கடந்த வருடம் டிசம்பர் 31ம் தேதி ரஜினி தன் அரசியல் அறிவிப்பை அறிவித்தார். ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்றும் நான் இன்னும் கட்சி ஆரம்பிங்கலைங்க என்கிறார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத கமல்ஹாசனோ சட்டென்று அரசியலுக்கு வந்து கட்சியைத் தொடங்கி மக்கள் பிரச்சினையை களத்தில் இறங்கி கேட்க பார்க்கத் தொடங்கியுள்ளார். சினிமாவில் இதுதான் கடைசி என்று இந்தியன் 2 படத்தைக் குறிப்பிட்டுவிட்டு தன்னால் முடிந்த அளவுக்கு களப்பணி செய்து வருகிறார்.
ஆனால் ரஜினியோ இன்னும் எந்த உறுதியான முடிவும் எடுக்காமல் இருக்கிறார். அவருக்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதைக் காட்டிலும் தனி சேனல் தொடங்குவது தான் முக்கியமானதாக தெரிகிறது. பத்திரிக்கையாளர்களும் இவரை சும்மா விட்டு வைக்கப் போவதில்லை. கேட்கும் கேள்விகளுக்கு நெற்றில் அறைந்தாற் போல் பதில் சொல்ல வேண்டும். இல்லையென்றால் கமலைப் போல குழப்பியடித்து சமாளிக்காவாவது தெரிய வேண்டும். இவரோ பாஜக ஆட்சி நல்ல ஆட்சி என்று நம்பும் அளவுக்கு வெள்ளந்தியாக இருக்கிறார்.
தொடரும் சொதப்பல்கள்:
ஏழுபேர் விடுதலையைப் பற்றி என்ன நினைக்கிறீங்க? என்ற கேள்விக்கு எந்த ஏழு பேர் என்று பதில் தெரியாமல் சொதப்பினார். தூத்துக்குடி சம்பவம் பற்றி சொல்லவே தேவையில்லை. அதை அடுத்து தற்போது கஜா புயல் சம்பந்தப்பட்ட கேள்விக்கு ரஜினி ரசிகர்களே வெறுக்கும், நான் இன்னும் கட்சி தொடங்கலங்க என்ற பதிலை தந்துள்ளார்.
எவ்வளவு மனிதாபமானமற்ற பதில் இது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து ஏகப்பட்ட உதவிகள் செய்யப்பட்டிருந்தாலும் அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து நலன் விசாரிப்பது ஒரு அடிப்படை நாகரிகம். இந்த நாகரிகம் தெரியாமல் எப்படி நல்ல ஆட்சி செய்யப் போகிறார்? நாளைக்கு அந்தப் பகுதிக்கு ஓட்டு கேட்டுப் போனால் அந்தப் பகுதி மக்கள் அவரை உள்ளே நுழைய விடுவார்களா? பாதிக்கப்பட்ட மக்களில் எத்தனை பேரு ரஜினி ரசிகர்களாக இருப்பார்கள்? அவர்களைப் பற்றி சிந்தித்தாரா ரஜினி?
கட்சி தொடங்குவதற்கு முன்பே இத்தனை சொதப்பல்கள் என்றால் கட்சி தொடங்கிய பின் நடக்கும் சொதப்பல்கள் இன்னும் எத்தனையோ? பேட்ட ரிலீஸ் ஆகும் வரை எப்படியாவது தாக்குப் பிடியுங்கள்! என்கிறார்கள் நெட்டிசன்கள்.
நெட்டிசன்கள் ஒரு பக்கம் இருக்க ” மாற்றத்திற்கு உண்டான சிந்தனையே ரஜினியிடம் இல்லை… எல்லாம் வெறும் பில்டப்பு… ” என்று சீமான் மறுபக்கம் தன்னால் முடிந்த வரை ரஜினியை வைத்து செய்கிறார். இவை எல்லாம் ஒருபுறமிருக்க சீமானுடனே சுற்றித் திரிந்த அமீர், நைசாக கமல் கட்சியில் இணைந்து கொண்டார்.
Be the first to comment on "மாற்றத்திற்கு உண்டான சிந்தனையே ரஜினியிடம் இல்லை! – அரசியலில் பல்பு வாங்கப் போகிறாரா சூப்பர்ஸ்டார்!"