ராஜாவுக்கு செக் – தூக்க வியாதியை காட்டிய தூங்க வைக்காத படம்!

Rajavukku Check movie review

முந்தைய தமிழ் சினிமாக்களில் தூக்கத்தில் நடப்பது, தூக்கத்தில் பேசுவது போன்ற வியாதிகளை காட்டி இருப்பார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வந்த விஷாலின் நான் சிகப்பு மனிதன் படத்தில்  அதிர்ச்சியானால் தூங்கிப் போகும் நோயை காட்டி இருப்பார்கள். அதே போல தூக்கம் வருவதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்வது போல் சினிமா காட்டியுள்ளது. தூக்கமே வராமல் தவிக்கும் இம்சோனிக் நோயையும் காட்டி உள்ளார்கள். அதேபோல தூக்கமே வியாதியாக மாறினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு வியாதியை தான் சாய் ராஜ்குமார் இயக்கிய “ராஜாவுக்கு செக்” திரைப்படம் காட்டுகிறது. Kleine–Levin syndrome (KLS) என்பது தான் அந்த நோய். இதற்கு sleeping beauty syndrome என்ற பெயரும் உண்டு. 

சாதாரணமாக ஒரு மனிதன் ஆறு மணி நேரம் தூங்குவான். அதிகபட்சம் எட்டு மணி நேரம் தூங்குவான். ஆனால் எட்டு மணி நேரத்தையும் தாண்டி நீண்ட நேரம் அதாவதுள் கணக்கில் வார கணக்கில் மாதக் கணக்கில் தூக்கம் நிலைப்பது தான் இந்த நோயின் தன்மை. உலகில் உள்ள 750 கோடி மக்கள்தொகையில் வெறும் ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த நோய் உள்ளது. இந்த நோய் ஏன் வருகிறது என்பதும் தெரியாது? இதற்கும் மருந்தும் கிடையாது. கலிபோர்னாயாவில் ஒரு பெண் உலகத்திலயே அதிகபட்சமாக 8 மாதம் வரை தூங்கிக் கொண்டே இருந்திருக்கிறாள். இந்த நோய் எல்லா நாட்களிலும் பாதிப்பதில்லை. 

ஹார்ட் அட்டாக், ஆஸ்துமா அட்டாக் போல ஸ்லீப் அட்டாக்கின் போது மட்டுமே இதுபோன்ற நீண்ட நெடிய தூக்கம் ஏற்படுகிறது. இந்த அட்டாக் வந்து தூங்க ஆரம்பித்தால் எப்போது எழுவோம் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஒரு மனிதன் எந்த தப்பும் பண்ணாமல் இருப்பது தூக்கத்தில் மட்டும் தான். ஆனால் தொடர்ந்து தூங்குவதிலும் நிறைய பிரச்சினைகள் உள்ளது. குறிப்பாக திருமணமான ஆண் என்றால் அல்லது பெண் என்றால் அவர்களுடைய செக்சுவல் ரிலேசன்ஷிப் பாதிக்கப்படும். குறிப்பாக குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் பொழுது கழிக்க முடியாது. சம்பாதித்யம் கெட்டு போகும். குறிப்பாக ஸ்லீப்பிங் அட்டாக் எப்போது வருமென்று தெரியாது. கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போதோ மலை ஏறிக்கொண்டிருக்கும்போதோ நீந்திக் கொண்டிருக்கும்போதோ வந்தால் பெரிய பாதிப்பு உண்டாகும். இது போன்ற நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் நிலையை யோசித்து பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது அல்லவா? அதுவும் ஒரு போலீஸ் அதிகாரியாக இருப்பவருக்கு இந்த நோய் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் கண்டிப்பாக சேரன் நடித்த ராஜாவுக்கு செக் படம் பார்க்க வேண்டும். அது இருக்கட்டும் எட்டு மாதம் ஒருவர் தொடர்ந்து தூங்குகிறார் என்றால் உணவும் நீரும் எடுத்துக்கொள்ளாமல் எப்படி அவ்வளவு நாட்கள் உயிரோடு இருக்க முடியும் என்பதையும் விளக்கி இருக்கலாம். 

ராஜாவுக்கு செக் விமர்சனம்: 

படம் ரிலீசான போது யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. காரணம் ரிலீசான நாள் அப்படி. மற்றும் போதிய விளம்பரம் இல்லை. 

தூக்கமே வியாதியாக மாறி சேரனை அவஸ்தைபடுத்த அவருடைய மனைவி அவருடன் வாழ பிடிக்காமல் டைவர்ஸ் அப்ளை செய்கிறார். டைவர்ஸ் வாங்கிவிட்டால் மகளை விட்டு பிரிய நேரிடும் என்பதால் சேரன் பத்து வருடங்களாக இழுத்தடிக்கிறார். மகள் வளர்ந்து பெரியவளாகி வெளிநாட்டிற்கு சென்று படிக்க விரும்புகிறாள். அதனால் கட்டாயம் இந்தமுறை டைவர்ஸ் வாங்கியே தீர வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார் சேரனின் மனைவி. சேரனும் வேறு வழி இல்லாமல் சரி என்கிறார். அதற்குமுன் மகள் என்னுடன் பத்து நாள் இருக்க வேண்டும் என்று கண்டிசன் போடுகிறார். மனைவி ஒத்துக்கொள்கிறார். 

சேரனும் மகளும் பத்து நாளில் ஒன்பது நாட்களை கொண்டாட்டமாக கழிக்கிறார்கள். பத்தாவது நாள் மகளுக்குப் பிறந்த நாள். அந்த நாளில் போலீஸ் அதிகாரியான சேரன் கொஞ்சம் பிஸியாக இருந்துவிட மகளுடனான பர்த்டே செலிபிரேசன் நடக்காமல் போகிறது. வருத்தத்துடன் வீடு திரும்புகிறார். வீடு கருகும்மென்று இருக்கிறது. பல்புகளை பொறுத்தி வீட்டிற்குள் வெளிச்சத்தை உண்டாக்குகிறார். மகள் சேரனுக்கு வைத்திருக்கும் கிஃப்ட் ஒன்றில் பென்ட்ரைவ் இருக்கிறது. பென்ட்ரைவில் இருக்கும் வீடியோ காட்சிகளை ரிலாக்சாக பார்க்கிறார் சேரன். நான்கு வீடியோக்கள் கடந்ததும் ஐந்தாவது வீடியோவில் மகள் சேரனுக்கு தன் காதலனையும் அவனின் நண்பர்களையும் அறிமுகப் படுத்துகிறாள். அப்போது சேரனின் கண்கள் அகல விரிகிறது, மரண பயத்தால் உடல் உதறுகிறது. அந்த நபர்கள் யாரென்று பிளாஸ்பேக் விரிகிறது. 

அந்த நான்கு பணக்கார இளைஞர்களும் கொழுக் மொழுக் என்று இருக்கும் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக ஒரு பங்களாவுக்கு தூக்கி செல்கிறார்கள். அவள் ரகசியமாக தன்னுடைய ஆபத்தான சூழலை சேரனுக்கு போன் மூலம் விளக்க சேரன் அங்கு சென்று அந்தப் பெண்ணை காப்பாற்றுகிறார். அந்த நான்கு இளைஞர்களும் சேரனை ஒதுங்கி போக சொல்ல சேரனோ அவர்கள் மீது கஞ்சா கடத்தல் வழக்குப் பதிவு செய்து ஒரு வருடம் சிறையில் தள்ளுகிறார். ஒரு வருடம் சிறையிலிருந்து வெறியுடன் வெளியேறிய அந்த நான்கு இளைஞர்களும் ஒரு வருடமாக சேரனின் மகள் பின்பு சுற்றி அவளை காதல் வலையில் விழ வைக்கிறார்கள். பிளாஸ்பேக் முடிகிறது. சேரன் பதறுகிறார். மகள் அங்க இங்க என்று செல்லும்போதெல்லாம் வில்லனும் அவனுடைய நண்பர்களும் “உன் மகளை சூரையாட போகிறோம் அதை நீ தவிர்க்காமல் பார்த்தே ஆக வேண்டும்” என்று சொல்கிறார்கள். சேரனோ அதோடு வீடியோவை நிறுத்திவிட்டு தன்னுடைய போலீஸ் நண்பர்களுக்கு போன் அடித்து அலுவலகம் வர சொல்கிறார். பேப்பரில் என்னனமோ எழுதுகிறார். பிறகு வில்லன் போன் அடித்து “என்ன பாதிலயே எந்திரிச்சு வந்துட்ட நாங்க உன்ன லைவ்வா வாட்ச் பண்ணிட்டு இருக்கோம்… உன் மகள் உனக்கு உயிரோட வேணும்னா நீ அந்த வீடியோவ முழுசா பாக்கனும்…” என்று மிரட்டுகிறார்கள். சேரன் வேற வழியில்லாமல் வீட்டிற்கு கிளம்ப இரவு நேரத்தில் போலீஸ் ஸ்டேசன் வந்த போலீஸ்கள் சேரன் எதோ சிக்கலில் இருப்பதை புரிந்துகொள்கிறார்கள். சேரன் வீடு திரும்பி வீடியோக்களை பார்க்க தொடங்கிய சில நிமிடங்களில் அந்த வீட்டில் எங்கெங்கு கேமிரா பதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்பதை சேரன் கண்டறிகிறார். சக போலீஸ் ஒருவர் சேரனின் வீட்டிற்கு வந்து யதார்த்தமாக சரக்கடிப்பது போல் கமுக்கமாக ஒரு கீபேட் மொபைலை கொடுத்துச் செல்கிறார். அந்த செல்போன் விவகாரம் கேமிராவால் கண்காணிக்கப்படும் வில்லன் குரூப்புகளுக்கு தெரியவில்லை. வீடியோவில் வில்லன்கள் ஒரு பெண்ணை ஒருவர் மாற்றி ஒருவர் புணரும் காட்சி ஓட சேரன் கதறுகிறார். பிறகு தான் தெரிகிறது அந்தப் பெண் இரண்டு வருடங்களுக்கு முன் சேரனின் உதவியைப் பெற்ற பெண் என்று. வில்லன்கள் உன் மகள இனிமே தான் சீரழிக்கப் போறோம் அத நீ லைவ்வா பார்க்கப் போற என்று சொல்ல மகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கீபேட் மொபைலில் கால்களால் டைப் செய்து தகவல் தெரிவிக்கிறார். சேரனின் போலீஸ் நண்பர்கள் அந்த தகவலின் குறிப்புகளை அறிந்து வில்லன்கள் யார் அவர்களது உறவினர்கள் யார் என்பதையும் கண்டறிகிறார்கள். அந்த உறவினரை வைத்து வில்லன்களை தங்கள் வசம் சிக்க வைக்கிறார்கள். அதற்குப் பிறகு வில்லன்கள் என்ன ஆனார்கள் சேரனின் மகள் என்ன ஆனாள் என்பது கிளைமேக்ஸ். 

படத்தின் கதை உண்மையிலயே கொஞ்சம் வித்தியாசமானது தான். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலயே தெரிந்துவிட்டது ஓகே இது ஓரளவுக்கு பார்க்க கூடிய படம் என்று. படத்தில் அந்த அளவுக்கு புதுமையான காட்சிகள். படம் ஆரம்பித்த இருபதாவது நிமிடங்களில் சேரனுக்கு எப்படி பதற்றம் தொற்றிக் கொள்கிறதோ அதே போல நமக்கும் பதற்றம் தொற்றி கொள்கிறது. சேரன் என்ற அருமையான நடிகன் படத்தை பெரிய அளவில் தாங்கிப் பிடித்திருக்கிறார். கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் படம் ஒரே அறைக்குள் நடக்கிறது அந்த ஒரே அறையில் சேரன் மட்டுமே இருக்கிறார். அந்த நாற்பது நிமிடங்கள் தான் உண்மையில் படத்தின் உயிர்நாடி. ராஜாவுகக்கு செக் என்ற தலைப்பு படத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளது. 

அடுத்ததாக பாராட்டப்பட வேண்டியவர் சேரனின் மனைவியாக நடித்தவர். அவரது போர்ஷன் மிக குறைவு என்றாலும் “நீங்க என்ன நினைக்குறிங்கனு புரியுது டாக்டர்… நீங்க என்ன தான் டாக்டரா இருந்தாலும் நீங்களும் ஆம்பள தான” என்று சொல்லும்போது வாவ் என்று வியக்க வைக்கிறார் அந்த நடிகை. மகளாக நடித்தவர் க்யூட். வில்லனாக நடித்த கனா காலும் காலங்கள் நடிகர் சேரன் அளவுக்கு நடிக்கவில்லை என்றாலும் தன்னால் முடிந்தவரை படத்தை காப்பாற்றுகிறார். சிருஷ்டி டாங்கே சில காட்சிகளே வந்தாலும் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம். லோ பட்ஜட் படத்தில் நியூடாக நடிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். பின்னணி இசையில் இன்னும் மிரட்டல் காட்டி இருக்கலாம். ஒரே பாடல் என்றாலும் அந்தப் பாடலை இன்னும் இனிமையாக தந்திருக்கலாம். 

அதேபோல படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். அதுவும் கால் விரல் மூலமாக செல்போனில் டைப் செய்யும் காட்சியை சகித்துக்கொள்ள முடியவில்லை. சிறைக்குள் கழுத்தை அறுத்துக் கொண்டு ஹாஸ்பிடலில் படுத்து நாடகமாடுபவனை பற்றிய விவரிப்புகள் இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம். சண்டைக்காட்சிகள் ஏன் அவ்வளவு சோர்வாக இருந்தன என்பது புரியவில்லை. யுத்தம் செய் படத்தில் சண்டைக் காட்சிகளில் மிரட்டிய சேரன் இந்தப் படத்தில் ஏனோ சொதப்பி இருக்கிறார். எடிட்டிங் அவ்வளவு அமெச்சூர்டாக இருந்தது. இன்னும் கொஞ்சம் புதுமையான எடிட்டிங் எபக்ட்ஸ்களை போட்டிருக்கலாம். 

இப்படி குறைகள் நிறைய இருப்பினும் கண்டிப்பாக இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம். பேஸ்புக் மூலம் காதல் செய்ய ஆரம்பித்தவர்கள் கொஞ்சம் விழிப்புணர்வாக இருங்கள் என்பது படம் சொல்லும் நீதி. இயக்குனர் சேரனுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து அவர் படம் இயக்குவதை தவிர்த்துவிட்டு தொடர்ந்து இது போன்ற புதுமையான இளமையான இயக்குனர்களின் படத்தில் நடிக்க வேண்டும். இயக்குனர் பார்த்திபனுக்கும் இயக்குனர் பாரதிராஜாவுக்கும் இதே வேண்டுகோள் தான். நீங்கள் சாதித்ததும் சோதித்ததும் போதும். உங்களுடைய இன்னொரு முகத்தை காட்டுங்கள். 

Related Articles

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து பிர... * பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை நான் கடுமையாக கண்டிக்கிறேன்; இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து - நடிகர் ஜி.வி...
#gobackmodi எதிர்ப்பையும் தாண்டி பிரதமர்... இன்று( ஏப்ரல்12) சென்னையில் நடைபெறவுள்ள ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்கவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும் பாரத பிரதமர் வருகை தந்துள்ளார். அவரு...
17 Years of துள்ளுவதோ இளமை... நடிகர் தனுஷ் அறிமுகமான படம். முதல் படமே A  சர்டிபிகேட் படம். ரிலீசாகி இன்றோடு ( மே 10, 2019 ) 17 வருடங்கள் ஆகிறது. இன்று தனுஷ் அடைந்திருக்கும் உயரமோ வ...
வாத்தியார் பிள்ளைகள், டாக்டர் பிள்ளைகள் ... நீட் தேர்வுக்கும் தமிழகத்துக்கும் எப்படிப்பட்ட பொருத்தம் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருபுறம் கீர்த்தனா என்ற மாணவி நீட் தேர்வில் இந்திய அளவில் குறிப்பிட...

Be the first to comment on "ராஜாவுக்கு செக் – தூக்க வியாதியை காட்டிய தூங்க வைக்காத படம்!"

Leave a comment

Your email address will not be published.


*