2009ல் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு சரண்யா மோகன் நடிப்பில் வி. செல்வ கணேஷ் இசையில் வெண்ணிலா கபடி குழு முதல் பாகம் வெளியானது. இப்போது பத்து வருடங்கள் கழித்து செல்வ சேகரன் இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் வி. செல்வகணேஷ் இசையில் வெளியாகி உள்ளது வெண்ணிலா கபடி குழு பாகம் இரண்டு.
1989ல் கதை நடக்கிறது. ஆனால் அடுத்த சில காட்சிகளிலயே தற்போதைய சமச்சீர் கல்வி 10ம் வகுப்பு புத்தகத்தை காட்டுகிறார்கள். இந்த இடத்திலயே படம் விழுந்துவிட்டது. ஹீரோயினை பாத்ததும் ஹீரோயின் பின்னாடி பாடி ஆடும் பாட்டு, ஹீரோயின் லவ்வை ஏற்றுக்கொண்டதும் வரும் ரொமான்ஸ் பாட்டு இரண்டும் படத்தின் வேகத்தடையாக உள்ளன.
வெண்ணிலா கபடி குழு என்ற பெயருக்கு நல்ல கூட்டம் படத்திற்கு நல்ல ஓப்பனிங். சூப்பர் டீலக்ஸ் ராசுக்குட்டி சின்ன வயது விக்ராந்தாக வருகிறார். அப்பா ஏன் கபடியை விட்டார் என்று சொல்லும் பிளாஸ்பேக் காட்சி அருமை. எப்போதும் இரண்டாம் பாதியில் தான் பிளாஸ்பேக் சொல்வார்கள். இந்த முறை முதல் பாதியில் பிளாஸ்பேக் சொல்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் முதல் பாதியின் ஹீரோ பசுபதி தான்.
பீரியட் படம் என்பதால் சில்க் ஒயின்ஸ், கட்டபொம்மன் போக்குவரத்து கழகம் போன்ற விஷியங்கள் பார்த்து பார்த்து செய்யப்பட்டிருந்தாலும் இந்தக் காலத்து சிவப்பு ட்ராயர் பள்ளி சீருடையை காட்டி மறுபடியும் சரிகிறார்கள்.
“காதலிச்சவளையே கைபிடிக்கனும், அவன் தான் ஆம்பள…” “கபடி கத்துக்க தமிழன்ற ஒரு தகுதி போதாதா… ” என்ற வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன.
சூரியின் ஒன்றிரண்டு காமெடி பஞ்ச்கள் தவிர மற்றவை வழக்கம் போல சிரிப்பை வர வைக்கவில்லை. ” பாத்துங்க படாத இடத்துல பட்ற போவுது ” , ” நாங்க மட்டும் என்ன பாகிஸ்தான்லயா பொறந்தோம் ” போன்ற பஞ்ச்கள் அபத்தம். கஞ்சா கருப்பு அதற்கு மேல.
சவடமுத்துவாக கிஷோர் நன்றாக நடித்துள்ளார். முதல் பாதிக்கு பசுபதி தோள் கொடுத்தார் என்றால் இரண்டாம் பாதிக்கு தோள் கொடுக்கிறார் கிஷோர்.
வெண்ணிலா கபடி குழு முதல் பாகத்தில் பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் பட்டாசு கிளப்பிய இசையமைப்பாளர் செல்வ கணேஷ் இரண்டாம் பாகத்தில் கோட்டை விட்டுவிட்டார் என்றே கூற வேண்டும். பின்னணி இசை ஓரிரு இடங்களில் இரைச்சலாக இருக்கிறது. அனிருத் பாடிய குத்தாலத்துல கும்மா பாடலை தவிர மற்ற பாடல்கள் ஒன்றுகூட மனதை கவரவில்லை.
அந்தக் காலத்து படம் போல தெரிய வேண்டும் என்பதற்காக அந்தக் காலத்து காட்சிகளையே நினைவூட்டும் வகையில் படம் எடுத்து வைத்திருக்கிறார்கள். ஓவர் ஆக்டிங் செய்யாமல் நுணுக்கமான நடிப்பை தந்துள்ளார் விக்ராந்த் சந்தோஷ். உங்களுக்குப் பிடித்த கே எல் ராகுலுக்காக இந்தப் படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.
இரண்டாம் பாகம் இயக்குவதில் உடன்பாடு இல்லை என்று ஒருமுறை சொன்னார் இயக்குனர். இப்போது வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பாகத்திற்க்காக அவரே கதை எழுதியுள்ளார். சுசீந்திரன் ரசிகர்களுக்கு இது ஓகே ரகம் படமே.
Be the first to comment on "கே எல் ராகுல் நடித்த வெண்ணிலா கபடி குழு பார்ட் 2 எப்படி இருக்கு?"