கலைஞர் டீவியில் ஒளிபரப்பாகும் நல்ல நிகழ்ச்சிகளுள் ஒன்று நாளைய இயக்குனர். இந்த நிகழ்ச்சியின் நடுவராக இயக்குனர் வெற்றிமாறன் பங்கேற்று வருகிறார். அவர் பல குறும்படங்களை பார்த்து நாளைய இயக்குனர்களுக்கு சொன்ன கமெண்டுகள் இங்கே தொகுக்கப்பட்டு உள்ளன.
- நம்முடைய படம் எந்த நிலப்பரப்பில் ( எந்த ஏரியா ) நடக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
- எந்த ஏரியா என தெளிவுபடுத்திய பிறகு ஏரியாவுக்குத் தகுந்த வட்டார வழக்கு மொழி பயன்படுத்த வேண்டும். கேரக்டர்கள் பேசும் வசனங்கள் அந்த நிலப்பரப்பின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். உச்சரிப்புகள் துல்லியமாக இருக்க வேண்டும்.
- உச்சரிப்புக்குத் தகுந்த டப்பிங் சரியாக செய்திருக்க வேண்டும். ஒலிப்பதிவு சரியாக இருக்க வேண்டும்.
- கேமரா கோணங்கள் காட்சிக்குத் தேவையானதாக பொருத்தமானதாக இருக்க வேண்டும். புலிக்கலைஞன் என்ற குறும்படத்தில் கேமரா கோணங்கள் சரியாக இல்லாததைப் பற்றி விவரித்தார் வெற்றிமாறன்.
- ஏற்கனவே பல சினிமாக்களில் பார்த்து பழக்கப்பட்டதையே திரும்பி திரும்பி காண்பிக்க கூடாது. கருப்பா இருக்கறவன் திருடனா இருப்பான், சேட்டு ஊட்டுக்காரங்க மனிதாபிமானம் இல்லாம இருப்பாங்க போன்ற பார்த்து பழக்கப்பட்ட காட்சிகளை தவிர்க்கனும்.
- படத் தலைப்பின் வழியாக முழுக் கதையையும் சொல்லக் கூடாது. அதே போல படத்தின் கதை இதுதான் என்பதை படத்திற்கு முன்போ பின்போ எழுத்தில் காட்டுவதை தவிர்க்கனும்.
- கதைக்குத் தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொள்ள கூடிய நடிகர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு போலீஸ் கதாபாத்திரம் என்றால் கட்டிங் செய்ய ஒத்துழைக்க கூடிய நபரை நடிக்க வைக்க வேண்டும்.
- பேய்ப்படமாக இருந்தாலும் படத்தில் லாஜிக் இருக்க வேண்டும். இது ஏன் இப்படி வந்தது என்ற கேள்விகளை எழுப்பி அதற்குத் தகுந்தபடி லாஜிக் மீறல் இல்லாத கதை உருவாக்க வேண்டும்.
- படத்தின் மூலமாக தெரியாத ஒரு புதிய தகவலை சொல்கிறோம் என்றால் அந்த தகவல் 100 % உண்மையானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த தகவலை தவிர்க்க வேண்டும். அதே போல காட்சிகளில் உண்மைத் தன்மை இருக்க வேண்டும். உதாரணமாக போலீஸ் படம் என்றால் எந்தெந்த துறை என்னென்ன வேலை செய்யும் எவ்வளவு நாளில் வேலை செய்யும் போன்ற தகவல்களை இயக்குனர் தெரிந்திருக்க வேண்டும். காட்சிகளில் அதை தெளிவுபடுத்த வேண்டும்.
- படத்தை உரிய நேரத்தில் முடித்தாக வேண்டும். படத்திற்கான கதையை வேறு ஒருவரிடம் இருந்து எடுத்திருந்தாலோ அல்லது வேறு படைப்பின் தாக்கத்தில் இருந்து எடுத்திருந்தாலோ படைப்புக்குரியவருக்கு உரிய மரியாதையை டைட்டில் கார்டில் தந்திருக்க வேண்டும்.
Be the first to comment on "ஒரு நல்ல படம் எடுக்க நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?"