எழுத்தாளர் பிரபஞ்சனின் மகாநதி ஒரு பார்வை!

A Vision of the Tamil Writer Prapanchan Mahanadi Book

“பிரிவு ரொம்பவும் சங்கடமான விஷியம் தான். பிரியத்துக்கு உரியவர்களைப் பிரிவது என்பது ரொம்பவும் வேதனை தரும் அனுபவம்… ” இந்த வரிகள் எழுத்தாளர் பிரபஞ்சனின் மகாநதி நாவலில் இடம்பெற்றிருக்கும் மிக முக்கியமான வரி. இந்த வரிகள் இன்று நம்மை கண்கலங்க வைக்கிறது. அவருடைய சாதனைகள், குணாதிசியம் போன்றவற்றை புதிதாக சொல்ல தேவையில்லை. பெரும்பாலானோர் அறிந்ததே. அவரிடம் மிகவும் பிடித்த ஒரு விஷியம் என்று பெண் எழுத்தாளர்கள் சிலாகிப்பது அவர் தரும் உற்சாகத்தை… ஊக்குவிப்பை… ஆலோசனைகளை… இன்னும் பலவற்றை. நிறைய பெண் எழுத்தாளர்கள் உருவாக இவர் மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விஷியம்.

பிரபஞ்சனின் மகாநதி!

கதைச்சுருக்கம்:

கோவிந்து மாமாவுக்கும் வேதநாராயணனுக்கும் இடைப்பட்ட உறவு பற்றிய நாவல். நாவல் வேதத்தின் கண்ணோட்டத்தில் விரிகிறது.

கதைக்களம்: புதுச்சேரி

கோவிந்து மாமா கள்ளுக்கடை நடத்தி வருகிறார். அவருடன் உத்ராபதி, வேதம் என்ற இரண்டு சிறுவர்களும் கூட்டு சேர்கிறார்கள். பாட்டு கச்சேரியில் கலந்து கொள்கிறார்கள். பிறகு அவர் வீட்டிற்குச் செல்கிறார்கள். உத்ராபதி தன் வழியில் போக வேதம் கோவிந்து மாமாவுடன் பயணத்தை தொடங்குகிறான்.

கோவிந்து மாமாவின் மகள் கோகிலா அக்காவைப் பார்த்து பயப்படுகிறான். வியக்கிறான். ஆசை படுகிறான். மரியாதை செலுத்துகிறான். நெருங்கிப் பழகுகிறான். இதேபோல கோவிந்து மாமாவின் மனைவியுடனும் (மாமி) உரிமையோடு பழகுகிறான். ஆனந்தம் பொங்கும் குடும்பமாக இருந்தவர்கள் இறுதியில் என்ன ஆனார்கள்? வேதம் மேற்படிப்புக்காக சென்ற இடம் அவனை எப்படியெல்லாம் மாற்றியது? செழிப்பாக வாழ்ந்த கோவிந்து மாமா குடும்பம் எப்படி வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டது? அள்ளி அள்ளிக்கொடுத்த மாமியின் ஒரேயொரு ஜாக்கெட் கிழிந்து மாரை வெளியே காட்டியபோதும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ஆள் இல்லாமல் போனது ஏன்? தேவதையாக வலம் வந்த கோகிலா திருமணம் ஆன பிறகு எவ்வளவு துன்பத்தை சந்தித்தாள்? போன்ற வினாக்களுக்கு மகாநதி நாவலில் புன்னகையும் அழுகையும் கலந்த விடை பரவிக் கிடக்கிறது.

இன்றைய சூழலுக்கு கோவிந்து மாமாவாக பிரபஞ்சனும், அவரை பிரிந்து ஏங்கித் தவிக்கும் வேதமாக அவருடைய வாசகர்களும் விளங்குகிறார்கள். வேதத்துக்கு கோவிந்து மாமா சொன்ன மிக முக்கியமான வரிகள் மகாநதி நாவலில் இடம்பெற்றுள்ளது. அந்த வரிகளை வேதமாகிய நாம் சற்று நினைவுகூர்வோம்.

1.தனித்திரு… விழித்திரு… பசித்திரு…

வடலூர் ராமலிங்க சுவாமிகள் ‘தனித்திரு?விழித்திரு, பசித்திரு’ என்றார்கள். அதன் அர்த்தம் இதோ!

  • தனித்திருப்பது என்பது மனுஷர்களிடம் இருந்து விரோதப்பட்டு தனிமைப்பட்டு போவது என்பதல்ல. தனிமையில் இருந்து உலகத்தை அதன் நடப்புகளை விசாரணை செய்துகொள்வதும் நம்மை நாமே விழிப்படையச் செய்து கொள்வதும், இறைவன் நம்மோடு அளவளாவும் தருணங்களை ஏற்படுத்திக் கொள்ளவுமே சுவாமிகள் தனித்திரு என்றார்கள்.
  • விழித்திரு – என்பது தூங்கக் கூடாது என்பதில்லை. விழிப்போடு ஜாக்ரதை உணர்வோடு சதாசர்வ காலமும் செய்யும் காரியங்கள் அனைத்தின் காரண காரிய விவேகத்தோடு செய்தல் என்பதே பொருள்.
  • பசித்திரு – என்பது சோறு தின்னக்கூடாது என்பதில்லை. மீதூண் உண்பதும், பட்டினி கிடப்பதும், இறைவன் வாழும் இந்த உடலை நாசப்படுத்திவிடும். ஞானத்துக்குப் பசித்திரு. பசித்தபின் புசி. புசிப்பது நல்லுணவாகிய ஞான சம்பந்தமாய் இருக்கட்டும் என்பதே இதன் பொருளாகும். பசித்த வயிறு தானே உணவை ஏற்கும். இந்த மூன்று மகாவாக்கியங்கள் உனக்கு நான் என்றும் சொல்லும் புத்திமதியாகும்.

2.மரணம் வாழ்வின் முடிவல்ல. அது ஒரு புதுவாழ்வின் தொடக்கம். ஆன்மா சட்டையைக் கழட்டிப்போட்டு அனைத்துச் சட்டைகளில் இருந்தும் விடுபடுவது தான் மோட்சம்.

3.சும்மா வெறும் படிப்போட நின்னுடாதே. நல்லா சுத்து. புதுப்புது இடங்களைப் போய் பாரு… புதுப்புது மனிதர்களை சந்தித்துப் பேசு. புதுப்புது அனுவங்களைப் பெத்துக்கோ. அதுதான் படிப்போட நோக்கம்.

4.கூடுமான வரை தனியாக இருப்பதற்கு வசதி செய்துகொள். கூட்டத்துக்குள் உன்னைக் கரைத்துக்கொண்டு ஒன்றும் இல்லாமல் ஆகிவிடாதே.

நம் வாழ்க்கை எதை போன்றது?

மகாநதி ஆற்றைப் போன்றது. இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் மகாநதி ஒரு கணம் சட்டென்று உறைந்து நின்றுவிட்டு பின்னர் மீண்டும் பெருக்கெடுத்து ஓடும்!!!

Related Articles

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சென்சார்?... இந்தியாவில் வெளியாகின்ற திரைப்படங்களுக்கு இந்திய சென்சார் குழு சான்றிதழ் வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தை தாக்கும் வகையிலோ, குறிப்பிட்ட நபரை தாக்...
வேலைக்காரன் இது உழைப்பாளிகளின் படம்!... யாருக்கு இந்த படம்? ஓடி ஓடி உழைத்துவிட்டு அதற்குத்தகுந்த பலனை பெறாமல் காலங்காலமாக அறியாமையால் ஏமாந்துகொண்டு வறுமையின் வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டிரு...
ரஜினியை சாக்கடைக்குள் தள்ளிவிட்ட ரஞ்சித்... ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான, பலருடைய மூன்றரை வருட உழைப்பை சுமந்த 2.O படம் தற்போது ரிலீசாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.ரஜி...
ஆளுநர் மாளிகையில் மூன்றாவது நாளாக டெல்லி... டெல்லி ஆளுநரைச் சந்திப்பதற்காக நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர...

Be the first to comment on "எழுத்தாளர் பிரபஞ்சனின் மகாநதி ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*