ரஜினி தனிக்கட்சி! கமல் தனிக்கட்சி! – சினிமாவை போல அரசியல் களத்திலும் முன்னோடியாக விளங்குவார்களா?

Rajini Kamal PoliticsRajini Kamal Politics

கமல், நான் தனிக்கட்சி ஆரம்பித்து தனித்து நிற்க போகின்றேன் என்று சில நாட்களுக்கு முன்பே தன் முடிவை சொல்லிவிட்டார்.

இவ்வளவு நாள் இழுக்கடித்து இந்தாண்டின் கடைசி நாளான இன்று நான் தனிக்கட்சி ஆரம்பித்து தனித்து நிற்க போகின்றேன் என்று ரஜினியும் தன் முடிவை கூறியிருக்கிறார். அதற்கு முதல் ஆளாய் முந்திக்கொண்டு ” சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக ” என்று கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தும் தெரிவித்துவிட்டார்.

இவ்வளவு நாள் இருவரும்?

நீங்க எப்ப அரசியலுக்கு வருவீங்க என்ற கேள்வி கமல் ரஜினி இருவரிடமும் பல முறை பலர் கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு கமல், ” ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நான் என் விரலை கறையாக்கிக்கொள்வது போதாதா? இன்னும் அரசியலுக்கு வேற வரணுமா? என்றும், நான் எப்போது முதல்முறையாக வாக்களித்தேனோ அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றும் பதில் கூறியவர் அவ்வப்போது அரசியல் பேசி வந்தார். குறிப்பாக 2015ல் அம்மா ஆட்சியில் இருக்கும்போது, நிகழ்ந்த சென்னை வெள்ளத்தின் போது நீங்கள் ஏன் மக்களுக்கு உதவித்தொகை கொடுக்கவில்லை என்று கமலிடம் கேட்டதற்கு, செய்யவேண்டிய அரசே வாயை பொத்திக்கொண்டு இருக்கும்போது நான் எதுக்கு கொடுக்கணும் என்று ஆளுங்கட்சிக்கு சாட்டை வீசினார். அதைத்தொடர்ந்து டுவிட்டரில்  ஆளுங்கட்சி அமைச்சர்களை வறுத்தெடுத்தார். நான் தனிக்கட்சி ஆரம்பித்து தனித்து நிற்க போகிறேன் என்று அறிவிப்பும் கொடுத்துவிட்டார். இப்போது மையம் விசில், என்னுள் மையம் கொண்ட புயல் என்று தனிப்பாதை அமைத்து தன்னை தயார்படுத்திக்கொண்டிருகிறார்.

மேற்கண்ட கேள்வி, கமலைவிட ரஜினியிடம் தான் அதிகமுறை கேட்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் “எல்லாம் ஆண்டவன் கையில் இருக்கிறது” என்று பல ஆண்டுகளாக மேலே கைகாட்டிவிட்டு உஷாராக எஸ்கேப் ஆனவர் இன்று தன்னுடைய முடிவை சொல்லிவிட்டார். ஆனந்த விகடனில் ஊருக்கு நல்லது சொல்வேன் தொடர் எழுதிய தமிழருவி மணியன் போன்ற அரசியல் தெரிந்த பெரிய மனிதர்களை தன்னுடன் வைத்துக்கொண்டு இவரும் தனிப்பாதையில் தன்னை தயார்படுத்தி வருகிறார்.

அரசியல் களத்தில் இருவரும்?

இருவருடைய சினிமா வாழ்க்கையின் தொடக்கம் சிகரத்துடன் [கே.பாலசந்தர்] அமைந்ததால் இன்றைக்கு இவ்வளவு உயரத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள். சினிமாவில் இருவருக்குமிடையே பலமான போட்டி இருந்தாலும் இருவரும் வெவ்வேறு கருத்துக்கொள்கை உடையவராக இருந்தாலும் ஒருபோதும் ஒருவரையொருவர் சாடிக்கொண்டதில்லை. [சமீபத்திய முரசொலி விழாவில் கமல் பேச்சும், சிவாஜி மணிமண்டபம் விழாவில் ரஜினி பேச்சும் கொஞ்சம் நெருடல்]. புறம்பேசிக்கொண்டதில்லை. எங்கும் எப்போதும் நட்பு பாராட்டியே வருகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் இருவருடைய நட்பும் ஐம்பது ஆண்டுகால நட்பாக தொடர இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நடிகர்களுக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறார்கள். கமல் ஐம்பது விழாவில் எங்களை போல் இனிவரும் நடிகர்களால் இருக்க முடியுமா என்று ரஜினியை கட்டிப்பிடித்துக்கொண்டு கமல், முன்னோக்கி சவாலும் விடுத்துள்ளார்.

இவர்களை போலவே, இவர்களுடைய ரசிகர்களும் இருந்து வருகிறார்கள். ரஜினி பத்மவிபூசண் விருது வாங்கினால் கமல் ரசிகர்கள்  இனிப்புகள் ஊட்டி மகிழ்ந்து வாழ்த்து தெரிவித்து போஸ்டார் அடிக்கிறார்கள். கமல் செவாலியே விருது வாங்கினால் ரஜினி ரசிகர்கள் இனிப்பு பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து போஸ்டர் அடிக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் அரசியலுக்கு வந்து தனித்தனி கட்சி ஆரம்பித்து ஒருவரையொருவர் எதிர்த்து நிற்கும் நிலை இப்போது உருவாகியுள்ளது. இருவருமே இன்னமும் தங்களது அரசியல் பயணத்தின் குறிக்கோள், கொள்கைகள் என்று எதையும் சொல்லாமல் தகுந்த நேரத்தை எதிர்பார்த்து மௌனம் காத்து வருகிறார்கள்.

மாற்றத்தை விரும்பும் இளைஞர்களின் மனக்குரல் :

1. இருவரும் எலக்சனில் தனித்து நின்றால் இப்போது இருக்கும் கழுசடைகள் போல் இல்லாமல் ஒருவரையொருவர் சாடிக்கொள்ளாமல், பகடி பேசாமல் எதிர்த்து போட்டியிட வேண்டும். ரஜினி ஒருபக்கம், கமல் ஒருபக்கம் என்றால் நிச்சயம் மக்களின் கவனம் ஓரளவுக்கு திசை திரும்பும். பல்லாண்டு காலமாக ஊழல் ஆட்சி செய்த கட்சிகளின் வாக்கு வங்கி உடைபடும்.

2. இவ்வளவு நாட்கள் இருவரும் எப்படி சினிமாவில் ஒற்றுமையாக இருந்தார்களோ அதே போல அரசியல் களத்திலும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒருவேளை ரஜினி வென்றால் எப்படி சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டும் என்று கமலும், ஒருவேளை கமல் வென்றால் எப்படி சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டும் என்று ரஜினியும் நடந்துகொண்டு வரும் தலைமுறைக்கு நாகரிக அரசியலை கற்றுத்தர வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

இப்படி இன்றைய இளைஞர்கள், என்னதான் உணர்ச்சிகரமாக மீம்ஸ் போட்டு பேசிக்கொண்டாலும் இதெல்லாம் வெறும் கனவாகவே போய்விடுமோ என்ற அச்சத்துடன் தான் இருக்கிறார்கள்.

காரணம், ஓட்டுக்கு காசு வாங்கியே பழக்கப்பட்ட இந்திய சமூகத்தில் ஜனநாயகம் சிரிப்பாய் சிரித்துக்கொண்டிருப்பது தான்!

Related Articles

இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் அ... இந்தியாவில் சாதி எப்படி தோன்றியது? அது எப்படி பரவியது? சாதி இந்திய மக்களை வாழ்வின் முன்னோக்கி நகர்த்துகிறதா இல்லை நரகத்துக்குள் தள்ளுகிறதா? குறிப்பாக ...
இந்தியாவில் குழந்தைகள் திருமணம் குறைந்து... யுனிசெப் அமைப்பு குழந்தைகள் திருமணம் இந்தியாவில் வெகுவாக குறைந்து வருவதாக யுனிசெப் அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.குழந்தை திருமணம் குறித்த யுன...
டெல்லி டேர்டெவில்ஸ் (DD) 2018 ஐபிஎல் அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி டெல்லி டேர்டெவில்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி...
இந்த பாட்டுக்காக யுவனுக்கு தேசிய விருது ... யுவனுக்கு ஏன் இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது யுவன் ரசிகர்களின் மனதிற்குள் பல நாட்களாக இருக்கும் கேள்வி. ஒரு ரசிகர் அந்தக் கேள்வியை பேரன்பு ...

Be the first to comment on "ரஜினி தனிக்கட்சி! கமல் தனிக்கட்சி! – சினிமாவை போல அரசியல் களத்திலும் முன்னோடியாக விளங்குவார்களா?"

Leave a comment

Your email address will not be published.


*