளை எல்லாம் நீங்க ஒதுக்கி வைத்துவிட்டு, திறமை இல்லாதவனையெல்லாம் ஒலிம்பிக்கில் நுழைய விட்டு கடைசியில் உலக அரங்கில் போய் நம்ம நாடு அவமானப்பட்டு நிற்கும்”  என்று வசனம் பேசியிருப்பார் ஜெயம் ரவி. 

 சுசீந்திரனின் சாம்பியன் படத்தில்,  வளரும் இளைஞன் ஒருவன் நான் வடசென்னை பகுதி வாழ் இளைஞர் என்று சொன்னதும் அவனை “ரவுடி ஏரியா” என்று முத்திரை குத்தி, பள்ளி விளையாட்டு குழுவிற்குள் சேர்ப்பதற்கே யோசிப்பார்கள்.  அதைப்போல வடசென்னை வாழ் பாக்சர்கள் என்றால் அவர்கள் கில்லர்கள் என்று ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கும் இந்த சமூகம் அவர்களை மேடை ஏற விடுகிறதா? சரியான மேடையை அவர்களுக்கு காட்டி இருக்கிறதா? என்பதை இயக்குனர் பா. ரஞ்சித் தன்னுடைய “சல்பேட்டா” படத்தில் பதிவு செய்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

251 ரூபாய்க்கு உலகின் மலிவான திறன்பேசி த... நொய்டாவை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான மோஹித் கோயெல் உட்பட மூன்று பேரை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்த...
ஐபிஎல் போட்டியை புறக்கணித்தது போல் சினிம... கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்றும் இதற்கு மேல் இந்த வழக்கை தூக்கிக் கொண்டு இன்னும் பதினைந்து வருடங்களுக்க...
மாற்றத்திற்கு உண்டான சிந்தனையே ரஜினியிடம... கடந்த வருடம் டிசம்பர் 31ம் தேதி ரஜினி தன் அரசியல் அறிவிப்பை அறிவித்தார். ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்றும் நான் இன்னும் கட்சி ஆரம்பிங்கலைங்க என்கிறார். ஆ...
வங்கி நெருக்கடிகளுக்குத் தீர்வு காண ஹைதி... ஹைதிராபாத் தற்போது அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வாஸ்து படி இருக்க வேண்டும் என்பதற்காக அரசு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வாஸ்...

Be the first to comment on "விருமாண்டி படத்திற்கும் பாக்ஸர் வடிவேலுவிற்கும் என்ன சம்பந்தம்? பாக்ஸர் வடிவேலுவுக்கும் வடசென்னை படத்திற்கும் என்ன சம்பந்தம்?"

Leave a comment

Your email address will not be published.


*