கணவர் இறந்த பிறகு அவரது ஓய்வூதியத்தை தன் பெயருக்கு மாற்றச் சென்ற 77 வயது பெண், அரசு அலுவலகத்தில் அவமதிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் சர்ச்சையை உண்டு செய்திருக்கிறது. அரசு அதிகாரி ஒருவர் விதவையான பிறகும் பொட்டு வைத்திருக்கும் காரணத்தால், இறந்த கணவரின் ஓய்வூதிய தொகையை மனைவி பெயருக்கு மாற்றித் தர மறுத்திருக்கிறார்.
அரசு அலுவலகத்தில் முற்போக்குத்தனம்
தேவியின் கணவர் ரமேஷ், வயது 82 . 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தம்பதியினர் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கடந்த மார்ச் மாதம் ரமேஷ் இயற்கை எய்தினார். ராஜாஜி சாலையில் உள்ள போர்ட் ட்ரஸ்டில் வேலை செய்து வந்த ரமேஷுக்கு மாத மாதம் ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வந்தது. அவர் இறப்புக்குப் பிறகு சட்டப்படி, அவரது ஓய்வூதிய தொகையில் 70% அவரது மனைவியான தேவிக்கு வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக கடந்த ஏப்ரில் 9 ஆம் தேதி தனது மகன் மற்றும் மருமகளோடு தனது கணவரின் ஓய்வூதிய தொகையை தனது பெயருக்கு மாற்ற அரசு அலுவலகத்துக்குச் சென்ற தேவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
‘அரசு அலுவலகத்திற்குள் சென்ற போது, நாங்க சந்திக்க வேண்டிய ரவி என்ற அதிகாரி தூங்கி கொண்டிருந்தார். அவரை எழுப்பி, அவர்கள் கேட்ட கோப்புகள், அடையாள சான்று மற்றும் நான்கு மாதங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும் ரவியிடம் கொடுத்தோம். ஆனால் புகைப்படத்தை பார்த்த ரவி, அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.’ என்று தேவியோடு உடன் சென்ற அவரது மருமகள் மாதுரி தெரிவித்தார்.
மேலும் இது குறித்து பேசிய மாதுரி’புகைப்படத்தில் என்ன பிரச்சனை என்று நாங்கள் கேட்ட போது, விதவை ஒரு போதும் பொட்டோ, பூவோ வைத்துக்கொள்ளக் கூடாது என்று என் மாமியார் இருக்கும் போதே அவர் முன்பு அநாகரிகமாக அந்த அதிகாரி பேசினார். மேலும் பொட்டு இல்லாமல் திருநீறு மட்டும் வைத்து வேறு ஒரு புகைப்படம் எடுத்து வரும் படியும் அவர் அநாகரிகமாகத் தெரிவித்தார்’ என்றார்.
இந்து சமுதாயத்தில் கணவரின் மரணத்துக்குப் பிறகு, மனைவி பொட்டு, பூக்கள் மற்றும்
வண்ணங்களால் ஆன புடவைகள் அணிந்துகொள்ளக்கூடாது என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த
நம்பிக்கைக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு
வருகின்றன.
‘இது தொடர்பாக தொடர்ந்து அந்த அதிகாரியிடம் நாங்கள் பேசினோம். அவர் சம்பந்தமே இல்லாமல் ரேஷன் அட்டையைக் கொண்டு வரச் சொன்னார். என் மாமியாரின் உடல் நிலையையும், வயதையும் சொல்லியும் கூட அவர் கேட்கவில்லை. ஓய்வூதிய தொகையை மாற்றும் எந்த நடவடிக்கையும் அவர் செய்யவில்லை” என்று மாதுரி தெரிவித்தார்.
‘என் மாமியார் தேற்ற முடியாத அளவுக்கு மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார். ஒரு புகைப்படத்திற்காக தனது பொட்டை அவர் நெற்றியில் இருந்து நீக்கிய தருணம் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. அவரை அந்த நிலையில் எங்களால் பார்க்கவே முடியவில்லை.கணவர் இறந்த பிறகு பொட்டு வைத்துக் கொள்வது தவறோ என்று அவரை அந்த அதிகாரி நினைக்க வைத்து விட்டார். அந்த அதிகாரி தனது செயலால் எனது மாமியாரை அவமதித்து விட்டார்.’ என்று மாதுரி தெரிவித்தார்.
அடுத்த நாள் பொட்டு இல்லாமல் எடுத்து புகைப்படத்தையும், ரேஷன் அட்டையையும் கொடுக்க சென்ற போது, முந்தைய நாள் அநாகரிகமாக நடந்து கொண்ட ரவி என்ற அதிகாரி விடுப்பில் சென்றுவிட்டார். மூத்த அதிகாரி ஒருவரிடம் இது குறித்து பேசியபோது தேவி மற்றும் குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லும் படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சட்டத்திற்கும் நம்பிக்கைகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை முதலில் அரசு அதிகாரிகளுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும்.
Be the first to comment on "கணவர் இறப்புக்கு பிறகும் பொட்டு வைத்திருந்ததால், 77 வயது பெண் அரசு அலுவலகத்தில் அவமதிப்பு"