கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த மூன்று வேலையில்லாத இளைஞர்கள் ஒரு பக்சான் என்ற கெமிக்கல் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்கள். அந்தக் கெமிக்கல் கம்பெனியில் மீத்தைல் ஐசோ சயனைட் என்ற உயிர்க்கொல்லி வேதிப்பொருள் பயன்பாட்டில் இருக்கிறது. அது வெளியானால் என்ன ஆகும்? அந்தப் பொருள் வெளியேறியது எப்படி? அதனால் நாயகனுக்கு ஏற்பட்ட பிரச்சினை என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடையே உறியடி 2.
வாழ்க்கைல என்ன ஆகுனம்னு ஆசைப்பட்றிங்க என்ற கேள்விக்கு ஜாலியா இருக்கனும் என்பதை விடையாக கூறி நம் மனதைக் கவர்ந்தார்கள் உறியடி பாகம் ஒன்று நாயகர்கள். அந்தக் கூட்டணி இந்தப் படத்தில் இல்லாவிட்டாலும் மெட்ராஸ் சென்ட்ரல் சுதாகருடனான கூட்டணி நம்மை கவர்கிறது. முதல் பாதியின் முதல் இருபது நிமிடங்கள் காதல் காமெடி என்று கலகல. இடைவேளைக்கு சில நிமிட முந்தைய காட்சிகள் மனதை பதற வைக்கிறது. இரண்டாம் பாதி முழுக்க முழுக்க சீரியஸான காட்சிகள். அட்டகாசமான திரைக்கதையால் படம் சர்ரென்று முடிந்துவிடுகிறது.உறியடி பாகம் 1 ஐ போன்றே சாதாராண கதைக்களம், சாதி அரசியல் இரண்டும் இந்தப் படத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. டாக்டராக வரும் அறிமுக நாயகி மனதை கவர்கிறார். பக்கத்து வீட்டுப்பெண் எபெக்டைத் தருகிறார். காமெடியையும் ஹீரோவே செய்துவிட பரிதாபங்கள் சுதாகர் குணச்சித்திர கதாபாத்திரமாக மாற வேண்டியதாயிற்று.
ஒளிப்பதிவு அருமை. பின்னணி இசை படத்திற்கு பலவீனம். சில இடங்களில் மெய்சிலிர்க்க வைத்தாலும் பல இடங்களில் அறுத்து தள்ளியிருக்கிறார். எப்போ முடியும் இந்த இரைச்சல் என்று புலம்ப வைக்கிறது பின்னணி இசை. 96 படத்திற்கு அற்புதமாக இசையமைத்தவர் இந்தப் படத்தில் ஏன் இப்படி செய்தார்? முக்கியமான வசனங்கள் எல்லாம் இசையில் மறைந்துவிடுகிறது. உறியடி பார்ட் 1 ல் இருந்த மானே மானே பாடலைப் போல மனதை கவரும் காதல் பாடல் இதில் இல்லை. அக்னி குஞ்சொன்று கண்டேன் என்ற பாடல் மட்டுமே மனதில் நிற்கிறது.
தயாரிப்பாளர் சூர்யா எதாவது ஒரு இடத்தில் சிறப்புத் தோற்றமாக வருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெமிக்கல் ஆலையின் விளைவை மையமாக வைத்து மெர்க்குரி படம் வெளியானது. தற்போது உறியடி 2 அதைவிட கொஞ்சம் வீரியமாக தொழிற்சாலையின் விளைவுகளை அலசி ஆராய்ந்து மக்களுக்கு எளிமையாக புரிய வைத்திருக்கிறது. குறிப்பாக பீரோவுக்குள் குழந்தையை வைத்து பூட்டும் காட்சியில் அழுகை வந்துவிடுகிறது. இத்தனை நடந்தும் தூத்துக்குடியில் எதாவது மாற்றம் உண்டாகுமா? ஸ்டெர்லைட் ஆலைக்கு என்ன தீர்வு என்பது கேள்விக்குறியே?
சமூகத்தின் சமநிலை தவறினால் சகலமும் அவலமாகும் என்று இந்த இளம் கூட்டணி பொட்டில் அடித்தபடி சொல்லியிருக்கிறது. மூன்றாம் பாகத்துக்காக வெயிட்டிங். தத்தகிட தித்தோம்!
Be the first to comment on "தத்தகிட தித்தோம் – உறியடி 2 விமர்சனம்!"