டெங்கு காய்ச்சலும் நிலவேம்பு கசாயமும் பன்றிக்காய்ச்சலும் டேமிபுளூ தடுப்பூசியும் – மக்கள் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது!

Awareness about Dengue Fever

கடந்த ஆண்டு டெங்குவினால் தமிழிகம் சந்தித்த இன்னல்கள் பற்றி சொல்லித் தான் தெரிய
வேண்டும் என்பது இல்லை. தற்போது மழை, குளிர் என்று தொற்றுகள் அதிகம் பரவுவதற்கான
பருவம் என்பதால் டெங்கு குறித்த விழிப்புணர்வு நமக்கு அவசியமாகிறது.  கொஞ்சம்
அஜாக்கிரதையாக இருந்தால் மிகக் குறுகிய காலகட்டத்தில்  தமிழகம் முழுவதும் டெங்கு
காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.  ஆதலால் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக நிலவேம்பு
கசாயம் வினியோகிக்கும் பணியை அரசு தற்போதே தொடங்கியுள்ளது.

எவ்வளவு தான் முன்னேற்பாடு செய்தாலும் ஒரு சில இடங்களில் டெங்குவிற்கு உயிர்ப்பலி
ஆவதை தடுக்க முடியவில்லை. அவ்வகையில் சென்னை கொளத்தூரை சேர்ந்த தீக்ஷா, தக்‌ஷன்
ஆகிய இரட்டை குழந்தைகள் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு பலியானது  பொதுமக்களிடையே
அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதை தொடர்ந்து ஒரு சில இடங்களில் பன்றிக்காய்ச்சலுக்கும்
சிலர் பலியாகி இருப்பது பொதுமக்களிடையே பயத்தை அதிகரித்துள்ளது.

குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஜாக்கிரதை:

டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது குழந்தைகள் மற்றும்
முதியவர்கள் தான். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை கொள்ளும் அளவுக்கு வீட்டில் இருக்கும்
முதியவர் நலனில் அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை. குளிருக்கு வரும் சாதாரண
காய்ச்சலாக இருக்கும் சாதாரண மூட்டு வலியாக இருக்கும் என்று அலட்சியம் காட்டுகிறோம்.

மழையும் குளிரும் தொடங்கிய சில நாட்களிலயே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 200 பேர் டெங்கு காய்ச்சலாலும், 100 பேர் பன்றிக் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் மட்டும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்:

பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில்
நாள்தோறும் 10 பேர் வரையில் அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கடலூர், திருச்சி
பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு போல் இல்லாமல்
சுகாதாரத்துறை எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையால் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல்

இதுவரை தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2400
ஆக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 23 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
ஆதலால் கடந்த ஆண்டு அரசு மருத்துவமனைகளில் போதுமான இடவசதி இல்லாமல்
தவித்ததால் இந்த வருடம் இதற்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பாதிப்பு அதிகம் இருக்கும் மாவட்டங்களான சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர்
மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் 82 நடமாடும் மருத்துவ குழுக்கள், கொசு ஒழிப்பு விரைவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் கட்டுப்பாடும் 20 ஆயிரம் பணியாளர்களும்:

டெங்குவிற்கு முக்கிய காரணம் கொசு என்பதால் சுற்றுப்புறத்தை மேம்படுத்தும் நோக்கில்
சுகாதாரத்துறை சார்பில் ஒரு வட்டத்துக்கு 10 தற்காலிக பணியாளர்களும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஒரு வட்டத்துக்கு 20 தற்காலிக பணியாளர்களும், பேரூராட்சி சார்பில் ஒவ்வொரு பேரூராட்சிக்கு 10 தற்காலிக பணியாளர்களும், நகராட்சி, மாநகராட்சி சார்பில் 250 முதல் 300 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதம் மொத்தம் 20 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எலிசா முறையும் இருப்புகளும்:

எலிசா முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்கும் ரத்தப் பரிசோதனை மையங்கள் கடந்த
ஆண்டு 31 ஆக இருந்தது. தற்போது இதன் எண்ணிக்கை 125ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மருந்துகள், ரத்த அணுக்கள், பரிசோதனை கருவிகள், ரத்தக் கூறுகள், ரத்தம், சுய தற்காப்பு
சாதனங்கள் ஆகியவை அனைத்தும் தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் எத்தனை பழுது இல்லாமல் நன்கு வேலை செய்யக் கூடியவை என்பது தெரியவில்லை.

நிலவேம்பு குடிநீர் விநியோகம் மற்றும் டேமிபுளூ தடுப்பூசி:

டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக நிலவேம்பு கசாயம் அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனை போன்ற இடங்களில் வினியோகிக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் நிலவேம்பு
குடிநீர் காய்ச்சியும் தேவைப்படுபவர்களுக்கு பொட்டலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுக்க உள்ள 407 அம்மா உணவகங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்குவதற்காக
மண்டலத்துக்கு தலா 10 கிலோ நிலவேம்பு பொடி கொடுக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப
மண்டலங்களுக்கு நிலவேம்பு பொடி வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் டெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு குடிநீரை குடிக்க வேண்டும்.

இதே போல் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ‘டேமிபுளூ’
தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன என்றும் சுகாதார துறை அறிவித்து உள்ளது. இவை எல்லாம்
வெறும் அறிக்கையாக மட்டும் இல்லாமல் தொடர் செயல்பாடாகவும் இருந்தால் நலம்.

Related Articles

உலக சினிமா “பெண் இயக்குனர்கள̶்... 1.Lee jeong hyang (The way home) 1964இல் தென்கொரியாவில் பிறந்தார்.  அங்கிருக்கும் ஜோன் பல்கலைக்கழகத்தில் பிரஞ்ச் இலக்கியம் படித்த பின் திரைப்பட கலைகள...
இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் அ... இந்தியாவில் சாதி எப்படி தோன்றியது? அது எப்படி பரவியது? சாதி இந்திய மக்களை வாழ்வின் முன்னோக்கி நகர்த்துகிறதா இல்லை நரகத்துக்குள் தள்ளுகிறதா? குறிப்பாக ...
இனி நீங்கள் போனில் உரையாட வேண்டியதில்லை.... வார இறுதியில் முடி திருத்த விரும்புகிறீர்கள், உங்களுக்கு விருப்பமான முடிதிருத்தகத்துக்கு திறன்பேசியில் அழைத்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும். இது த...
எவ்வளவு சம்பாதித்தாலும் உங்கள் கையில் பண... பணக்காரர்கள் ஏழை வேடமிட்டு மேலும் மேலும் பணக்காரன் ஆகிறான். ஆனால் உண்மையான ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் உருண்டு பிரண்டு எவ்வளவு சம்பாதித்தாலும் க...

Be the first to comment on "டெங்கு காய்ச்சலும் நிலவேம்பு கசாயமும் பன்றிக்காய்ச்சலும் டேமிபுளூ தடுப்பூசியும் – மக்கள் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது!"

Leave a comment

Your email address will not be published.


*