ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நண்பர்கள் தினமாம். ஆனால் நேற்று யாரோ ஒருவர் வாட்சப்பில் நண்பர்கள் தினம் வாழ்த்துக் கூற, மக்களும் நேற்று தான் உலக நண்பர்கள் தினம் போல என்று எண்ணிக் கொண்டு ஆளாளுக்கு வாழ்த்து கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
சில மணி நேரங்கள் கழித்து, ” அடேய்களே… என்ன சொன்னாலும் நம்புறீங்களேடா… இன்னிக்கு பிரண்ட்ஷிப் டேய்ன்னு சொன்னது புரளி டா… எவனோ உங்கள செஞ்சிருக்கான்… ” என்று சில மீம் பேஜ்கள் சொன்ன பிறகே வதந்தி அலை ஓய்ந்தது.
இப்படி நாளுக்கு நாள் வதந்தி நூற்றுக்கணக்கில் பரவி வருகிறது வாட்சப்பில்.
அதை தடுக்க வாட்சப் நிறுவனம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு ஆணை இட்டது. இப்போது அதற்கான செயல்களில் இறங்கி இருக்கிறது, வாட்சப் நிறுவனம்.
பகிரப்படும் செய்தி உண்மையா பொய்யா என்பதை அறிய சின்ன யுக்தியை இப்போது கையாண்டு இருக்கிறது. ஒரு குரூப்பில் உள்ளவர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டால் அது தெரிந்த நபரால் டைப் செய்யப் பட்டதா அல்லது இன்னொரு நபரிடம் இருந்து பார்வேர்டு செய்யப் பட்டதா என்பதை அறிந்து கொள்ளும் வண்ணம் ஒரு லேபிள் அதில் அடையாளக் குறியீடாக வைக்கப் பட்டு உள்ளது.
அந்த லேபிளை வைத்து வந்திருப்பது உண்மையான செய்தி தானா அல்லது எங்கிருந்தோ பரவி வரும் வதந்தியா என்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம். அதே போல, வாட்சப் குழுவில் இருந்து யாராவது விலகினால் மீண்டும் அந்தக் குழுவின் அட்மினால் குழுவில் இணைக்க முடியாதபடி அமைத்து உள்ளது. இதனால் பிடிக்காத குழுவில் இருந்து இப்போது தாராளமாக விலகலாம். அட்மின் தொந்தரவுகள் இனி ஓரளவுக்கு இருக்காது.
இந்த இரண்டு அம்சங்களை பலர் வரவேற்று உள்ளனர். அதே போல வாட்சப்பில் பரவும் செய்தி அனைத்தும் உண்மை மட்டுமே என்ற நிலைக்கு வாட்சப் முன்னேற வேண்டும் என்றும் மத்திய அரசாங்கம் உள்பட பல தரப்பு விரும்புகிறது.
Be the first to comment on "வதந்திகள் பரவாமல் இருக்க சில புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறது வாட்சப்!"