பூ, பிச்சைக்காரன் போன்ற அருமையான திரைப்படங்கள் தந்த இயக்குனர் சசியின் அடுத்த படம் சிவப்பு மஞ்சள் பச்சை. ஜீவி பைக் ரேசராக நடிக்க சித்தார்த் டிராபிக் போலிசாக நடித்து உள்ளார். இருவரும் அடிக்கடி மோதிக் கொள்ள நடுவில் இருக்கும் நாயகி ( ஜீவிக்கு அக்கா ) இருவரையும் ஒன்று சேர்த்தாரா இல்லையா என்பதே கதை.
பைக் ஸ்டன்ட் காட்சிகள் பெங்களூர் டேய்ஸ் படத்தில் வருவது போல் பட்டாசாக இருக்கின்றன. படத்தின் முதல் இருபது நிமிடங்கள் குறிப்பாக ஜீவி சித்தார்த் துரத்தல் காட்சிகள் அனல் பறக்கின்றன.
பைக் ரேஸ்கள் எப்படி நடக்கிறது? அதை நடத்துபவர்கள் யார்? இது போன்ற ரேஸ்கள் தேவையா? இதனால் டிராபிக் போலீஸ்கள் எவ்வளவு பிரச்சினைக்கு உள்ளாகிறார்கள் போன்ற டீட்டெய்லிங் அருமை. தமிழ் சினிமாவுக்குப் புதிதாகவும் இருக்கின்றன. முழுக்க முழுக்க இளைஞி இளைஞர்களை குறிவைத்தே இந்தப் படம் எடுக்கப் பட்டு உள்ளது. அதற்கேற்றாற் போலவே தியேட்டர் ரெஸ்பான்ஸ் நன்றாகவே இருக்கிறது. முதல் பாதியில் ” புள்ளீங்கோ ” பன்னும் அராத்து வேலைகள், மாமா மாப்ள கலாய் விளையாட்டுகள் போன்ற இன்னும் நிறைய விஷியங்களால் தியேட்டரில் சிரிப்பலைகள் கேட்கிறது.
நக்கலைட்ஸ் தனம் அம்மா ஜீவியின் அத்தையாக நடித்துள்ளார். வழக்கம்போலவே அவருடைய நடிப்பு மனதை கவர்கிறது. தனம் அம்மாவுக்கு இந்தப் படம் நல்ல அறிமுகம். வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள். ஜீவியின் இளம் வயது கதாபாத்திரம் செய்த சிறுவனும் நன்றாக நடித்துள்ளான். குறிப்பாக சேற்றுக்குள் நடக்கும் சண்டைக் காட்சியில் அந்த சிறுவன் நன்றாகவே அழுது நடித்து உள்ளான்.
” மச்சானுங்க அமையுறதெல்லாம் வரம்டா ” , ” குடிச்சிட்டு வரானுங்க பாருங்க எதிர்கால இந்தியா” , ” நம்ம பூனை பீர் குடிக்க ஆரம்பிச்சிடுச்சு… ” , ” பொண்டாட்டி கிட்ட 100 % ஹானஸ்ட் இருக்கனும்… “, ” நமக்கு லிப்ட் கொடுத்தாங்கறதுக்காக நம்ம போக வேண்டிய இடத்தை அவிங்க டிசைட் பண்ணக் கூடாது… ” , ” உனக்காக வேண்டாம்னு சொல்லிருப்பா… ஆனா பிடிக்கலன்னு சொல்லிருக்க மாட்டா… ” , ” அக்கா தம்பி உறவ விட மாமா மச்சான் உறவு தான் ஸ்ட்ராங்கானது… ” , ” எல்லோரையும் திருப்தி படுத்தனும்னு நினைச்சா நல்லதே பண்ண முடியாது… ” , ” புருசன் என்ன கிப்ட் வாங்கித் தருவான்கறது தான் பொண்ணுங்களுக்குத் திரில்… ” , ” பொம்பள ட்ரெஸ் போட்றது அவ்வளவு கேவலமா… ” , ” ஒரு நாட்டோட லட்சணத்த ரோட்ட வச்சே சொல்லிடலாம்… ” , ” சேலஜ் நீ பண்ணு… ஜெயிக்கறத நான் பண்ணுறேன்… ” , ” நாம எல்லோருமே பொண்ணுங்கள அன்புங்கற பேருல அதிகாரம் தான் பண்றோம்… ” போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன.
அக்கா தம்பி பாசம் சம்பந்தமான காட்சிகள் நெகிழ வைக்கின்றன. ஜீவியின் அக்காவாக ( பூனையாக ) நடித்தவர் அழகாக இருக்கிறார். நல்ல நடிப்பு. நிறைய படங்களில் நடிக்க இனி வாய்ப்புகள் அவரை தேடி வரும். அக்கா தம்பி கெமிஸ்ட்ரி நன்று வொர்க் அவுட்டாக ஜீவியின் நடிப்பும் முக்கிய காரணம். நாச்சியார், சர்வம் தாள மயம் படங்களைத் தொடர்ந்து ஜீவி நடித்த இன்னொரு நல்ல படம் என்றால் கண்டிப்பாக சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை சொல்லலாம். படத்தில் ஹீரோ இவர் வில்லன் இவர் என்றெல்லாம் இல்லாமல் சாதாரண கதாபாத்திரங்களாகவே நடித்து உள்ளனர். ஜீவியைப் போலவே சித்தார்த்துக்கும் இந்தப் படம் பெயர் சொல்லும் படம். போலீசாக நடித்துள்ள சித்தார்த்தின் கம்பீரம் அட்டகாசம். போதை பொருட்கள் விற்கும் வில்லனை இன்னும் கொஞ்சம் வலிமையாக காட்டி இருக்கலாம்.
இடைவேளை ஹார்ட் டச்சிங், அதே சமயத்தில் பொறி பறக்கிறது. எடிட்டிங் டீம் நன்றாகவே வேலை செய்துள்ளது, எந்த தொய்வும் இல்லாமல் படம் ஜெட் வேகத்தில் செல்கிறது அதே சமயம் காட்சிகள் அழுத்தமாகவும் இருக்கிறது. இசையமைப்பாளர் சித்து குமாரின் பின்னணி இசை சூப்பர். வெறித்தனமாக இசை அமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் மென்மையான ரகம். இடைவேளைக்குப் பிறகு வரும் சண்டைக் காட்சி செம நக்கல். பைக் ஸ்டண்ட் காட்சிகள் போலவே சண்டைக் காட்சிகளிலும் அனல் பறக்கின்றன. கிளைமேக்ஸில் நடக்கும் விடியற்காலை சண்டைக் காட்சிகளும் அக்காவுக்கு குழந்தை பிறக்கும் காட்சியும் மாமனும் மச்சானும் இணையும் காட்சியும் செம. குறிப்பாக துப்பட்டா துண்டு இருவர் கையிலும் படும் இடமும் ஜீவி தன்னுடைய அக்காவின் குழந்தையை தூக்கி வந்து சேரும் இடமும் அருமை. கவிதை போல் இருந்தன அந்தக் காட்சிகள்.
பொது ரோட்ல ரேஸ்லாம் நடத்தக் கூடாது… அதுக்குனு தனி இடம் வச்சு என்ன வேணாலும் பண்ணிட்டு போங்க… போன்ற வாக்கியங்கள் தியேட்டரில் உள்ள ரசிகர்களிடம் இருந்து வந்தன. இந்த வார்த்தைகளே இந்தப் படத்தின் வெற்றி எனலாம்.
புள்ளீங்கோ கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் !
Be the first to comment on "சித்தார்த் ஜீவி பிரகாஷ் நடித்த “சிவப்பு மஞ்சள் பச்சை” படம் எப்படி இருக்கு?"