இசையமைப்பாளர் ஜிவி சிறுவயது மற்றும் குடும்பப் பின்னணி போன்றவற்றை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. கிட்டத்தட்ட சினிமா ரசிகர்கள் அத்தனை பேருக்கும் ஜீவி பற்றி நன்கு தெரியும். ஏ ஆர் ரகுமானின் மாப்பிள்ளையான ஜீவி ரகுமான் வீட்டிற்குச் சென்றால் ரகுமானை பார்த்து பயந்து அழுவாராம். அப்படி அழும்போது கூட ஒரு ராகத்தோடு ஜீவி அழுவதை ஏ. ஆர். ரகுமான் கவனிக்க அழுவதில் கூட ராகத்தோடு அழுகிறானே, இவனுக்கு நல்ல இசை ஞானம் இருக்கும் போல என்று தான் இசையமைக்கும் ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலை அந்த குழந்தை குரலில் பாட வைத்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட எட்டு படங்களில் ஏ ஆர் ரகுமானின் இசையில் ஜீவி பாடியிருக்கிறார். அதிலும் குறிப்பாக முத்து படத்தில் வரும் குலுவாலிலே பாடல் மற்றும் முதல்வன் படத்தில் வரும் அழகான ராட்சசியே, இந்திரா படத்தில் வரும் இனி அச்சம் அச்சம் இல்லை, பாம்பேய் படத்தில் வரும் குச்சி குச்சி ராக்கம்மா போன்ற பாடல்களில் ஜீவி அவ்வளவு அழகாக பாடி இருப்பார். அதை தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மற்றும் தன்னுடைய இசையில் எம்.எஸ். ஜோன்ஸ், சாம். சி.எஸ் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் விஜய் பாடிய பாடல்கள் அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட். இப்படி பிரபலமாவதற்கு முன்பு, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் கிட்டார் மற்றும் கீபோர்டு வாசிக்கும் இசைக் கலைஞராக சில நாட்கள் வேலை செய்தார். அதை தொடர்ந்து இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய முதல் படமான வெயில் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அப்படி தன்னுடைய முதல் படத்திலேயே ஜிவி பிரகாஷ்குமார், நா. முத்துக்குமார் உடன் இணைந்து விட்டார். அந்த படத்தில் காதல் பாடல், கிராமிய பாடல், குத்து பாடல், கொண்டாட்ட பாடல் என்று அனைத்து விதமான பாடல்களும் இடம் பெற்றிருக்கும். அத்தனை பாடல்களுமே கேட்க கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கும். அதிலும் குறிப்பாக வெயிலோடு விளையாடி, ஊரான் தோட்டத்திலே, காதல் நெருப்பின் நடனம், உருகுதே மருகுதே போன்ற பாடல்கள் எல்லாம் அவ்வளவு ரசிக்கும்படி இருந்தன. எப்போது அந்த பாடல்களை கேட்டாலும் ஜீவி கண்முன் வந்து செல்கிறார். இப்படி முதல் படத்திலேயே செஞ்சுரி அடித்த ஜீவி அதற்குப் பிறகு அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தார். இப்படி ஜீவியும் நா முத்துக்குமாரும் இணைந்த முதல் படமே பெரிய அளவில் வரவேற்பை பெற்று தேசிய விருதையும் வென்றது. இப்படிப்பட்ட ஜீவியின் அசுர வளர்ச்சியில் நா. முத்துக்குமாருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. தன்னுடைய மூன்றாவது படமே தல அஜித்தின் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் முதன்முறையாக இயக்குனர் ஏ எல் விஜய் – நா முத்துக்குமார் – ஜீவி இந்த கூட்டணி உருவானது. இந்த படத்தில் ஜீவி – நா முத்துக்குமார் இணைந்து கொடுத்த “அக்கம் பக்கம் யாரும் இல்லா” என்ற பாடலும் கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே என்ற பாடலும் யுவன் யுவதிகளிடம் வரவேற்பை பெற்றது. அதேபோல ஓரம்போ படத்தில், ஜீவி மற்றும் நா முத்துக்குமார் இணைந்த இது என்ன மாயம் என்கிற பாடல் கேட்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்கும். அதேபோல ஜீவியும் நா. முத்துக்குமாரும் இணைந்து சீமான் மற்றும் மாதவனின் எவனோ ஒருவன் என்கிற படத்தில் “உனது எனது” என்கிற ஒரு புரட்சிகர பாடலையும் தந்திருக்கிறார்கள். அதற்கு அடுத்து இயக்குநர் ராதாமோகன் அவர்களுடன் இயக்கத்தில் ஜீவியும் நா. முத்துக்குமாரும் இணைந்து “உயிரிலே எனது உயிரிலே” என்ற அழகான பாடலை தந்தனர்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு வசந்தபாலன் எழுதி இயக்கிய அங்காடித் தெரு படத்தில் ஜீவி, நா. முத்துக்குமார் கூட்டணி மீண்டும் சேர்ந்தது. அந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, கதைகள் பேசும் விழி அருகே, உன் பேரை சொல்லும் போதே போன்ற பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். அதேபோல மூன்று வருடங்களுக்குப் பிறகு ஏ.எல். விஜய், ஜீவி, நா. முத்துக்குமார் கூட்டணி மீண்டும் மதராசப்பட்டினம் படத்தில் இணைந்தது. பூக்கள் பூக்கும் தருணம், காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே, மேகமே ஓ மேகமே, வாம்மா துரையம்மா, ஆருயிரே ஆருயிரே என்ற பாடல்கள் மூலம் இந்த கூட்டணி அதகளம் செய்து இருந்தது. இன்று வரை இந்த பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டே வருகின்றன. அதைத் தொடர்ந்து ஏ எல் விஜய், ஜீவி, நா. முத்துக்குமார் கூட்டணி மீண்டும் தெய்வத்திருமகள் படத்தில் இணைந்து இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆரிரோ ஆரிரோ, பபப்ப்பா பபப்ப்பா பாப்பா, விழிகளில் ஒரு வானவில் போன்ற பாடல்கள் மூலம் மீண்டும் நாங்கள் வெற்றி கூட்டணி என்பதை நிரூபித்தனர். அதைத்தொடர்ந்து சகுனி படத்தில் ஜீவியும் நா. முத்துக்குமாரும் இணைந்து மனசெல்லாம் மழையே என்கிற இதமான பாடலை தந்தனர்.
மீண்டும் ஏ.எல்.ல் விஜய், ஜீவி, நா. முத்துக்குமார் கூட்டணி “தாண்டவம்” படத்தில் இணைந்தனர். முந்தைய படங்களைப் போலவே இந்தப் படத்திலும் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். அனிச்சம் பூவழகி, ஒரு பாதி கதவு நீயடி, உயிரின் உயிரே போன்ற பாடல்கள் இன்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. உதயம் nh4 படத்தில் வெற்றிமாறன், ஜீவி, நா முத்துக்குமார் கூட்டணி முதன்முறையாக இணைந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த “யாரோ இவன் யாரோ இவன்” என்கிற பாடல் செம ஹிட். மீண்டும் தலைவா படத்தில் ஏஎல் விஜய், ஜீவி, நா முத்துக்குமார் கூட்டணி உருவானது. இந்த கூட்டணி என்றால் கண்டிப்பாக இசை ரசிகர்களுக்கு விருந்து உண்டு என்று எதிர்பார்க்க, அவர்கள் எதிர்பார்த்தது போலவே “வாங்கண்ணா வணக்கங்கண்ணா”, “தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி”, “யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது” என்ற பாடல்கள் மூலம் ரசிகர்களை குதூகலம் அடைய வைத்தனர்.
அதைத் தொடர்ந்து ராஜா ராணி படத்தில் அட்லீ, ஜிவி, முத்துக்குமார் கூட்டணி உருவானது. இந்தப் படத்தில் “சில்லென ஒரு மழை துளி” என்ற பாடலை ஜீவியும் நா. முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கினர். அது தொடர்ந்து இயக்குனர் சேரனும் ஜீவி நா முத்துக்குமார் கூட்டணி ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் உருவானது. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் உயிரே உயிரே பாடல் கேட்பதற்கு அவ்வளவு புதுமையாக இருக்கும்.
அதைத் தொடர்ந்து இயக்குனர் திரு, ஜீவி, நா முத்துக்குமார் கூட்டணியில் “நான் சிகப்பு மனிதன்” படத்தில் பெண்ணே ஓ பெண்ணே, ஏலேலோ மிதப்பு வந்துருச்சே, இதயம் உன்னை தேடுதே என்ற பாடல்கள் மூலம் ஜீவியும் நா. முத்துக்குமாரும் கலக்கி இருந்தனர். மீண்டும் ஏ எல் விஜய், ஜீவி, நா. முத்துக்குமார் கூட்டணியில் உருவான “சைவம்” படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு, அழகே அழகே என்கிற இந்த இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. அதிலும் இந்த அழகே அழகே என்ற பாடல் பாடகி உன்ன கிருஷ்ணனுக்கும் பாடலாசிரியர் நா முத்துக்குமார்க்கும் தேசிய விருது வாங்கித் தந்தது. அதைத்தொடர்ந்து ஜீவி ஹீரோவாக நடித்து வெளியான முதல் படமான டார்லிங் படத்தில் ஜீவியும் நா முத்துக்குமாரும் இணைந்து அன்பே அன்பே, சட்டென இடி மழை என்கிற சூப்பர் ஹிட் பாடலைத் தந்தனர். மீண்டும் ஏ.எல் விஜய், ஜீவி, நா. முத்துக்குமார் கூட்டணி இது என்ன மாயம் என்கிற படத்தில் இணைந்தது. இருக்கிறாய் இல்லாமல் நீ இருக்கிறாய், இரவாக நீ நிலவாக நான் என்கிற அழகான பாடல்களை தந்து அசத்தினர். அதற்குப் பிறகு காக்கா முட்டை படத்தில் வெற்றிமாறன், ஜீவி, நா. முத்துக்குமார் கூட்டணி இணைந்தது. இந்த படத்தில் செல் செல் செல் செல் செல் சிறகை விரித்து செல், கருப்பு கருப்பு நிறத்தை எதிர்த்து என்கிற பாடல்களை தந்தனர். அதற்குப் பிறகு ஜீவி ஹீரோவாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன “திரிஷா இல்லனா நயன்தாரா” என்ற படத்தில் ஜீவியும் நா. முத்துக்குமாரும் இணைந்து முத்தம் கொடுத்த மாயக்காரி என்கிற செம கிக்கான பாடலை தந்தனர். அதைத் தொடர்ந்து அதர்வா ஹீரோவாக நடித்த ஈட்டி என்கிற படத்தில் ஜீவி நா. முத்துக்குமார் இருவரும் இணைந்து உன் சுவாசம் என்கிற அழகான பாடல் தந்தனர். அதற்குப் பிறகு அட்லீ ஜிவி நா முத்துக்குமார் மூவரும் தெறி படத்தில் இணைந்தனர். இந்த படம் ஜிவி பிரகாஷுக்கு ஐம்பதாவது படம். இந்த படத்தில் ஜீவி, நா முத்துக்குமார் இருவரும் இணைந்து “என் ஜீவன் என்னாலும் வாழுதே” என்கிற அழகான பாடலை தந்தனர். தெறி படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களிலேயே மிக அதிகமான பார்வைகளை பெற்ற பாடல் என்றால் அது இந்த பாடல் தான்.
அதைத்தொடர்ந்து யாரடி நீ மோகினி திரைப்பட இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான மீண்டும் ஒரு காதல் கதை என்கிற படத்தில் ஜீவி, நா முத்துக்குமார் இணைந்து ஏதேதோ பெண்ணே, ஹே பெண்ணே என்ற இனிமையான காதல் பாடல்களை தந்தனர். அடுத்ததாக கடவுள் இருக்கான் குமாரு என்கிற படத்தில் ஜீவியும் நா. முத்துக்குமாரும் இணைந்து கும் சாரே கும் சாரே, பாத்து போடி என்கிற அருமையான பாடல்களை தந்தனர். அதற்குப் பிறகு ஜீவியும் முத்துக்குமாரும் இணைந்து முப்பரிமாணம் என்கிற படத்தில் சொக்கி போறேண்டி, கண்ணோடு கண்ணோடு என்கிற பாடல் தந்தனர். இப்படி ஜீவியும் நா. முத்துக்குமாரும் இணைந்து பல வெற்றிப் பாடல்களை தந்துள்ளனர். இருவரும் இணைந்து கடைசியாகப் பணியாற்றிய படம் முப்பரிமாணம். இருவரும் இணைந்து கடைசியாக பெரிய ஹிட் கொடுத்த பாடல் என்றால் அது தெறி படத்தில் இடம்பெற்றிருக்கும் என் ஜீவன் என்கிற பாடல். நா முத்துக்குமார் முதல் முறையாக தங்கமீன்கள் படத்திற்கு தேசிய விருது வாங்கிய போது எப்படி இவனுக்கு அதில் பங்கு இருந்ததோ அதே போலத்தான் நா முத்துக்குமார் இரண்டாவது முறை தேசிய விருது வாங்கிய போது ஜீவிக்கும் அதில் அதிக பங்கு இருந்தது.
Be the first to comment on "ஜி.வி.பிரகாஷ்குமார் – நா.முத்துக்குமார் கூட்டணி பற்றி ஏன் யாரும் பெரிதாகப் பேசுவதில்லை?"