இந்திய பிரதமர் வாரம் ஒரு நாடு என்று இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் வசித்து வருகிறார். அந்நாட்டு பிரதமர்களுடன், அதிபர்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் போது, மரியாதை நிமித்தமாக கை குலுக்கும் போது என்று சில முக்கிய தருணங்களில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார். இன்னும் சில சமயங்களில் கேமிரா மேன் எங்கே இருக்கிறார் என்று தேடிப் பிடித்து போஸ் கொடுத்து விடுகிறார். இதனால் பிரதமரை போட்டோஷாப் பிரதமர் என்றும் போஸ் பிரதமர் என்றும் சமூக வலை தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
போகும் இடம் எல்லாம் போட்டோ எடுப்பது, அதை வைத்து நான் தினமும் எவ்வளவு வேலை செய்கிறேன் பாருங்கள், நான் எவ்வளவு நல்லவன் பாருங்கள் என்று சுயதம்பட்டம் அடித்துக் கொள்வது அரசியல்வாதிகளுக்கே உண்டான தனித் தன்மை தான். அவர்களை வழக்கம் போல மன்னித்து விட்டு விடுவோம். அரசு அதிகாரிகளும், அரசு பள்ளி ஆசிரியர்களும் இதே பாணியை பின்பற்றுவது தான் லேசான முகச் சுளிப்பை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தி உள்ளது. எதோ ஒரு நாளில் மட்டும் மாணவர்களுடன் அமர்ந்து மதிய சத்து உணவு உண்ணும் ஆசிரியர் அதை படம் எடுத்து தம்பட்டம் அடிக்கிறார். ( அன்று மட்டும் உணவு சுவையாக இருக்கும். மற்ற நாட்களில் கல்லு மண்ணு தான்… ). ஆசிரியர்கள் தங்கள் வேலையை செய்வதையே சாதனையாக நினைத்து இப்படி தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் நிஜ முகமோ வேறு.
ஆசிரியர்கள் இப்படி இருக்க ஆட்சியர்கள் அதைவிட ஒரு படி மேல். எந்நேரமும் அவர்களுடன் ஒரு போட்டோகிராபர் இருப்பார் போல. துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து சாலையில் குப்பை அகற்றுவது போல, முதியோர் இல்லங்களுக்கு உதவுவது போல, வயதான பாட்டி வீட்டில் இலை போட்டு சாப்பிடுவது போல, கடப்பாரை எடுத்து குழி தோண்டுவது போல என்று அத்தனை சுயதம்பட்ட புகைப் படங்கள் சமூக வலை தளங்களில் பரவிக் கிடக்கிறது. இவர்கள் நிஜத்தில் முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கிறார்கள். இது எல்லாம் பெருமை இல்லை ஆட்சியர்களே. கடமை! சுயதம்பட்டம்
அடிப்பதை விட்டுவிட்டு, தினந்தோறும் கால் நோக நடக்கும் முதியவர்களை, விவசாயிகளை, மணல் கொள்ளையை தடுக்கும் போராளிகளை கவனியுங்கள்.
உங்களுடைய மாவட்டங்களில் தான் அதிக வட்டி, வெயில் தாக்கம், பிளாஸ்டிக் கழிவு, ரௌடிகள் தொல்லை, கருப்பு பணம் பதுக்கல், நிலத்தடி நீர் மாசுபாடு, சிறுமிகள் கற்பழிப்பு என்று பல பிரச்சினைகள் உள்ளது. உங்களுக்கு வேலை நிறைய இருக்கிறது.
Be the first to comment on "போகும் இடமெல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது மோடி மட்டுமா?"