இன்று திருப்பூர் குமரன் நினைவு தினம் – ஜனவரி 11

Tirupur KumaranTirupur Kumaran

தமிழகத்தின் 32வது மாவட்டமான,  7-வது மிகப்பெரிய நகரமான உழைப்பாளிகள் நிறைந்த திருப்பூருக்கு மேலும் பெருமை சேர்த்த கொடிகாத்த குமரனின் நினைவு தினம் இன்று.

இளமையில் வறுமை

“கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை” என்ற பாடல் வரிகளுக்கேற்ப இளமையில் வறுமை எனும் கொடிய நிலைக்கு உள்ளானவர் குமரன்.

ஈரோடு சென்னிமலையில் 1904ம் வருடம் அக்டோபர் 4ந்தேதி,  நாச்சிமுத்து கருப்பாயி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்ததால் வறுமை தானாக அவருடன் ஒட்டிக்கொண்டது. வறுமையான குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.  அப்படி அவர் மேற்கொண்ட நெசவுத் தொழிலிலும் போதிய வருமானம் இல்லாமல் போக, மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்றவர் ஈஞ்சையூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார். இப்படி இளமை வறுமையில் வாடிக்கொண்டிருந்த போதிலும் நாட்டுப்பற்று மிகுந்தவராகவே இருந்தார்.

இளமையில் தலைமை

குமரன், இளம் வயதிலிருந்தே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்தார். இளமை முதலே அவருக்கு காந்தி கொள்கைகளில் அதீத பற்று. நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த அறப்போராட்டங்கள் அனைத்திலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் பல போராட்டங்களுக்கு தலைமையேற்று வழிநடத்தியும் விடுதலைக்காக போராடியவர்.

நாடு முழுவதும் தேசப்பிதா காந்தியடிகள் தலைமையில் இந்திய விடுதலைக்கான போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

அதன் ஒரு பகுதியாக, 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது  தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து வாலிபர் சங்க உறுப்பினர்கள் சார்பில் காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டார். வறுமையில் வாடிய அவரது குடும்பமோ போராட வேண்டாம் என்று எவ்வளவோ வலியுறுத்தியும் அவர் கேட்கவில்லை. அவ்வளவு நாட்டுப்பற்று!

அவர்கள் மேற்கொண்ட அறப்போராட்டத்தில் தினமும் ஒன்பது பேர் கொண்ட குழுவினர் செல்வது என முடிவு செய்தனர். அந்தக் குழுவிற்கு குமரன் தான் தலைமை தாங்க வேண்டும்.  அதன்படி, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, ஊரெங்கும் ‘வந்தே மாதரம்’ என்று கோசமிட்டபடி அணிவகுத்துச் சென்றபோது, வந்தே மாதரம் என்ற அவர்களின் முழக்கம் காவலர்களின் காதில் விழுந்துவிட்டது. அடுத்தநொடி காவலர்கள் தடியை தூக்கி விளாச ஆரம்பித்தனர். அவர்களால் குண்டுமழை பெய்ய ஆரம்பித்தது.
அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 செ.மீ. நீளமுள்ள குண்டு ஒன்று அந்த குமரனின் மூளைக்குள் பாய்ந்தது. அதேசமயம்

காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி ‘வந்தே மாதரம்’ என்று கூறிய நிலையிலயே மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இளமையில் மரணம்

ஜனவரி 11 இல் உயிர் துறந்தார் திருப்பூர் குமரன். அப்போது அவருக்கு வயது முப்பதைக்கூட தாண்டவில்லை. தடியால் தாக்கப்பட்டு மண்டை பிளந்து மரணத்தை நெருங்கிய தருணத்திலும் தேசிய கொடியை காத்ததனால் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

கொடிகாத்த குமரனுக்கு அரசு செய்த சிறப்புகள்

தமிழக அரசு செய்த சிறப்பு

தமிழக அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் “திருப்பூர் குமரன் நினைவகம்” ஒன்றை நிறுவியுள்ளது. இந்த நினைவகத்தில் தற்காலிக நூல் நிலையமும் படிப்பகமும் செயல்பட்டு வருகிறது. அதோடு இந்தியச் சுதந்திரத்திற்காக போராடிய  வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு செய்த சிறப்பு

குமரனின் தியாகத்தை போற்றும் வகையில் குமரனின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட வேண்டும் என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசுஏற்று கொண்டது.

குமரனின் நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், 2004ம் வருடம் அக்டோபர் 4ம் தேதி சிறப்பு நினைவுத் தபால் தலை நடுவண் அரசால் வெளியிடப்பட்டது. இந்த தபால் தலை ஒன்றின் விலை 5 ரூபாய்.

குரனின் தியாகத்தை நினைவு கூறுவோம்!

மானம் காக்க ஆடை கொடுக்கும்  நெசவாளர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, தேசிய கொடியின் இழுக்கை போக்க உயிர் துறந்த குமரனின் தியாகத்தை இந்நாளில் சில நிமிடங்களாவது நினைவு கூறுவோம்.

Related Articles

ஒரு இந்தியா மூன்று அமெரிக்காவுக்கு சமம்!... ஒரு திரைப்படம் பார்த்தால் அதில் நாம் கற்றுக்கொண்ட விசியங்கள் ஒன்றிரண்டாவது இருக்க வேண்டும். அந்த வகையில் தன்னுடைய படங்களின் மூலமாக புதிய தகவல்களை பார்...
எழுத்தாளர் தமிழ்மகனின் “மீன்மலர்&#... தமிழ்மகன் என்கிற பா. வெங்கடேசன் எழுதிய புத்தகம் மீன்மலர். இருபது வயதுகளிலயே எழுத தொடங்கி இளம் வயதிலயே தமிழக அரசின் இலக்கிய விருதுகளை வென்றுள்ளவர். மீன...
“சைக்கோ பெண்களுக்கான படம்!”... கடந்த ஜனவரி 24ம் தேதியன்று ரிலீசான மிஷ்கினின் சைக்கோ படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் படத்திற்கான நேர்மறை எதிர்மறை விமர்சனங்க...
உலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா!... நம்ப முடியாத செய்தியாகத் தோன்றலாம். ஆனால் உண்மை. இந்தியா ஏழை நாடு, வளர்ந்து வரும் நாடு என்ற செய்திகள் மட்டுமே கேட்ட நமக்கு இது கொஞ்சம் புதுசு தான். ...

Be the first to comment on "இன்று திருப்பூர் குமரன் நினைவு தினம் – ஜனவரி 11"

Leave a comment

Your email address will not be published.


*