கவியரசு கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்!

Intersting information about Kaviyarasu Kannadasan!
  1. முத்தையா என்ற இயற்பெயருடைய கண்ணதாசன் பத்திரிக்கைகளிலும் தமிழ்ப்படங்களிலும் எழுதிய இனிய தமிழ்ப் பாடல்களின் எண்ணிக்கை ஐயாயிரத்துக்கும் மேல் இருக்கும். இதனாலயே கவியரசு என்ற சிறப்பு பெயரோடு குறிப்பிடப் பட்டார்.
  2. இவர் சாத்தப்ப செட்டியார் விசாலாட்சி ஆட்சி ஆகியோர் மகனாக 24. 6. 1927 ல் இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். வறிய நிலையில் இருந்த குடும்பத்தை சேர்ந்த இவரோடு பிறந்தோர் 7 பேர். செட்டிநாட்டு வழக்கப்படி இவரை முத்துப்பட்டினம் பழனியப்பா செட்டியார் – சிகப்பி தம்பதிகள் தத்தெடுத்துக் கொண்டனர்.
  3. 8ம் வகுப்புக்கு மேல் படிக்க இவருக்கு ஆர்வம் இல்லை. ஆனால் இலக்கியங்களை படிப்பதிலும் படைப்பதிலும் இளமை முதலே அதிக ஆர்வம் இருந்தது. இந்தக் காரணத்தால் 1944ல் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த திருமகள் பத்திரிகை ஆசிரியர் பொறுப்பு இவருக்கு கிடைத்தது. கண்ணதாசன் என்ற புனை பெயரில் இவர் எழுதிய எழுத்தோவியங்கள் பலரையும் ரசித்துப் படிக்க செய்தன. அதற்கடுத்து திரைஒளி பத்திரிக்கைக்கு ஆசிரியரானார்.
  4. 1947 ல் மாடர்ன் தியேட்டர்ஸ் நடத்திய சண்டமாருதம் பத்திரிகை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் தான் அவர்கள் தயாரித்த மந்திரிகுமாரி படத்திற்கு வசனம் எழுத கலைஞர் மு. கருணாநிதி சேலம் வந்தார். இருவரும் நண்பர்களானார்கள். இதனால் கண்ணதாசனுக்கு திராவிட இயக்கத்தின் மேல் ஈடுபாடு ஏற்பட்டது. அதுமட்டுமல்ல, திரைப் படங்களுக்கு பாட்டெழுதும் ஆர்வமும் ஏற்பட்டது. பத்திரிக்கைப் பணி சரிப்பட்டு வராத நிலையில் பாடலாசிரியராகும் எண்ணத்தில் கோயம்புத்தூர் போய்ச் சேர்ந்தார்.
  5. அங்கு ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்து வந்த கன்னியின் காதலி படத்தில் பாட்டெழுத அந்த நிறுவன நிர்வாகியான வெங்கடசாமி செய்த சிபாரிசால் கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என்ற பாட்டெழுதிக் கொடுத்தார். படத்தின் கதாநாயகி மாதுரிதேவி பாடுவதாக இடம் பெற்ற அந்த முதல் பாட்டே பிரபலமாகியது. இதன் பிறகு கல்கத்தாவில் வங்கமொழியில் உருவான ரத்னதீபம் என்ற படத்துக்கு அங்கேயே போய்த் தமிழில் டப்பிங் வசனம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்தார்.
  6. 1953 ல் தி. மு. கழகம் நடத்திய கல்லக்குடி போராட்டத்தில் கலைஞர் மு. கருணாநிதியுடன் கலந்துகொண்டு சிறை தண்டனை பெற்றார். சிறையிலிருந்து வெளிவந்த பின் தென்றல் என்ற பெயரில் பத்திரிகை தொடங்கினார். அதில் இவர் எழுதி வந்த கவிதைகளும் கட்டுரைகளும் கதைகளும் நாடகங்களும் இவருக்கு பெருமை சேர்த்தன.
  7. 1954 ல் நேஷனல் புரோடக்ஷன்ஸார் தயாரித்த அம்மையப்பனுக்காக கலைஞர் மு. கருணாநிதி எழுதிய கதையும் வசனங்களும் மாடர்ன் தியேட்டர்சுக்காக கண்ணதாசனும் ஏ. கே. வேலனும் சுகம் எங்கே ? படத்துக்காக எழுதிய திரைக்கதையும் வசனங்களும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருந்தன. இதன் காரணமாக கலைஞருக்கும் கவிஞருக்கும் நட்பில் சிறிது விரிசல் ஏற்பட்டது.
  8. அடுத்த சிறிது காலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இல்லற ஜோதி படத்துக்கு கண்ணதாசன் திரைக்கதை வசனம் பாடல் எழுதினார். தயாரிப்பாளர் டி. ஆர். சுந்தரத்தீன் ஆர்வத்தால் அந்தப் படத்தில் கலைஞரின் அனார்கலி ஓரங்க நாடகமும் சேர்க்கப் பட்டது. இருவரின் கை வண்ணத்தாலும் படம் பெரும் வெற்றி பெற்றது.
  9. தொடர்ந்து தெனாலி ராமன், நானே ராஜா, ராஜா தேசிங்கு, நாடோடி மன்னன் என கதை வசனமும் பல படங்களில் பாடல்களும் எழுதினார் கண்ணதாசன். இவர் எழுதிய தத்துவ பாடல்களும் பக்தி பாடல்களும் காதல் பாடல்களும் கே. வி. மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்றோரின் இசையோடு கூடிப் பல படங்களில் இடம் பெற்று நாடெங்கும் நல்ல வரவேற்பை பெற்றன.
  10. அரசியலில் ஈ வெ கி சம்பத் தொடங்கிய தமிழ் தேசியக் கட்சியில் இவரும் சேர்ந்தார். கட்சி நடத்துவது சரிப்படாத நிலையில் இருவரும் அதை கலைத்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். தனிப்படவும் அரசியல் முனைப்பாலும் சில நாடகங்கள் எழுதி தானும் நடித்து நடத்தினார். மாலையிட்ட மங்கை, சிவ கங்கை சீமை (1959) முதலாக சில திரைப்படங்களை தானே எழுதி கண்ணதாசன் பிக்சர்ஸ் பெயரில் தயாரித்தும் வெளியிட்டார்.
  11. வரவும் செலவும் சரியாக இருந்ததே தவிர பெரும் லாபம் கிடைக்கவில்லை. ஆனால் சந்திர பாபுவை அப்போது சிவாஜி கணேசன் வாங்கி வந்த பணத்துக்கு மேல் கொடுத்து கதாநாயகனக நடிக்க வைத்து இவர் தயாரித்த கவலையில்லாத மனிதன் படம் பெரும் நஷ்டத்தை உண்டாக்கி விட்டது. அதனால் சில வழக்குகளையும் கண்ணதாசன் சந்திக்க நேர்ந்தது.
  12. இதனால் சொந்தமாக படம் எடுக்க கூடாது என்ற முடிவுக்கு வந்தார் இவர். பட கம்பெனி மூடப்பட்டது. சில காலத்தில் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த கே. முருகேசனுடன் சேர்ந்து வானம்பாடி என்றோர் படத்தை எழுதித் தயாரித்து வெளியிட்டார். படம் வெற்றி பெற்றது. அதில் வந்த லாபம் பழைய கடனை அடைக்க உதவியது. சுமைதாங்கி என்றோர் படத்தை கோவை செழியனோடு சேர்ந்தும் இரத்த திலகம் படத்தை பஞ்சு அருணாச்சலத்தோடும் தயாரித்தார். அவையும் வெற்றி பெற்றன.
  13. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்ற இவர் 1967 ல் மறுபடி கறுப்புபணம் படத்தை தானே சொந்தமாக எடுத்து நஷ்டப்பட்டார். அதில் இவர் ஒரு பாடல் காட்சியில் நடித்ததும் உண்டு. இவர் எழுதிய சேரமான் காதலி நாவலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப் பட்டது.
  14. இவருக்கு பொன்னம்மாள், பார்வதி, புலவர் வள்ளியம்மாள் என்று மூன்று மனைவியர்.
  15. 1981 ஜூலையில் அமெரிக்கத் தமிழ்ச் சங்க விழாவிலும் கவிஞர்கள் மாநாட்டிலும் கலந்துகொள்ள அழைத்திருந்தார்கள். அங்கே சென்ற இவர் நெஞ்சு வலி ஏற்பட்டு சிகாகோ மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார். இரண்டு மூன்று மாதம் வரை படுக்கையில் இருந்தவர் எந்தச் சிகிச்சையும் பலன் தராத நிலையில் 17. 10. 1981 இல் இரவு இந்திய நேரம் 10. 45 க்கு மரணமடைந்தார். தமிழக அரசு செலவில் 21 ம் தேதி அவர் உடல் இங்கு கொண்டு வரப்பட்டு எரியூட்டப்பட்டது. சென்னையில் கவியரசு கண்ணதாசன் உருவச் சிலையும் காரைக்குடியில் மணி மண்டபமும் எழுப்பப்பட்டது.

Related Articles

பெரியார் பற்றிய 20 தகவல்கள்!... ஈரோட்டில் 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்தார். பெற்றோர் வெங்கட்ட நாயக்கர் - சின்னத் தாயம்மாள். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ராமசாமி. இவர...
மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம்ப... பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக பல்வேறு மொழிகளில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், சினிமா ரசனை ரீதியாகவும் பல்வேறு சாதனைகளைச் செய்தது. மறக்கவே முடியாத...
வைரலாகும் அஜீத்தின் “அடேங் கப்பா&#... அஜீத் படத்தின் டீசர் ட்ரெய்லர் வைரல் ஆவதும், டீசர் ட்ரெய்லரின் வடிவேலு வெர்சன்கள் வருவதும் மிகச் சாதாரண விசியம். இணைய உலகையே அதிர வைக்க கூடியதாக இருக்...
சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி எப்படி... தயாரிப்பு : கோனிடெல்லா புரொடக்சன் கம்பெனிதயாரிப்பாளர் : ராம் சரண்இசை : அமித் திரிவேதிஒளிப்பதிவாளர் : ரத்ன வேலுகதை : பருச்சூரி பிரதர்ஸ்...

Be the first to comment on "கவியரசு கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*