இன்று கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் அவர்களின் பிறந்த நாள். சமூக வலை தளங்கள் முழுக்க சச்சினின் போட்டோக்கள் உலாவி வருகிறது. அத்துடன் 90 களில் பிறந்தவர்கள் தங்களுடைய பள்ளி பருவத்தில் சச்சினை எப்படி கொண்டாடி மகிழ்ந்தோம் என்று நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் முக்கியமானது சச்சின் எஸ்ஸே. சமச்சீர் பாடத் திட்டத்திற்கு முன்பு இருந்த புத்தகங்களை படித்தவர்கள் எவராலும் மறக்க முடியாத ஒன்று சச்சின் எஸ்ஸே.
சச்சின் பத்தாம் வகுப்பு பாடத்தில் தோல்வி அடைந்தவர். ஆனால் அவர் பற்றிய வாழ்க்கை பாடம் பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் முதல் பாடமாக இருந்தது. அதுவே 90’s கிட்ஸ்களுக்கு முதல் மோடிவேசன் வாசகம். அப்படி எல்லோரையும் ஊக்குவித்த சச்சின் கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டும் கடவுளாக இருக்கவில்லை. சரியாக ஆங்கிலம் படிப்பில் ஆர்வமில்லாத மாணவர்களுக்கும் அவர் தான் கடவுள். சச்சின் எஸ்ஸேவ தக்கி முக்கி மனப்பாடம் செய்து தேர்வில் எழுதி வைத்து விட்டால் போதும் அவன் தேர்வில் வெற்றி பெற்று விடுவான் என்ற நம்பிக்கை மாணவர்களிடம் மட்டும் அல்ல. ஆங்கில ஆசிரியர்களிடமும் இருந்தது. டெஸ்ட் மேல் டெஸ்ட் வைத்து மாணவர்கள் மண்டைக்குள் சச்சின் எஸ்ஸேவை ஆழப் பதியச் செய்திடுவார்கள்.
அதே போல பொதுத் தேர்வு எளிதா கடினமா என்பதை சச்சின் எஸ்ஸேவ வைத்தே கண்டறிந்து விடலாம். சச்சின் எஸ்ஸே கேட்கப் பட்டிருந்தால் அந்த தேர்வு எளிது. எல்லோரும் பெரும்பான்மையாக தேர்ச்சி பெற்று விடுவார்கள். சச்சின் எஸ்ஸே கேட்காமல் வேற எதாவது எஸ்ஸே கேட்டிருந்தால் அவ்வளவு தான். அந்தத் தேர்வு கடினம் என்று கருதப் படும். சச்சின் எஸ்ஸே கேட்காத வருடத்தில் மாணவர்களின் நிலைமை கஷ்டம் தான் என்பது போல நம்பிக்கை. ஒரு வேளை சச்சின் எஸ்ஸே கேட்காமல் போய் விட்டால் என்ன செய்வது என்ற பயம் கொண்டிருந்த மாணவ மாணவிகள் எதற்கும் சேப்டிக்காக வேறொரு எஸ்ஸேவை படிக்க முற்படுவார்கள். இருந்தாலும் சுற்றி இருக்கும் சேட்டையன்கள் விடமாட்டார்கள். ” டேய்… சச்சின் எஸ்ஸேவ ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம படிச்சு கரைச்சு குடிடா… அத தவிர வேற எதுவும் கேட்க மாட்டாங்க… அப்படியே கேட்டாலும் கொசின் எடுத்தவன் மேல கேஸ் போட்டு கிரேஸ் மார்க் வாங்கி தந்துருவாங்கடா… ” என்று உசுப்பி விட்டு அவர்களுக்கு கம்பெனி சேர்த்துக் கொள்வார்கள்.
சில சமயம் அவர்கள் சொல்வது தான் சரி என்பது போல தோன்றும். காரணம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக முறை கேட்கப்பட்ட வினா என்றால் அது சச்சின் எஸ்ஸே தான். சாமி எப்படியாவது சச்சின் எஸ்ஸேவ கொசின் பேப்பர்ல வர வச்சிடுப்பா… என்று ஆங்கில தேர்வு எழுதப் போகும் முன்பு வேண்டிக் கொண்ட பல மாணவர்களை காப்பாற்றி அவர்களை பத்தாம் வகுப்பில் தேற்றி இருக்கிறது
இந்த சச்சின் எஸ்ஸே!
Be the first to comment on "எளிதில் மறக்க முடியாத பத்தாம் வகுப்பு சச்சின் எஸ்ஸே!"