கொண்டாட்டங்கள் எல்லை மீறச் செல்லும் போது அவை பெரும்பாலும் குற்றச் செயல்களிலேயே முடிகிறது. ஹோலி பண்டிகையின் போது நிகழும் கொண்டாட்டங்கள் சில சமயங்களில் வரம்பு மீறுகின்றன என்ற விமர்சனம் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. முட்டைகளை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிவது, அழுக்கு தண்ணீரை பலூனில் நிறைத்து அதை மற்றவர்கள் மீது வீசி எறிவது, தீங்கு விளைவிக்கும் வண்ணங்களைப் பூசுவது என்று கொண்டாட்டங்கள் என்ற பெயரில் மற்றவர்களைக் காயப்படுத்தும் நிகழ்வை ஹோலி பண்டிகையின் போது சிலர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவர்களில் சிலர் சிக்கல் உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே பலூனில் விந்தை நிறைத்து பெண்களின் மீது அடித்துள்ளனர். டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் இந்தத் தாக்குதல்கள் பற்றி சில நாட்களாகவே சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர்..பேஸ்புக்கில் டெல்லியைச் சேர்ந்த மற்றுமொரு பெண் விந்து போன்ற பிசுபிசுப்பான தன்மை கொண்ட பலூனால் தானும் தாக்குதல்களுக்கு உண்டானதாகத் தெரிவித்துள்ளார்.
போராடும் மாணவ மாணவியர்:
அதிகரிக்கும் இது போன்ற சம்பவங்களால் பெண்களின் பாதுகாப்பு டெல்லியில் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை தலைமையகத்திற்கு முன்பு கூடிய மாணவர்களும் ஆசிரியர்களும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் படி கோஷமிட்டனர். மேலும் போராட்டக்காரர்கள் இது குறித்து தெரிவிக்கும் போது ‘பெண்களைத் தொந்தரவு செய்ய ஹோலி பண்டிகை ஒரு காரணமாக இருந்துவிடக் கூடாது. கல்லூரிகளுக்கு வெளியே காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலில் சமீபத்தில் பாதிக்கப்பட்ட ஜீசஸ் மற்றும் மேரி கல்லூரியில் இளநிலை வரலாறு படிக்கும் மாணவி இவ்வாறு எழுதியுள்ளார். ‘நேற்றுவரை விந்து நிறைத்த பலூன் தாக்குதல்களை பற்றிக் கேள்விப்பட்டு தான் இருந்தேன்.அது என் இதயத்தை நொறுக்கும் ஒரு செய்தியாக இருக்கிறது .இன்று நானே அந்தத் தாக்குதலுக்கு ஒரு நேரடி சாட்சியாக இருக்கிறேன். மனிதர்கள் எவ்வளவு ஒழுக்க கேடானவர்கள் என்பதைப் புரிந்தும் , உணர்ந்தும் இருக்கிறேன். இந்தத் தாக்குதல்களில் ஈடுபடுபவர்களை நான் விலங்குகளுடன் ஒப்பிட விரும்புகிறேன். ஆனால் அவர்களை விலங்குகளோடு ஒப்பிட்டு விலங்குகளை அவமதிக்க விரும்பவில்லை.’
ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரியில் உளவியல் மாணவியும் தன்னுடைய தாக்குதல் அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பதிந்துள்ளார். ‘அமர் காலணியில் இருந்து ரிஃசாவில் ஏறிய சில நிமிடங்களிலேயே ஒரு பலூன் என் இடுப்பு பகுதியில் எறியப்பட்டது. அது உடைந்து என் கருப்பு லெக்கிங்கில் வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாகப் படிந்தது. அதன் வீச்சம் அது தண்ணீர் இல்லை என்பதை எனக்கு உணர்த்தியது. அது என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. பிறகு தோழி ஒருத்தியின் மூலம் விந்து நிறைத்த பலூன் தாக்குதலை பற்றித் தெரிந்து கொண்டேன். இது ஒருவன் மட்டும் செய்யும் செயலாக எனக்குப் படவில்லை.’
டெல்லி பல்கலைக்கழகத்தின் வளாகம், விடுதி உள்ளிட்ட இடங்களில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
Be the first to comment on "விந்து நிறைத்த பலூன் தாக்குதல்களை எதிர்த்து டெல்லி மாணவர்கள் போராட்டம்"