96 படம் சமீபத்தில் வெளியாகி விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ரசிகர்களின் பலத்த ஆதரவை
பெற்றது. வசூல் ரீதியாக விமர்சன ரீதியாக இந்தப் படம் பெரிய வெற்றியை ருசித்து உள்ளது.
சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உதவி இயக்குனர்களுக்கு என்றே “கூகை” என்ற புதிய நூலகம் ஒன்றை துவங்கினார். அதில் சினிமா குறித்த கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அப்படி 96 படத்தின் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்ற போது பேட்டை நாவலை எழுதிய எழுத்தாளர் தமிழ்ப் பிரபா இந்தப் படம் என்ன சொல்ல வருகிறது என்ற கேள்வியை எழுப்பினார்.
காதல் தோல்வி அடைந்த ஒருவன், திருமண வயதை கடந்த ஒருவன் பழைய நினைவுகளை
கட்டிக்கொண்டே கடைசி வரைக்கும் திருமணம் செய்யாமலே வாழணுமா? என்பது தான் அவர்
எழுப்பிய கேள்வி. இந்தக் காலகட்டத்து பிரச்சினையை விவாதிக்க வைக்கும் மிக முக்கியமான
கேள்வி இது.
ஆன்லைனில் வியாபாரம்:
இந்தப் பிரபஞ்சமே வர்த்தக பிரபஞ்சம் தான். ஒருவனுடைய பிறப்பில் இருந்து இறப்பு வரை
அத்தனையிலும் வியாபாரம் இருக்கிறது. ஆனால் திருமணம் எனும் வியாபாரம் இருக்கிறதே…
நம்மை வைத்து ஆன்லைனில் திருமண ஜோடி பார்ப்பவன், ஜோசியக் காரன், ஜாதக காரன்,
சயனம் சொல்பவன் என்று இடைத்தரகர்கள் சம்பாதித்து தள்ளுகிறார்கள்.
வாழ்க்கைத் துணையை ஆன்லைனில் தேடி அலையும் அளவுக்கு இன்றைக்கு சூழல் இருக்கிறது.
தரம் அறிந்து பொருட்கள் வாங்குவது போல் சாதி பார்த்து தகுதி பார்த்து தன் இணையை
ஆன்லைனில் பொறுக்கி எடுக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, படிக்காத அம்மா அப்பாவுக்குப் பிறந்துவிட்டு சரியான வேலை இல்லாமல்
பொருளாதார மூலம் இல்லாமல் வயதைப் பற்றி கவலை படாமல் எனக்கு கல்யாமணமே
வேணாம் என்று காலம் தள்ளிக்கொண்டு விரக்தியுடன் சுற்றித் திரியும் இளைஞர்கள் ஏராளம்.
இவர்கள் இப்படி இருக்க, கல்யாணம் செய்யாமலே நாம் கணவன் மனைவியாக வாழ்வோம்
என்று சென்னையில் சில ஜோடிகள் சுற்றித் திரிகிறார்கள். அவர்களை எல்லாம் சமீபத்தில் விஜய்
டிவியில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.
திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்வதன் மூலம் இருவரும் நெடுங்காலம் காதலராக
இருக்கிறோம் ஒருவரை ஒருவர் கண்ட்ரோல் பண்ணாமல் சுதந்திரமாக இருக்கிறோம்
திருமணத்திற்கு முன்பே தன்னுடைய இணை உடலுறவுக்குத் தகுதியானவரா என்பதை
பரிசோதித்துக் கொள்கிறோம், நினைக்கும் போது குழந்தைப் பெற்றுக்கொள்வோம் அல்லது
எங்கள் சந்ததியையே பெருக்கிக் கொள்ளாமல் இருப்போம் என்று அவர்கள் பலவிதமாக
சொன்னார்கள்.
இவர்களுக்கு எல்லாம் திருமணத்தின் அவசியம் தெரியவில்லையா?
கமலின் மன்மதன் அம்பு படத்தில் வரும் நீ….ல… வானம் பாடலை கேட்டிருக்கிறீர்களா? "நாம்
வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடா…" என்ற வரி அந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கும். எவ்வளவு உணர்வு பூர்வமான வரி இது.
நாம் வாழ்ந்ததின் அடையாளமே நமக்கென்று இருக்கும் துணையும், நம்மால் இந்த உலகிற்கு
வந்த மகனும் மகளும் தான். ஆனால் நாம் திருமணம் செய்யாமல் இருப்பதன் மூலம் ஒரு
தலைமுறையே இல்லாமல் போகிறது என்பது பலருக்கு புரிவது இல்லை.
திருமணம் செய்வதற்கு முன்பு வரை நாம் யாருக்காக அதிகம் உழைக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் பார்த்தால் அதுவரை நாம் நமக்காக உழைப்பது எல்லாம் மிகக் குறைவுதான். நலம் விரும்பி என்கிற பெயரில் நம்மிடம் நாய் போல் வேலை வாங்கிவிட்டு ச்சி போ என்று துரத்தி அடிப்பார்கள். இளக்காரமாகப் பார்ப்பார்கள். அந்த இடத்தில் அவனுடைய
ஒட்டுமொத்த சுயமரியாதையும் நொறுங்கி விடுகிறது. அதே திருமணம் ஆன பிறகு நம் நிலைமை முற்றிலுமே மாறிவிடுகிறது.
கொம்பன் படத்தில் வருவது போல் "சம்சாரம் வந்ததும் சமூகத்த மறந்திட்ட பாத்தியா" என்ற வசனம் போல தான் வாழ்க்கை மாறும். மனைவியின் நச்சரிப்பு நம்முடைய நலத்துக்கானதே. உந்திக் கொண்டே இருந்தால் தான் உருப்படியான மனிதனாக வாழ முடியும். இதை செய்ய தாயை காட்டிலும் மனைவியால் அதிகம் முடியும்.
பகுத்தறிவு பேசிய நாட்டிற்காகப் போராடிய பெரியார் கூட அனைவரையும் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார். ஏன் அந்த தள்ளாடும் வயதில் கூட தனக்கென்று துணை வேண்டும் என்று இன்னொரு திருமணம் செய்து கொண்டார். ஆக திருமணம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் சுயமரியாதையை காக்கும் ஒரு முக்கியமான நிகழ்வு. அது செய்யாமல் சுற்றினால் நாய் கூட நம்மை மதிக்காது என்பது தான் உண்மை.
Be the first to comment on "96 ராமை போல் திருமணம் செய்யாமலே வாழ்வது சரியா? இன்றைய இளைஞர்களுக்கு திருமணத்தின் மீதான ஆர்வம் குறைந்து வருகிறதா?"