பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தால் விவசாயிகளைக் காட்டிலும், தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் சம்பாதித்திருப்பது விவசாய அமைச்சகத்தின் கடந்த ஆண்டு தரவுகளில் இருந்து தெரிய வந்திருக்கிறது. காப்பீடு சந்தா தொகையாக 22180 கோடிகளை வசூலித்த நிறுவனங்கள் பதிலுக்கு 12949 கோடிகளை மட்டும் விவசாயிகளுக்குத் திருப்பி செலுத்தியிருக்கிறது.
சட்டிஸ்கர் மாநிலத்தில் விவசாயிகளுக்கு 5 ரூபாய், 18 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதே போல நிறையப் புகார்கள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டன.
ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டம், எதிர்பாராத இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு மானியம் வழங்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. மிகக் குறைந்த அளவில் விவசாயிகள் காப்பீடு சந்தா செலுத்தும் வகையிலும் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டது. ஜூலை முதல் அக்டோபர் மாத பயிர்களுக்கு 2 சதவீதமும், அக்டோபர் முதல் மார்ச் மாத பயிர்களுக்கு 1.5 சதவீதமும், தோட்டக்கலை பயிர்களுக்கு 5 சதவீதமும் விவசாயிகள் செலுத்த வேண்டும். மீதமிருக்கும் சந்தா தொகையை மத்திய மாநில அரசுகள் சேர்ந்து கட்டும்.
லாபம் பார்க்கும் தனியார் காப்பீடு நிறுவனங்கள்
மத்திய விவசாய அமைச்சகத்தின் 2016 – 2017 ஆம் ஆண்டு தரவுகளின் படி 1 . 50 கோடி விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் 12949 கோடிகளை மானியமாகப் பெற்று இருக்கிறார்கள்.
ஆனால் காப்பீடு நிறுவனங்கள் கிட்டத்தட்ட 22180 கோடிகளைச் சந்தாவாக விவசாயிகளிடம் இருந்து பெற்று இருக்கிறது. அதில் விவசாயிகளின் பங்கு 4383 கோடிகள் ஆகும், மத்திய மாநில அரசுகள் 17796 கோடிகளைப் பெற்று இருக்கிறது.
விவசாயத்துறை நிபுணர் தேவேந்திர சர்மா இது குறித்து பேசும் போது ‘ பிரதமரின் இந்தத் திட்டம் விவசாயிகளின் நலனுக்காக அல்லாமல், தனியார் காப்பீடு நிறுவனங்களின் லாபத்துக்காகவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் தனியார் காப்பீடு நிறுவனங்கள் இந்தத் திட்டத்தினால் 9000 கோடிகள் லாபத்தை ஈட்டி இருக்கின்றன. அரசாங்கம் இது குறித்து கவலை கொள்வதாக தெரியவில்லை’ என்றார்.
‘உலகின் எந்தவொரு நாட்டிலும் பயிர் காப்பீடு திட்டத்திற்காக நிறுவனங்கள் ஏல அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் ஏல அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் இந்தத் திட்டத்திற்கு அப்படித் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பொதுவாக அரசாங்கம் தான் காப்பீடு சந்தாவை முடிவு செய்ய வேண்டும்’என்று மேலும் அவர் தெரிவித்தார்.
தனியார் காப்பீடு நிறுவனங்களின் பட்டியல்
பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், மாநிலங்களில் பயிர் காப்பீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஐசிஐசிஐ-லம்பார்ட் ஜெனரல் காப்பீடு, எச்.டி.எஃப்.சி-எர்கோஜி ஜெனரல் காப்பீடு, ஐஎஃப்ஒ-டோக்கியோ ஜெனரல் காப்பீடு கம்பெனி லிமிடெட், சோழமண்டலம் எம்.எஸ். ஜெனரல் காப்பீடு கம்பெனி லிமிடெட் டாடா-ஏஐஜி ஜெனரல் காப்பீடு கம்பெனி லிமிடெட், பியூச்சர் ஜெனரல் காப்பீடு கம்பெனி லிமிடெட், பஜாஜ் அலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனம் மற்றும் சிலர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
மத்திய அரசு சார்பில் பேசிய அதிகாரிகள் அரசாங்கம் இந்தத் திட்டத்தினை உளப்பூர்வமாக விவசாயிகளின் நலனுக்காகவே வடிவமைத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இயற்கை பேரழிவுகள் நிகழ்ந்த பிறகு மானியம் தருவதற்கான கால அளவைக் கூடுமானவரை குறைக்க முயற்சி செய்து வருகிறது. அதற்கான தொழில்நுட்பத்திற்கு விவசாயிகள் தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
Be the first to comment on "பிரதமர் மோடியின் பயிர் காப்பீடு திட்டத்தால் பலன் பெறும் தனியார் நிறுவனங்கள்"