“சென்னையில் யாரும் எங்கும் செல்லலாம். யாரும் யாருக்காகவும் பயப்பட வேண்டியதில்லை. கூவம் அழுக்காய் மலமாய் நாற்றத்தோடு ஓடினாலும் தாமிரபரணியைக் காட்டிலும் புனிதமானது என்று ஏனோ தோன்றுகிறது… ” தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் புத்தகம் குறித்து இயக்குனர் ராம் எழுதியிருக்கும் வரிகள் இவை.
முதலில் இதன் அர்த்தம் புரியவில்லை. கூவத்தைக் காட்டிலும் தாமிரபரணி நாற்றமானது என்கிறாரா? எப்படி? என்று சிந்திக்கத் தோன்றியது. மனித மலக்கழிவுகளை விட முகச்சுளிப்பை உண்டாக்க கூடிய ஒன்று அந்த நதியில் நதிக்கரையில் வாழும் மக்களிடம் கலந்துள்ளதோ? அப்படியென்றால் முகச் சுளிப்பை உண்டாக்கும் அந்த விசியம் என்ன? என்ற கேள்வியை எழுப்பி அதற்கு விடை சாதி தான் என பொட்டில் அறைந்து சொல்கிறது தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்.
21 சிறுகதைகள் கொண்ட சிறுகதை தொகுப்பு தான் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் புத்தகம்.
முதல் சிறுகதையே அதிகாரத்தை எதிர்த்து கேள்வியெழுப்பும் சிறுகதை. அவர்கள் எனக்கு சுரேஷ் என பெயரிட்டார்கள் என்ற சிறுகதையில் சுரேஷ் என்பவன் யார்? தப்பு செய்த மாங்கொட்டாரத்தாளையும் ஐயாகுட்டியையும் இந்த உலகம் ஏன் எதுவும் செய்யவில்லை? வலி தாங்காமல் பதில் வினை ஆற்றியது குற்றமா? நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள் நான் பொறுத்துக்கொண்டே உங்கள் காலடியில் படுத்துக்கிடக்க வேண்டுமா? இதற்கு தூக்கில் தொங்குவதே மேல் என தூக்கில் தொங்கியபோதும் உயிர்பிழைத்த சுரேஷ் வேண்டுமென்றே மூச்சடக்கி சாவது ஏன்? என்ற வினாக்களை நறுக்கென கேட்கிறது மாரி செல்வராஜின் எழுத்து.
இதை அடுத்து அடுக்கு செம்பருத்தி எனும் காதல் கதை. ” நாம் பார்த்தவுடனே நமக்கு அவ்வளவு பிடித்து போகிற பெண் நாம் சாதியாகவே இருப்பது எவ்வளவு பெரிய வரம்! ” ” அன்பே பத்மா… நீ இல்லாமல் இனி வாழாது என் ஆத்மா… !
உன் பதிலுக்காக சிவன் கோயிலில் காத்திருப்பேன்… நீ சம்மதித்தால் பெருமாள் கோவிலில் மணமுடிப்பேன்…
சாதி வேறில்லை அதனால் எனக்குப் பயமில்லை…
மதமும் வேறில்லை ஆதலால் நமக்கு மரணமில்லை…
உன்னால் வாயால் சொல்ல முடியவில்லையெனில் அடுக்கு செம்பருத்தி மட்டும் வைத்துக்கொண்டு வா…
நான் தெரிந்துகொள்கிறேன் நீ என் ஆளு என்று… ” போன்றவை இந்தச் சிறுகதையில் இடம் பெறும் மிக முக்கியமான வரி.
அதையடுத்து உடுக்கு எனும் சிறுகதை. செய்யாத குற்றத்துக்கு ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஓவியனின் கதை. “மான்கள் ஆவேசமாய் புலிகளை துரத்துகின்றன… ” என்ற வரிதான் இந்தச் சிறுகதையின் மையமே.
இதே போல தட்டான்பூச்சிகளின் வீடு, மகாத்மாவை கொல்ல ஒரு சதித் திட்டம், தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், எனக்கு ரயில் பிடிக்காது, என் தாத்தாவை நான் தான் கொன்றேன்… போன்ற சிறுகதைகள் நம் மனதை வெகுவாக கவர்கின்றன.
மொத்தம் 200 பக்கங்கள் உடைய இந்தப் புத்தகத்தை கொஞ்சம் நிதானமாகத் தான் படித்தாக வேண்டும். ஒவ்வொரு கதைக்குள்ளும் ஏகப்பட்ட உள்ளர்த்தங்கள், வினாக்கள், கூக்குரல்கள் நிரம்பிக் கிடக்கின்றன. படித்து முடித்த பிறகு நீங்களும் சொல்வீர்கள், ஆம் தாமிரபரணியைக் காட்டிலும் கூவம் புனிதமானது என்று!
Be the first to comment on "கூவம் நதி தாமிரபரணியைக் காட்டிலும் புனிதமானது! – தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் புத்தக விமர்சனம்!"