ஜல்லிக்கட்டு! தமிழரின் அடையாளம் – ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசியம் என்ன?

Jallikattu

கடந்த வருடம் இதே மாதத்தில் ஜல்லிக்கட்டு என்பது எங்களின் வாழ்வுரிமை என்று அதனை மீட்டெடுக்க ஒன்றுதிரண்டு போராடி வெற்றிகண்டார்கள் தமிழர்கள். வேலை இல்லாமல் வெட்டியாக மீம்ஸ் போடும் இளைஞர்கள் என்று சிலரால் பாவிக்கப்படும் இளைஞர்களுக்கு இந்த மாபெரும் வெற்றியில் முக்கிய பங்குண்டு. மெரினா என்றாலே ஜல்லிக்கட்டு என்று சொல்லுமளவிற்கும், மாணவர்கள் போராட்டத்தில் இறங்குகிறார்கள் என்றால் உடனே மெரினாவில் கொத்துகொத்தாக காவல்படையை இறக்கும் அளவிற்கும் அந்த புரட்சி அவ்வளவு வீரியமாக அமைந்தது. இப்போது ஓராண்டு முடிந்துவிட்டது. ஒருசில இடங்களில் வெற்றிகரமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, இப்போது வரைகூட இந்த ஜல்லிக்கட்டுக்கும் நமக்கும் அப்படி என்ன சம்பந்தம் என்று கடந்த வருடம் மெரினாவில் திரண்டிருந்த பாதி இளைஞர்களுக்கு தெரியாது. இருந்தாலும் போராடினார்கள். அந்த போராட்ட உணர்வை இயற்கையாக அவனுக்குள் விதைத்ததே அந்த ஜல்லிக்கட்டு தான். அந்த போராட்ட உணர்வை விதைத்த ஜல்லிக்கட்டை பற்றி பார்ப்போம்.

ஜல்லிக்கட்டு எப்படி தமிழரின் அடையாளம்?

முதலில் ஜல்லிக்கட்டுக்கும் ஏறுதழுவுதலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சிறுசிறு வித்தியாசங்கள் தானே தவிர இரண்டும் ஒரே மாதிரியான வீரம் நிறைந்த விளையாட்டு தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய காலகட்டத்திலும் சரி, இதற்கு முந்தைய காலங்களிலும் சரி தமிழன் தங்களுக்கான வாழ்வுரிமையை போராடியே பெற வேண்டியதாக இருக்கிறது. இதற்கு முந்தைய காலகட்டம் என்றால் வெள்ளையர்களை எதிர்த்த காலம் எனலாம். இந்தியாவில் முதன்முறையாக வெள்ளையர்களுக்கான எதிர்ப்பு கிளம்பியது தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்து தான். தமிழ்நாட்டு பாளையக்காரர்கள் தாம் முதன்முதலில் வெள்ளையரின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் சுதந்திர தன்மான உணர்வுடன் எதிர்த்தனர். புலித்தேவன், கட்டபொம்மன், ஊமைத்துரை, வேலுத்தம்பி, மருதுபாண்டியர், கோபாலநாயக்கர், தீரன் சின்னமலை முதலியோர் தேசிய எழுச்சியின் முன்னோடிகளாக இருந்தனர். இப்படி தமிழர்கள் இந்திய விடுதலைப்போராட்டத்திற்கே வித்தாக அமைந்துள்ளனர். அதற்கான காரணம் அவர்கள் வம்சாவழியாக பின்பற்றி ஏறுதழுவதல் என்னும் வீரவிளையாட்டு தான்.

ஏறுதழுவதல் எதற்காக?

சங்க காலங்களில் பெண்கள் தங்களுக்கு வரும் கணவர் ஊரறிய தன்னுடைய வீரத்தினை காட்டும் ஆண்மகனாக இருத்தல் வேண்டும் என்று விரும்புவர். அந்த பெண்களின் பெற்றோர்களும், தங்களுடைய பெண்ணை மணமுடிக்க இருக்கும் ஆண்மகன், தன்னுடைய பெண்ணை அயலாரின் படையெடுப்பிலிருந்து பாதுகாக்கும் திராணி உடையவனாகவும், எவ்வளவு பெரிய இன்னல் நேர்ந்தாலும் அதனை போராடி வெல்லும் குணமுடையவனாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினர். ஏறுதழுவதலில் வென்ற ஆண்மகனுடன் தன் மகள் உறவு கொண்டு பிள்ளை பெற்றால் அந்த பிள்ளையும் வீரம் நிறைந்தவனாக இருக்கும், அதாவது வம்சமே வீரம் நிறைந்த வம்சமாக தொடரும் என்பது அவர்களின் எண்ணம்.  ஏறுதழுவதலின் முக்கிய நோக்கமே அதுதான்.

ஏறுதழுவதலில் கலந்துகொள்ளும் ஆண்மகன்களை,

” எங்கள் ஊர் காளையைக் கண்டால் காலன்கூடக் கலங்கி நிற்பான். எங்கள் ஊர் இளைஞர், அதன் கூர்மையான கொம்புக்கும் கொடுமையான பார்வைக்கும் நெஞ்சைப் பிளக்கும் குளம்படிக்கும் அஞ்சுவதே இல்லை. பாய்ந்து வரும் காளையின் திமிலைப் பிடித்துத் தங்கள் தோள் வலிமையை உலகுக்கு உணர்த்துவர் எங்கள் ஊர் கட்டிளங்காளைகள். ” என்று பெருமை போற்றி பாடுவார்கள்.

இப்படிபட்ட ஏறுதழுவுதலை பற்றி சங்க இலக்கியமான கலித்தொகையும்,

” கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள். அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய – உயிர்துறந்து நைவாரா ஆய மகள் தோள். ” என்று குறிப்பிட்டுள்ளது.

கொல்லுகின்ற காளையினுடைய கொம்புக்கு அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள் என்பது அதன் பொருளாகும். இப்படிப்பட்ட வீரம் நிறைந்த விளையாட்டுடன் தமிழர்கள் ஆதிகாலம் முதலே தொடர்புடைவர்கள் என்பதை உணர்த்தும் வகையில் சிந்து சமவெளி நாகரிகத்தின் மொகஞ்சதாரா பகுதிகளில் கிடைத்த முத்திரைகளில் ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த முத்திரைகள் நாலாயிரம் ஆண்டு பழமை வாய்ந்தவை. டெல்லியில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தில் இந்த முத்திரைகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஏன் தடை விதித்தார்கள்?

ஏறுதழுவதலை பிராணி வதை என்ற தவறான கண்ணோட்டம் தான் ஜல்லிக்கட்டு தடை விதிப்புக்கு முக்கியமான காரணம். வதை என்றால் காளை மாடுகளின் பின்புறத்தில், கண்களில் மிளகாய்ப்பொடி தேய்ப்பது, மதுவை அருந்த வைப்பது, காளையின் கொம்பை உடைத்து வாயில் நுரை தள்ள வைப்பது போன்ற காட்டுமிராண்டி தனங்கள் ஜல்லிக்கட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது என்பது போன்ற  காரணங்களை முன்னிறுத்தி தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஸ்பெயினில் நடப்பது மாதிரியான காட்டுமிராண்டி விளையாட்டு அல்ல. காளைகள் களத்தில் ஓடிவர மனிதர்கள் குதிரையில் உட்கார்ந்தபடி,காளையை ஈட்டியால் குத்தி சாகடிப்பார்கள். இது அப்படிபட்ட விளையாட்டு அல்ல.

உண்மையான ஏறுதழுவதலில் அவையெல்லாம் சிறிதும் நடப்பதில்லை. வாடிவாசலில்[வாடிவாசல் என்பது காளைகளை களத்திற்குள் அனுமதிப்பதற்காக இரண்டு மரக்கட்டை தூண்களால் வைக்கப்பட்டிருக்கும் நுழைவாயில்] இருந்து காளைகள் களத்திற்குள் நுழைந்ததும் கூட்டமாக இருக்கும் மக்களை கண்ட மிரட்சியால் சீற்றத்துடன்  வேகமாக ஓடும். அப்படி ஓடுகிற காளையின் திமிலில் ஏறி[தாவிப்பிடித்து] தழுவி களத்தின் இறுதிவரை யார் செல்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். இது தான் உண்மையான ஏறு தழுவுதல்.

இப்படி காளை அடக்கும் முயற்சியில் பலர் காளையின் கொம்பினால் குத்துப்படுவதை போர்க்களத்தில் போராடி காயமுறுவதை போல வீரம் நிறைந்த செயலாகத்தான் தமிழர்கள் எண்ணுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் காளைகளை தங்கள் பிள்ளைகளாக நினைத்து வளர்த்து வருகிறார்கள். செல்லப்பெயரிட்டு, அதற்கென்று மின்விசிறி அமைத்து என்று அவற்றை வளர்க்கும் விதமே மிகுந்த அன்பு நிறைந்ததாக இருக்கும். காளை மாடுகளும் அவ்வளவு கொடூரமான விலங்குகள் அல்ல. இன்றைக்கும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சென்று பார்த்தால் காளைகளுக்கு தண்ணிகாட்டுவது, குளத்தில் குளிப்பாட்டுவது, அவற்றின் மேலயே ஏறி விளையாடுவது போன்றவற்றை ஐந்து வயது சிறுவன் சிறுமிகள் செய்துகொண்டிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டின் போது அவை சீற்றத்துடன் காணப்படுவதற்கு காரணம் கூட்டத்தை மிரண்டு போவதுதானே ஒழிய அது கொடூரமான விலங்கும் அல்ல.

இவற்றை புரிந்துகொள்ளாத சில கார்ப்ரேட் சக்திகளும் ஜல்லிக்கட்டு தடை விதிப்பிற்கு இன்னொரு காரணம். இயற்கையாக கிடைக்கும் வீரியம் மிகுந்த நாட்டு மாடுகளின் பாலை மக்களுக்கு கிடைக்கவிடாமல் செயற்கை தீவனங்களை உண்டு வளர்ந்த மாடுகளின் தரம் குறைவான வீரியம் குறைவான பாலை நல்ல விலையில் வியாபாரம் செய்வது தான் அதன் நோக்கம்.

பொதுவாக நாட்டு இனங்களை வளர்க்கக்கூடிய பழக்கவழக்கம் விவசாயத்தை முதன்மையான தொழிலாக கொண்ட இந்தியாவில் முதன்மை வாய்ந்த பழக்கவழக்கமாக இருக்கிறது. இத்தகைய நாட்டுமாடுகள் எந்த வித பிற இனக்கலப்பும் இல்லாமல் வளர்க்கப்படுகிறது. ஆகவே இவற்றினால் கிடைக்கக்கூடிய பால் உணவுப்பொருட்கள் வீரியம் மிகுந்தவையாக இருக்கிறது. இத்தகைய நாட்டு மாடுகளால் தான் மேய்ச்சல் நிலங்களும் விவசாய நிலங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை இந்த நாட்டு மாடுகள், காளையினங்கள் காணாமல் போனால் இந்த விளைச்சல் நிலங்கள் எல்லாம் தாமாக கார்ப்ரேட் கைக்கு தாவிவிடும். இந்த வியாபார யுக்தியும் தடை விதித்தற்கான இன்னொரு காரணம். எது எப்படியோ நம்முடைய வாழ்வுரிமையை போராடி மீட்டெடுத்துவிட்டோம்.

தமிழனுக்குள் போராட்ட உணர்வுக்கும் ஜல்லிக்கட்டும் இப்படி நெருக்கமான உணர்வுகள் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அந்த போராட்ட உணர்வை விதைத்ததே ஜல்லிக்கட்டு தான்.

தமிழர்கள் வருடம் முழுக்க போராட்ட உணர்வுடன் இருப்பதற்கு இதுவே காரணம். மற்ற மாநிலங்களில் காவி ஆட்சி புகுந்த போதிலும் இங்கு நோட்டாவிடம் தோற்றுப்போவதற்கு காரணம் தமிழர்களின் போராட்ட உணர்வு மட்டுமே. அதை விதித்தது ஏறு தழுவுதல் எனும் வீரவிளையாட்டு! அது என்றைக்குமே தமிழர்களின் அடையாளம்.

அந்த அடையாளமே தமிழர்களின் பெருமை! அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் போற்றுவது நம் கடமை!

பொங்கல் வந்துவிட்டது. உங்கள் சுற்றுவட்டார பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடந்தால் தயங்காமல் சென்று பாருங்கள். பார்க்கும்போதே உங்களுக்கும் போராட்ட குணம் பற்றிக்கொள்ளும்.

Related Articles

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) 2018 ஐபிஎல்...  வரிசை எண் போட்டி எண் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 3 8-ஏப்ரல் கொல்கத்தா vs பெங்களூர் 8:00 PM கொல்கத...
இயக்குனர் ராம் கொண்டாடப்படுவதற்கு காரணம்... வெறும் நான்கு படங்கள் மட்டுமே இயக்கி உள்ள இயக்குனர் ராமை தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா உலகமே கொண்டாடி வருகிறது. அவருடைய கற்றது தமிழ் திரைப்படம்...
சூப்பரான படம்! மொக்கையான படம்! சுமாரான ப... ஒரு படத்தை பார்த்தால் நமக்கு மூன்றுவிதமான உணர்வுகள் ஏற்படும். ஒன்று - படம் சூப்பர்ப்பா... இந்தப் படத்த எத்தன தடவ வேணாலும் பார்க்கலாம் என்று சொல்ல வைக்...
பல நன்மைகளை தரும் பனம் பழம்!... விதைக்க வேண்டியதுமில்லை. வளர்க்க வேண்டியதுமில்லை என்கிற அளவில் நமக்கு சிரமம் தராதது பனை மரம். பனை மரத்தின் பழம் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. ...

Be the first to comment on "ஜல்லிக்கட்டு! தமிழரின் அடையாளம் – ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசியம் என்ன?"

Leave a comment

Your email address will not be published.


*