கமல்ஹாசன் தன்னுடைய காதலா காதலா படத்தில் ஒரு வசனம் பேசியிருப்பார். மிக முக்கியமான வசனம் அது. நல்ல வேலைக்குப் போயி உருப்பட்ற ஐடியா இல்லையா என்று டெல்லி கணேஷ் கமல்ஹாசனிடம் கேட்பார் அதற்கு கமல்ஹாசன் நான் பொய் சொல்ல மாட்டேன் பிச்சை எடுக்க மாட்டேன் திருட மாட்டேன் என்று சொல்ல, டெல்லி கணேஷ் அப்ப நீ பிழைக்கவே மாட்டே என்று சொல்கிறார். ஓ இங்க தவறுகளை செய்யாமல் யாராலும் பணம் சம்பாதிக்க முடியாது என்ற மனநிலைக்கு வரும் கமலஹாசன் தனது நண்பன் வரையும் ஓவியங்களை பொய் சொல்லி பொய் சொல்லி பலரிடம் விற்று காசு சம்பாதித்து வருகிறார். அந்த காசை வைத்து காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று ஆடிப் பாடி மகிழ்கிறார். அந்த பாடலின் முடிவில் பொய் சொல்லி ஏமாற்றி சம்பாதித்த பணம் காற்றில் பறந்து போய் ஒரு குட்டையில் விழுந்து கடைசியில் யாருக்கும் கிடைக்காமல் போகிறது. இது கமல்ஹாசன் சொன்ன காட்சி.
இதேபோல ரஜினியும் படையப்பா படத்தில் ஒரு வசனம் சொல்லியிருக்கிறார். கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது கஷ்டப்படாமல் கிடைத்த எதுவும் ரொம்ப நாள் நிலைக்காது என்ற வசனம் தான் அது.
இது மாதிரியான காட்சி செல்வராகவனின் புதுப்பேட்டை படத்திலும் வந்துள்ளது. தனுஷ் தன் குழந்தையை குப்பைத் தொட்டியில் வைத்த பிறகு ஒரு அம்மா அந்தப் பக்கம் வருகிறார். அவரிடம் பணத்தை எடுத்து நீட்டிய தனுஷ் இந்தாம்மா பணம் இருக்கு இந்த பணத்தை வைத்து அந்த குழந்தையை நல்லா வளர்த்து என்கிறார். அதற்கு அந்த அம்மா, “அய்ய எதுக்கு இவ்வளவு துட்டு இவ்வளவு துட்டு இருந்தா இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய பிரச்சனை இருக்குன்னு அர்த்தம். இத நான் வீட்டுக்கு கொண்டு போனா பின்னாடியே எவனாவது ஒருத்தன் வருவான் எதுக்கு இந்த பணம்? எங்கிட்ட இருக்கிறது வெச்சு நான் இந்த குழந்தையை வளத்துக்கிறேன்” என்பார்.
மணிரத்தினத்தின் குரு படத்தை எடுத்துக்கொள்வோம். அந்தப் படத்தில் குருபாய் தன்னால் என்னென்ன தில்லாலங்கடி வேலைகள் செய்ய முடியுமோ அத்தனை வேலைகளையும் செய்து மிகப்பெரிய தொழிலதிபராக மாறுவார். அவர் செய்த அத்தனை திருட்டு வேலைகளையும் இன்னொரு பத்திரிக்கையாளர் தேடி அலசி ஆராய்ந்து கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவார். அப்போது அவருக்கு ஒரு கை கால் விளங்காமல் ஒரு பக்கம் வாய் கோணி போய் இருக்கும். என்னதான் அவர் பக்கம் பக்கமாக நியாயதர்மம் பேசி பெரிய பெரிய அதிகாரிகளை மடக்கி போட்டாலும் தவறான வழியில் பணம் சம்பாதித்ததால் தவறான வழியில் பணம் சம்பாதித்ததால் அவருக்கு கிடைக்க வேண்டிய தண்டனை கிடைத்துவிட்டது.
அடுத்ததாக சதுரங்க வேட்டை படம் எடுத்துக் கொள்வோம். அந்தப் படத்தில் நாயகன் என்னென்ன தவறான வழிகளை பயன்படுத்த முடியுமோ அத்தனை வழிகளையும் பயன்படுத்தி பணத்திற்கு மேல் பணம் சம்பாதித்துக் கொண்டே இருப்பான். ஒரு கட்டத்தில் அவனை வேறு சிலர் ஏமாற்ற ஆரம்பித்துவிடுவார்கள். எல்லோரையும் ஏமாற்றி சம்பாதித்த பணம் இப்போது அவனிடமிருந்து பறிபோய்விட்டது. ஊர் ஊராய் சென்று அப்பாவி மக்களை ஏமாற்றிய நாயகன் இப்போது எந்த ஊரிலும் நிம்மதியாக தலைகாட்ட முடியாமல் தவித்து வாழ்கிறான். எங்கு போனாலும் அவனிடம் ஏமாந்த மனிதர்கள் அவனை துரத்தி துரத்தி அடிக்கிறார்கள். கடைசியில் அவன் அப்பாவி கிராமத்து பெண்ணின் ஆதரவைப் பெற்று ஒரு அழகிய கிராமத்தில் சிறிய குடிசையில் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான். அப்போதும் அவனை வேறு சிலர் தேடி துரத்திப் பிடித்து வருகின்றனர்.
கர்ப்பமாக இருக்கும் அவன் மனைவியை வைத்து அவனை மிரட்டுகின்றனர். அவன் கையாலேயே சவக்குழி தோண்ட செய்து அதே குழிக்குள் அவனை போய் படுத்துக்கொள்ள சொல்கிறார்கள். அவன் கெஞ்சு கெஞ்சு என்று கெஞ்சி உயிர் பிச்சை கேட்கிறான். தவறான வழியில் பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழலாம், ஆனால் கடைசியில் நாம் யாரிடமும் கெஞ்சி கெஞ்சி உயிர்ப் பிச்சை வாங்கி இந்த வாழ்க்கையை வாழ வேண்டிய ஒரு சூழல் ஏற்படும் என்பதுதான் உண்மை.
ரஜினியின் சிவாஜி பட கிளைமாக்ஸையும், சிவகார்த்திகேயனின் ஹீரோ பட கிளைமாக்ஸையும் இப்போது நாம் எடுத்து பார்ப்போம். இரண்டு படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் அப்பாவி மக்களை ஏமாற்றி தவறான வழியில் சம்பாதித்த பணம், பண மழையாக கொட்டி திரும்பி அந்த அப்பாவிகளுக்கு சென்றுவிடும். சிவாஜி படத்தில் முறையாக வரி கட்டாத கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பவர்களை காட்டி இருப்பார்கள். ஹீரோ படத்தில் வசதி இல்லாத எளிய மாணவர்களின் அறிவை களவாண்டு அதன் உரிமையை ஏமாற்றி வாங்கிக் கொண்டு அதை வைத்து கோடிக்கணக்கான அளவில் வியாபாரம் செய்யும் ஒரு வியாபாரியை காட்டியிருப்பார்கள். இரண்டு படங்களிலுமே தவறான வழியில் பணம் சம்பாதித்த அந்த வில்லன்கள் மிகக் கொடூரமான தண்டனையை அனுபவிக்கின்றனர்.
அதேபோல இயக்குனர் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த்சாமி இருவரும் இணைந்து நடித்த தனி ஒருவன் படத்தைப் பற்றி பார்ப்போம்.
இந்த படத்தில் அரவிந்த்சாமி மிகப் பெரிய புத்திசாலியாக நடித்திருப்பார். யார் யாரைப் பிடித்தால் பணக்காரனாகி விடலாம், யாரை எங்கு மிதிக்க வேண்டும், யாரிடம் இருந்து பணத்தை எடுத்துவிட வேண்டும், பணக்காரனான பிறகு யார் யாருடன் பழக வேண்டும் போன்ற எல்லா விஷயங்களும் அறிந்தவர், சித்தார்த் அபிமன்யு. மிகப் பெரிய சைன்டிஸ்ட் ஆக இருக்கும் சித்தார்த் அபிமன்யு நிறைய பச்சிளம் குழந்தைகளை பரிசோதனை என்கிற பெயரில் பலிகொடுத்து சாகடிக்கிறார். அப்பாவி ஏழை பெண்ணின் கண்டுபிடிப்பை தன்னுடைய கண்டுபிடிப்பு என்று சொல்லி பேடண்ட் வாங்கி அதை வைத்து பணம் பார்க்கிறார். இப்படி பிராடு தனம் மேல் பிராடுத்தனம் செய்து கொள்ளையடித்து பணம் மேல் பணம் சம்பாதிக்கிறார் அபிமன்யு. ஆனால் கடைசியில் அவரால் ஒரு ரூபாய் கூட எடுத்து செலவு பண்ண முடியாத அளவுக்கு ஒரு சூழலை அமைத்து விடுகிறார் ஹீரோ. இப்போது சித்தார்த் அபிமன்யு மொத்தமாக லாக் ஆகிறான். எங்கே போனாலும் அவனுக்கு இனி ஒரு வாழ்க்கை கிடையாது என்ற சூழல் அமைய அவர் தன் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர இனி எனக்கு எந்த வழியும் இல்லை என்பதை உணர்கிறார். ஹீரோ அவனை காப்பாற்ற நினைத்த போதும் சித்தார்த் அபிமன்யூ வேண்டுமென்றே தோட்டாக்களிடம் தன் நெஞ்சை கொடுக்கிறார். கடைசியில் அநியாயமாக மரணமடைகிறார் சித்தார்த் அபிமன்யூ.
இந்தமாதிரி தவறான வழியில் சம்பாதித்த பணம் எதுவும் யாராக இருந்தாலும் எவ்வளவு ரூபாயாக இருந்தாலும் அது கண்டிப்பாக நிலைப்பதில்லை. அந்த பணம் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு அவப்பெயரையும் பாவத்தையும் கொடுத்துவிட்டு செல்கிறது.
சரி தவறான வழியில் சம்பாதித்த பணம் நிலைப்பதில்லை என்று சொல்றீங்க உண்மையாய் இருந்து நேர்மையான தொழில் செய்தவர்கள் இந்த சமூகத்தில் என்ன மாதிரியான நிலையில் இருக்கிறார்கள். அதை கொஞ்சம் யோசிச்சு பாத்தீங்களா? நேர்மையான முறையில் பணம் சம்பாதிப்பவனுக்கு வீட்டில் துளி அளவிலும் மரியாதை கிடைப்பதில்லை. உதாரணத்துக்கு சூதுகவ்வும் படத்தை எடுத்துக்கொள்வோம். இந்தப்படத்தில் எம்எஸ் பாஸ்கர் ஒரு நேர்மையான அரசியல்வாதியாக நடித்திருப்பார். அவருக்கு மக்கள் மத்தியிலும் பத்திரிக்கைகள் மத்தியிலும் மிகச்சிறந்த நல்ல பெயர் இருக்கிறது. ஆனால் அவருடைய வீட்டில் இருக்கும் அவர் மனைவியும் அவர் மகனும் அவரை துளி அளவும் மதிக்க மாட்டார்கள். கட்சித் தலைமையே கூட இவ்வளவு நேர்மையாக இருந்து நீ என்ன பண்ண போற? நீ ஒதுங்கி போ உன் பையனுக்கு நல்லா ஏமாற்றும் திறமை இருக்கு… அவன் கண்டிப்பா மிகப்பெரிய அரசியல்வாதியாக வருவான் என்று நேர்மையான அரசியல்வாதியாக இருக்கும் எம்எஸ் பாஸ்கரை புறக்கணிக்கிறார். எம்எஸ் பாஸ்கர் மனம் சோர்ந்துபோய் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இந்த காட்சிகளை பார்க்கும் போது நாம் எல்லோருமே சிரித்தோம், சிரித்துக் கொண்டே இருக்கின்றோம்.
வேலைக்காரன் படத்தில் ஒரு வசனம் வரும். என்னடா இது நம்ம எவ்வளவு தான் ஓடி ஓடி உழைத்தாலும் கையில சேமிப்புக்கு கொஞ்சம் கூட காசு நிற்கிறது இல்லை, இதெல்லாம் எப்படி நடக்கிறது பணக்காரன் எல்லாம் எப்படி மென்மேலும் பணக்காரன் ஆகிறான் என்று கேள்வியை எழுப்பிக் கொண்டே இருப்பார் சிவகார்த்திகேயன். ரஜினியின் சிவாஜி படத்தில் சொன்னதைப்போல தான் பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகிறான் ஏழை மேலும் மேலும் ஏழை ஆகிறான்.
தவறான வழியில் சேர்த்த பணம் நிலைக்காது என்பதற்கு உதாரணமாக நம்ம ஊர் பால்காரர்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் பாலில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் கலந்து வியாபாரம் செய்து நல்ல லாபம் பார்ப்பார்கள். ஆனால் திடீரென ஒரு நாள் அவர்களுக்கு சாலைவிபத்து ஏதோ ஒன்று ஏற்பட்டு அவர்கள் வண்டியில் இருக்கும் அத்தனை பாலும் சாலையோடு சாலையாக வடிந்து சென்று விரயமாகும். அப்போது கூடி நின்று வேடிக்கை பார்க்கும் மக்கள் ஏமாற்றி சம்பாதிச்சா இப்படித்தான் ஒண்ணுக்கும் இல்லாமல் போகும் என்று கமெண்ட் அடிப்பார்கள்.
தவறான வழியில் நாம் சம்பாதித்த பணம் நம்மை மட்டும் பாதிப்பதில்லை. அது நமக்கும் அவப்பெயரை உண்டாக்கி நம் சந்ததிக்கும் அவப்பெயரை உண்டாக்கும். நிம்மதியான வாழ்க்கை அமைய விடாமல் கெடுத்துவிடும். இதற்கெல்லாம் நேரம் விதி என்பது கிடையாது. நாம் செய்த செயல்கள் தான் நமக்கு திருப்பி நடக்கின்றன. தொடர்ந்து ஏற்படும் மருத்துவமனை செலவுகள், விபத்தில் திடீரென உயிர் இழப்பு ஏற்படுதல், குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் கூட தவறான வழியில் பணம் சம்பாதித்து அதற்கு கிடைத்த தண்டனைகளாக இருக்கலாம்.
கமல்ஹாசனின் மகாநதி படத்தில் கமல் ஒரு எதார்த்தமான குடும்பஸ்தன் ஆக அப்பாவியான அப்பாவாக நடித்திருப்பார். அவருடன் சேர்ந்து தொழில் ஒன்று நடத்தும் அவருடைய நண்பர் திடீரென ஒருநாள் ஒட்டுமொத்த பணங்களையும் சுருட்டிக் கொண்டு கிளம்பி விட இப்போது பழி அப்பாவி கமல்ஹாசன் மீது விழுகிறது. அவர் தன் குழந்தைகளை எல்லாம் தவிக்க விட்டுவிட்டு சிறை தண்டனை அனுபவிக்கிறார். அவருடைய பெண் வழி தடுமாறிப் போய் விபச்சார தொழிலில் சிக்கிக் கொள்கிறாள். மகன் வித்தை காட்டி பிழைக்கும் நரிக்குறவர் கூட்டத்துடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறான்.
அந்தப் படத்தில் கமல்ஹாசன் கேட்கும் ஒரு கேள்வி தான் நம் எல்லோருடைய மனதிலும் இன்றும் ஓடிக்கொண்டு இருக்கிறது, இந்த சமூகத்தில் கெட்டவனுக்கு இருக்கிற மரியாதை ஏன் நல்ல மனிதர்களுக்கு இருப்பதில்லை என்பதுதான் அந்தக் கேள்வி.
Be the first to comment on "தவறான வழியில் பணம் சம்பாதித்தால் நாம் என்னென்ன பாதிப்புக்கு உள்ளாவோம் – ஒரு பார்வை!"