ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து இன்று திமுக ஒரு நாள் பந்த் – போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படலாம்

திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் இன்று நடக்கும் ஒரு நாள் பந்த் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.  ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொன்றதை கண்டித்து திமுக இந்த ஒரு நாள் பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

சிஐடியூ ஆட்டோ  ஓட்டுநர்கள்  சங்க  பொதுச் செயலாளர் சிவாஜி இது குறித்து பேசும் போது ‘காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஆட்டோக்கள் ஓடாது’ என்றார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் இந்த அழைப்பிற்குப் புதுவை அரசு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. புதுவை பொதுப்பணி துறை அமைச்சரும், புதுவை காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நமச்சிவாயம் தெரிவித்ததாவது ‘காங்கிரஸ் கட்சி, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், 13 பேர் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் நீதி கிடைக்க வலியுறுத்தியும், திமுக அழைப்பு விடுத்துள்ள இந்த ஒரு நாள் பந்த்துக்கு ஆதரவு தெரிவிக்கிறது’ என்றார்.

 

தோழமை கட்சிகள் ஆதரவு

மறுமலர்ச்சி  திராவிட முன்னேற்றக் கழகம், சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் திராவிடர் கழகம் ஆகியவை திமுக அழைப்பு விடுத்துள்ள இந்த ஒரு நாள் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் போன்ற அடிப்படை பொருட்கள், நாள் முழுவதும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு பால் விநியோகம் விநியோகஸ்தர்கள் நலச் சங்கம் இந்த பந்த்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசியதாவது ‘ தூத்துக்குடியில் இனி ஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை. மேலும் தூத்துக்குடியில் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.’

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100 ஆவது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் காவல்துறை துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிர் இழந்தனர். மேலும் 65 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைத் தொடர்ந்து இயங்க அனுமதி மறுத்திருக்கிறது. மேலும் வாரியத்தின் பரிந்துரையின் பேரில் ஆலைக்கு மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு  தொடர்பாக விசாரணை நடத்துமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

 

இணைய சேவைகள் துண்டிப்பு

‘போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் சிலர் போலீசின் மீது கல் எரிந்ததாலேயே போராட்டம் வன்முறையாக மாறியது. காவல்துறை தங்களை தற்காத்துக் கொள்ளவே துப்பாக்கிச் சூடு நடத்தினர்’ என்று நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழிகக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

‘தமிழக அரசு சொல்லும் காரணங்கள் கேலிக்கூத்தானவை. காவல்துறை கலவரத்தை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் தங்கள் வாகனங்களுக்கு தாங்களே தீ வைத்துக்கொண்டனர். போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி விடக்கூடாது என்பதற்காக இணைய வசதியைத் துண்டித்து வைத்திருக்கிறார்கள். தொலைக்காட்சி இணைப்பையும் துண்டித்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது’ என்று தூத்துக்குடி வாசிகள் தெரிவித்தனர்.

Related Articles

2019ல் ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் வாங... 2019ல் வெளியான படங்களில் மிக முக்கியமான படம் பேரன்பு. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் 56 மதிப்பெண்கள் தந்தது. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் விமர்சனம் ...
இயக்குனர் பாலாவிடம் ஓர் வேண்டுகோள்!... இயக்குனர் பாலாவை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. நாம் அனைவரும் பாலாவை பற்றி ஓரளவுக்கு தெரிந்து வைத்திருப்போம். இருந்தாலும் இன்னும் கூடுத...
01-04-2020 முதல் பிஎஸ்6 வகை வாகனங்கள் மட... தற்போது பயன்பாட்டில் இருக்கும் பி. எஸ். 4 வகை வாகன உற்பத்திக்கும் விற்பனைக்கும் காலக்கெடு விதித்து உள்ளது உச்ச நீதிமன்றம்.கடந்த சில மாதங்களுக்கு ...
“ஒரு படைப்பாளரின் கதை” இந்த ... எஸ். ராமகிருஷ்ணன், ஷாலின் மரியா லாரன்ஸ், அருண கிரி, காவிரி மைந்தன், ஓவியர் புகழேந்தி, கரன் கார்க்கி, கவிஞர் மனுஷி, சந்தோஷ் நாராயணன்,  எழுத்தாளர் தமயந்...

Be the first to comment on "ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து இன்று திமுக ஒரு நாள் பந்த் – போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படலாம்"

Leave a comment

Your email address will not be published.


*