“ஒத்த செருப்பு சைஸ் 7” படம் பற்றி இயக்குனர் தங்கர்பச்சான் என்ன சொல்கிறார் ?

Thangar Bachan comment on oththa seruppu size 7 movie

முன் திரையீட்டுக்காட்சியில் “ஒத்த செருப்பு அளவு 7” திரைப்படைத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. பரிசோதனை முயற்சியான திரைப்படங்கள் மக்களைச் சென்று சேர்வதற்காக மக்களுக்கு நன்கு அறியப்பட்டவர்களால் அத்திரைப்படம் குறித்து பேச,எழுத படத்தைத் திரையிட்டுக் காண்பிக்க  வைப்பது திரைத்துறையில் காலம் காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. படம் பிடிக்காமல் போனால் உண்மையை மறைத்து மக்களிடத்தில் பொய்யான கருத்தை தெரிவிக்க பயந்தே அந்தப்பக்கம் செல்வதையே நான் தவிர்த்து விடுவேன்.

நான் மதிக்கும் எனது சிறந்த நண்பரான திரு பார்த்திபன் அவர்கள்  நான்கைந்து முறையாக அழைத்தும் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்ததால் செல்லமுடியவில்லை. திரைப்படத்துறையில் ஈட்டிய பொருட்களை இத்துறையிலேயே  தொடர்ந்து முதலீடு செய்பவர் அவர். குருவிபோல சேர்த்துவைத்த சொத்துக்களைக்கூட மீண்டும் அதிலேயே போட்டுவிட்டு நம்பிக்கையோடு செயல்படுபவர். ஏற்கெனவே பொருளாதாரச் சிக்கலில் தவிப்பவருக்கு இது தேவையா எனும் கோபத்தில்தான் இருக்கையில் அமர்ந்தேன். படத்தில் பார்த்திபனைத்தவிர வேறு நடிகர்கள் இல்லை எனும் செய்தியை உடன் வந்திருந்த என் மனைவியிடம் சொல்லவில்லை. அரங்கினுள் நுழைகின்ற போது எந்த கேமராக்களை பார்க்கக்கூடாது என பயந்தேனோ அந்த கேமராக்கள் தான் என்னை வரவேற்றன. போகும்போது இந்த கேமராக்களிடமிருந்து தப்பிக்க வழியே இல்லை என்பது தெரிந்து விட்டது. 

என்ன பதிலைச்சொல்லி நழுவலாம் எனும் சிந்தனையிலேயே படத்தில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. அத்துடன் என் மனைவி  நிலைமையை எண்ணி அச்சம் குடிகொண்டு விட்டது.

திரைப்படம் முடிந்தது! படம் சரியில்லை என்றால் பத்து நிமிடங்களிலேயே புறப்படச் சொல்லும் மனைவியைப்பார்த்தேன். என் கை விரல்களை இருகப்பற்றிக்கொண்டார். கண்கள் கலங்கி வழியத்தயாராக இருந்தது.

தீராத நோயினால் அவதிப்படும் குழந்தையுடனும், அழகான மனைவியுடனும் பொருளாதாரத்தில் சிக்கி வாழ்க்கை நகர்த்த முடியாமல் போராடும் ஒரு ஏழையின் வாழ்க்கை இது! அவனது வாழ்க்கையை சிதைப்பவர்கள்  திரையில் இல்லை. நாம் தான் அவரவர்களுக்கான கற்பனையில் அவர்களின் குரலைக் கொண்டு மாசிலாமணி எனும் பாத்திரத்துடன் (பார்த்திபனுடன்) பயணிக்க வேண்டும். தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு மனித உணர்வுகளை திரைப்படம் முழுக்க விதைத்திருக்கிறார். கண்கள் கலங்காமல் நம்மால் இருக்க முடிவதில்லை! 

ஒத்த செருப்பு ஓர் அனுபவம். மற்றவர்களின் கருத்தைக்கேட்டு கதை என்னவென்று கேட்டுவிட்டு கடந்து சென்றுவிடக்கூடிய படமல்ல. வாரந்தோறும்  குறைந்தது நான்கு படங்களாவது வெளியாகின்றன. பெரும்பாலானப் படங்களில் அதுவும் அதிக பொருட்செலவில் உருவாக்கக்கூடிய படங்களில் பார்க்காத எதையும் புதிதாக எதையும்  காணப்போவதில்லை. கதை மற்றும் உட்பொருள் இல்லாததால்தான் அப்படிப்பட்ட படங்களுக்கு அதிக செலவு செய்யப்படுகிறது. இன்று வரை குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படங்களை மக்கள் மனதில் நிற்கின்றன. 

மக்களின் இரசனை உயரும்பொழுது சிறந்த படைப்புக்களை உருவாக்க வேண்டிய கடமை உருவாக்குபவர்களுக்கு இருக்கின்றது. ஒத்த செருப்பு போன்ற திரைப்படங்கள் பொருளாதாரத்தில் வெற்றியடையும்பொழுது இக்கலையும்,மக்களின் இரசனையும் மேன்மையடைகின்றன. அதனால் மேலும் மேலும்  புதுமையானப் படைப்புகள் கிடைத்துக்கொண்டே இருக்கும்!

விடைபெறும் முன் பார்த்திபன் அவர்களை கட்டித்தழுவி “நம்பிக்கையோடுச் செல்லுங்கள்; இவ்வளவு உயர்ந்த நடிகனை முழுமையாக நான் கையாளவில்லையே” என என் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டு வந்தேன். என் மனைவியும் அதே கருத்தைச்சொல்லிவிட்டு வந்தார். 

“ஒத்த செருப்பு அளவு 7”  தேர்ந்த ஒரு படைப்பு. சிறந்த திரைக்கதை, உருவாக்கம்,வடிவம் என அனைத்திலும் புதுமை நிரம்பி வழிகின்றது. அனைவரையும் கவரும் இந்தக்குடும்பக்கதை  ஒவ்வொரு எளிய மனிதனையும் கவரும் என்பது உறுதி. ஒரு தமிழ்த்திரைப்படத்தில் என்னென்ன இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்த்துச் செல்கிறோமோ அனைத்தும் புதிய வடிவத்தில் இருக்கின்றது. இந்த அனுபவத்தை அனைவரும் அடைய வேண்டும் என்பதே என் விருப்பம். நண்பர் பார்த்திபன் ஒரு சிறந்த நடிகனாக,படைப்பாளனாக உயர்ந்து நிற்கின்றார்;தமிழகத்திற்கும்,திரைப்படத்துறைக்கும் பெருமை சேர்க்கிறார்!

– தங்கர் பச்சான்

இவ்வாறு இயக்குனர் தங்கர்பச்சான் தன் கருத்தை பதிவு செய்துள்ளார். ஒத்த செருப்பு சைஸ் ஏழு படத்தை இயக்குனர் பார்த்திபன் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரெஸ் ஷோ மற்றும் சிறப்புக் காட்சிகளை பார்த்த விமர்சகர்கள், சினிமா கலைஞர்கள் அனைவருமே இந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். 

ராதாகிருஷ்ண பார்த்திபன் vs சூர்யா : 

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்டு 15, 2014ம் ஆண்டு சூர்யாவின் அஞ்சான் திரைப்படம் வெளியானது. அதே நாளில் தான் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியான கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் வெளியானது. அஞ்சான் படம் படுதோல்வி அடைய கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வெற்றியை பெற்றது. ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யாவும் பார்த்திபனும் மோதிக் கொள்கிறார்கள். இந்த முறை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இந்த முறை சூர்யா ஜெயித்து பார்த்திபன் தோற்கப் போகிறாரா அல்லது பார்த்திபன் ஜெயித்து சூர்யா தோற்கப் போகிறாரா அல்லது இருவருமே வெற்றியை சந்திக்கப் போகிறார்களா அல்லது இருவருமே தோல்வியை சந்திக்கப் போகிறார்களா என்பதை செப்டம்பர் 20 வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்குமுன் சூர்யாவும் பார்த்திபனும் இணைந்து நடித்த மாஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Articles

ஜெயலலிதாவும் ரம்யா கிருஷ்ணனும்! – ... ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் எனக்கு நடிக்க வேண்டும் போல் இருக்கிறது என்று பல நடிகைகள் தங்கள் ஆசையை வெளிப்படுத்தினர். ...
” சுதந்திரம்கிறது மனுசங்களுக்கு மட... தயாரிப்பு : டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன்எழுத்து இயக்கம் : சாய் சேகர்இசை : எஸ்எஸ் தமன்ஒளிப்பதிவு : என் கே ஏகாம்பரம்எடிட்டிங் : பிரவீன் ...
தனுஷ் நடிப்பில் தமிழில் மறு ஆக்கம் காண்க... குறைந்த விலை சானிட்டரி நாப்கின் தயாரித்து புரட்சி செய்த அருணாசலம் முருகானந்தம் அவர்களின் கதையை தழுவி இந்தியில் எடுக்கப்பட்ட திரைப்படம் பேட்மேன். அருணா...
தீவிரவாதியை நல்லவனாக்க பார்க்கிறாரா இயக்... தமிழ் சினிமாவின் மிகமுக்கியமான இயக்குனர் வெற்றிமாறன். அவர் நவம்பர் 3ஆம் தேதி வந்த ஆனந்த விகடன் இதழில் தன்னுடைய அடுத்த படமான விடுதலை படம் குறித்து நிறை...

Be the first to comment on "“ஒத்த செருப்பு சைஸ் 7” படம் பற்றி இயக்குனர் தங்கர்பச்சான் என்ன சொல்கிறார் ?"

Leave a comment

Your email address will not be published.


*