வேலையில்லாத இளைஞன் செக்யூரிட்டி வேலைக்குச் சேர முயல்கிறான். அந்த சமயத்தில் ரௌடியின் மகனை நாயகன் இக்கட்டான சூழலிலிருந்து காப்பாற்ற, ரௌடியிடம் நாயகனுக்கு அடியாள் வேலை கிடைக்கிறது. அடியாள் வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் நாயகியைப் பார்க்க நேரிடுகிறது. ஆரம்பத்தில் முட்டல்மோதலாக இவர்களது உறவு தொடர பின் காதலாக தொடர்கிறது. காதலான பிறகு, நாயகியின் ஆசைக்கிணங்க தனது அடியாள் வேலையை விட்டுவிட்டு சாலையில் நின்று பொம்மை விற்கும் தொழில் செய்கிறான். நாயகியின் அப்பாவோ நாயகிக்கு மாப்பிளை பார்க்க, ஒரு சமயத்தில் தன்னுடைய காதல் விஷியத்தை அப்பாவிடம் சொல்கிறாள். அப்பாவும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இதற்கிடையில் நாயகன் தனது நண்பன் தாமஸ் இல்லத்திற்குச் செல்கிறேன் என்று விபச்சார விடுதியருகே சென்று வருகிறான். அதை கண்கூட பார்க்கும் நாயகி சந்தேகிக்கிறாள். பிறகு அங்கு தான் தாமஸ் வீடு இருக்கிறது என்றதும் சாந்தமாகிறாள். பின்னொரு நாள் நாயகனை தேடி தாமஸ் வீட்டிற்குச் சென்று பார்க்கப் போகிறாள். அப்போது நாயகன் விபச்சார விடுதியிலிருந்து போலீசாரால் கைது செய்யப்படுகிறான். அதை பார்க்கும் நாயகி அதிர்ந்து நிற்கிறாள். நெஞ்சு பொறுக்குதில்லையே என்று இடைவேளை விடப்படுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை ஒரு தடவை படம் பார்த்து நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
நாயகன், நாயகி, இசையமைப்பாளர் என்று படக்குழுவில் முக்கால்வாசி பேர் புதுமுகங்களே. ஒரு புது அணி வெற்றிகரமான அணியாக மாற கானா உலகநாதனனின் வால மீனுக்கும் வெளங்க மீனுக்கும் கல்யாணம் பாடல் ஏற்படுத்திய அதிர்வலைகள் மிக முக்கியமான காரணம்.
இந்தப் படத்தில் நிறைய விஷியங்கள் கவனிக்கும்படி இருந்தன. குறிப்பாக அநியாயம் நடக்கும் இடங்களில் தலையை கீழே குனிந்துகொண்டே சண்டை போடும் நாயகன், சமூக அவலங்களை கண்டு பொங்கும் எதையும் எளிதில் நம்பிவிடும் அப்பாவியான கதாநாயகி, கட்டளை இடும் ரௌடி குருநாதன், மாற்றுத் திறனாளி, பாதங்களை காட்டுதல், மஞ்சள் நிறத்திற்கு காரணமான மஞ்சு கதை என்று குறிப்பிட்டு சொல்லும்படியான காட்சிகள் நிறைய இருக்கின்றன. பின்னாட்களில் இவையே மிஷ்கினின் அடையாளங்களாக மாறிவிட்டதைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட மிஷ்கினின் முதல் படம் வெளியான தினம் இன்று. ஒருவேளை இந்தப் படம் வெளியாகாமல் இருந்திருந்தால் நரேன், பாவனா என்ற நல்ல நடிகர் நடிகைகளை தெரிந்துகொள்ளாமலே இருந்திருப்போம். கானா உலகநாதன் மேல் இவ்வளவு வெளிச்சம் பட்டிருக்காது. குறிப்பாக மிஷ்கின் என்ற அட்டகாசமான இயக்குனரை இழந்திருப்போம்.
இந்தப் படம் ரிலீசாகி 13 வருடங்கள் ஆகிவிட்டது என்பதே தெரியாத அளவுக்கு படைப்பு இன்னமும் புதுமையுடன் காணப்படுகிறது. இதுவரை பார்க்காதவர்கள் ஒருமுறையாவது தயவுசெய்து பார்த்துவிடுங்கள்.
Be the first to comment on "13 years of சித்திரம் பேசுதடி – மார்ச் 3!"