தாங்கள் வாழும் நிலப்பகுதியில் தங்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும், காற்றை மாசுபடுத்தும் ஒரு ஆலையை மூடச்சொல்லிக் கேட்டார்கள். தூத்துக்குடியில் போராடிய மக்களின் ஒரே கோரிக்கை இது தான். அதற்காக அவர்கள் தொடர்ந்து 100 நாட்கள் எந்த வன்முறையும் இல்லாமல் அமைதியான வழியில் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றபோது போராட்டம் வன்முறையாக மாறியதால் காவல்துறை துப்பாக்கியால் சுட்டதில் பதினோரு பேர் உயிரிழந்தனர்.
ஸ்டெர்லைட் போராட்ட வரலாறு
அனில் அகர்வால் என்ற லண்டன் தொழிலதிபருக்கு சொந்தமான நிறுவனம் வேதாந்தா. அந்த நிறுவனத்தின் கீழ் தாமிரம் உற்பத்தி செய்ய ஆலை ஒன்றை இந்தியாவில் தொடங்க முடிவு செய்யப்படுகிறது. முதலில் குஜராத் மாநிலத்தில் ஆலை அமைக்க முடிவு செய்யப்படுகிறது. ஆனால் குஜராத் அரசாங்கம் அனுமதி மறுக்கவே, மகாராஷ்டிரா கோவா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அனுமதி கேட்டு ஆலை நிர்வாகம் செல்கின்றது. போகும் இடமெல்லாம் பிரச்சனை கிளம்பவே இறுதியில் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அந்த ஆலை இயங்க அனுமதி தரப்படுகிறது. இந்த ஆலை தூத்துக்குடியில் ஆரம்பிக்க முக்கிய காரணங்களாக இருந்தவர்கள் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி.
1994 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு பிறகு 1996 ஆம் ஆண்டு ஆலை இயங்கக் கருணாநிதியால் அனுமதி வழங்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்த 1996 ஆம் ஆண்டிலிருந்தே அதற்கெதிரான போராட்டங்களை மக்கள் முன்னின்று நடத்தி வருகிறார்கள்.இந்தப் போராட்டம் இன்றோ நேற்றோ ஆரம்பித்தது அல்ல. இதற்கு 20 ஆண்டுக்கால போராட்ட வரலாறு இருக்கிறது.
எதற்காகப் போராடுகிறார்கள்?
ஸ்டெர்லைட் ஆரம்பித்த இந்த 20 ஆண்டுகளில், தூத்துக்குடி நகரம் புற்றுநோய் பாதித்த மக்களின் பட்டியலில் முதலிடத்திற்கு வருகிறது. பிறக்கும் குழந்தைகள் தொடர்ந்து மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுகிறார்கள். சிறுநீர் பை கட்டிகளால் துன்புறுகிறார்கள்.சாதாரணமாக யாருமே ஆலையைக் கடந்து கூடப் போகமுடியாத அளவுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. தாங்கள் மட்டும் அல்லாமல் தாங்கள் சந்ததிகளே, ஏன் ஒரு தலைமுறையே இந்த ஆலையினால் பாதிக்கப்படும் என்ற அச்சத்தினால் மக்கள் இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
நேற்று என்ன நடந்தது?
நேற்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் 100 வது நாள் நேற்று. தாங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து பல்வேறு குழுக்கள் ஒன்றாக இணைந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுவதற்காக ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அவர்களைத் தடுக்க முற்பட்ட போலீஸ்காரர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. காவல்துறையின் வாகனங்கள் மற்றும் பல தனியார் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து தடியடி நடத்தப்பட்டது, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் பதினோரு பேர் உயிர் இழந்தனர்
திட்டமிட்ட கொலையா?
நேற்று நடந்த போராட்டத்தை கலவரமாக்கி போராட்டக்காரர்களை கொலை செய்ய திட்டமிடப்பட்டு இருந்ததாக பல்வேறு தரப்புகளில் இருந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பொதுவாகக் கலவரத்தை கலைக்க காவல்துறை கலவரக்காரர்களை முட்டிக்குக் கீழே சுடவேண்டும், ஆனால் நேற்றைய நிகழ்வில் அப்படி எதுவும் நடக்கவில்லை. காவல்துறை நடுமார்பிலும், நெற்றியிலும் குறிவைத்து சுட்டிருக்கிறார்கள். அதுவும் பொதுவாக கலவரத்தைக் கலைக்க பயன்படுத்தப்படும் துப்பாக்கி போல அல்லாமல் ஸ்னைப்பர் ரகத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவர்களுக்கு அப்படிப்பட்ட அதிகாரத்தை வழங்கியது யார்? போலீசில் சிலர் ஏன் மப்டியில் வந்து துப்பாக்கி சூடு நடத்தினர்? காவல்துறை இந்தத் துப்பாக்கி சூடு சம்பவத்தை முன்கூடியே திட்டமிட்டிருந்தார்களா என்பது குறித்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட வேண்டும்.
மாநில அரசின் மெத்தனப் போக்கு
ஒரு கலவரத்தை அது நிகழ்ந்தேறுவதற்கு முன்பே தடுப்பது தான் மாநில அரசின் திறமை. அதைச் செய்யாமல் விட்டுவிட்டு போராட்டக்காரர்கள் இறந்ததும் தொலைக்காட்சியில் தோன்றி அவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பது முற்றிலும் பொறுப்பற்ற ஒரு செயல். இந்த துன்பியல் நிகழ்வுக்கு நிச்சயம் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்.
அரசு என்ன செய்திருக்க வேண்டும்?
போராட்டக்காரர்களை அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்தது. அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அரசின் சார்பாக சில நம்பிக்கைகள் தரப்பட்டிருக்க வேண்டும். முற்றிலும் கையறு நிலையில் தான் அமைதியான போராட்டத்தை விடுத்து மக்கள் வன்முறையில் இறங்குகிறார்கள். அரசின் மெத்தனப் போக்கின் சம்பளம் ஒன்பது உயிர்கள்.
இந்தியா இதுவரை எந்த நாட்டுடனும் போர் தொடுத்ததில்லை என்பது போன்ற பதிவு முகநூலில் உலவுகிறது, உண்மை தான். இந்தியாவுக்கு தங்கள் சொந்த நாட்டு குடிமக்களிடமே போர் தொடுக்க நேரம் சரியாக இருக்கிறது.
Be the first to comment on "11 உயிர்களைப் பறித்த ஸ்டெர்லைட் 100 வது நாள் போராட்டம் – யார் பொறுப்பேற்பது?"