இந்தியாவிலேயே முதல் முறையாக ரோபோக்களை கொண்டு வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் வகையில் ஒரு உணவகம் வடிவகைப்பட்டுள்ளது. மொமொ (Momo) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சைனீஸ் உணவகம் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வருகிறது. அந்த உணவகத்திற்கு நீங்கள் செல்லும் பட்சத்தில் சூடான சுவையான உணவுகள் உங்கள் மேஜைக்கு வந்து சேரும், அதுவும் ரோபோக்களின் மூலமாக.
தகவல் தொழில்நுட்ப முன்னாள் ஊழியர் வெங்கடேஷ் ராஜேந்திரன் மற்றும் கார்த்திக் கண்ணன் என்ற இருவரால் இந்த உணவகம் ஆரம்பிக்கப்பட்டது. ‘ஏற்கனவே இந்த உணவகத்தின் ஒப்பற்ற ருசி காரணமாக, உணவு பிரியர்களிடையே மொமொ பிரபலமான உணவகமாக இருந்து வந்தது. இருப்பினும் வாடிக்கையாளர்களுக்குப் புதுமையாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் ரோபோக்களின் மூலம் பரிமாறுவது என்ற முறையை அறிமுகப் படுத்தியிருக்கிறோம்’ என்கிறார் கார்த்திக் கண்ணன். இதன்மூலம் புதிய வாடிக்கையாளர்களையும் பெற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உணவகத்தின் உள்ளே நுழைந்த உடனேயே, மனித பணியாளர்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் வாடிக்கையாளர்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கும் ஐபாட் மூலம் தங்களுக்கு விருப்பமான உணவைத் தேர்வு செய்ய முடியும். உணவு தயாரானதும் அது ரோபோக்களின் மூலம் வாடிக்கையாளர்களின் மேஜைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிமாறப்படுகிறது.
பேட்டரி மூலம் இயங்கும் இந்த ரோபோக்களை சென்சார் மூலம் கட்டுப்படுத்த முடியும். தங்கள் வழியில் யாராவது குறுக்கிட்டால் அப்படியே நின்றுவிடும் இந்த ரோபோக்கள், எந்த உணவு எந்த மேஜைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையில் வடிவைக்கப்பட்டுள்ளன. நான்கு ரோபோக்கள் வேலை செய்யும் இந்த உணவகத்தில், ரோபோக்களோடு செல்பி எடுத்துக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. சென்னை வாடிக்கையாளர்கள் பலர் ரோபோக்களோடு தாங்கள் எடுத்துக்கொண்ட செல்பியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அங்கே உணவைப் பரிமாற இருந்த பணியாளர்களின் மைண்ட் வாய்ஸ் எப்படியிருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன் ‘அப்படியே கல்லா பெட்டியிலும் ஒரு ரோபோவ உட்கார வைக்க வேண்டியது தானே?’
Be the first to comment on "ரொட்டி சாப்பிட்டுருப்பீங்க, ரோபோ கையால சாப்பிட்டிருக்கீங்களா?"