2018ம் ஆண்டு பார்ட் 2 படங்களுக்கான ஆண்டோ என்னவோ தெரியவில்லை. சொல்லி வைத்தது போல வதவதவென்று பார்ட் 2 படங்கள் வெளியாகி நம்மை பாடாய் படுத்தியது.
கலகலப்பு 2, கோலிசோடா 2, தமிழ் படம் 2, விஸ்வரூபம் 2, சண்டக் கோழி 2, சாமி 2, எந்திரன் 2 (2.O), மாரி 2 என்று மொத்தம் எட்டு பார்ட் 2 படங்கள் இந்த வருடத்தில் வெளியாகி உள்ளது. அனைத்துமே தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படைப்பாளிகளின் படம் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் எதுவும் ஓட வில்லை என்பது தான் யாராலும் மறுக்க முடியாத உண்மை.
கலகலப்பு 2 :
இந்த ஆண்டில் வெளியான முதல் பார்ட் 2 படம். விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம், இளவரசு என்று கலகலப்பு முதல் பாகத்தில் இருந்த ஜீவன் இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா, யோகி பாபு என்று பலர் இருந்த போதிலும் சுத்தமாக இல்லாமல் போனது என்பது குறிப்பிடத் தக்கது. ஆக இந்த ஆண்டில் வெளியான முதல் பார்ட் 2 படமே நம்மை சோதனைக்கு உள்ளாக்கியது.
கோலி சோடா 2 :
வெளியான பார்ட் 2 படங்களிலயே இது ஓரளவுக்கு நல்ல படம் என சொல்லலாம். படத்தின் முதல் பாதி லவ்லி, இடைவேளை பக்கா மாஸ் என்று சிலிர்க்க வைத்த இந்தப் படத்தின் இரண்டாம் பாதியில் நமக்கு லேசான தலைவலி உண்டானது உண்மை. அதிரடி, வேகம் என்ற பெயரில் ராட்சத குண்டாவுக்குள் நம்மை தள்ளிவிட்டு குலுக்கியெடுத்து வெளியே அனுப்பியது போல் தலைவலியை தந்து ரசிகர்களை சோதித்தது இந்தப் படம். செகண்ட் ஆஃப் மட்டும் கொஞ்சம் சரி செய்திருந்தால் படம் கரையைக் கடந்திருக்கும். விஜய் மில்டன் லேசாக சறுக்கிவிட்டார்.
தமிழ் படம் 2 :
மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம். முதல் பாகம் அளவுக்கு இல்லையென்றாலும் நல்ல வசூல் செய்தது. பெரும்பாலானோர்க்கு திருப்திகரமான படமாக இல்லாவிட்டாலும் ஒரு சில ரசிகர்கள் திருப்தி அடைந்தனர். மீம் கிரியேட்டர்களுக்கு நல்ல தீனி கொடுத்தனர் இந்தப் படக் குழுவினர். ஆனால் இனி வரும் காலங்களில் இவர்களின் பருப்பு வேகாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஸ்வரூபம் 2 :
எப்ப எப்ப என்று காத்திருந்து கடைசியில் ரிலீஸ் ஆனதே தெரியாமல் போன படம் விஸ்வரூபம் 2. முதல் பாகத்தைப் போல இந்தப் படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லை என்றாலும் நானாகிய நதிமூலமே என்ற அம்மா பாடல் மட்டுமே மனதைக் கவர்ந்தது.
சண்டக் கோழி 2 :
லிங்குசாமி மீண்டும் எழுந்து வருவார். நல்ல காசு பார்த்து சீக்கிரமே சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல் படத்தை வெளியிடுவார் என்ற எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான படம். கம்பத்து பொண்ணு என்ற பாடலைத் தவிர இந்தப் படத்திலும் மனதைக் கவர்ந்த விஷியங்கள் எதுவுமில்லை. வரலட்சுமி இந்தப் படத்தில் மாஸ் வில்லியாக நடிக்க முயற்சி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாமி 2 :
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான இரண்டாவது பார்ட் 2 படம். சொல்லி வைத்தது போல படம் ப்ளாப். சாமியை எடுக்கச் சொன்னால் சிங்கம் பார்ட் 4 ஐ எடுத்து வைத்திருக்கிறார் என்று இயக்குனர் ஹரி மீது ஏகப்பட்ட குற்றச் சாட்டுகள். விக்ரமின் உழைப்பு மீண்டும் வீணடிக்கப்பட்டது.
2.O :
மூன்றரை வருடம், 500 கோடி என்று ஓவர் பில்டப்புடன் வெளிவந்த படம். முழுக்க 3D யிலயே உருவாக்கிய முதல் படம் என்ற பெருமையை பெற்ற படம் என்றாலும் கதை விஷியத்தில் படம் சறுக்கியது. ஜெயமோகன் என்ற யானை கூட இருந்த போதிலும் வில்லனை கொண்டாடக் கூடிய கதையை படமாக்கி வைத்திருந்தார் இயக்குனர் ஷங்கர்.
மாரி 2 :
எல்லோரும் செய்றாங்க… நானும் என் பங்குக்கு செஞ்சுறேன்னு கடைசியாக வந்து இறங்கியுள்ள படம் தனுஷின் மாரி 2. மாரி முதல் பாகமே யாராலும் பெரிதாக கண்டுகொள்ளப் படவில்லை, அனிருத்தின் ஒன்றிரண்டு பாடல்கள், ரோபோ சங்கரின் சில டைமிங் காமெடிகள் மட்டுமே நன்றாக இருந்தது முதல் பாகத்தில். இரண்டாம் பாகத்தில் ரௌடி பேபி பாடலைத் தவிர எதுவும் மனதைக் கவரும் வகையில் இல்லை. ஆக இந்தப் படமும் ஸ்வாகா.
Be the first to comment on "2018 ம் ஆண்டில் நம்மை வறுத்தெடுத்த பார்ட் 2 படங்கள்!"