வசந்தத்தை வண்ணங்களால் வரவேற்கும் ஹோலி பண்டிகை

வசந்தத்தை வண்ணங்களால் வரவேற்கும் ஹோலி பண்டிகை

நெருக்கடியான வாழ்வில் ஒரு இளைப்பாறுதலை, நிழலை நமக்குப் பண்டிகைகளே தருகின்றன. சிறு வயதில் நமது ஊர்களில் கொண்டாடிய பண்டிகைகள் இன்னமும் நம் மனதில் பசுமையான நினைவுகளாக எஞ்சி இருக்கின்றன அல்லவா? பெரும்பாலும் பண்டிகைகளை நாம் ஏதேனும் ஒரு பொருளோடு அல்லது உணவோடு தொடர்பு படுத்தி நினைவில் வைத்திருப்போம். தீபாவளி என்றால் பட்டாசு, கார்த்திகை என்றால் தீபம், பொங்கல் பண்டிகைக்கு கரும்பு என்று. அந்த வகையில் இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகைக்கு, வண்ணங்களோடு நெருங்கிய தொடர்பு உண்டு. அது ஹோலி பண்டிகை.

ஹோலி

ஹோலி பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது வண்ணங்கள் தான். வண்ணங்களால் ஆனது ஹோலி பண்டிகை. அடிப்படையில் இது ஒரு ஹிந்து பண்டிகை என்ற போதிலும் பரவலாக நாடெங்கிலும் இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் பெரிய அளவுக்கு ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலை இருந்தாலும், அது மாறி தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து பெரு நகரங்களிலும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகை இந்தியா, வங்கதேசம், நேபாளம், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா என்று இந்துக்கள் பரவலாக வாழும் அனைத்து நாடுகளிலும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.ஹோலி பண்டிகைக்கு அரங்கபஞ்சமி என்ற இன்னொரு பெயரும் உண்டு.

எதற்காகக் கொண்டாடப்படுகிறது ஹோலி பண்டிகை?

இந்துக்கள் கொண்டாடும் அனைத்துப் பண்டிகைகளும் ஏதோ ஒரு விதத்தில் புராணங்களோடு  ஆழ்ந்த தொடர்பை கொண்டவை. அந்த வகையில் ஹோலி பண்டிகை எதற்காகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதைச் சொல்ல முதன்மையாக இரண்டு புராண கதைகள் இந்து மரபில் உண்டு.

புராணக் கதை ஒன்று

இரணியன் என்ற அரக்கனின் கதை நாம் எல்லோரும் அறிந்ததே. கடும் தவம் மேற்கொண்டு தன்னை யாரும் வென்று விடக் கூடாது என்ற சிறப்பு வரத்தைப் பெற்றவன். அதாவது மனிதனாலோ, மிருகத்தாலோ, ஆயுதங்களாலோ தனக்கு மரணம் ஏற்படக் கூடாது. இரவிலோ அல்லது பகலிலோ, வீட்டிற்கு உள்ளேயே அல்லது வெளியிலோ தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற சாகவரத்தை தவமிருந்து பெற்றான். மரணத்தை வென்று விட்டோம் என்ற நினைப்பில் அதற்குப் பிறகு இரணியன் தன்னைத்தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்டான். உலகில் ஒரே கடவுள் தான். அது தான் என்று மற்றவர்களையும் நம்ப வைத்தான். இதை ஏற்காதவர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்த நிலையில் கருவுற்றிருந்த இரணியனின் மனைவியைக் காண வந்த நாரதர் மகாவிஷ்ணுவின் பெருமைகளை எடுத்துச் சொல்லி, ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தையும் சொல்லி கொடுத்து விட்டுச் சென்றார். இரணியனுக்குப் பிரகலாதன் என்ற மகன் பிறந்தான். அவன் தன் தந்தையை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. நாராயணனே முதல் கடவுள் என்று தனது தந்தையிடமே வாதிட்டான்.

மகன் என்றும் பாராமல் பிரகலாதனைப் பல வகையிலும் தன்னையே கடவுள் என்று சொல்லும் படி அச்சுறுத்தினான் இரணியன். கொடுமைப் படுத்தினான், நஞ்சு ஊட்டினான் எதற்கும் அசராத பிரகலாதன், நாராயணன் ஒருவரையே கடவுள் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தான்.

பொறுத்துப் பொறுத்து பார்த்த இரணியன், தன் மகன் பிரகலாதனை கொல்லத் தனது தங்கை ஹோலிகாவை வர வழைத்தான். நெருப்பால் ஹோலிகாவை எதுவும் செய்ய முடியாது. இதனால் பிரகலாதனை  ஹோலிகாவின் மடியில் அமர வைத்து, அவர்களின் மீது நெருப்பு மூட்டினான் இரணியன். ஹோலிகாவை நெருப்பு எதுவும் செய்யாது, மாறாகப் பிரகலாதன் நெருப்பில் சாம்பலாவான் என்பது தான் திட்டம். ஆனால் நடந்ததோ வேறு. பிரகலாதன் தொடர்ந்து ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருந்தான், ஹோலிகா நெருப்பில் பொசுங்கி சாம்பலானாள். எதுவுமே நடக்காதது போல பிரகலாதன் நெருப்பில் இருந்து எந்த சிறு காயமும் இன்றி மீண்டு வந்தான். ஹோலிகா அழிந்த தினத்தையே மக்கள் இன்னமும் ஹோலி என்று கொண்டாடுவதாக ஒரு புராண கதை உண்டு.

இன்னமும் வட மாநிலங்களில், ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ‘ஹோலிகா தகனம்’ என்ற சடங்கு ஒன்று உண்டு. அப்போது மரக்கட்டைகளை அடுக்கி, நெருப்பு மூட்டி அக்னி தேவனுக்கு நன்றி சொல்லும் வகையில் உணவு பண்டங்கள் படைக்கப்படும்.

புராணக் கதை இரண்டு

கிருஷ்ணனுக்கும், ராதைக்கு இடையேயான காதலை மையப்படுத்தியது இந்தப் புராண கதை. ராதை தன்னை விட அழகாக இருப்பதாகவும், நிறத்தில் தன்னை விடக் கூடுதலாக இருப்பதாகவும் கிருஷ்ணன் ராதையின் தோழிகளிடம் புலம்பி இருக்கிறான். இதனால் வண்ணங்களைத் தண்ணீரில் கரைத்து அதைக் கிருஷ்ணன் மீது ஊற்றிய ராதையின் தோழிகள், இப்போது நீயும் ராதையின் நிறத்தில் இருப்பதாகச் சொல்லி விளையாடிய நிகழ்வே ஹோலி என்கிறது இந்தப் புராண கதை.

இப்போதும் பிடித்தமானவர்கள் மீது வண்ணங்களைத் தண்ணீரில் கலந்து மேலே ஊற்றுவது என்பது ஒரு மரபாக இருந்து வருகிறது.

புராணக் கதைகள் ஒருபுறம் இருந்தாலும், பனிக் காலம் முடிவடைந்து வசந்த காலத்தை வரவேற்கும் ஒரு நிகழ்வாகவே ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை வீசி, முகங்களில் புன்னகை வரவேற்கும் ஒரு கொண்டாட்டமாகவே ஹோலி பண்டிகை இருக்கட்டும், ஒற்றுமை கூடட்டும். ஒரு பண்டிகையின் அதிகபட்ச நோக்கமும் அது தான் இல்லையா?

Related Articles

இளைஞர்களுக்கான கதைசொல்லியை பற்றி தெரிந்த... திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் மற்றும் கதைசொல்லி பவா செல்லத்துரை. நிறைய இளைஞர்களை தன் வசீகர குரலால் இலக்கிய உலகிற்கு அழைத்து வரும் இந...
பிரபஞ்சன் பார்வையில் கல்வி நிலையங்களும் ... எழுத்தாளர் பிரபஞ்சன் புதிய தலைமுறையில் எழுதிய தொடர் மயிலிறகு குட்டி போட்டது என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. கல்வி நிலையங்கள் மற்றும் ஆசிரியர்கள...
“உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேய... கதாபாத்திரங்கள் : ஆனந்த் - வன அலுவலரின் நண்பன், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி - யானை டாக்டர், மாரிமுத்து - உதவியாள், செல்வா - வளர்ப்பு யானை,...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதி... தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது கட்சியான அதிமுக மூன்று அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்...

Be the first to comment on "வசந்தத்தை வண்ணங்களால் வரவேற்கும் ஹோலி பண்டிகை"

Leave a comment

Your email address will not be published.


*