இந்த சமூகத்தில் செவிலியர்களுக்கு என்று எப்போதும் தனி மரியாதை உண்டு.( கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களையும் சாலையில் இறங்கி போராட வைத்தது நமது தமிழக அரசு). அப்படிப்பட்ட செவிலியர் பணிபுரிபவர் தான் புனிதா.
சென்னையில் நர்சிங் டிப்ளமோ முடித்த இவர் சிங்கப்பூர், சவுதி போன்ற நாடுகளில் வேலை பார்த்துள்ளார். சவுதியில் வேலை பார்த்த பொழுது அவருடைய எதிர் வீட்டில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் குடி இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மொத்தம் பதிநான்கு குழந்தைகள். அவற்றில் நான்கு குழந்தைகள் இறந்து போக ஐந்து ஆண் ஐந்து பெண் என்று பத்து குழந்தைகள் மட்டுமே இருந்திருக்கிறது. புனிதாவுக்கோ குழந்தை பாக்கியம் இல்லை. பாகிஸ்தான் குடும்பத்தின் பிள்ளைகளில் ஏதேனும் ஒரு குழந்தையை தத்து எடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார். ஆனால் சவுதி அரசின் சட்டதிட்டங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
அதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு ஏஜெண்டுகள் மூலம் சென்று அங்கு தனி கோர்ஸ் படித்து நிரந்தர பணி வாங்கினார். அதையடுத்து அந்த நாட்டிலயே குடியுரிமை பெற முயன்றிருக்கிறார். ஆனால் குடியுரிமை பெறுவதற்கான வயது வரம்பு முடிந்துவிட்டது அவருக்கு. நாற்பத்தி ஐந்து வயதிற்குள் தான் குடியுரிமை பெற முடியும். ஆனால் அவருக்கோ நாற்பத்தி ஆறு வயதில் பலரின் சிபாரிசுகளுடன் ஆஸ்திரேலியா குடியுரிமை கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலியா சென்ற போதிலும் அவர் சவுதியில் இருந்த பாகிஸ்தான் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.
பாகிஸ்தான் குடும்பம் வறுமையில் வாட, நிரந்தர பணி பெற்ற புனிதா மாணவர் விசாவில் அந்தக் குடும்பத்தின் மூன்றாவது மகனை மாணவர் விசாவில் வரவழைத்து தத்து எடுத்து கார்டியன் முறையில் ஸ்பான்சர் செய்து, இன்ஜினியரிங் முடிக்க வைத்து வேலை வாங்கி கொடுத்துள்ளார். அப்படி தத்து எடுத்த பையனுக்கு வயசு இருபது. இருபது வயதில் தத்து எடுத்ததால் அவன் புனிதாவுடன் அவ்வளவாக ஒட்டவில்லை. அதை அடுத்து அதே பாகிஸ்தான் குடும்பத்தில் யாசின்கான் என்ற பதிமூன்று வயது மகனை தத்து எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். இப்போது நம்ம படிப்புக்கு யாசின்கான் பிளஸ்டூ முடித்திருக்கிறான். குழந்தை பாக்கியம் இல்லை என்ற புனிதாவின் மனக்கவலையை உடைத்தெறிந்திருக்கிறான் யாசின்.
இப்போது யாசின் புனிதாவோடு அவருடைய சொந்த ஊரான தமிழகத்தில் வசித்து வருகிறான்.
தமிழ்ப் பேச ஆர்வமாக இருக்கிறான். இந்தியாவிலயே மாடலிங் செய்ய விருப்பப்படுகிறான். புனிதாவின் தாய்மைக்கு முன்பு மதம், நாடு என்ற வேறுபாடுகள் எல்லாம் சுக்கு நூறாக
உடைந்துவிட்டது. அன்புக்கு அவ்வளவு வலிமை. மனித நேயம் குறைந்துவிட்ட இந்தக் காலத்தில்
புனிதா போன்றவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
Be the first to comment on "பாகிஸ்தான் குழந்தையை தத்து எடுத்து வளர்க்கும் இந்திய தாய்!"