சில தினங்களுக்கு முன்பு திருச்சியை கதைக்களமாகக் கொண்டு சுற்றுப்புறத் தூய்மையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “முதலிடம் நோக்கி” என்ற குறும்படம் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. இப்போது அந்தக் குழுவின் இன்னொரு படைப்பான “93 நாட் அவுட்” என்ற குறும்படம் ஆகஸ்ட்1 ம் தேதி மாலை ஐந்து மணி அளவில் மெட்ராஸ் சென்ட்ரலின் YUV app ல் வெளியானது. இப்போது இந்தப் படமும் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
குறும்படம் எடுப்பவர்களுக்கு லாபம் என்றால் வெற்றி என்றால் அது பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வெல்வது தான். பாராட்டுக்களைப் பெறுவது தான். சமூக வலைத்தளங்களில் வைரல் ஆவது தான். பெரிய திரைப்படத்துக்கு அடித்தளமாக அமைவது தான். அது தான் குறும்படத்திற்கான முழுமையான அங்கீகாரம். அந்த வகையில் இந்தக் குறும்படம் வெற்றி குறும்படம் என்றே கூறலாம். காரணம் இந்தக் குறும்படம் 125 விருதுகளை வென்று உள்ளது. 125 விருதுகளா? யார் அந்த படைப்பாளி என்று வியப்பாக இருக்கிறது அல்லவா?
அந்தக் குறும்படத்தை இயக்கியவர் இயக்குனர் விஜய் மில்டனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அருத்ரா சரவணக்குமார் என்பவர். 93 வயதான மனிதரை மையமாக வைத்து ஒரு அற்புதமான படைப்பைத் தந்து இருக்கிறார்.
பேஸ்மேக்கர் உதவியுடன் வாழ்ந்து வரும் 93 வயதான நபருக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம். வீடு முழுக்க புத்தகங்களாக குவித்து வைத்து இருக்கிறார். அவர் எதர்ச்சையாக ஒரு புத்தகத்தை கடையில் பார்க்கிறார். அந்தப் புத்தகம் அவருக்குப் பிடித்து இருக்கிறது. கடைக்காரரிடம் விலையைக் கேட்டால் இரண்டாயிரம் சொல்ல அவர் திகைக்கிறார். அந்தப் புத்தகத்தை எப்படியாவது வாங்கியே ஆக வேண்டும் என்று ஆவலாக இருக்கிறார். அதற்காக அலைந்து திரிகிறார். ஆனால் அந்தப் புத்தகம் அவருக்கு கிடைக்காமல் இருக்கிறது. அதே போல பேஸ்மேக்கர் பொருத்தி இருப்பதால் சைக்கிள் ஓட்டக் காடாது என்று குடும்ப உறுப்பினரால் அவருக்கு கட்டளை விதிக்கப்பட்டு இருக்கிறது. இறுதியில் அவர் எப்படி அந்தப் புத்தகத்தைப் பெற்றாரா, சைக்கிள் ஓட்டினாரா இல்லையா என்பது தான் குறும்படத்தின் கதைக்களம்.
படத்தின் மிகப்பெரிய பலமே விறுவிறுப்பும் அழகியலும் தான். தொடக்கத்தில் இருந்து இறுதிவரை சுவாரஸ்யமாக செல்கிறது. 93 வயது முதியவர் கதாபாத்திரத்தில் வருபவர் நடித்ததே தெரியாதது போல் வெகு இயல்பாக நடித்து இருக்கிறார். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய நல்ல குறும்படம்இது.
Be the first to comment on "125 விருதுகளை வென்ற தமிழ் குறும்படம் – 93 நாட் அவுட் குறும்படம் ஒரு பார்வை!"