உடம்பை விட்டு வெளியே வந்தாத்தான் பொம்பளைங்க முன்னேற முடியும் – கன்னித்தீவு புத்தக விமர்சனம்!

Kannitheevu book review

முருகன், பார்வதி, மித்தாலி சட்டர்ஜி, பள்ளி முதல்வர் ஃப்ரான்சிஸ் தாமஸ், காயத்ரி, முகமது ரஸூல், நிக்கி, ரத்னம், வள்ளி, கான்ஸ்டபிள், ஓங்கே மொழிபெயர்ப்பாளன், படகோட்டி, கருமன், கருப்பி என்கிற மரியா, மூப்பர், அமர், கேப்டன், இந்துமதி, அனுமந் சிங் போன்ற கதாபாத்திறங்கள் கதையை நகர்த்திச் செல்கின்றன. ஒரு திரைப்படத்தை பார்ப்பதை போன்ற உணர்வை தரும் இந்தக் கதையில் முருகன் ஹீரோ. பார்வதி ஹீரோயின். மரியா துணைக் கதாபாத்திரம். சயின்டிஸ்ட் முருகன் தலித் சாதியை சார்ந்தவன், டீச்சர் பார்வதி பிராமின் சாதியை சார்ந்தவள். இவர்கள் இருவரும் காதலித்து வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டு அந்தமான் தீவுக்கு உட்பட்ட போர்ட்பிளேயரில் வாழ்கிறார்கள். இரண்டு வருடங்கள் கழித்து பார்வதி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கிறாள். அப்போது அவளுக்கு லிட்டில் அந்தமான் தீவில் பார்வதிக்கு எலக்சன் டியூட்டி போட்டிருக்க முருகன் வேண்டாம் என்கிறான். ஆனால் பணி நிமித்தமாக வேறு ஒரு இடத்திற்கு செல்வதாக முருகனிடம் பொய் சொல்லிவிட்டு லிட்டில் அந்தமான் தீவிற்குச் செல்கிறாள். போன இடத்தில் விபரீதம் ஏற்பட்டு கடலில் சிக்கி உயிருக்குப் போராடி மனிதர்களை வெறுக்கும் லெமூரிய தீவில் ஒதுங்குகிறாள். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை. 

கதை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை சுவாரஸ்யமாக செல்கிறது. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்களில் இந்தப் புத்தகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். 

பிடித்த வரிகள்

 1. கீழே ஈசிஜி ஓடிக் கொண்டிருந்தது. இசைக் குறிப்பு போல் இதயத்தை மொழிபெயர்த்த கோடுகள்.
 2. க்ளியோபாட்ராவின் தோற்றத்தை ஆராய்ந்த‌ ப்ளைஸ் பாஸ்கல் சொன்னது நினைவுக்கு வந்தது – “அவள் மூக்கு மட்டும் இன்னும் சிறியதாக இருந்திருந்தால் உலகின் முகமே வேறு மாதிரி மாறியிருக்கும்.”
 3. முருகன் பார்வதியின் கையை ஒரு சிறுமி கலர்க் கோழிக் குஞ்சைக் கையாள்வது போல் மென்மையாகப் பற்றியிருந்தான்.
 4. உடம்பை விட்டு வெளியே வந்தாத்தான் பொம்பளைங்க முன்னேற முடியும். 
 5. கெஸட்லயே எங்க பேரு ‘ன்’ல தான் முடியும். ‘ர்’னு இல்ல. அரசாங்கமே எங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை கொடுக்குது. 
 6. எவ்வளவு உயரம் போனாலும் சாதி போகாது. ஜனாதிபதிக்கே இங்கே அது தான் நிலைமை. 
 7. உண்மையில் ஒரு தலித் அம்மாதிரி புத்திசாலியாய், சுத்தமானவனாய், மென்மையாய், மனதிற்குகந்தவனாய் இருக்க மாட்டான் எனத் தனக்குள் தன்னையறியாது உறைந்திருக்கும் பொதுப்புத்தி தான் அதற்குக் காரணம் என உறைத்த போது மிகவும் அவமானமாய் உணர்ந்தாள்.
 8. ஆயுட்துணை – தன் இணையரை இப்படி அழைக்கலாம்.
 9. ஒருவர் சாதியைக் கடப்பது அத்தனை சுலப‌மான காரியமல்ல‌ என்பதை என் இச்சிறுவாழ்வில் உணர்ந்து கொண்டிருக்கிறேன். மிக முற்போக்கு பேசும் ஒருவர் கூட ஏதாவது ஒரு தருணத்தில் தன்னையறியாமல் சாதியை ஒட்டி ஏளனம் பேசி விடுவார். அவர்களின் முற்போக்கு ஒரு முகமூடி என்பதல்ல நான் சொல்ல வருவது. அது அவர்கள் வாசிப்பு மற்றும் சிந்தனையின் வழி வந்தடைவது. ஆனால் அதெல்லாம் தாண்டி இந்திய ஆழ்மனதில் சாதி நீங்காமல் இடம் பெற்றிருக்கும். எப்போது வேண்டுமானாலும் அது வெளிவரும்.
 10. நிறைய பணம் சம்பாதிப்பதை விட உருப்படியான காரியம் செய்வதில் கிடைக்கும் சுமாரான வருமானம் போதுமானதென நினைத்தான். 
 11. “சாதியை முன்னெடுப்பதில் பெண்ணே முன்நிற்கிறாள். ஆண்களை விடப் பெண்களே சாதிப் பித்தும், சாதித் திமிரும் அதிகம் கொண்டவர்கள். சாதி வேற்றுமை பார்ப்பதில், அதன் அடிப்படையில் பிறரை அவமதிப்பு செய்வதில் அவர்களே முன் நிற்கிறார்கள்.”
 12. பிறக்காத தன் மகனுக்கோ மகளுக்கோ ஜீவகாருண்யம் பார்த்த முருகன் ஒருபக்கம். சாதி தாண்டி மணமுடித்த மகளை மூன்றாண்டு கழித்தும் பிணமாய்ப் பார்க்கும் தன் அம்மா ஒரு பக்கம். 
 13. யாரையாவது உயர்த்திப் பேசினால் இன்னொருவரை மட்டம் தட்டுவதாய்த் தான் இப்போதெல்லாம் அர்த்தம் வந்து தொலைக்கிறது. 
 14. “செத்துப் போன உன் மக பேசறேன். ஆனா சொர்க்கத்திலிருந்து”
 15. கலைடாஸ்கோப் ஒன்றில் தோன்றுகின்ற‌ வெவ்வேறு வடிவக் கோலங்கள் போல் அவள் முகத்தில் உணர்ச்சிகள் மாறி மாறிப் பொலிந்தன.
 16. பிறந்த வீட்டுக்குப் போகும் திருமணமான பெண் வேறொரு மனுஷியாகி விடுவாள். புருஷனுக்குத் தெரியாத ஒரு புதிய முகம் வந்து உட்கார்ந்து விடும்.
 17. முதல் பொய் சொல்கையில் தான் கூச்சமும் குற்றவுணர்ச்சியும் குத்த வைக்கும். அடுத்தடுத்த பொய்களில் தப்பிக்கும் துடிப்பு தான் ஆக்ரமித்துக் கொள்ளும். ஆதிப்பொய்க்கு மட்டுமே அத்தனை ஆயத்தமும் திராணியும் தேவை. பின்தொடரும் பொய்கள் இலகுவாய், இயல்பாய் வந்து விழும்.
 18. பெண்களுக்கு சிங்கம் மாதிரி காதலன் வேண்டும், ஆனால் அவன் நாய் போல் அவர்கள் காலடியில் குழைய வேண்டும் என்று சொல்வார்கள். பெரும்பாலான பெண்களுக்கு அப்படி எதிர்பார்ப்பு இருப்பது உண்மை தான். ஆனால் அவர்களுக்கு அமைவது என்னவோ எல்லா நேரங்களிலும் சிங்கமெனக் குதறுபவனோ எப்போதும் நாயாய் நக்குபவனோ தான். சிலருக்கு இன்னும் மோசமாய் இரண்டும் நேர் எதிராக வாய்த்து விடும்.
 19. குற்றம் புரிவதன் சுவாரஸ்யத்தை விட மன்னிப்பு கேட்பதன் சுகம் அலாதியானது. மடியிலிருக்கும் கனத்தை இறக்கி வைக்கின்ற‌ சுகம்! நெடுநேரமாய் அடிவயிற்றில் அடக்கி வைத்த சிறுநீரை வெளியேற்றும் தருணத்திற்கு ஒப்பு. விடுதலையுணர்வு.
 20. ‘உன்னை வயிற்றில் வைத்துப் பொய் பேசுவதால் நீயும் அதைக் கற்றுக் கொள்ளாதே. இது ‘பொய்மையும் வாய்மையிடத்து’ வகையிலான‌ பொய். ஆகையால் தவறில்லை.’
 21. சாலையென்று பாராமல், முன்னிரவென்று பாராமல் பௌர்ணமியை நோக்கி வளர்ந்து கொண்டிருந்த வெண்ணிலவைச் சாட்சியாக்கி அவனைக் கன்னத்தில் முத்தமிட்டாள். அவர்களை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு அருகே நின்றிருந்த‌ குல்மொஹர் மரம் வெட்கத்தில் மலர்கள் உதிர்த்தது.
 22. “கரை நின்று கடலை ரசிக்கும‌ளவு கப்பலிலிருந்து ரசிக்க முடியவில்லை அல்லவா!”
 23. “கடலின் உயிர்ப்பே இதில் தென்படவில்லை. அலைகள் இல்லாமல் என்ன கடல்!”
 24. “கலாம் போல் இஸ்லாமிய அடையாளம் மறைத்த எலைட் இஸ்லாமியர்களுக்கே இங்கே மதிப்பு. மத்திய‌ அரசின் பெரும் பதவிகளில் போய் உட்காரும் கணிசமான இஸ்லாமியர்கள் கட்டும் வழமையான‌ வேஷம் தான் அது. அது இங்கு எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியாவில் இஸ்லாமியர்கள் தம் நாட்டுப்பற்றை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதன் ஒரு பகுதியாக மத அடையாளங்களிலிருந்து துண்டித்துக் கொள்ள வேண்டும். ‘செக்யூலர்’ என்ற சொல்லைத் தன் அரசியலைப்புச் சட்டத்தின் முகப்புரையில் தாங்கிய தேசம் தான் என்றாலும் நடைமுறை யதார்த்தம் இதுவே.”
 25. இந்தியாவின் தென்முனை எதுவெனக் கேட்டால் எல்லோரும் கேப்கொமரின் என்பர். குமரிமுனை. தவறு! மெயின்லேண்ட் எனப்படும் பிரதான நிலப்பரப்புக்குத்தான் அது சரி. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவைக் கணக்கில் கொண்டால் க்ரேட் நிகோபார் தீவின் தெற்குப் புள்ளியான இந்திரா முனை தான் இந்தியாவின் அசல் தென்முனை.
 26. “முதலாம் ராஜேந்திர சோழன்னு உங்க ராஜா ஒருத்தன் தென்கிழக்கு ஆசியாவுக்குப் படை எடுத்துப் போனானே, ரூட் வங்கக் கடல் தான். அதைச் ‘சோழர்களின் ஏரி’ன்னு சொன்னாங்க. அவுங்களுக்கு நிகோபார் தீவு தெரிஞ்சிருக்கு. அங்கிருக்கற பழங்குடிகள் பத்தியும். 1050ம் வருஷத்து தஞ்சாவூர் கல்வெட்டுல ‘நக்காவரம்’னு குறிப்பு இருக்கு. அது நிகோபாரைத் தான் குறிக்குது. நக்காவரம்னா ‘நிர்வாண மனிதர்களின் தீவு”
 27. பெண்கள் உடையிலும் பாக்கெட் வைத்தால் என்னவாம்!
 28. கற்பு என்பது சொல் தவறாமை; அதாவது நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திற்கு விரோதமில்லாமல் என்கின்றதான கருத்துகள் கொண்டதாக இருக்கிறது.
 29. கடிகார முட்கள் ஒரு நாளில் 22 முறை ஒன்றின் மீது ஒன்று படுத்துக் கொள்கின்றன. ஒரு நாளில் 22 தடவைக‌ள் புணரலாம் என்பதுதான் ஒரு க‌டிகாரத்திடமிருந்து மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய செய்தி.
 30. எல்லோரையும் திருப்திப்படுத்துகிற மாதிரி ஒரு முடிவை ஒருபோதும் நாம் எடுக்கவே முடியாது
 31. கடல் சக்தி வடிவம். அதனுள் அன்னையின் பரிவும் உண்டு, காளியின் ரௌத்ரமும் உண்டு. மனிதர்கள் பன்னெடுங்காலமாய் அதனோடு போராடித் தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். இந்த நவீன யுகத்தில் கூட விமானங்களைக் கடலில் தொலைத்துத் தேடுகிறார்கள். அதன் துண்டுத் தகடைக் கண்ணில் காட்டாமல் விழுங்கிச் செரித்து கடல் சமத்காரம் காட்டுகின்றது. விஞ்ஞானத்தின் துணை கொண்டு மனிதன் வெல்ல இயலாத‌ இயற்கையின் முகங்களில் கடல் பிரதானம்.
 32. உறங்கும் மனிதர்களின் முகம் ஒரு சிறுகுழந்தையின் சாயலைப் பெற்று விடுகிறது.
 33. கடல் சீற்றத்தால் டாஸ்மாக்கிலிருந்து கிளம்பும் வாடிக்கையாளனைப் போல் படகு தடுமாறியது. 
 34. பதற்றம் ஒருபோதும் உன்னை மோசமான சூழலிலிருந்து காக்காது. மாறாக‌, இன்னும் மோசமான நிலைக்குத்தான் தள்ளும். சிக்கலான‌ நேரங்களில் பதற்றப்படுவது என்பது தற்கொலைக்குச் சமம்.
 35. உதவிகளில் பெரியது, சிறியது இல்லை என்பது போல் பொய்களிலும் சின்னது, பிரம்மாண்டமானது என‌ இல்லை. 
 36. சொர்க்கம் என்பது வேறு ஒன்றுமே இல்லை, நினைத்த நேரத்தில் சிறுநீர் கழிக்க முடிந்த இடம் தான். 
 37. “ஒண்ணுக்கடிச்சு, தண்ணி குடிச்சாலே அந்த ஊர் நமக்குப் பாதி சொந்தமாயிடும்.” “முழுச் சொந்தமாகனும்னா?” “அந்த ஊரில் ஒரு பெண்ணைப் புணர வேண்டும்.”
 38. எல்லோரும் எப்போதும் கெட்டவராக இருப்பதில்லை.
 39. பெண்ணைச் சதையாகப் பார்ப்பவன் கூட அடிபட்டால் உடனே அம்மாவைத் தான் அழைக்கிறான். அம்மா மட்டும் அம்மா; மற்ற பெண்ணெல்லாம் வெறும் ஓட்டை.
 40. காமத்தை விட மனிதனுக்கு உத்வேகமூட்டக்கூடிய ஒன்று இருக்குமானால் அது உயிராசை தான்.
 41. உயிரை விட மானம் பெரிது என்ற தமிழ்ப் பெண் பிம்பத்துக்குப் பங்கம் வராமல் காக்க ஒருத்தி உயிரையே விடுவது பேரவலம்.
 42. பெற்றோர் கண்காணிப்பு இல்லை என்றால் எக்குழந்தையும் குஷியாகி விடுகிறது.
 43. இருட்டில் நிகழ்த்துகிற பாவத்திற்குத் தண்டனையில்லை. ஏனெனில் அது எவருக்கும் தெரியாது.
 44. “ஓர் ஆண் யோனியிலிருந்து ஜனித்த‌ கணம் முதல் அவன் போராடுவதெல்லாம் மீண்டும் ஒரு யோனிக்குள் புகுவதற்குத் தான். உலகமே காமத்தை மைய அச்சாகக் கொண்டு தான் சுழல்கிறது. புவியில் மானுட குலம் தழைத்தோங்குவதும் காமத்தினால் தான். தழைத்தோங்குவது என்பது இங்கே மக்கட்தொகைப் பெருக்கத்தைச் சொல்லவில்லை. முன்னேற்றம். நெருப்பை அடக்கியது, சக்கர‌ம் கண்டறிந்தது தொடங்கி இன்றைய சூப்பர் கம்ப்யூட்டர் வரை எல்லாமே ஆணினம் பெண்ணினத்தை ஈர்க்கச் செய்து காட்டும் சர்க்கஸ் தான்.”
 45. “பெண்ணின் உத்தரவின்றி, சம்மதமின்றி இதெல்லாம் நடக்குமா? ராணி தேனீ மாதிரி அவள் வீற்றிருக்க, அவள் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டு, தேன் கூடொன்று அவள் காலடியில் உருவாகும். ராணி இல்லை என்றால் எந்தத் தேன் கூடும் இல்லை. அதே போல் பெண்களும் காதலும் இல்லாவிடில், பூமி நிர்வாணமாகவே இருந்திருக்கும்.”
 46. பெரிய குற்றமா என்ற கேள்வியிலேயே சிறிய குற்றம் என்ற ஒப்புதல் வாக்குமூலமும் இருக்கிறதே!
 47. இயற்கைக்கு எதிரான ஒவ்வொரு மனித அடியும் வைக்கப்படுவது ஒரு கண்ணி வெடியின் மீது. 
 48. “இங்க கல்வி வளர்ந்திருக்கு; ஆனா அறிவு வளரல.” 
 49. மழை பெய்வதும், குழந்தை பிறப்பதும் எப்போது என்பது மகேசனுக்கு மட்டுமே தெரியும். 
 50. எல்லாப் பௌர்ணமியும் இருவரும் சேர்ந்து நிலாப் பார்ப்பது. அப்படி ஆயிரம் பௌர்ணமிகள் பார்க்க வேண்டும் என்பது லட்சியம்.
 51. பெரிய குழந்தைக்கு சிறிய குழந்தை பொம்மை தான்.
 52. குழந்தைகளின் கண்ணீரும் எளிமையானது. பசி, வலி தாண்டி வேறில்லை. பெரியவர்களின் கண்ணீருக்கு அகராதி தேவைப்படுகிறது!
 53. பெண்ணுக்கு இன்னொரு பெண் எப்போதும் போட்டிதான். தாயாய் இருந்தாலென்ன, மகளாய் இருந்தால் என்ன?

புத்தகத்தில் இடம்பெற்ற புதுமையான தகவல்கள்: 

 1. தன் மொத்த ஆயுளிலும் ப.சிங்காரமும், ஆதவனும் இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதி இருக்கிறார்கள்,  சுந்தர ராமசாமியும், கி.ராஜநாராயணனும் மூன்று நாவல்கள் மட்டுமே எழுதி இருக்கிறார்கள்.  
 2. எனக்குத் தெரிந்து ‘கன்னித்தீவு’ என்ற சொல் முதலில் அறிமுகமானது எம்ஜிஆர் இயக்கி, நடித்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் (1958) தான். பிறகு தினத் தந்தி நாளேட்டில் 1960லிருந்து மிகப் பிரபலமான ‘கன்னித்தீவு’ சித்திரக்கதை வெளியாகத் தொடங்கியது. அதன் தனித்துவம் சுமார் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் அக்கதை தொடர்ந்து வெளியாவது தான். (இதை எழுதிக் கொண்டிருக்கும் நாளில் வெளியான தினத் தந்தியில் 21,045வது பகுதி வெளியாகி இருக்கிறது.) பிறகு, 1965ல் பிஆர் பந்துலு இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் மீண்டும் கன்னித்தீவு இடம் பெற்றது. பின்னர் 1981ல் ஜெய்சங்கர் நடிப்பில் டி. ஆர். ராமண்ணா இயக்கி ‘கன்னித்தீவு’ என்ற பெயரிலேயே ஒரு படம் வெளியானது. 2011ல் மிஷ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ படத்தில் கபிலன் எழுதிய‌ ‘கன்னித்தீவு பொண்ணா…’ என்ற பாடல் இடம் பெற்றது. இப்போது வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் ‘கன்னித்தீவு’ என்ற படம் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
 3. இந்த நாவலைத் தொடங்குவதற்கான‌ உடனடி உந்துதலைத் தந்தது கடந்த நவம்பர் 2018ல் ஜான் ஆலன் சௌ என்ற 27 வயது அமெரிக்க இளைஞர் அந்தமானின் வடக்கு சென்டினல் தீவில் கிறிஸ்துவ மத‌த்தைப் பரப்புவதற்காகச் சட்டத்துக்குப் புறம்பாய் நுழைந்த போது அத்தீவில் வசிக்கும் கற்காலப் பழங்குடிகளான சென்டினலியர்களால் கொல்லப்பட்டு அவரது உடலைக் கூட மீட்க முடியாமல் போன சம்பவம் தான். 
 4. “ஐன்ஸ்டைன், கலாம், வாஜ்பேயி எல்லாம் பெண் வாசனை அறியா பேச்சிலர்கள்!”
 5. மெக்காவின் திசை பார்த்தமர்ந்து ஃபஜ்ர், துஹ்ர், அஸ்ர், மக்ரிப், இஷா என‌ தினம் ஐந்து முறை நமாஸ் செய்வார். பொய் சொல்வது இஸ்லாத்தில் பாவம். இறைத் தூதரான‌ நபிகள் நாயகம் அதற்கு மூன்று சூழல்களில் விதிவிலக்கு அளிக்கிறார்: மனைவியை மகிழ்ச்சிப்படுத்த, யுத்தத்தின் போது, மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்ப‌டுத்த. 
 6. சுதந்திரமடைந்து முதல் இருபது ஆண்டுகளுக்கு அந்தமான் நிகோபார் தீவு லோக்சபா தொகுதிக்கான எம்பியைப் பொதுமக்கள் வாக்களித்துத்தேர்ந்தெடுக்கவில்லை. இந்திய‌ ஜனாதிபதிதான் நியமித்து வந்தார். 1967லிருந்து தான் அங்கு தேர்தல் நடத்துகிறார்கள்.
 7. கன்னித்தீவு’ நாவலின் நாயகி நிறைந்த‌ கர்ப்ப ஸ்த்ரீ. இதை எழுதிக் கொண்டிருந்த நாட்களில் நிஜ வாழ்விலும், பொதுவெளியிலும் நிறைய கர்ப்பவதிகளைப் பார்க்க‌ நேர்ந்தது எதேச்சையானதா எனத் தெரியவில்லை. மனைவியின் பால்ய தோழி இந்து அரவிந்த், அடுக்ககத்தில் சௌம்யா ஷரண், சௌம்யா ஷெட்டி, அலுவலகத்தில் நான்சி ரூசியா, ரச்சிதா ராணி, ஃபேஸ்புக்கில் மஞ்சரி நாராயணன், ஷாலின் மரிய லாரன்ஸ், சினிமாவில் ஏமி ஜாக்சன் எனப் பலர். பிரபஞ்சமே கர்ப்பிணிகளால் ஆனது போன்ற ஒரு பிரமையை அது அளித்தது. அவர்கள் அனைவருக்கும் என் வணக்கம்.
 8. The Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques (Prohibition of Sex Selection) Act பத்து வருஷமா இருக்கு. எனக்குத் தெரியும் என்ன குழந்தைன்னு. ஆனால் அதை நான் உங்க கிட்டச் சொன்னா எனக்கு அஞ்சு வருஷ ஜெயில், அம்பதாயிரம் ஃபைன், ரெண்டு வருஷம் ப்ராக்டீஸ் பண்ண முடியாது. Do you want me to face all of that?”
 9. கர்ப்பம் உறுதிப்படுத்தப்படும் நாளுக்குச் சில தினங்கள் முன் அவளுடன் உடலுறவு வைத்துக் கொண்டிருந்தான். அந்தப் பேரசைவு தான் கருவை வலுவாக ஊன்ற விடாது செய்து விடும்.

கரு உண்டாகி வளர்ந்த சில தினங்களுக்குப் பிறகு வைத்துக்கொள்ளும் உடலுறவு சுகப்பிரசவம் நடக்க மிகவும் உதவும்.

 1. ஒரு பெண்ணின் பிறந்த வீட்டில் ஒரு நாய் வளர்த்திருக்கிறார்கள். உடல் நிறைய நீள்முடிகள் கொண்ட ஏதோ இனம். அப்பெண் அதனுடன் மிகுந்த வாஞ்சையாய் இருந்திருக்கிறாள். படுக்கையில் ஏறிப் படுத்துக் கொள்ளுமளவு உரிமையுடன் வீட்டில் வலம் வந்திருக்கிற‌து. அந்த நாயின் முடிகள் சுவாசிக்கையில் அவள் உடலுக்குள் போய் ரத்தத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அது தான் இப்போது கர்ப்பத் தடையாய் வந்திருக்கிறது. 
 2. பாரிய அந்தமானியர்கள், ஜரவாக்கள், ஜங்கில், சென்டினலியர்கள் என அந்தமான் தீவுகளின் நான்கு வகை இனக் குழுக்கள் உள்ளன. ஐந்தாவது பழங்குடி இனம் ஓங்கே. ஆறாவது இனம் லெமூரியர்கள் (பிற மனிதர்களை வெறுப்பவர்கள்)
 3. நிகோபரில் நிகோபாரியர்கள், ஷாம்பென்கள் என்று இரு வகை. நிகோபார் பழங்குடிகளுக்கு சீன முகம், அந்தமான் பழங்குடிகளுக்கு ஆஃப்ரிக்க முகம் என அடிப்படையிலேயே வேறுபாடுகள் உண்டு. 
 4. இந்தி பேசிக் கொண்டிருந்த‌வர்களின் ஆங்கிலம் அவளது இந்தியைப் போலவே உடைசலாய்த் தான் இருக்கும். இலக்கணம் மட்டுமல்ல; உச்சரிப்பே அப்படித்தான். ‘ச’ என்பதை ‘ஜ’ என்பார்கள். உதாரணமாய் ‘ரீசன்’ என்பதை ‘ரீஜன்’ என்று சொல்வார்கள். வங்காளிகள் ‘வ’ என்பதை ‘ப’ என்று உச்சரிப்பது போல். அங்கே ‘சக்ரவர்த்தி’ அல்ல; சக்ரபர்த்தி தான். மலையாளிகள் ‘O’ என்ற ஆங்கில எழுத்து வருமிடத்தில் எல்லாம் மிகுந்த விசுவாசத்துடன் ‘ஓ’ ஓசையுடன் உச்சரிப்பார்கள். ‘லாரி’ அல்ல; ‘லோரி’ தான். அதனால் தான் வடக்கத்தியர்கள் இயல்பாய் ஆங்கிலத்தில் பேச விரும்புவதில்லை. வேறு வழியில்லை என்றால் மட்டுமே ஆங்கிலத்துக்குத் தாவுவார்கள்.
 5. 2002-ல் குஜராத் கலவரத்தில் நடந்த கூட்டுப் பாலியல் குற்றச் செயல்களில் எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளார்கள்? அங்கேயும் நிறைமாதக் கர்ப்பிணிகளைக் கற்பழித்துக் கருவறுத்த கதைகள் எத்தனை!
 6. ஒரு மணி நேர‌ ப்ரீநேடல் வகுப்பு இருந்தது. பொதுவாய் அம்மா, மாமியார் போன்ற‌ எந்த உறவுகளும் இல்லாத பெண்டிருக்காக நவீன மருத்துவ உலகம் அளிக்கும் ஒரு வித‌ உளவியல் ஆதரவு.
 7. சுகப் பிரசவத்தில் அரை லிட்டர் ரத்தம் போகும். சிசேரியனில் ஒரு லிட்டருக்கும் மேல். 

Related Articles

ஜெய் பீம் ராஜாகண்ணு மனைவிக்கு அரசாங்கம் ... ஜெய் பீம் படம் பார்த்துவிட்டு ராகவா லாரன்ஸ் செய்த நல்ல காரியம் என்று தான் முதலில் தலைப்பு வைக்க தோன்றியது. ஆனால் மாற்றிவிட்டோம். சின்ன கட்டுரை தான் பொ...
உலகின் தலைசிறந்த சொல் செயல் – வேலை... சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நீ மாறாத... உனக்கேத்த மாதிரி சூழ்நிலையவே மாத்து... இந்த உலகத்துல கொடுமையான விஷியம் ரெண்டு.      ...
ராஜஸ்தானில் புழுதி புயலுக்கு 27 பேர் பலி... ராஜஸ்தான் மாநிலம் அல்வர், பரத்பூர் மற்றும் தோல்பூர் மாவட்டங்களை நேற்று (புதன்கிழமை) புழுதி புயல் கடுமையாகத் தாக்கியது. இதில் 27 பேர் பலியாகியும், 100 ...
அறம் திரைப்பட வசனங்கள் ஒரு பார்வை!... நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் "அறம்". அந்தப் படம் ரிலீசான சமயத்தில் அந்தப் படத்தின் வசனங்கள் மிகப் பெரிய அளவில் கவனம் பெற...

Be the first to comment on "உடம்பை விட்டு வெளியே வந்தாத்தான் பொம்பளைங்க முன்னேற முடியும் – கன்னித்தீவு புத்தக விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*