கவிப்பேரரசு வைரமுத்துவின் மிக முக்கியமான கவிதை தொகுப்பு தான் “தண்ணீர் தேசம்”.
இந்தப் புத்தகத்தை மிக அழகான காதல் காவியம் என்று கூட சொல்லலாம். கலைவண்ணன், தமிழ்ரோஜா என்ற காதல் ஜோடி தான் இந்தப் புத்தகத்தின் மைய கதாபாத்திரங்கள்.
கலைவண்ணன் ஒரு பத்திரிக்கையாளர். அவருடைய காதலி அகத்தியர் என்ற பிசினஸ்மேனின் செல்ல காதலி. சிறுவயதில் படகு பயணம் மேற்கொண்டபோது சந்தர்ப்ப சூழல் காரணமாக படகு கவிழ்ந்து ஆற்றில் பிணங்கள் மிதந்த சம்பவம் தமிழ்ரோஜாவை மிகவும் பாதித்தது. அதனால் தமிழ்ரோஜாவுக்கு குடிக்கும் குளிக்கும் தண்ணீர் தவிர மற்ற தண்ணீர் பகுதிகளைப் பார்த்தால் பயம். அவளுடைய அந்த தண்ணீர் பயத்தைப் போக்குவதற்காக அவளுடைய அப்பா அகத்தியரிடம் காதலன் கலைவண்ணன் அனுமதி பெற்று கடலுக்கு அழைத்துச் செல்கிறான்.
கடற்கரையில் கலைவண்ணனும் தமிழ்ரோஜாவும் தண்ணீர் பற்றி பேசுகிறார்கள். தமிழ்ரோஜாவை கடலுக்குள் அழைத்துச் செல்ல கலைவண்ணன் ஆசைப்படுகிறான். கப்பலில் இசக்கி, சலீம், பரதன், பாண்டி என்ற மீனவ நண்பர்களுடன் தமிழ்ரோஜாவும் கலைவண்ணனும் கடலுக்குள் செல்கிறார்கள். தமிழ்ரோஜாவுக்கு அந்தப் பயணம் ஒவ்வாமையை தர பயத்தில் வாந்தி எடுக்கிறாள். மீனவ நண்பர்கள் அவளுக்கு கருப்பு டீ வைத்து தருகிறார்கள். சைவப்பிரியரான தமிழ்ரோஜாவுக்கு மீன் குழம்பை ஊற்றி தருகிறார்கள். அது அவளுக்கு பிடிக்கவில்லை. கரைக்கு திரும்பலாம் என அடம்பிடிக்கிறாள். இந்நிலையில் மீனவர்கள் கடலுக்குள் வலை வீசுகிறார்கள். வலை பாறைப்பகுதியில் விழுந்ததால் மீன் சிக்கவில்லை. மீண்டும் மண் இருக்கும் பகுதியில் வீச அதன் பிறகு கப்பலில் பழுது ஏற்பட்டு கப்பல் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிற்கிறது. இனி கப்பல் நகராது யாராவது வந்து காப்பாற்றினால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற சூழல்.
இப்படிப்பட்ட சூழலை எப்படி சமாளிப்பது என்ற தமிழ்ரோஜாவுக்கு கற்றுத் தருகிறான் கலைவண்ணன். இடை இடையே அறிவியல், உலக தத்துவம், மனித இயல்புகளை பேசுகிறான். பதினான்கு நாட்கள் கடலிலயே காலம் கழிக்கிறார்கள். உணவை பகிர்வது எப்படி? தண்ணீரை எதற்கெல்லாம் பயன்படுத்தனும்? உடல் ஆற்றலை வீணடிக்காமல் இருப்பது எப்படி? போன்ற பல நுணுக்கமான விஷயங்களை வைரமுத்துவின் இந்தக் கவிதைகள் விளக்குகிறது.
கப்பலில் ஆறு மனிதர்களுடன் சேர்ந்து ஏழாவது உயிரினமாக ஒரு சுண்டெலி ஒன்று இருக்கிறது. பஞ்சத்திலும் அந்த சுண்டெலிக்கு தன்னுடைய சோற்றுப் பங்கை பகிர்கிறான் சலீம். சலீமிற்குத் தெரியாமல் இசக்கி என்பவன் பசி தாங்க முடியாமல் அந்த எலியைப் பிடித்து தின்றுவிட கதறி அழுகிறான் சலீம். சலீமின் அழுகையால் குற்ற உணர்வுக்கு ஆளான இசக்கி அன்று முதல் அசைவம் சாப்பிட மாட்டேன் என சபதம் எடுக்கிறான். அதே நேரத்தில் ஆமை ரத்தத்தை குடித்து சைவத்திலிருந்து அசைவத்திற்கு மாறுகிறாள் தமிழ்ரோஜா. கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்குள் மனமாற்றம் ஏற்படுகிறது. எப்படிப்பட்ட சூழலையும் தாங்கிக்கொள்ளும் பெண்ணாக மாறுகிறாள்.
கடலிலிருந்து இந்த ஆறுபேரும் மீட்கப்பட்டதும் அந்த ஆறுபேரில் ஒருவன் கரையை அடைந்த சந்தோசத்தில் மணலை அள்ளித் தின்கும் காட்சி செம. இந்தப் புத்தகத்தில் மொத்தம் 24 அத்தியாயங்கள் இருக்கின்றன. புத்தகத்தின் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை இம்மியளவும் சுவாரஸ்யம் குறையவில்லை.
கடலுக்குள் பயணித்து மீனவ நண்பர்களின் வாழ்வை புரிந்து காதலர்களை கூட இருந்தே அணுஅணுவாய் ரசித்தது போன்ற வித்தியாசமான உணர்வை தந்து பிரமிக்க வைத்தது தான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு. வருகிற காதலர் தினத்துக்கு இந்தப் புத்தகத்தை உங்கள் இணையருக்கு பரிசளியுங்கள். உங்கள் மீதான காதல் இந்தப் புத்தகத்தால் இன்னும் ஒருபடி அதிகரிக்கும்.
இந்தப் புத்தகத்தில் உள்ள பிரமிப்பான வரிகள்:
தூசு எடுக்கும் அவசரத்தில் கருமணியே
தூர்ந்துவிடக் கூடாது
——
எனக்கு கிராமத்து
குட்டிச்சுவர் வாழ்க்கையும்
தெரியும் நகரத்து நட்டச்சுவர் வாழ்க்கையும் தெரியும்…
எனக்குச் சோளக்கூழில் மிதக்கும் மிளகாயும் தெரியும்.
உங்கள் சாராயக் கிண்ணங்களில் மூழ்கிமிதக்கும் பனிக்கட்டிகளும் தெரியும்…
எனக்கு மழையில் நனைந்த
வைக்கோல் வாசமும்
தெரியும் சொட்டுக்கு ரூபாய்
நூறு தந்தால் மட்டுமே
மணக்கும் அரேபிய அத்தரும்
தெரியும்…
நீங்கள் விதையில்லாத
திராட்சைகளை விழுங்கி
வளர்ந்தவர்கள். நான்
கற்றாழைப்பழத்தின்
அடியிலிருக்கும் நட்சத்திரமுள் பார்த்தவன்…
—-
குடை வாங்கித் தரலாம்
மழை வாங்கித் தர முடியுமா?
—-
உங்கள் பணம் மின்னல். அதிலிருந்து வெளிச்சம்
வரலாம்
ஆனால் வெளிச்சமெல்லாம் தீபமாகுமா?
—-
வேட்டையாடுகிற வேட்டையாடப்படுகிற இரண்டு இனங்களும் உயிர்கள் தோன்றிய காலந்தொட்டு உலவிக் கொண்டுதானிருக்கின்றன. ஆனால் சிங்கம் அழிந்துவிடவுமில்லை, முயல் முடிந்துவிடவுமில்லை.
வலைகளின் எண்ணிக்கை அதிகமானதற்காய் மீன்களின் எண்ணிக்கை குறைந்துவிடவுமில்லை
ஒப்புக்கொள்கிறேன்
ஆனால் வலைகளை அறுக்கத் தெரிந்தவை மட்டுமே வாழ்கின்றன என்கிறேன்.
—-
நம் வாழ்க்கை முறை உடம்பை வாழையாய் வளர்த்துவிட்டது. மனதை கோழையாய் வளர்த்துவிட்டது. உடம்புக்கும் மனதுக்கும் ஒருமைபாடு இல்லை.
செருப்புக் கடித்துச் செத்துப்போகும் தேகங்களை வளர்த்துவிட்டோம் தந்திவந்தால் செத்துப்போகும் இதயங்களை வளர்த்துவிட்டோம்.
—
கற்பக விதைகள் வாங்கிக்
காளான் சாகுபடி செய்யும்
இந்தக் கல்விமுறையும்
ஈசல் பண்ணைகளாகிவிட்ட பல்கலைக்கழகங்களும் மாணவர்களுக்குத் தந்தனுப்புவது அடுத்த நூற்றாண்டு ஆயுதம் இல்ல கடந்த நூற்றாண்டு கவன்வில்.
—
கடிதம் என்பது தூரங்களின் காகித வடிவம்
—-
காதல் கடிதங்கள் உணர்ச்சியின் மத்தாப்புகளாய் இருப்பதுண்டே தவிர உண்மையின் தீபங்களாய் இருப்பதில்லை
—-
நினைவுக்கொசுக்களால் நித்திரை தொலைந்த ஒரு நீலராத்திரியில் கால்கடுக்க நடந்து
கடற்கரை அடைந்து
நீயும் நானும் சந்தித்த இடத்தில் அனாதைக் குழந்தைகளாய் அழுதுகொண்டிருந்த
உன் மல்லிகை உதிர்வுகளை
மடியோடு அள்ளிவந்து
மார்போடு தழுவிக்கொண்டு
விடியவிடிய விழித்துக்கிடந்தேன்.
—–
அனுபவங்கள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்
—-
கண்ணீரின் தாய்மொழி விசும்பல்
—-
இரண்டு ஒட்டுமாஞ்செடிகளை கட்டுவதுபோல் அவளைத் தன் மார்போடு பதித்து முத்தப்பசையிட்டு ஒட்டிக்கொண்டான்.
அவள் உடம்பெங்கும் ஒரு
பத்திரமான பாதுகாப்புணர்ச்சி பரவியது.
அதுதான்.
ஒவ்வொரு பெண்ணின்
உயிர்த்தேவை அதுதான்.
—-
அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீர் வாயில் விழுந்ததில் வார்த்தை நனைந்தது.
—-
பெண்மீது காதலும் வெற்றிமீது வெறியும் இல்லையென்றால் இன்னும் இந்த பூமி பிறந்த மேனியாகவே இருந்திருக்கும்.
—-
படபடப்பு என்பது உயிருக்கு நேரும் உயர்ந்த அனுபவம். படபடப்பு இல்லையென்றால் பரிணாமம் என்பது இல்லை
—
பாலில்லாத தேநீர் களைப்பை போக்கும் கறுப்புத் தாய்ப்பால்
—-
கரை மீண்டால் நாம் மீன் தின்னலாம். கரை மீளாவிட்டால் நம்மை மீன் தின்னும்.
—-
பூக்கள் காற்றில் உதிர்ந்தால் பூகம்பம் வந்துவிட்டதென்று புலம்பித் திரியாதே…
உச்சி வானத்தில் நிலா வந்தால் தலையில் விழுந்துவிடுமோ என சந்தேகப்படாதே…
—-
கண்ணீர்…
திட உணர்ச்சிகளின் திரவமொழி…
—–
அழுகையும் அச்சமும் தீர்ந்தநிலை தான் சுதந்திரம்
—-
தலையணை உறைமாற்ற மட்டுமே தயாரிக்கப்பட்ட பெண் துப்பாக்கிகளுக்குத் தோட்டா மாற்ற தயாராகிவிட்டாள்
—-
நிலவை பெற்றெடுப்பதற்குப் பிரசவ வலியில் சிவந்துகொண்டிருக்கிறது மாலைநேர கிழக்கு…
—-
தங்கத்தின் துருவல்களை சேகரித்தே ஒரு நகை செய்துவிடுவது போல் கஷ்டங்களைச் சேகரித்தே நாம் கலைசெய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.
—-
கலையின் முதல் எதிரி பசி
முதல் நண்பனும் அதுதான்.
—–
உழைக்காதவன் கையில் தங்கமும் அழுக்கு…
உழைப்பவன் கையில் அழுக்கும் தங்கம்…
—-
மற்றவர் நலனுக்காகத் தன் துயர் பொறுக்கும் தன்னல மறுப்பு இருக்கும் வரைக்கும் காற்றும் மழையும் பூமியிலிருக்கும். கடல்கள் தங்கள் கரை தாண்டாதிருக்கும்.
—–
சைவப்பெண்ணே… இன்றுனக்கு நிலாவே சோறுதான் நிலாவை தின்றுவிடு…
நிலா சைவமா?
நிச்சயமாய் சைவம் தான்
எப்படி?
அங்குதான் உயிர்கள் இல்லையே
—–
பௌர்ணமி பார்த்தால் கடல் பொங்குகிறதே ஏன்?
பிரிந்த மகளைப் பார்த்தால் பெற்ற தாய் பொங்க மாட்டாளா?
யார் மகள்? யார் தாய்?
கடல் – தாய், நிலா – மகள்
—–
நான் சுறாமீனுக்கே பயப்படாதவன்
சுண்டெலிக்கா பயப்பட போகிறேன்
—–
தெரிந்த பூமியைப் பார்க்க மறந்ததும் தெரியாத கடவுளை தேடி அலைந்ததும் தான் தமிழன் செய்த தவறு
—-
பதற்றத்தில் மனிதன் பாதி பலம் இழக்கின்றான்
—–
சுமப்பவனுக்குத்தான் தெரியும் சாலையின் தூரம்
விழிப்பவனுக்குத்தான் தெரியும்
இரவின் நீளம்
—-
எல்லா கடலுக்கும் கரையுண்டு எந்த துன்பத்துக்கும்
முடிவுண்டு
—-
இடம் பொறுத்துப் பொருள் வேறு. இடுப்பில் கட்டினால் லுங்கி, கம்பத்தில் கட்டினால் கொடி.
—–
பொறுமையாய் இருந்தால் தண்ணீரைகூட சல்லடையால் அள்ளலாம். அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால்
—–
அஃறிணைகள் சாகும்வரை மகிழ்ச்சியாகவே இருக்கின்றன.
மனிதன்தான் பாதி வாழ்க்கையிலயே படுத்துவிடுகிறான்.
—-
கீழே விழும்வரை ஒரு தென்னங்கீற்று காற்றோடு பாடும் சங்கீதத்தை நிறுத்திக்கொள்வதில்லை
மரணத்தின் முன்நிமிஷம் வரை பட்டாம்பூச்சித் தன் சிறகுகளைச் சுருக்கிக் கொள்வதில்லை
ஒரு கலப்பையின்கொழு தன்னை இடறும்வரை ஒரு மண்புழு தன் தொழிலைக் குறைத்துக்கொள்வதில்லை
—–
ஒரேயொரு முத்தம் கொடு
இந்தத் தொடருக்குக்
கட்டிலில் பொருள் வேறு
தொட்டிலில் பொருள் வேறு
பாடையில் பொருள் வேறு
—-
யுத்தம் உயிரின் மதிப்பைக் குறைக்கிறது
பஞ்சம் உணவின் மதிப்பை
உயர்த்துகிறது
—-
அழுவதுதான் அவமானமே தவிர அவதி தாங்குவது அவமானம் அல்ல
—-
வெற்றி என்ற தேருக்கு எதிர்ப்பு துன்பம் என்ற இரண்டும் தான் சக்கரங்கள்
—-
மொட்டுக்களை உடைத்துவிட்டதற்காகச் செடியிடம் தென்றல் மன்னிப்புக்
கேட்பதில்லை
சிவக்க சிவக்கச் சுட்டுவிட்டதற்காகத் தங்கத்திடம் நெருப்பு மன்னிப்புக் கேட்பதில்லை
—–
ஒரு திருடன் – ஒரு பிச்சைக்காரன் – ஒரு விலைமகள் – ஒரு கொலைகாரன் இந்த நால்வரும் அற்ற சமுதாயம்தான் இந்த உலகம் கடைவிழியில் நீர்வடியக் கண்டுவரும் கனவு
—-
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்.
– பாரதியார்
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம்.
– வைரமுத்து
—-
சேவல் கூவி விடியாத பொழுது குயில் கூவியா விடியப் போகிறது?
—-
கருணையின் நிறம் கருப்பு
—-
வெற்றியை நோக்கியாவது தோல்வியை நோக்கியாவது இயங்கிக்கொண்டே இரு. இயக்கமே வாழ்க்கையின் முதல் அடையாளம்.
—-
அறியாமையே அச்சம். அறிவே பலம். காரணம் கண்டறியாதவரை ஆன்மீகம். காரணம் கண்டறிந்தால் விஞ்ஞானம்.
—-
ஒரு மனிதன் – எத்தனை நாடுகள் கடந்தான். எத்தனை கடல்கள் கடந்தான். எத்தனை பேரைக் கொன்றான். எத்தனை மகுடம் கொண்டான். எத்தனை காலம் இருந்தான். எத்தனை பிள்ளைகள் ஈன்றான் – என்பவை அல்ல அவன் எச்சங்கள்.
இவையெல்லாம் நான் என்ற ஆணவத்தின் நீளங்கள்.
அவன் இன்னோர் உயிருக்காக எத்தனைமுறை அழுதான் என்பதுதான் அவன் மனிதன் என்பதற்கான மாறாத சாட்சி.
—-
காணவும் தூங்கவும் மட்டுமே
கண்கள் என்று பலபேர்
தப்பாகக் கருதிக்
கொண்டிருக்கிறார்கள்.
இல்லை – கண்ணீருக்கும் சேர்த்துதான் கண்கள்.
பார்த்தல் என்பது
கண்களின் வேலை.
கண்ணீர் என்பதே
கண்களின் தியானம்.
இதயம் கொதித்து ஆவியாகும்போது இமைகளின் மூடி திறந்து கொள்கிறதே… அதுதான் கண்ணீர்.
ஒருவன் தனக்காக அழும் கண்ணீர் அவனை மட்டும் சுத்திகரிக்கிறது.
அடுத்த உயிருக்காக அழும் கண்ணீர் அகிலத்தையே சுத்திகரிக்கிறது.
—-
நிகழும் வரைக்கும்தான் ஒன்று அதிசயம். நிகழ்ந்த பிறகு அது சம்பவம்.
—-
ஆனந்தக் கண்ணீர் மட்டும் இனிக்குமா என்ன?
—-
சந்தோசத்தின் தேதி குறிப்பது மட்டும்தான் மனிதகுலத்தின் வேலை. சாவின் தேதி குறிப்பது காலத்தின் வேலை…
—-
அனுபவம் வேண்டுமா –
இளமையை இழ…
ஆயுள் வேண்டுமா – போகம் இழ…
கவிதை வேண்டுமா –
உன்னை இழ…
காதல் வேண்டுமா –
இதயத்தை இழ…
வளர்ச்சி வேண்டுமா –
தூக்கத்தை இழ…
வரவு வேண்டுமா
வியர்வையை இழ…
ஒன்றை இழந்துதான்
இன்னொன்று.
—-
சிரிப்பவனைப் பார்த்து மரணம் தூரத்தில் நிற்கிறது. அழுபவன்
வீட்டுக் கதவைத்தான் அது
அவசரமாய்த் தட்டுகிறது.
—-
மனிதன் நினைத்தால்
வழி பிறக்கும்.
மனதிலிருந்தே
ஒளி பிறக்கும்
புதைக்கின்ற விதையும்
முயற்சி கொண்டால்தான்
பூமியும்கூடத் தாழ் திறக்கும்
கண்களிலிருந்தே
காட்சிகள் தோன்றும்
களங்களிலிருந்தே
தேசங்கள் தோன்றும்
துயரத்திலிருந்தே
காவியம் தோன்றும்
தோல்வியிலிருந்தே
ஞானங்கள் தோன்றும்
சூரியன் மறைந்தால்
விளக்கொன்று சிரிக்கும்
தோணிகள் கவிழ்ந்தால்
கிளை ஒன்று கிடைக்கும்
மரமொன்று விழுந்தால்
மறுபடி தழைக்கும்
மனம் இன்று விழுந்தால்
யார் சொல்லி நடக்கும்?
பூமியைத் திறந்தால்
புதையலும் இருக்கும்.
பூக்களைத் திறந்தால்
தேன்துளி இருக்கும்.
நதிகளைத் திறந்தால்
கழனிகள் செழிக்கும்
நாளையைத் திறந்தால்
நம்பிக்கை சிரிக்கும்…
—-
மனிதர்களில் குதிரைகள் உண்டு.
தம் நிழல் கண்டு தாமே
அஞ்சும் குதிரை மனிதர்கள்.
மனிதர்களில் விட்டில்கள் உண்டு.
பூத்துக் குலுங்கும் பூக்கள்
அழைத்தாலும் பூக்களில்
வாயூன்றித் தேன்குடிக்கத்
தெரியாமல் இலைகள் தின்னும்
விட்டில் மனிதர்கள்.
மனிதர்களில் குரங்குகள் உண்டு. தங்கக் கிண்ணத்தோடு அப்பம் கிடைத்தாலும் அப்பம் கவர்ந்துகொண்டு தங்கக்கிண்ணத்தை தரையில் எரிந்துவிடும் குரங்குமனிதர்கள்.
—–
இந்தப் புத்தகத்திற்கு இந்தாண்டுடன் வயது 24 ஆகிறது.
Be the first to comment on "காதலர் தினத்தில் இந்தப் புத்தகத்தை பரிசளியுங்கள்!"