ஒங்கள போடனும் சார்… சுருக்கமாக ஓபிஎஸ்… இந்த மாதிரி டைட்டிலை எங்கிருந்து பிடிக்கிறார்கள் ? யாருக்காக வைக்கிறார்கள் ? என்பது கேள்விக் குறியே. தியேட்டரில் செக்ஸ் படங்கள் ஓடிய காலத்தில் கூட இப்படி அசிங்கமான டைட்டிலை வச்சு படம் ரிலீசாக வில்லை. ஏ சர்டிபிகேட் வாங்கிவிட்டால் படத்தை எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாமா ? நாகரிகம் என்ற ஒரு விஷியத்தை இவர்கள் ஏன் மறந்து தொலைக்கிறார்கள் ? சரி அதை விடுங்கள். ஜித்தன் ரமேசுக்கு என்ன கேடு ? ஏகப்பட்ட நல்ல படங்களை தந்த பரம்பரையில் இருந்து வந்தவர் தன்னுடைய படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலை வைக்கலாமா ? விமல், ஜித்தன் ரமேஷ், கௌதம் கார்த்திக் போன்றோர் இந்த மாதிரி டைட்டில் வைத்த படங்களில் நடிப்பதை தயவு செய்து தவிர்க்கவும்.
சீதா லட்சுமி பற்றிய சுருக்கம் ஓகே ரகம். டிவி சேனல் நடத்தும் பிக்பாஸ் போன்ற ஒரு கோடி ஒரு பேய் என்ற நிகழ்ச்சிக்காக சீதாலட்சுமி பேய் பங்களாவில் எட்டு பேர் தங்குகிறார்கள். அவர்களை பேய் என்ன செய்தது? நிகழ்ச்சியில் வென்றவர் யார்? என்பதே படத்தின் கதை.
இந்தப் படத்தை மூன்று பேர் தயாரித்திருக்கிறார்கள், இரண்டு பேர் இயக்கி இருக்கிறார்கள். படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் டைட்டிலுக்கான காரணம் தெரிவிக்கப்படுகிறது. அதை பார்த்ததும் இது நல்ல படமா இல்லை தகாத படமா இல்லை பேய் படமா என்ற கேள்வி எழூகிறது. இசையமைப்பாளர் ஓவர் பெர்பாமன்ஸ் செய்திருக்கிறார். குறிப்பாக ஹீரோவின் அறிமுக காட்சியில் பின்னணி இசை காதை கிழிக்கிறது. இப்படி வேண்டாத இடம் வேண்டிய இடம் என்று எதுவும் இல்லாமல் எல்லா இடத்திலும் பின்னணி இசையை தீட்டு தீட்டு என தீட்டி வைத்திருக்கிறார். ஒரு சில இடங்களில் பின்னணி இசையில் ஹிப்ஹாப் தமிழா தெரிகிறார். பாடல்களும் சுமார். அறிமுகப் பாடலாக தத்துவ வரிகள் பெய்யும் மாஸ் ஹீரோயிச பாடல் இல்லாமல் டூயட் பாடலை வைத்திருக்கிறார்கள். எதோ வித்தியாசமாக செய்திருக்கிறார்கள் என்று எதிர்பார்ப்பை கிளப்புகிறது படம். ஆனால் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற தவறி இருக்கிறது அடுத்தடுத்து வரும் காட்சிகள். ஹீரோயின் ஒரு சாயலில் சில்க் ஸ்மிதா மாதிரி இருக்கிறார். ஆனால் நடிப்பில் சுமார் ரகமே.
எடிட்டர் யாருப்பா… பாடல் காட்சிகள் உள்பட பல காட்சிகளில் பழைய எடிட்டிங் டெக்னிக்கை பயன்படுத்தி உள்ளார். காமெடியனாக மனோபாலா வருகிறார், டிவி சேனல் நடத்தி வருபவராக வந்து காமெடியை செய்யாமல் கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்.
” சூடா சூப்பவா… “, ” பசங்க மட்டும் தான் பிட்டு படம் பாக்கனுமா… “, ” மூடு வர மாதிரி பெயிண்டிங் பண்ணி வச்சுட்டு மூடி வச்சிருக்கான் பாரு… “, ” வாய் வேல… “, ” கை வேல… ” , “விளக்கு புடிக்க வச்சுட்டாங்க… ” இது போன்ற வசனங்கள் இதை விட முகம் சுளிக்க வைக்கும் டபுள் மீனிங் வசனங்கள் படத்தில் தாராளமாக உள்ளது. இது போன்ற வசனங்கள் இல்லாமல் சின்சியராக எடுத்திருந்தால் உண்மையிலயே இது நல்ல படமாக வந்திருக்கும். இடைவேளை காட்சிகள் ஓரளவுக்கு ஒர்க் அவுட்டாகி இருந்தது. குறிப்பாக ரோஸ் கலர் சேலை கட்டிய பெண் வந்து தில்லிருந்தா போங்கடா என்று சொல்லும் சீன் செம திகில். அதே சமயம் யூகிக்க முடிந்ததாகவும் இருந்தது. ஜித்தன் ரமேஷ் நல்ல நடிப்பைத் தர முயன்றுள்ளார். அதே சமயம் காஞ்சனா ராவா லாரன்சும் காஞ்சனா சரத் குமாரும் ராட்சசன் பெர்ணான்டசும் நினைவுக்கு வந்து செல்கிறார்கள். இடைவேளை காட்சிகள் மற்றும் இரண்டாம் பாதி காட்சிகள் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தன.
வழக்கமான பேய் படங்கள் போல இந்தப் படத்திலும் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கின்றன. ஓரளவுக்கு நல்ல கமர்ஷியல் கதையை கையில் வைத்துக் கொண்டு டபுள் மீனிங் வசனங்கள் மற்றும் கில்மா காட்சிகளால் கதைகளத்தை சொதப்பி வைத்திருக்கிறார்கள். ஜித்தன் ரமேசுக்கு வில்லன் கதாபாத்திரங்கள் செட்டாகும் என அவருடைய இரண்டாம் பாதி கெட்டப்பை பார்க்கும் போது தெரிகிறது. இரண்டாம் பாதியில் வரும் அண்ணன் தம்பி காட்சிகள் மிக செயற்கையாக இருக்கின்றன. பிளாஸ்பேக் காட்சிகள் ரொம்ப அமெச்சூர்டாக இருந்தன. பள்ளியில் நடக்கும் பாலியல் விவகாரம் பற்றிய பதிவு கவனிக்கத் தக்கது. கிளைமேக்ஸில் வரும் பைக் ஸ்டண்ட் காட்சிகள் தேவை இல்லாதது. கிளைமேக்ஸ் டுவிஸ்ட் கணிக்க முடியாதது தான். ஆனால் அவை எடுபடவில்லை. டுவிஸ்ட்டுகள் எரிச்சலையும் ஏமாற்றத்தையுமே தந்தன. இதே போன்று அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகமதி என்ற பேய் படம் கிளைமேக்ஸில் டுவிஸ்ட் வைத்து ரசிகர்களை ஏமாற்றியது. அதே தவறை தான் இந்தப் படமும் செய்துள்ளது. அண்ணன் தான் பழிவாங்கினான் என்றால் சீதா லட்சுமியை பற்றி கூறியது ஏன் என்ற வினாவிற்குப் பதில் திண்டாடுகிறது. படத்தின் நீளம் குறைவு. அது ஒரு வகையில் படத்திற்கு பலமே.
நல்ல நடிப்புத் திறமை இருந்தும் ஜித்தன் ரமேஷ் இன்னும் பிடிபடாமலே இருக்கிறார். கதை தேர்வில் அவர் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
Be the first to comment on "ஜித்தன் ரமேசின் “ஒங்கள போடனும் சார்” திரைப்பட விமர்சனம்!"