சென்னை அசோக்நகர் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் மாணவனை சேர்க்க ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வர் ஆனந்தனை சிபிஐ
அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோயம்பேட்டில் காய்கறி கடை நடத்தி வருபவர் ராஜேந்திரன். இவர் சென்னை அசோக் நகரில் வசித்து வருகிறார். இவர் தனது மகனை அதே பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பட்டியல் இனத்தவர்கள் பெறக்கூடிய ஒதுக்கீட்டில் சேர்க்க சில காலங்களுக்கு முன்பு விண்ணப்பித்து இருந்தார்.
இந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட பள்ளி முதல்வர் ஆனந்தன் ராஜேந்திரனின் மகனை
பள்ளியில் சேர்க்க ரூபாய் ஒன்றரை லட்சம் கேட்டுள்ளார். பணம் கட்டினால் மட்டுமே பள்ளியில்
சேர்த்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். அதில் ஒரு லட்சத்தை முதலில் உடனே கட்ட வேண்டும்
என்றும் மீதி ஐம்பதாயிரத்தை பள்ளியில் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் லஞ்சம் கொடுக்க விரும்பாமல் நுங்கம்பாக்கம் சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் ஆனந்தன் லஞ்சம் கேட்டதை உறுதி செய்த பின் ஆனந்தனை கையுங்களவுமாகப் பிடிக்க திட்டமிட்டு, வேதிப்பொருள் தடவிய பணத்தாள்களை ஆனந்தனிடம்
லஞ்சமாகக் கொடுக்க வைத்து அதிகாரிகள் மறைந்திருந்து ஆனந்தனை கைது செய்துள்ளனர்.
பின்னர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் வைத்துள்ளனர்.
லஞ்சமோ லஞ்சம்
நாட்டில் லஞ்சம் ஊழல் என்ற வார்த்தைகள் இடம்பெறாத துறையே இல்லை. தற்போது அது கல்வியிலும் மருத்துவத்திலும் தலைவிரித்தாடுவதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
பல இடங்களில் ” அதிரடி ஆஃபரில் அறுவை சிகிச்சை … முந்துவோருக்கு முன்னுரிமை” போன்ற போஸ்டர்களை முன்பைவிட இப்போது அதிகமாகப் பார்க்க முடிகிறது.
அதே போல கல்வித்துறையிலும் இது நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. முதலில் வரும் மாணவ மாணவிகளுக்கு இந்தக் கல்வி நிறுவனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்று போஸ்டர் அடித்து விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறது சில பள்ளிகள்.
தமிழகம் ஒழுக்கம் கெட்ட சமூகமாக, ஊழல் நிறைந்த சமூகமாக மாறி வருகிறது என்பதில் சந்தேகமே இல்லை. இதெல்லாம் எங்கே போய் முடியப்போகிறதோ?
ஏழைகளின் கல்வி கேள்விக்குறி
இது இப்படி இருக்க அரசுப்பள்ளிகளின் தரம் நாளுக்கு நாள் மழுங்கி வருகிறது. இலவச வைபை
வசதி, ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் என்று பல புதுமைகள் கொண்டு வந்தாலும் அவை வெறும்
கண்துடைப்பாகவே இருந்து வருகிறது. பணம் இருந்தால் மட்டுமே இங்கு எல்லாமே கிடைக்கும்
என்ற நிலைக்கு மாறி வரும்போது பணமில்லாத ஏழைகள் கல்வி பெறுவது அரிய செயலாகிறது.
Be the first to comment on "ஒன்றாம் வகுப்பில் மாணவனை சேர்க்க ரூ.1லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வர்!"