ஜமால் மாலிக் போன்ற சிறுவர்கள் ஜெயிப்பதை ஏன் இந்த சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?

ஜமால் மாலிக் என்று இங்கு குறிப்பிடப்படுவது ஒரு நிஜ மனிதரை அல்ல. ஏ. ஆர். ரகுமான் எந்த படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கினாரோ அந்தப் படத்தின் கதாநாயக கதாபாத்திரம்தான் ஜமால் மாலிக். 

சேரியில் பிறந்து வளர்ந்த ஜமால் மாலிக் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்து பதில்களுக்கும் சரியாக பதில் சொல்லி கோடீஸ்வரன் ஆகிறான். ஆனால் அந்த மாதிரியான பகுதியில் பிறந்து வளர்ந்த ஜமால் மாலிக் கோடீஸ்வரன் ஆனால் அதை இந்த சமூகம் ஏற்றுக் கொள்கிறதா?  அல்லது நீ எல்லாம் எப்படி கோடீஸ்வரன் ஆகலாம் என்று துரத்தி துரத்தி அடிக்கிறதா என்பதை அந்த படத்தில் மிக அழகாக விளக்கி இருப்பார்கள். 

கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ஜமால் மாலிக்கின் முகத்திற்கு நேராக மிகுந்த மகிழ்ச்சியாக பேசுவது போல் இருக்கும் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகழ்ச்சிக்கு வெளியே வேறொரு முகத்தைக் காட்டுகிறார். கோடீஸ்வரன் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் ஜமால் மாலிக் சரியாக பதில் சொல்கிறான். அவன் சரியாக பதில் சொல்ல சொல்ல அந்த நிகழ்ச்சி தொகுப்பாளரின் அடிவயிற்றில் எரிய ஆரம்பிக்கிறது. ஆனால் அதை அவர் வெளியே காட்டாமல் சுற்றி இருக்கும் கேமராக்கள் முன் தன்னுடைய வேற ஒரு முகத்தைக் காட்டுகிறார். 

சிரித்துக்கொண்டே நீங்க எங்க வேலை செஞ்சீங்க எந்த மாதிரியான வேலை என்று துருவித் துருவி கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார்.  ஜமால் மாலிக் கால் சென்டரில் வேலை செய்கிறேன் என்று சொன்னதும் கால்சென்டரில் வேலை செய்கிறாயா? எந்த கால் சென்டரில் என்ன வேலை செய்தாய்? என்று இளக்காரமாக அவனை கேள்வி கேட்கிறார். அவன் தான் வேலை செய்த கம்பெனியையும் அந்த கம்பெனியில் டீ கொடுக்கும் வேலை செய்ததையும் சொன்னதும் நிகழ்ச்சி தொகுப்பாளர் சிரிக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் பார்வையாளர்கள் அனைவரும் சிரிக்கிறார்கள். 

சொல்லு நீ எப்படி ஜெயிச்ச நீ எப்படி ஜெயிச்ச என்று காவல்துறையினர் அவனைப் போட்டு வதைக்கின்றனர். ஜமால் மாலிக் என்பதை தவிர அவனுக்கு வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. சேரியில் பிறந்து வளர்ந்த நீ கண்டிப்பாக இவ்வளவு அறிவாளியாக இருக்க முடியாது, நீ ஏதோ திருட்டு வேலையை செய்து கொண்டு இருக்கிறாய், சொல் நீ செய்த திருட்டு வேலை என்ன என்று துருவித் துருவி விசாரிக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். அவன் உடலை பரிசோதிக்கிறார்கள். உடல் மீது மின்சாரம் பாய்ச்சுகிறார்கள். 

ஒருவேளை அவனுக்கு பதில் தெரிந்திருந்தால் என்று கான்ஸ்டபிள் சொல்ல உயரதிகாரி கான்ஸ்டபிளை அடிக்கப் போகிறார். அப்போது கண் விழிக்கும் ஜமால் மாலிக் எனக்கு உண்மையிலேயே பதில் தெரிந்தது நான் எந்த ஏமாற்று வேலையும் செய்யவில்லை என்கிறார். அதை கேட்க கேட்க அதிகாரிக்கு மேலும் சுருக்கென்று இருக்கிறது. 

பெரிய பெரிய மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் அறிவியல் மேதைகள், கலைஞர்கள் என்று பலரும் ஜெயிக்க முடியாத இந்த ஒரு கோடி ரூபாயை அவன் எப்படி ஜெயித்தான். அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார் அதிகாரி. 

சேரில் பிறந்து வளர்ந்த இவனுக்கு என்ன தெரியும் என்று மீண்டும் மீண்டும் அதிகாரி கத்த பதில் தெரியும் என்கிறார் ஜமால் மாலிக். சிறுவயது முதலே அவர்கள் போலீஸ்காரர்களின் துரத்தலுக்கு ஆளாகிறார்கள். ஆசிரியர்களின் வன்முறையான கண்டிப்புக்கு ஆளாகிறார்கள். பாடம் அவர்களால் சரியாக படிக்க முடியவில்லை. அவர்கள் இந்த கல்வி என்பதை வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள். 

முதல் கேள்விக்கு தயாரா என்று ஜமால் மாலிக்கிடம் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர், ஜமால் மாலிக் எஸ் என்று சொன்னதும் சும்மா உட்கார்ந்துகிட்டே ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க போறீங்க டீ ஆத்துறத விட இது நல்ல வேலை தான என்று கலாய்க்கிறார். சுற்றியிருக்கும் கூட்டம் சிரிக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு ஜமால் மாலிக்கை மட்டம் தட்ட முடியுமோ அவ்வளவு மட்டம் தட்டுகிறார் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர். அத்தனைக்கும் ஜமால் மாலிக் அசரவில்லை. 

பொதுக்கழிப்பிடம் ஒன்றை தங்கள் வசப்படுத்தி அதை வைத்து சில்லறை சம்பாதிக்கும் சிறுவர்களில் ஒருவனாக ஜமால் மாலிக் வாழ்ந்து வருகிறான். அந்த சிறுவர்களில் அவன்தான் மிகவும் பின்தங்கியவன். அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த ஜமால் மாலிக் ஒரு முறை மலம் கழித்துக் கொண்டிருந்த போது, அமிதாப்பச்சன் நம்ம சுற்றுவட்டாரப் பகுதிக்கு வந்திருக்கிறார் என்றதும் அமிதாப்பச்சன் நம்ம ஏரியாவுக்கு வந்திருக்கிறாரா அவருடைய வருகையை நாம் தவிர்த்து விடக்கூடாது, அமிதாப் பச்சனை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்று சூடான மலங்கள் நிறைந்து கிடக்கும் அந்த மலக்குழிக்குள் எதையும் நினைத்து பார்க்காமல் தொம்மென்று குதிக்கிறான் ஜமால் மாலிக். 

அப்படி கௌரவம் மானம் என்று எதையும் எதிர்ப்பார்க்காமல் ஆழத்தை பற்றி சிறிதும் கவலைப்படாமல் மாலிக் மலக்குழிக்குள் குதித்ததால் தான் அவனுக்கு அமிதாப் பச்சனின் ஆட்டோகிராஃப் கிடைத்தது. அவனுக்கு ஆட்டோகிராஃப் கிடைத்ததே அவனுடைய சகோதரனால் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்போது முதலே ஜமால் மாலிக் மீது அவனுடைய சகோதரனுக்கு தீராத பொறாமை இருந்து கொண்டே வருகிறது. ஜமாலும் அவனுடைய சகோதரனும் வளர்ந்து கொண்டே போகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் வாழ்க்கையிலிருந்து பாடம் கற்கிறார்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜமால் மாலிக்கின் மனம் கவர்ந்த காதலியை சகோதரன் பறித்துக் கொள்ள நினைக்கிறான்.

எத்தனை சிரமம் வந்தாலும் ஜமால் மாலிக் அறம் தவறாத பாதையில் பயணிக்க அவனுடைய சகோதரன் தடம் மாறி வேறு ஒரு தீய வழியில் பயணிக்க ஆரம்பிக்கிறான். 

அறம் தவறாத பாதையில் செல்லும் ஜமால் மாலிக் சரியான வசதி கிடைக்காமல் சரியான ஆதரவு அரவணைப்பு இது எதுவும் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறான். அன்றாட வாழ்க்கையையே தட்டுத்தடுமாறி வாழ்ந்து கொண்டிருக்கிறான்.  கிடைக்கும் வேலைகள் அனைத்தையும் செய்கிறான். எதெல்லாம் பசியைப் போக்குமோ அந்த வேலையெல்லாம் எந்த ஈகோவும் கௌரவமும் பார்க்காமல் செய்கிறான். ஆனால் ஜமால் மாலிக்கின் சகோதரன் மட்டும் அறம் தவறி சென்ற பாதையில் கிடைக்கும் பணத்தை வைத்து சொகுசாக வாழ்கிறான். இளம்வயதிலேயே அத்தனை சுகங்களையும் அனுபவித்து கொள்கிறான்.  வாழ்க்கையின் வெவ்வேறு பாதைகளில் சென்று விட்ட ஜமால் மாலிக்கும் அவனது சகோதரனும் ஒரு கட்டத்தில் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்கிறார்கள். 

அப்போதும்கூட ஜமால் மாலிக் மீது இருக்கும் பொறாமை அவனுடைய சகோதரனுக்கு குறையவே இல்லை. அப்போதும் ஜமால் மாலிக்கை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் தான் அவனுடைய உடன்பிறந்த சகோதரன் நினைக்கிறான்.  ஆனால் ஜமால் மாலிக் அங்கிருந்து தப்பித்து விடுகிறான். உடன்பிறந்தவனும் அவனுடைய கூட்டாளி ரவுடிகளும் ஒன்றுசேர்ந்து ஜமால் மாலிக்கையும் ஜமால் மாலிக்கின் மனம் கவர்ந்த அந்த பெண்ணையும் துரத்துகிறார்கள் கொலைவெறியுடன். 

தொப்புள் கொடி உறவே ரத்தவெறியுடன் தன்னை துரத்தும் போது அவன் தன் வாழ்க்கையை வெறுத்து விடாமல் அலைந்து திரிகிறான். அலைந்த போதிலும் அவன் அறம் தவறவில்லை. அறம் தவறாத அந்த அப்பாவி இளைஞனை வாழ்க்கை ஒரு மேடைக்கு கொண்டு வருகிறது. அந்த காவல் அதிகாரி சொன்னது போல் பெரிய பெரிய விஞ்ஞானிகள், அறிஞர்கள், கவிஞர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர்களுக்கு எல்லாம் தெரியாத அமையாத ஒரு சூழலும் வினாவும் ஜமால் மாலிக்கிற்கு அமைகிறது.  தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் நன்கு யோசித்து கலங்கிய கண்களுடன் பதட்டத்துடன் விடையளிக்கிறான். 

அறம் தவறாத அந்த இளைஞனை கோடீஸ்வரன் ஆக்குகிறது விதி.  இந்த மாதிரியான சேரியில் இருந்து பிறந்து வளர்ந்த அலைந்து திரிந்து கோடீஸ்வரனாகி ஜமால் மாலிக் போன்ற இளைஞர்கள் இந்தியாவில் நிறைய பேர் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் இந்தியாவில் மட்டுமே இருப்பதில்லை. வெளிநாடுகளுக்கு சென்று தங்களுடைய முத்திரையை பதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த மாதிரியான ஜமால் மாலிக்குகளை தான் இந்திய அரசாங்கம் தொடர்ந்து  சீண்டிக் கொண்டே இருக்கிறது. இந்திய அரசாங்கத்தை ஆட்டிப்படைப்பது அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இல்லை வியாபாரிகள். வியாபாரிகளின் கையில் இருக்கும் இந்திய அரசாங்கம் சக போட்டியாளரான அந்த சேரியில் இருந்து வந்த ஜமால் மாலிக்குகளை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறது. இந்த மாதிரியான போட்டிகள் வியாபாரிகளுக்கு இடையில் மட்டும் நடப்பதில்லை. சினிமா துறையில் இருக்கும் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் ஆகியோர் இடையிலும் நடக்கிறது.  எஸ் ஜே சூர்யா எழுதி இசையமைத்து தயாரித்து நடித்த “இசை” படத்தில் இரு இசையமைப்பாளர்கள் இடையே நடக்கும் போட்டியே மிகத்தெளிவாக காட்டியிருப்பார்.  தனக்குக் கீழ் இருந்தவன் தன்னைவிட மேலே போகிறான் என்றதும் அந்த வெறி கொண்ட இசைக்கலைஞன் தன்னுடைய மாணவனை எந்த அளவுக்கு சிதைக்கிறான் என்பதை மிக அற்புதமாக காட்டியிருப்பார் எஸ்.ஜே.சூர்யா. 

நிஜ உலகில் இந்த மாதிரியான போட்டி பொறாமை அதிகாரம் போன்றவை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. உதாரணத்திற்கு இயக்குனர் பா.ரஞ்சித், இயக்குனர் மூடர்கூடம் நவீனையும் எடுத்துக்கொள்வோம்.  இயக்குனர் பா. ரஞ்சித் சென்னையின் ஒதுக்கு புறத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து  படிப்படியாக உயர்ந்து மேலே வந்தவர். 

அப்படி கஷ்டப்பட்டு மேலே வந்தவர் அதிகார வர்க்கத்தை எதிர்த்து ஆண்ட பரம்பரையை எதிர்த்து படமெடுக்கிறார், அதை வைத்து பணம் சம்பாதித்து பணக்காரர் ஆகிறார் என்றதும் சுற்றி இருப்பவர்கள் எல்லோருக்கும் எரிய ஆரம்பித்து விடுகிறது.  அதனால் தான் பா ரஞ்சித் பிஎம்டபிள்யூ கார் வாங்கிக் கொண்டு அதை ஓட்டிச் சென்றால் இவனெல்லாம் கார் வாங்கி கிட்டு எவ்வளவு தெனாவட்டா சுத்துறான் பாரு என்று பொரிந்து தள்ளுகிறார்கள்.  ரஞ்சித்திற்கு மிக நெருக்கமான இயக்குனர் ஒருவர், அறம் பற்றி பக்கம் பக்கமாக படம் எடுத்த ஒரு இயக்குனர் வேறு ஒரு மேடையில் பா. ரஞ்சித்தைப் பற்றி அவதூறு பேசுகிறார். 

தன்னுடைய முதல் படத்திலேயே அதிகார வர்க்கத்திற்கு எதிராக கருத்து பதிவு செய்த இயக்குனர் நவீன் பல ஆண்டுகள் கழித்து பிஎம்டபிள்யூ கார் வாங்கி இருக்கிறார் என்றதும் நவீன், தயாரிப்பாளரை ஏமாற்றி கார் வாங்கிக் கொண்டு உல்லாசமாக சுற்றி வருகிறார் என்கிறார்கள். அவருடைய ஊர்க்காரர்கள் சுற்றுவட்டார நண்பர்கள் சினிமா நண்பர்கள் அனைவரும்  நவீன் சரியான பிராடு என்று சொல்கிறார்கள். இத்தனைக்கும் என்ன காரணம் கண்முன்னே ஒருத்தன் வளர்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை திரையிலும் புத்தகத்திலும் வளர்ந்த மனிதனை பார்த்து கைதட்டி விசிலடித்து கொண்டாடும் இந்த மனிதர்கள் கண்முன்னே இருக்கும் ஒருத்தன் படிப்படியாக உயர்ந்து போவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

Related Articles

உலகின் தலைசிறந்த சொல் செயல் – வேலை... சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நீ மாறாத... உனக்கேத்த மாதிரி சூழ்நிலையவே மாத்து... இந்த உலகத்துல கொடுமையான விஷியம் ரெண்டு.      ...
சிரியாவில் என்ன நடக்கிறது?... சமூக ஊடகங்களைக் கடந்த ஒரு வாரமாக ஆக்கிரமித்து இருப்பது சிரியா உள்நாட்டுப் போர் குறித்த செய்திகள் தான். கொத்து கொத்தாக குழந்தைகளும், பெரியவர்களும் கொன்...
நடிப்பு ராட்சசன் எம்.எஸ். பாஸ்கர் அசத்தி... நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் நடிப்புத்திறமையைப் பற்றிச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. இருந்தாலும் சில அசத்தலான காட்சிகளை இங்கு பகிர்ந்து கொள்...
முள்ளும் மலரும் இயக்குனர் மகேந்திரன் கால... இயக்குனர் மகேந்திரன் உதிரிபூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு போன்ற படங்களை இயக்கியவர். பல படங்களுக்கு ஒளிப்பதிவ...

Be the first to comment on "ஜமால் மாலிக் போன்ற சிறுவர்கள் ஜெயிப்பதை ஏன் இந்த சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?"

Leave a comment

Your email address will not be published.


*