திண்டுக்கல் மாவட்டத்தில் 2016-17- ல் பருவ மழை இல்லாத காரணத்தால் விவசாயம் பொய்த்து
போனது. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு நிவாரணம் வழங்கப்படும் என
அரசால் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 2 , ரூ. 5 மற்றும்
ரூ. 6 என்று ஒற்றை இலக்கத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிவாரண தொகை
வழங்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள்
பருவ மழை பொய்த்ததால் கிட்டத்தட்ட திண்டுக்கல் மாவட்டத்தில் 39000 விவசாயிகள்
பாதிக்கப்பட்டனர். பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட தோட்டப்பயிர்களை விவசாயிகள்
பயிரிட்டு இருந்தனர்.
மாநில அரசு, நிவாரண தொகை வழங்குவதில் ஏதோ தவறு நடந்து இருப்பதை
ஒத்துக்கொண்டிருக்கிறது. காப்பீடு செய்யப்பட்ட நிறுவனத்திடம் உடனடியாக தவறை சரி
செய்யும்படியும் உத்தரவுவிடப்பட்டிருக்கிறது. நெல் ஏக்கர் ஒன்றிற்கு 26000 ரூபாயும், பருப்புக்கு
ஏக்கர் ஒன்றிற்கு 12000 ரூபாயும், கம்புக்கு ஏக்கர் ஒன்றிற்கு 20000 ரூபாயும் நிவாரணமாக
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
அச்சத்தில் 36000 விவசாயிகள்
முதற்கட்டமாக 3000 விவசாயிகளுக்கு ஒற்றை இலக்கத்தில் நிவாரண தொகை வழங்கப்பட்டு
இருப்பதால் எஞ்சியுள்ள 36000 விவசாயிகளும் தங்களுக்கும் இப்படித்தான் ஒற்றை இலக்கத்தில்
நிவாரண தொகை கிடைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர்.
போராட்ட களத்தில் விவசாயிகள்
வறட்சி நிவாரணமாக விவசாயிகள் தரப்பில் 40000 கோடி ரூபாய் கேட்டு கோரிக்கை
வைக்கப்பட்டு இருக்கிறது. மாநில அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில்
டெல்லிக்குச் சென்று விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். காவேரி
மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோரிக்கை விடுத்தனர். ஸ்வாமிநாதன் குழு
அறிக்கையை உடனடியாக அமுல் படுத்தவும், விவசாய பொருட்களுக்கு உரிய விலை
கொடுக்கவும் தேசிய அளவிலான நடைப் பயணத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர்.
விவசாயிகள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை தனித்தனி குழுக்களாக பிரிந்து அரசுக்குத்
தெரிவித்த வண்ணம் உள்ளனர். அரசின் பெரிய பலமே விவசாயிகளின் இந்த ஒற்றுமையின்மை
தான். மும்பையில் 25000 விவசாயிகள் ஒன்றுகூடிப் போராடியதை போல, தமிழக விவசாயிகளும்
ஒருமித்த குரலில் ஒற்றுமையாகப் போராடும் பட்சத்தில் தமிழக விவசாயிகளின் பிரச்சனைகள்
பெரிய அளவில் பேசப்படும்.
Be the first to comment on "ஒற்றை இலக்கத்தில் பயிர் காப்பீட்டு நிவாரண தொகை – அதிர்ச்சியில் விவசாயிகள்"