எட்டு வருடங்களுக்கு முன்பு ஆரண்ய காண்டம் எனும் படத்தை தந்தவர். அதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.
பசுபதி, சிங்கப் பெருமாள், சப்பை, கொடுக்காப்புளி என்று ஆரண்ய காண்ட கதாபாத்திரங்கள் அத்தனையும்
” உனக்கு அப்பானா ரொம்ப பிடிக்குமா… “
” அப்டிலாம் இல்ல… ஆனா அவரு என் அப்பா… ” என்ற வசனமும்,
” சப்பையும் ஆம்பள தான்… எல்லா ஆம்பளைங்களும் சப்பை தான்… ” என்ற வசனமும் இன்னமும் நம் நினைவை விட்டு அகலவில்லை. அதற்குள் எட்டு வருடங்கள் ஓடிவிட்டது.
விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என்று ஒரு பட்டாளமே படத்தில் இருக்கிறது. ஆக மொத்தத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் படம்.
வேம்பு தன் பழைய காதலனை வீட்டுக்கு வரச்சொல்லி செக்ஸ் வைத்துக் கொள்கிறாள். ஆட்டம் முடிவதற்குள்ளே அந்த காதலனின் உயிர் பறிபோகிறது. இப்போது வேம்புவின் கணவன் முகில் வீட்டிற்கு வருகிறான். அவனிடம் நடந்த உண்மையை வேம்பு சொல்ல இருவரும் அந்தப் பொணத்தை எப்படி மறைத்தார்கள் என்பதே வேம்பு முகில் இருவருடைய கதை.
பள்ளியை கட் அடித்துவிட்டு நான்கு இளசுகள் 3டி டிவியில் பிட்டுப்படம் பார்க்க தயாராகிறார்கள். பிட்டுப்படம் டிவியில் ஓட அதில் நடித்திருப்பவர் தன்னுடைய அம்மா என்று ஒரு மாணவன் அழுது புலம்பி டிவியை உடைக்கிறான். அம்மாவை கொலை செய்ய கத்தியை தூக்கிக் கொண்டு ஓடுகிறான். படிக்கட்டில் தடுக்கிவிட்டு அந்தக் கத்தி அவனையே குத்திவிடுகிறது. குத்திக்கொண்ட இளைஞனை அவளுடைய அம்மா நீலாவும் ( ரம்யா கிருஷ்ணன் ) அப்பா தனசேகரனும் ( மிஷ்கின் ) எப்படி மீட்டார்கள் என்பது நீலா தனசேகரின் கதை.
ஏழு வருடங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு ஓடிப்போன தன்னுடைய அப்பாவுக்காக காத்திருக்கிறான் ராசுக்குட்டி. வந்த அப்பா ஷில்பா எனும் திருநங்கையாக வருகிறார். டெஸ்ட்யூபேபி டெஸ்ட்யூபேபி என்று கிண்டலடிக்கும் தனது வகுப்புத் தோழர்களிடம் அப்பாவை கூட்டிச்சென்று காட்ட ஆசைப்படுகிறான் சிறுவன் ராசுக்குட்டி. அவனுடைய ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவன் அழைக்கும் இடத்திற்குச் செல்கிறார் ஷில்பா. ராசுக்குட்டி ஒரு கட்டத்தில் காணாமல் போகிறான். கடைசியில் சந்தேக கேசில் போலீசிடம் சிக்கி இறுதியாக போலீசுக்கு சாபம் விட்டுச் செல்கிறார் ஷில்பா. ஷில்பா தனது மகன் ராசுக்குட்டியை கண்டுபிடித்தாரா, பாலியல் தொந்தரவு தந்த போலீஸ்காரன் என்ன ஆனான் என்பது ஷில்பா ராசுக்குட்டி கதை.
டிவியை உடைஞ்சு போச்சு… அப்பா அம்மா வரறதுக்கு முன்னாடி புதுசா ஒன்னு வாங்கிடனும் என்று பணத்திற்காக அலைந்து திரியும் சிறுவர்களின் கதை.
இப்படி மொத்தம் நான்கு கதைகள் நடக்கிறது. நான்கு கதைகளையும் ஒரே நாளில் நடப்பது போல படமாக்கியுள்ளார்கள். இதற்கு முன் ஹைப்பர் லிங்க் முறையில் வானம், மாநகரம் போன்ற நல்ல படங்கள் வந்துள்ளன. இந்த இரண்டு படங்களைவிட சூப்பர் டீலக்ஸ் கொஞ்சம் நன்றாகவே இருக்கிறது.
சுனாமியில் தப்பி வந்த அற்புதம் கதாபாத்திரத்தில் மிஷ்கின் அட்டகாசம் செய்துள்ளார். மிஷ்கினுக்கு விருது கிடைக்க வாய்ப்புண்டு. ரம்யா கிருஷ்ணன், சமந்தா, விஜய் சேதுபதி மூவரும் தங்கள் வேலையை சரியாக செய்துள்ளார்கள். பகத் பாசில் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் வலிமையாக படைத்திருக்கலாம். ராசுக்குட்டி மற்றும் காஜியாக நடித்தவர்கள் தியேட்டரில் சிரிப்பை வரவழைக்கிறார்கள். கடவுள் ஒரு சில்ற பையன் என்று சொல்லும் ராசுக்குட்டிக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம்.
சவுண்ட் டிசைனிங் அட்டகாசமாக உள்ளது. எடிட்டர் இரண்டாம் பாதியில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். கேமரா, இசை என்று தொழில்நுட்ப வேலைகள் அனைத்தும் அற்புதம். பாடல்கள் இல்லாதது ப்ளஸ் பாயிண்ட்.
கெட்ட வார்த்தைகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். ஷில்பாவையும் வேம்புவையும் நான்கு சிறுவர்களையும் இணைக்கும் புள்ளியாக பக்ஸ் நடித்திருக்கிறார். ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங் போல் தெரிகிறது அவருடைய நடிப்பு. நான்கு திரைக்கதை ஆசிரியர்கள் இருந்தும் படம் பயங்கர ஷார்ப்பாக இல்லாதது ஒரு குறை. வசனங்கள் அற்புதம்.
ஆரண்ய காண்டத்தைப் போலவே சூப்பர் டீலக்சும் புதுமையான வித்தியாசமான முயற்சி.
Be the first to comment on "” கடவுள் ஒரு சில்றபையன் ” – சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்!"