தமிழ் சினிமாவும் பறவைகளும்! – தமிழ் சினிமாவில் பறவைகள் எப்படியெல்லாம் காட்டப்பட்டுள்ளது? 

தமிழ் சினிமாவில் இதுவரை, “பறவைகளை” இரண்டு காதலர்கள் கைகோர்த்துக்கொண்டு  ஓடித்திரியும் காட்சிக்கு உவமையாக காட்டியிருக்கிறார்கள்.   நாயகிகள் கிளி, புறா, மயில், குயில், குருவி போன்ற பறவைகளை ஆசையாக வளர்க்கும் அன்புள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.  நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே தூதுவிடும் வேலையை இந்தப் பறவைகள் செய்யும்.  இப்படி இப்பறவைகள் காதலர்கள் ஓடிப் போவதற்கு உவமையாகவும் காதலர்கள் ஒன்று சேர்வதற்கு தூதுவனாகவும் மட்டுமே  காட்டிக்கொண்டிருந்த வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து  முற்றிலும் வேறுபட்ட, மனிதம் – பறவைகள் சம்பந்தப்பட்ட கதைகள் காட்டிய சினிமாக்களும் சமீப காலங்களாக வர தொடங்கி உள்ளனர். 

சாகும் தருணத்தில் பறவைகளை நினைத்துப் பார்த்தல்: 

பறவைகள் என்ற தலைப்பில் விஜய் ஆண்டனியின் சலீம் படம் இல்லை என்றால் எப்படி? இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படும் சலீம் அவர்களின் பெயரை ஹீரோவிற்கு வைத்ததால் படத்தில் பறவை காட்சிகளும் வைத்திருப்பார்கள். படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு பெண் சாலையில் ரத்தக் கறைகள் மிகுந்த தன் உடலை ஊர்ந்து இழுத்துச் செல்வாள். அப்போது ஒரு ஆந்தை நிலா வெளிச்சத்தில் அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்க்கும்.   அடுத்ததாக சலீம் அறிமுகமாகும் ஆவான். அவன் தொழுகை செய்வான். அப்போது அவனை சுற்றி அந்த அறையில் புறாக்கள் நடந்த வண்ணம் இருக்கும். 

டாக்டர் சலீம் என்ற போர்டை காண்பிப்பார்கள். அப்போது அந்த போர்டு அருகே இரண்டு புறாக்கள் அமர்ந்திருக்கும்.  குரான் புத்தகம் விரித்து வைத்த நிலையில் டேபிளில் இருக்கும். அப்போது அதன் அருகே ஒரு புறா இருக்கும். அவனுடைய  முகம் பார்க்கும் கண்ணாடி அருகே ஒரு புறா இருக்கும்.  இப்படி வீடு முழுக்க புறாக்கள் நிறைந்திருக்கும்.  எந்நேரமும் அவர் வீட்டில் புறா சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அதே படத்தின் இறுதி கட்டத்தில் தன்னுடைய நண்பருக்கு போன் செய்து, “இனி எல்லாம் முடிய போகுது இனி நான் திரும்ப வருவனான்னு தெரியல…  எனக்கு ஒரே ஒரு உதவி செய்வீங்களா? என் வீட்டுல இருக்குறவங்க பறவைகளை மட்டும் பார்த்துக் கொள்கிறீர்களா” என்று வாழ்க்கை எங்கே போகிறது என்று தெரியாத சூழலில் நண்பரிடம்  மிக உருக்கமாக கேட்பார். ஏனென்றால் அவர் சலீம். 

சுதந்திரத்தை கற்றுத் தருபவை – பறவைகள்: 

கபாலி படத்தில் ரஜினி மலேசிய சிறைச்சாலைக்குள் இருந்து பல ஆண்டுகள் கழித்து வெளியே வருவார். வந்ததும் அவருடைய நண்பர்கள் அவரை ஒரு பறவைகள் வளர்ப்பகத்திற்கு அழைத்துச் செல்வார்கள். ஜாலியா பறந்துட்டு இருந்த இந்த பறவைகளை இப்படி கூண்டுக்குள்ள போட்டு அடைச்சு வெச்சு இருக்கானே இவன் என்ன பண்றது?  கூண்டுக்குள்ள இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா சின்ன கம்பி போட்ட  கதவு திறந்து விட்டா பரந்த வானம்.  திறந்துவிட்டா செத்துரும் அண்ணே மற்ற பறவைகள் கொத்தி சாவடிச்சிரும் என்று நண்பர் சொல்ல, பறவையோட குணமே பறக்கிறது தாண்டா அதை பறக்க விடு. வாழ்வா சாவாங்கிறத அது முடிவு பண்ணட்டும்.  உன்னோட இந்த கருணை அதோட சாவை விட கொடுமையானது என்பார் கபாலி. 

பறவைகள் எதிர்ப்பின் அடையாளம்: 

காக்கா முட்டை படத்தில் பெரிய காக்கா முட்டையாக நடித்திருக்கும் சிறுவன் சாப்பிடும்போது கொஞ்சம் சாப்பாடு எடுத்து தன் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்கிறான்.  அவளுடைய அம்மா திட்டும் போது கூட கைல மாட்டுனா விளாவை எடுத்து காக்காவுக்கு போட்டு விடுவேன் என்று திட்டுகிறாள். பாக்கெட்டுக்குள் எடுத்து வைத்திருந்த சாப்பாட்டை கொண்டுவந்து காக்கைகள் நிறைய இருக்கும் இடத்தில் வைக்கிறான் பெரியவன்.  சிறியவன் கா…கா… என்று அழைக்க காக்கைகள் எல்லாம் பறந்து வந்து  அவர்கள் வைத்த சாப்பாட்டை சாப்பிடுகிறது.  மூன்று முட்டைகள் காக்கை கூட்டில் இருக்க சிறுவன் மூன்றையும் எடுத்துக் கொண்டு வா என்கிறான். பெரியவன் மூணும் இல்லை உனக்கு ஒன்னு எனக்கு ஒன்னு காக்காவுக்கு ஒன்னு என்று 2 முட்டைகள் மட்டும் எடுத்துக் கொண்டு வருகிறான்.  காக்கா முட்டையை உடைத்து குடிக்கிறார்கள். காக்கைகள் இருக்கும் அந்த மரத்தை பணக்காரர்கள் வந்து வெட்ட அதை அந்த ஏரியா சிறுவர் கூட்டம் வெளியே நின்று வேடிக்கை பார்க்கும். வெட்டப்பட்ட அந்த மரத்தைச் சுற்றி காக்கைகள் அலறிக்கொண்டு சுற்றித் திரியும்.  காக்காலாம் நைட்டு எங்க போகும் என்கிறான் சிறுவன். பாட்டி, “கோழி முட்டை விற்கிற விலைக்கு தினமும் அதை வாங்க முடியுமா,  காக்கா கருப்பா இருந்தாலும் அதுவும் பரவதான…  நம்ம கூடவே வேற இருக்குது…” என்பார். 

பணக்கார சிறுவன் தான் சாப்பிட்டது போக மிச்சம் இருக்கும் எச்சில் பீட்சாவை கொண்டு வந்து கொடுக்க காக்கா முட்டை சிறுவர்கள் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள்.  அப்போது ஒலிக்கும் பாடலில்,  “கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை வெறுத்து வெறுத்து காக்கா காக்கா முட்டை வன்னம் மாற்றி கொண்டதா?” என்ற வரி இடம்பெறும். 

பறவைகள் மனிதர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் கடவுள்: 

2.O படத்தின் முதல் காட்சியே மேகக்கூட்டங்கள் மத்தியில் பறவைகள் எல்லாம் வானில் இருந்து கீழ்நோக்கி பறந்து போவது போல் இருக்கும். பக்ஷிராஜன் செல்போன் டவரை நோக்கி செல்ல அவர் தலையைச் சுற்றி லட்சக்கணக்கான பறவைகள் சுற்றி வரும். அவர் டவர் மீது ஏற ஏற பறவைகளின் சத்தம் அதிகரித்துக்கொண்டே வரும். டவரில் தூக்கு மாட்டிக் கொள்ள கால்கள் துடிதுடிக்கும் அவருடைய கால்கள் துடிதுடிக்க பறவைகள் எல்லாம்  ஒன்று சேர்ந்து பெரும் கூச்சல் எழுப்பி அலறித் துடிக்கும். செல்போன் ஓனரை சாகடித்த பிறகு நிலா அருகே ஒரு ராட்சத கழுகு பறந்துபோகும்.  பெரிய நகரத்தின் மீது பெரிய கழுகு ஒன்று பறந்து போவது போல் அதன் நிழல் விழும். சிட்டி பக்சி ராஜனின் ஆராய்ச்சிக் கூடத்திற்குள் நுழையும்போது சிட்டுக் குருவிகள் எல்லாம் தானாக பறந்து வந்து ஒரு மனித உருவில் நின்று பக்ஷி ராஜனை அறிமுகப்படுத்தும். பறவைகள் இந்த உலகிற்கு எவ்வளவு முக்கியம் என்பதை திருவாய்மொழியில் நம்மாழ்வார் எழுதியதை குறிப்பிடுவார்.  செல்போன் டவர் ரேடியேஷன் அதிகமானதால் பறவைகள் எல்லாம் அவர் கண்முன்னே சிதைவுற்று கீழே விழுவதை பார்க்கிறார். அவர் மரத்தருகே செல்ல  குருவிக் கூட்டுக்குள் இருந்து ஒரு குருவிக் குஞ்சு அவர் கையில் விழுந்து துடித்து இறந்து போகிறது.  அது போல பல சிட்டு குருவிகள் இறந்து விட அவற்றை குழிபறித்து புதைத்துவிட்டு அதற்கு மேல் பூக்களை வைக்கிறார்.  பக்ஷிராஜன் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்துகொண்ட பிறகு அவருடைய ஆத்மா வெளியேறி அவருடைய ஆராய்ச்சிக் கூடத்திற்கு வருகிறது.  அப்போது அவர் சிட்டுக்குருவிகளை புதைத்து அதன் மேல் வைத்த பூக்களிலிருந்து வெளிச்சம் தோன்றி சிட்டுக்குருவிகளாக மாறி அந்த வெளிச்சப் பறவைகள் எல்லாம் அவருடைய உடலில் போய் ஒட்டுகிறது. 

பறவைகளும் நன்றி தெரிந்தவை: 

சில்லுக்கருப்பட்டி படத்தில் காக்கா கடி என்ற பகுதியில் காக்காவை  சிறப்பிக்கும் வகையில் நிறைய விஷயங்கள் சொல்லி இருப்பார்கள். காஸ்ட்யூம் டிசைனராக வேலை பார்க்கும் ஹீரோயின் காக்கா உருவத்தை கீ செயினாக வைத்திருப்பார். ஒருமுறை காலில் அடிபட்டு தவித்த காகத்தை மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை பார்த்து மீண்டும் பறக்க விடுகிறார் ஹீரோயின். உயிர் பிழைத்த காகம் நன்றி கடனாக தினமும் தன்னுடைய கண்ணிற்கு  அகப்படும் மினுங்களான ஒரு பொருளை கொண்டு வந்து அந்த ஹீரோயினுக்குப் பரிசுப் பொருளாக கொடுக்கிறது. காக்காவை செல்லப்பிராணியாக வளர்க்கிறார் அந்த ஹீரோயின்.  அதை வியந்து பார்க்கும் ஹீரோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்கு முன் தன் தலையில் காகம் ஆய் போவதை நல்ல சகுனம் என்கிறார். வாட்ச்மேன் அந்தக் காகத்தை விரட்ட, “விடுங்கண்ணே  அதை போய் விரட்டி விட்டேன்” என்கிறார் ஹீரோ. 

பறவைகள் வாழ்விடத்தை தீர்மானிக்கின்றன, வாழ்க்கையை கற்றுத் தருகின்றன: 

பேரன்பு படத்தில் மம்முட்டி அமுதவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவருக்கு மகளாக சாதனா, “பாப்பா” என்ற கேரக்டரில் நடித்திருப்பார். பாப்பாவுக்கு தன் அப்பாவை பிடிக்கவே பிடிக்காது.  திடீரென ஒருநாள் பாப்பா ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருப்பாள்.  அந்த மரத்தைச் சுற்றியே காகங்கள் அலறியபடி கரைந்து கொண்டிருக்கும். அமுதவன் அந்த இடத்திற்கு வேகமாக ஓடிச் செல்வார். பாப்பா ஏன் அழுகிறாய் என்று அவர் கேட்க பாப்பா உயிருக்காக துடித்துக் கொண்டிருக்கும் ஒரு சிட்டுக்குருவியை பார்த்து அழுது கொண்டிருப்பாள்.  அமுதவன் அந்த சிட்டுக் குருவியை கையிலெடுத்து இதை நான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயி சரி செய்து கொண்டு வருகிறேன் என்கிறார். அழுது கொண்டிருந்த மகள் இப்போது அழுகை நிப்பாட்டி விட்டு சரி என்று தலையாட்டுகிறாள். 

சொந்தக்காரர்கள் தன் மகளை இடைஞ்சலாக பார்க்க, “மனுஷங்க இல்லாத இடத்துல குருவிங்க சாகாத இடத்துல… ஒரு வீடு வேண்டும்…” என்கிறார் அமுதவன். 

இயற்கையான ஒரு சூழலில் மரக்கட்டைகளால் ஆன கரண்ட் இல்லாத ஒரு வீட்டில் அமுதவனும் பாப்பாவும் வசித்து வருகிறார்கள். பாப்பாவை தனியாக ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டு அங்கு தனி ஒரு மனிதராக பாப்பாவை நல்லபடியாக கவனித்துக் கொள்ள முயல்கிறார். ஆனால் பாப்பாவிற்கு அப்போதும் அப்பாவை பிடிக்கவில்லை. அப்போது ஒரு அதிகாலையில் சிட்டுக்குருவி ஒன்று அவர்கள் வீட்டிற்குள் வந்து வெளியே போக முடியாமல் தடுமாறுகிறது. அமுதவன் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து கதவை திறந்துவிட்டு அந்த சிட்டுக் குருவியை வெளியே துரத்திவிட முயல்கிறார். சிட்டுக்குருவிகள் சாவது பாப்பாவிற்கு பிடிக்காது என்பதால் எப்படியாவது அந்த சிட்டுக் குருவியை உயிர் பிழைக்க வைக்க முயல்கிறார் அமுதவன்.  சிட்டுக்குருவியை தன் கையால் பிடிக்க முயல்கிறார். ஆனால் சிட்டுக்குருவி நழுவி நழுவி செல்கிறது. 

இருந்தாலும் அந்த சிட்டுக் குருவியை முயன்று பிடித்து  வெளியே பறக்க விடுகிறார்.  இப்போது பாப்பா சிரிக்கிறாள். “என்னுடைய ஆறுமாத காத்திருப்பு சரிசெய்யாததை… என்னுடைய முயற்சி சரிசெய்யாததை…  எங்கிருந்தோ வந்த ஒரு சின்னஞ்சிறு பறவை தன் சின்னஞ்சிறு சிறகால் சரி செய்தது…” என்கிறார் அமுதவன். 

இதே பேரன்பு படத்தில் காக்கா தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவது போலவும் ஒரு காட்சி வைத்திருப்பார் இயக்குனர் ராம்.  தமிழ் சினிமாவிலேயே காக்கா தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவது போல் ஒரு காட்சி இருக்கிறது என்றால் அது பேரன்பு படத்தில் தான். 

அபூர்வ சகோதர்கள், ராட்சசன் இரண்டு படங்களிலுமே  பறவைகளை செல்லப்பிராணியாக வளர்க்கும் கதாபாத்திரங்கள் கொலை செய்யப் போவதற்கு முன் தங்களுடைய என்ட்ரியை பதிவு செய்வதற்காக அந்த பறவையை பறக்க விடுவார்கள். ஆடுகளம், மாரி இந்த இரண்டு படங்களிலும் பறவைகள் மீது  எப்படி பந்தயம் கட்டப்படுகிறது அந்த பறவைகளால் மனிதர்களுக்குள் எப்படி சண்டை வருகிறது என்பது பற்றி காட்டியிருப்பார்கள். 

பறவைகளை தமிழ் சினிமா இப்படியும் காட்டியிருக்கிறது. 

Related Articles

ஜோதிகாவின் பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக... அரசுப்பள்ளி ஆசிரியைகளின் பிள்ளைகள் அரசு அலுவலர்களின் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினால் மனம் வருந்த தக்க பதில்களே கிடை...
பல விருதுகள் வென்ற மூடர்கூடம் பட வசனங்கள... * வாழ்க்கையோட பெரும்பாலான விடியல் வழக்கமானதாவே இருக்கு... முழிச்சோம், குளிச்சோம், சாப்டோம், உழைச்சோம், உறங்குனோம்னு சக்கரம் சுத்திட்டு இருக்கு... இந்த...
மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்வதற்காக மலையை... எது அடிப்படை தேவையோ அதை மட்டும் செய்து தராது இந்திய அரசு. தேவையில்லாத விஷயங்களில் அதிக கவனத்தை செலுத்தி கால விரயமும் பணவிரயமும் செய்து பழக்கப்பட்டதாலோ...
கேட்கலனா கொல்வோம் – சாதிவெறியன்களு... சமீபத்தில் பரியேறும் பெருமாள் வெளியாகி சமூகத்தில் இந்த சாதி எப்படி குரூரமாகச் செயல்படுகிறது என்ற விவாதத்தை உண்டாக்கியது. ஒசூர் ராகவேந்திரா தியேட்டரில்...

Be the first to comment on "தமிழ் சினிமாவும் பறவைகளும்! – தமிழ் சினிமாவில் பறவைகள் எப்படியெல்லாம் காட்டப்பட்டுள்ளது? "

Leave a comment

Your email address will not be published.


*