கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட பண்ணிரண்டாம் வகுப்பு தேர்வுகளும், பத்தாம் வகுப்பு தேர்வுகளும் கேள்வித்தாள்கள் கடினமாக இருந்தது என்ற குறைகளுடன் முடிந்தது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 18) மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் முழு ஆண்டுத் தேர்வுகள் முடிந்துள்ளது. வழக்கம் போல சட்டையில் இங்க் அடித்துக் கொண்டும், பட்டாசு வெடித்தும் மாணவ மாணவிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். அது வழக்கமான கொண்டாட்டம் என்றால் பாட புத்தகங்களை கிழித்துப் போடுவது என்ன மாதிரியான கொண்டாட்டம் என்று தெரியவில்லை. ஒரு சில அரசுப் பள்ளிகளின் முன்பு பாட புத்தகங்கள் கிழிக்கப்பட்டு குப்பைகளாக குவிந்து கிடக்கிறது.
முந்தைய கால கட்டங்களில் எடைக்குப் போட்டு உருப்படியாக எதோ ஒன்று தின்றோம் என்ற
பெயருக்கு ஐஸ் வாங்கித் தின்றோம். இன்றைய மாணவர்களோ அதைக் கூட செய்வதில்லை.
டார் டார் தான். பாவம் அவர்களுக்கு புத்தகத்தின் மதிப்பு தெரியவில்லை. டிஎன்பிஎஸ்சி போன்ற
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களோ புத்தகங்கள் கிடைக்காமல் பழைய
புத்தகங்களைத் தேடித் தேடி அலைந்து கொண்டிருக்க இப்போதைய மாணவர்கள் இப்படி
இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் அது இன்றைய மாணவர்களுக்குத்
தரும் உச்சகட்ட மன அழுத்தம் மட்டுமே. புத்தகத்தில் இருப்பதை அப்படியே மண்டைக்குள்
ஆழமாக இறங்கும் மக்கப் சிஸ்டம் அவர்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. இது
ஒரு புறம் இருக்கட்டும். அடுத்த வருடம் முதல் பாட புத்தகங்களின் விலை உயர்கிறது என்பது
தான் செய்தி.
அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்ட புத்தகங்களின் விலை இருபது சதவீதமாக
உயர்த்தப்படுகிறது என்று தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. கடந்த பதினான்கு
ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த பாடத் திட்டம் வரும் ஆண்டு முதல் மாற்றப் படுகிறது
என்பதால் விலையையும் உயர்த்தப்படுகிறது. முதல் கட்டமாக ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு,
ஒன்பதாம் வகுப்பு, பதினோறாம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் தயாராகி வருகிறது.
இந்தப் புத்தகங்கள் மாணவர்களுக்கு எளிதில் புரியும் படியும், எளிதில் கிழிந்திடாத படி
அட்டைகள் லேமினேசன் செய்யப் பட்டும் தரமான புத்தகங்களாக உருவாகி வருவதால் அச்சிடும்
செலவுகள் அதிகமானதையொட்டி இந்த விலை ஏற்றம் என்கிறது தமிழ்நாட்டு பாடநூல் கழகம்.
மக்கப் அடிக்க வைக்காத, மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படியாக புத்தகங்கள்
அமைந்தால் தமிழகத்தின் எதிர்காலம் நலமாக இருக்கும். ஏனெனில் இன்றைக்கு இன்ஜினியரிங்
படிப்பது வேஸ்ட் என்பது போய் தமிழ்நாட்டில் என்ன படித்தாலும் வேஸ்ட் என்பது போல்
ஆகிவிட்டது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு பிஎச்டி படித்தவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
கான்ஸ்டபிள் தேர்வு பணிக்கு மருத்துவம் பயின்றவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
Be the first to comment on "கடைசி தேர்வு முடிந்ததும் பாட புத்தகங்களை கிழித்தெறிந்த மாணவர்கள்!"