யூட்யூபில் காசு சம்பாதிக்க நினைத்து படாதபாடு படும் இளைஞர்கள்!

youngsters suffer a lot for earning a amount in youtube

இன்றைய சூழலில்  இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் வேலையில்லாமல் அங்கும் இங்கும் அலைந்து தான் திரிகிறார்கள். சரியான வேலை கிடைப்பதில்லை, அப்படியே வேலை கிடைத்தாலும் சரியான சம்பளம் கிடைக்காத காரணத்தினால் அங்கிருந்து வெளியேறி விடுகிறார்கள் அல்லது சம்பளம் சரியாக கொடுத்த போதிலும் வேலையில் நிலையாக நிற்க முடியாமல் அதிக மன உளைச்சல் போன்ற காரணங்களால் அங்கிருந்து வெளியேறி விடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் இருக்கும் இளைஞர்கள் 22 23 வயது ஆனதும் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கலாம் என்ற இடத்திற்கு வருகிறார்கள். ஆனால் அந்த மிக இளம் வயதில் சொந்த தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்கள் கையில் சுத்தமாக காசு இருக்காது.  பெரிய பொருட் செலவு இல்லாமல் முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்றால் அது எந்த மாதிரியான தொழில் என்று யோசித்தால் அது கடைசியில் யூடியூப்பில் வந்து நிற்கிறது. 

யூடியூபில் தொழில் தொடங்க நமக்கு எந்த விதமான முதலீடும் தேவையில்லை. நெட் பேக்கும் ஒரு ஆண்ட்ராய்டு போனும் ஒரு சின்ன மைக்கும் இருந்தால் போதும் அதை வைத்து  யூடியூப் அக்கவுண்டை ஓபன் செய்து அதை வெற்றிகரமாக தொடரலாம். அப்படித்தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி தொடங்கப்படும் யூடியூப் செயல்பாடுகள் அவர்கள் எதிர்பார்த்தது போல் வெற்றிகரமாக நடைபெறுகிறதா? என்று கேள்வி எழுப்பினால் பாவம் அந்த இளைஞர்கள் என்று தான் பதில் வரும். யூடியூப் அக்கவுண்ட்டை ஓபன் செய்வதற்கு பெரிய அறிவு தேவையில்லை. ஆனால் அதை வெற்றிகரமாக நடத்த நிறைய அறிவும் அதை மக்களிடம் எளிமையாக கொண்டு செல்ல… சுவாரஸ்யமாக கொண்டு செல்ல…  திறமையும் வேண்டும். அப்படி என்ன மாதிரியான விஷயங்களை நம்முடைய யூடியூப் சேனலில் நாம் சொல்லப் போகிறோம் என்கிற தெளிவும், அதை தெளிவாக சுவாரசியமாக சொல்லக் கூடிய திறமையும்  இல்லாதவர்கள் நடத்தக்கூடிய சேனல்களை பற்றி பார்ப்போம். 

இந்த மாதிரி சேனல்கள் பெரும்பாலும் ஒரு தனி இளைஞனாலோ அல்லது இரண்டு பேர் மூன்று பேர் சேர்ந்து அரைகுறை அறிவுடன்  வேலை செய்யும் இளைஞர்கள் நிரம்பிய கூட்டணியாகவோ இருக்கும். இவர்கள் சொந்தமாக கண்டன்ட் தயாரிக்க மாட்டார்கள். ஏதாவது இணைய தளத்தில் இருக்கும் அரைகுறைத் தகவல்களை புரிந்தும் புரியாமல் படித்து விட்டு அதை வைத்து ஒரு வீடியோ செய்வார்கள், அப்படி இல்லை என்றால் பழைய பழைய படங்களில் குறிப்பாக சூப்பர் சீன்ஸ், காமெடி சீன்ஸ், மாஸ் சீன்ஸ், பைட் சீன்ஸ் போன்று தனித்தனி சீன்ஸ்களை பழைய திரைப்படங்களில் இருந்து கட் பண்ணி அதை வீடியோவாக போட்டு பார்வைகள் பெற்று சப்ஸ்கிரைபர்களை அதிகப்படுத்த முயல்வார்கள். அடுத்ததாக ட்விட்டரில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் அல்லது டிக்டாக் மாதிரியான  பொதுமக்கள் செயலியிலும் உள்ள வீடியோக்களை எடுத்து தங்களுடைய யூடியூப் சேனலில், கவர்ச்சியான டைட்டிலுடன் போட்டு பார்வைகளை அதிகமாக முயல்வார்கள். அப்படியும் இல்லையென்றால் வேறு ஒரு படத்தில் இருக்கும் ஒரு சீனை தனியாக கட் செய்து அதற்கு சம்பந்தம் இல்லாத ஏதாவது நகைச்சுவை உணர்வை தூண்டக் கூடிய வகையில் வேறொரு படத்திலிருந்து மியூசிக்கை எடுத்து இந்த வீடியோவிற்கு வைத்து அதை ஒரு மாஸ்சப் வீடியோவாக அல்லது கிரியேட்டிவ் வீடியோவாக உருவாக்கிவிட்டு சேனலில் போட்டு பார்வைகளை பெற முயல்வார்கள். இந்த மாதிரி வீடியோக்கள் குறிப்பாக அரசியல்வாதிகளை கலாய்ப்பதற்கு உதவும் ஒரு டெக்னிக் ஆக இந்த வீடியோ கிரியேட்டர்கள் பயன்படுத்துகிறார்கள். அதேபோல கிரிக்கெட் வீரர்களை கொண்டாடுவதற்கு குறிப்பாக தோனியை மாஸ் ஹீரோவாக காட்டுவதற்காக  முன்னணி நடிகர்களின் படத்தில் இடம்பெற்றிருக்கும் மாஸ் பிஜிஎம்ங்களை தோனியின் கிரிக்கெட் வீடியோ உடன் கோர்த்து அதை ஒரு வீடியோவாக போட்டு பார்வைகள் பெற முயல்வார்கள். 

அதேபோல வடிவேலுவின் கமெண்டுகளை வடிவேலுக்கு போடப்பட்ட பிஜிஎம்களை யூடியூப்பில் உள்ள நிறைய வீடியோக்களில் நீங்கள் கவனிக்கலாம். இந்த மாதிரி வீடியோ கிரியேட்டர்களை கூட ஒரு வகையில் பாராட்டலாம். ஆனால் நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் அவர்களின் குடும்பம் பற்றிய ஜாதி பற்றிய தகவல்களை பேசக்கூடிய யூடியூப் சேனல்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் அந்த மாதிரி சேனல்கள் உண்மையில் நல்ல வருமானம் பார்க்கின்றன. அந்த மாதிரி தில்லாலங்கடி வேலை செய்து பணம் சம்பாதிக்கும் யூடியூப் சேனலை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விடுவோம். இப்போது சுயதொழில் செய்ய வேண்டும் என்பதற்காக முழுமையான அனுபவம் இல்லாமல் அவசரப்பட்டு இறங்கி சரியான ரீச் கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்களைப் பற்றி பார்ப்போம். 

அப்படி முழுக்க முழுக்க இனிமேல் யூடியூப் தான் வாழ்க்கை என்றான பிறகு அவர்கள் தூங்கும் போது கூட சப்ஸ்கிரைப் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க லைக் பண்ணுங்க என்ற வார்த்தைகளை முனக தொடங்கி விடுகின்றனர். வீடியோவில் அந்த வார்த்தைகளை பயன்படுத்துவது மட்டுமில்லாமல் தங்களைச் சுற்றியிருக்கும் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள், முன் பின் தெரியாதவர்கள் என்று யாராக இருந்தாலும் இந்தச் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க என்ற வார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் ஒரு நாள் முழுக்க உபயோகித்துக் கொண்டே இருக்கிறார்கள். தங்களுடைய யூடியூப் வீடியோக்களின் லிங்க்கை எடுத்துக்கொண்டு போய்,  யூட்யூபில் ட்ரெண்டிங்காக இருக்கும் வீடியோக்களின் கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டு ப்ளீஸ் இந்த சேனலை சப்போர்ட் செய்யுங்கள் என்று கெஞ்சுவார்கள். ட்ரெண்டிங்காக இருக்கும் வீடியோவின் கண்டன்டிற்கும் இவர்கள் பதிவிட்ட லிங்கை உடைய அந்த வீடியோவின் கண்டன்டிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இருந்தாலும் போய் பதிவிட்டு வைத்திருப்பார்கள். 

அதேபோல தமிழில் உள்ள பிரபலமான சேனல்களை எல்லாம் பட்டியலிட்டு, ரொம்ப பிரபலமான சேனல்களாக எவை இருக்கிறதோ அந்த சேனல்களின் அத்தனை வீடியோக்களின் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தங்களுடைய வீடியோவின் லிங்க்கை பதிவிட்டு சப்போர்ட் செய்யுங்கள் என்று கேட்பார்கள். இப்படி எல்லா பக்கமும் கெஞ்சி கெஞ்சி அணுவணுவாக சப்ஸ்கிரைபர்களை சேகரித்த அந்த இளைஞர்கள் ஒரு கட்டத்தில் வாழ்க்கையையே வெறுத்து விடும் அளவிற்கு சென்று விடுகிறார்கள். எதனால் தெரியுமா? சத்தியமாக கமெண்ட் பாக்ஸில் விழும் கெட்ட கெட்ட வார்த்தைகள் நிறைந்த கமெண்ட்களால் அல்ல. அவர்கள் முற்றிலும் எதிர்பார்க்காத நேரத்தில் சேனலை ஒரேயடியாக நீக்கிவிடும் காபிரைட்  ஸ்டிரைக்குகள் தான் அவர்களின் அந்த மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. அவர்களுக்கு யூடியூப் ஸ்ட்ரைக்குகள் பற்றி தெரியாமல் இல்லை. ஒவ்வொரு முறையும் அடுத்தவர்களின் இசையை அடுத்த தயாரிப்பு நிறுவனத்தின் படக்காட்சியை வீடியோக்களில் பயன்படுத்தும்போது யூடியூப் இது காபிரைட்  பிரச்சனைக்கு உரியது என்று அறிவுறுத்தி விடும். 

இருந்தாலும் பார்வைகள் பெற வேண்டும் என்பதற்காக அந்த வீடியோக்களை அந்த இளைஞர்கள் நீக்காமல் அப்படியே வைத்திருப்பார்கள். முதல் காப்பிரைட் ஸ்ட்ரைக், இரண்டாம் கார்ப்பரேட் ஸ்டிரைக் என்று வரும்போது பயம் தொற்றிக்கொள்கிறது. அதை தொடர்ந்து மூன்றாவது ஸ்ட்ரைக் வந்து விட்டால் ஒட்டுமொத்த சேனலும் ஒரே அடியாக காணாமல் போய்விடும். இப்படி ஒவ்வொரு ஸ்ட்ரைக் ஆக வரும் போது இளைஞர்கள் பயந்து கொண்டே போய் ஒவ்வொரு வீடியோக்களாக டெலிட் செய்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட காப்பிரைட் வீடியோக்களில் அவர்கள் நேரத்தை செலவிட்டு உண்மையாய் உழைத்திருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இப்படி போடுவதும் பிறகு டெலிட் செய்வதும் என்று தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதால் அந்த சேனலுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் அந்த சேனல் கடைசிவரை சல்லி பைசா பார்க்காமல் வறுமையிலேயே சுற்றித் திரியும். 

இத்தனை அடிகள் வாங்கிய பிறகு அவர்கள்  ஒரு தெளிந்த மன நிலைக்கு வந்த பிறகு இனி நம்முடைய பாதை இதுதான் என்று தேர்ந்தெடுத்து தங்களுக்கு என ஒரு கண்டனட் எடுத்துக் கொண்டு அவர்கள் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படி புதிய பாதையை தொடங்க,  அவர்கள் இத்தனை மாதங்களாக உட்கார்ந்து வெட்டி வெட்டி ஒட்டிக்கொண்டு  உருவாக்கிய வீடியோக்கள் உள்ள அந்த சேனல்களை ஒட்டுமொத்தமாக டெலிட் செய்து விட்டு புதிய சேனலை தொடங்குகிறார்கள். இப்படி அவர்கள் புதிய சேனலை தொடங்கும் நேரத்தில், யூடியூப் புதிதாக ஒரு விதியை அறிமுகப் படுத்தி வைத்திருக்கும். அந்த விதிகளை படித்துப் பார்க்கும்போது, “என்னடா இது யூடிப் காரன் திரும்பத் திரும்ப அடிச்சுகிட்டே இருக்கான்” என்று ஒரு எரிச்சல் வந்து விடும். அந்த விதிகளுக்கு தகுந்தபடி, காப்பிரைட் பிரச்சினை வராதபடி, அதே சமயம் மக்களை ஈர்க்கும்படி ஒரு கண்டன்ட் தயார் செய்ய  அவர்கள் மண்டையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். அப்படி பார்த்து பார்த்து தயார் செய்த வீடியோக்களை ரசிகர்கள்  முழுவதுமாகப் பார்ப்பதில்லை. ஆனால் யூட்யூபின் புதிய விதி ஒவ்வொரு வீடியோவையும் எத்தனை பார்வையாளர்கள் முழுமையாக பார்த்திருக்கிறார்கள் எத்தனை மணி நேரம் பாத்து இருக்கிறார்கள் என்பதை எல்லாம் பொறுத்து தான் உங்கள் சேனலுக்கு அங்கீகாரமும் பணமும் கிடைக்கும் என்று ஆணித்தரமாக சொல்லிவிடுகிறது. மீண்டும் அதற்குத் தகுந்தபடி தகவல்களை சேகரித்து நண்பர்களிடமிருந்து உதவி பெற்று வீடியோக்களை உருவாக்கினால்  அந்த வீடியோக்களில் ஒரு சில வீடியோக்கள் எதிர்பாராத அளவுக்கு பெரிய அளவுக்கு வெற்றி பெறுகிறது. அதேபோல அடுத்தடுத்த வீடியோக்களும் வெற்றி பெறும் என்று முனைப்புடன் இறங்கி வீடியோக்களை உருவாக்கினால் அந்த வீடியோக்கள் சற்றும் எதிர்பார்க்காத அளவுக்கு தோல்வியை அடைந்திருக்கும். இப்படி ஒரு யூடியூப் சேனல் தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்த நினைக்கும் இளைஞர்கள் தொடர்ந்து அவஸ்தைப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர். அவர்களிடம் சென்று வேறு வேலையைப் பார் இதெல்லாம் செட் ஆகாது என்று நிறைய பேர் அறிவுறுத்துவார்கள். ஐயோ இவனா… இவன் கிட்ட வந்தான்னா “சப்ஸ்கிரைப் பண்ணிட்டிங்களா என கேட்பானே…” என்று சில நண்பர்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடுவார்கள். ஆனால் யூடியூப் தான்  தன்னுடைய தொழில் களம், இங்குதான் நான் வருமானத்தை பார்க்கப் போகிறேன் என்று முழுமையாக இறங்கிவிட்ட இளைஞர்களிடம் சென்று அறிவுரை கூறுவது அல்லது அவர்களைப் பார்த்து பயந்து ஓடுவதோ நாம் செய்யக்கூடாத செயல். அவர்களுடைய சேனலை நீங்கள் சப்ஸ்கிரைப் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவர்கள் போடும் வீடியோக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வரியில் அல்லது இரண்டு வரியில் கமெண்ட்டை உண்மையாக போடுங்கள். அந்த கமண்ட் அவர்களை மேலும் மேலும் யோசிக்க வைத்து வேறு ஒரு ஐடியாவை அவர்களுக்குத் தரும். 

இப்படி மக்களின் பார்வைகளால் பிரபலமாகத் தொடங்கி பணம் சம்பாதிக்கும் நிறைய யூடியூப் இளைஞர்கள்… ஏதாவது ஒரு சமூக அவலம், இயற்கை சீற்றம் போன்ற  நேரங்களில் தங்களால் முடிந்த உதவிகளை செய்கின்றனர். சப்ஸ்கிரைப் பண்ணுங்க என்று உங்களிடம் வந்து கெஞ்சிய போது சின்ன பையன் என்ன செய்யப்போகிறான் என்று நீங்கள் (நாம்) நினைக்க, அந்த பையன் தான் ஒரு சில வருடங்களுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறான். 

Related Articles

“ஹோம் ஸ்கூலிங்” முறை சிறந்தத... பிள்ளையை படிக்க வைக்கணும், என்ன படிக்க வைக்கலாம்? எங்க படிக்க வைக்கலாம்? என்ற கேள்விக்கு இந்த சமூகத்தில் சமச்சீர்ல, சிபிஎஸ்சி ஸ்கூல்ல, இன்டர்னேஷ்னல் ...
கன்னியாகுமரி கிராமங்களில் வெள்ளத்தால் எட... மண்டைக்காடு புதூர், குறும்பனை, கொட்டில்படு, நீரோடி, வள்ளவிளை, இரயுமன்துறை, தூத்தூர் மற்றும் போத்துறை உள்ளிட்ட கிராமங்களில் கடல் நீர் புகுந்ததால் வீடுக...
ஏழை மாணவர்கள் மருத்துவர் ஆகி அப்படி என்ன...  நம் இந்திய சமூகத்தில் எப்படியாவது சாதிக்கலாம் என்று ஏகப்பட்ட இளைஞர்கள் தினமும் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கோடி கணக்கான இளைஞர்கள் மத...
ஆண்ட்ரியா – அதிகம் கொண்டாடப்பட வேண... ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தில் வக்கீல் அப்பாவிற்கு மகளாக பிறந்தவர் ஆண்ட்ரியா. ஏ. ஆர் ரகுமான் இசையில் உருவான ஒரு காபி விளம்பரத்தில் தமிழ் பட சிவாவுடன் ...

Be the first to comment on "யூட்யூபில் காசு சம்பாதிக்க நினைத்து படாதபாடு படும் இளைஞர்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*