தோனிக்கு கிடைத்த மாதிரி நண்பர்கள் நமக்கும் கிடைத்தால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்?

ஏப்ரல் 2 2011 அன்று ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இந்தியாவும் ஸ்ரீலங்காவும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதிக்கொண்டு இருக்கிறது.  இந்திய அணி தோற்ப்பது போல் உள்ள சூழல் என அறிந்ததும் தோனி தானாகச் சென்று தனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்கிறார். வாய்ப்புக் கிடைத்ததும் தன்னுடைய திறமையை நிரூபிக்க அவர் ஆடுகளத்தை நோக்கி  அடிகளை எடுத்து வைக்க, அந்த அரங்கத்தில் உள்ள அத்தனை பேரும் தோனி தோனி என்று கரகோஷம் எழுப்புகின்றனர்.  தோனி இத்தனை உள்ளங்களை வெல்ல என்ன காரணம்? அவருடைய திறமை மட்டுமா? 

இப்படித்தான் டோணியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தொடங்குகிறது. தோனி இத்தனை உள்ளங்களை வெல்ல எது காரணமாக இருக்கும் என்பதை அவருடைய வரலாற்று பட காட்சிகளை வைத்தே நாம் பார்ப்போம். 

தோனி படிக்கும் பள்ளிக் கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக  இருப்பவர், பள்ளி மைதானத்தில் தோனி கோல் கீப்பராக துறுதுறுவென இருப்பதை கவனிக்கிறார். ஒரு மாணவனை அழைத்து தோனியை காட்டி யார் அந்த சிறுவன் என்று விசாரிக்கிறார். அந்தச் சிறுவன், அவன் பெயர் மாகி என்று சொல்கிறான். அந்தச் சிறுவனிடம், தோனியிடம் சென்று கிரிக்கெட் விளையாட ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டு வரச் சொல்கிறார் ஆசிரியர்.  அந்தச் சிறுவன் தோனியிடம் சென்று ஆசிரியர் கேட்க சொன்னதை கேட்டு விட்டு இதோ தோனி சொன்னதை திரும்ப வந்து ஆசிரியரிடம் சொல்கிறான். 

தோனி சொன்னது: “லூசா நீ, யாராச்சும் சின்ன பால்ல வச்சு விளையாடுவாங்களா…” இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அந்த உடற்கல்வி ஆசிரியர் புன்னகைக்கிறார். 

தன்னுடைய அப்பா இரவு பகல் பாராமல் வேலை செய்வதை கவனிக்கிறார். அதிலும் ஒருநாள் உறக்கமற்ற ஒரு இரவில்  கொட்டும் பனியில் தன்னுடைய பம்ப் ஆப்ரேட்டராக இருக்கும் தன்னுடைய அப்பா  விளையாட்டு மைதானத்திற்கு தண்ணீர் விடுவதை தன்னுடைய வீட்டு மாடியில் இருந்து கவனிக்கிறார் தோனி. 

பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தோனியை அருகே அழைக்கிறார். கோல் கீப்பிங் பண்ணியதை பாராட்டிவிட்டு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கிறதா என கேட்கிறார் ஆசிரியர். கிரிக்கெட்டில் எனக்கு ஆர்வம் ரொம்ப கம்மியாக தான் இருக்கிறது என்கிறார் தோனி.  

ஹார்ட் பால்லா இருக்கும்னு பயப்படுறியா என்று ஆசிரியர் கேட்க,  அதெல்லாம் இல்லை என்கிறார் தோனி. ஸ்கூல் கிரிக்கெட் டீமுக்கு புது விக்கெட் கீப்பராக செலக்ட் பண்றோம் நீ வரியா என்று கேட்க தோனி ஓகே என்கிறார்.  அடுத்த சில நொடிகளில் “அப்புறம் சார் எனக்கு ஹார்ட் பாலா பார்த்து பயமில்லை” என்கிறார்.  அதுதான் அவரை பின்னாட்களில் ஹெல்மட் போடாமல்  தைரியமாக பந்துகளை விளாச வைத்தது. ஆரம்பத்தில் பெரிய பந்துகளை தடுத்து நிறுத்திய தனது கைகளால் கிரிக்கெட் பந்தை பிடிக்க தடுமாறுகிறார் தோனி. பிறகு ஆசிரியரின் குறிப்புகளை நன்கு கவனித்து தன்னை சரிப்படுத்திக் கொள்கிறார்.  இந்த கையுறையை நான் வைத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டு வாங்குகிறார். 

 

பள்ளி கிரிக்கெட் அணியில் தன்னை சேர்த்திருக்கிறார்கள் என்று தோனி வீட்டில் சொன்னதும் அவருடைய அப்பா கொஞ்சம் பயப்படுகிறார். விளையாட்டால் உன்னுடைய படிப்பு பாதிக்கக்கூடாது என்று எச்சரிக்கிறார். காரணம் அவர் சிறு வயது முதலே கிரிக்கெட் கிரிக்கெட் என்று விளையாடிக் கொண்டே காலத்தை இழந்தவர் தன்னைப்போல் தன் மகனும் ஆகிவிடக்கூடாது என்ற அச்சம் அவருக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. சச்சின் யாரென்றே தெரியாத அம்மா தன்னுடைய மகனை முழுமையாக நம்புகிறார். 

நம்ப மாகி மற்ற பசங்கள மாதிரி கிடையாது…  நல்ல வேலை நல்ல சம்பளம் கிடைச்சாலும்  அது அவன் மனசுக்கு திருப்தியாக இருக்குமான்னு தோணல என்று தூங்கிக் கொண்டிருக்கும் தன் மகனை பார்த்து சொல்கிறார் அவருடைய அம்மா. 

விக்கெட் கீப்பிங் செய்யச் செய்ய அவருடைய விரல்கள் எல்லாம் வலி கண்டு போகின்றன. தோனி பேட்டை கையில் எடுத்து எப்படிப் பந்தை அடிப்பது என்பதை  ஒப்பனை செய்து பார்க்கிறார்.  ஆனால் உடற்கல்வி ஆசிரியரோ பேட்டை பிடுங்கி வைத்துக்கொண்டு கையுறையை கையில் திணித்து நீ கீப்பிங் தான் பண்ணனும் என்கிறார். ஆசிரியர் இல்லாத நேரம் தன்னுடைய சீனியர் இடம் சென்று தனக்கு பேட்டிங் வாய்ப்பு தருமாறு கேட்கிறார். சுற்றியிருப்பவர்கள் கேலி பேச அந்த சீனியர் வாய்ப்பு கொடுக்கிறார். பயிற்சி மைதானத்தில் அடித்த முதல் பந்தே வானத்தை நோக்கிப் பறக்கிறது.  கேலி பேசியவர்கள் வியந்து பாராட்டுகிறார்கள்.  சுற்றியிருப்பவர்கள் தன்னை கேலி பேசிய போதும் பாராட்டிய போதும் அதற்கு தோனி செவிசாய்க்கவில்லை. கீப்பிங் செய்வதாக இருக்கட்டும் பேட்டிங் செய்வதாக இருக்கட்டும். அதில் எந்நேரமும் தன்னுடைய முழு திறமையை காட்டுகிறார் தோனி. 

அதை அவருக்கே தெரியாமல் சில அதிகாரிகள் எல்லாம் கவனிக்கிறார்கள். பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் தோனி பேட்ஸ்மேன் ஆக இறங்கச் செல்ல,  ஆசிரியர் அவுட் ஆகிடாத என்கிறார். பேட்ஸ்மேனோ  உன்னால அடிக்க முடியுமா என்று கேட்கிறார்.  தோனியின் செவிக்கு அதெல்லாம் கேட்கவே இல்லை.  பேட்டை கையில் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கியதும் பந்துகளை  விளாசித் தள்ளுகிறார்.  தோனியின் பேட்டிங் திறமையை முதல் முறையாகப் பார்க்கும் ஆசிரியர் வியந்து போகிறார்.  தோனி அடித்த பந்தில் தோற்கும் நிலையிலிருந்த பள்ளி அணி வெற்றி பெறுகிறது. 

மீண்டும் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் தன்னை ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக இறக்கிவிட முடியுமா என்று ஆசிரியரிடம் வாய்ப்பு கேட்கிறார்.  உன்னால முடியுமா? பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது நீ எப்படி இறங்கலாம் என்று ஆசிரியர் கேட்க நான் பேட்ஸ்மேன்களிடம் வாய்ப்பு கேட்கிறேன் என்று அவர்களிடம் வாய்ப்பு கேட்டு விட்டு வந்து ஆசிரியரிடம் தன்னை ஓப்பனிங் இறக்கி விடச் சொல்கிறார். 

 

போன வேகத்தில் வந்து விடாதே என்று ஆசிரியர் சொல்லி அனுப்ப தோனி களத்தில் இறங்கி ஒற்றை மனிதராக பந்துகளை விளாசித் தள்ளுகிறார். ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக இறங்கிய தோனியின் முதல் பந்தே சிக்ஸர் போகிறது.  கமெண்டரி box’ இல் இருப்பவர் டோனியை பற்றி வியந்து சொல்கிறார். இப்போது வெறும் சிலர் தான் இந்த ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தோனி மட்டும் ஒரு மணி நேரம் நின்று அடித்தால் இங்கு ஜனத்திரளில் கூடி விடும் என்கிறார்.  அவர் சொன்னதைப் போலவே தோனி பொளந்து எடுக்க  சிறுவன் ஒருவன் சைக்கிளை எடுத்துக்கொண்டு  தோனியின் நண்பர்களிடம் தோனியின் பள்ளி ஆசிரியர்களிடமும் தோனி ஆட்டம் செமையாக இருக்கிறது என்பதை சொல்கிறான். பள்ளிக்கு விடுமுறை அளித்து விடுகிறார்கள்.  தோனியின் பேட்டில் பட்டு பந்துகள் பறக்க பறக்க கரகோசம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.  அப்போது பல உள்ளங்களை வென்று நாயகனாக ஒளிர தொடங்கிவிட்டார். 

தோனி நன்றாக விளையாடுவதைப் பார்த்த அவருடைய நண்பர் தன்னுடைய சொந்த வேலையை விட்டுவிட்டு தோனிக்காக  கிரிக்கெட் தயாரிக்கும் நிறுவனத்திடம் ஸ்பான்சர் செய்யுமாறு கெஞ்சி கெஞ்சி துரத்தி துரத்தி உதவி கேட்கிறார்.  எனக்கும் கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும் ஆனால் திறமை இல்லை திறமை இருக்கிற ஒருத்தன் ஜெயிக்கிறத பார்க்கும் போது நானே ஜெயிக்கிற மாதிரி உணர்வேன். அதனால தோனிக்கு உதவி செய்யுங்கள் என்று கெஞ்சுகிறார் அவருடைய நண்பர். 

பள்ளி தேர்வு நாட்களில் தோனியை பள்ளியிலிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு பைக்கில் அழைத்துச் செல்வது போன்ற உதவிகளை அவருடைய நண்பர்கள் தயங்காமல் செய்கிறார்கள். அதிகாரிகள் எல்லாம் தோனியை உயர்ந்து பார்க்க அதில் ஒரு அதிகாரி,  தோனியின் அப்பாவிடம் நீங்க தோனியை பற்றி கவலைப் படாதீங்க தோனிக்கு கிரிக்கெட் தான் கரியர். திறமையை ஏன் வீணடிக்கணும் என்று தோனியை மேலும் ஒரு படி உயர்த்துகிறார். 

விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது,  சந்தோஷ் என்கிற நண்பன் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் வேறு யார் கண்ணுக்கும் பிரமிப்பாக தெரியாத போது  தோனியின் கண்களுக்கு மட்டும் அது தெரிகிறது.  எந்த ஈகோவும் இல்லாமல் தன் நண்பனிடம் எனக்கு அந்த காட்டகத்து தரையா என்று கேட்க அந்த நண்பன் சமோசா வாங்கித் தா கற்றுத் தருகிறேன் என்கிறார். 

தோனிக்கு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று அப்பா அம்மா சொன்னதும் முதல் வேலையாக தோனி தனக்காக ஸ்பான்சர் உதவி கேட்ட அண்ணனின் கடைக்குச் சென்று அதை சொல்கிறார். சின்னதாய் கடை வைத்திருக்கும் அந்த அண்ணன் தோனிக்கு கிடைத்த வாய்ப்பை கேட்டு தனக்கே கிடைத்திருப்பது போல் மகிழ்ச்சி அடைகிறார். தோனியை கட்டிப்பிடித்த அண்ணன் “இதெல்லாம் ஒன்னுமில்ல… இப்படியே உயிரைக்கொடுத்து விளையாடு… மத்தத அந்த கடவுள் பாத்துக்குவாரு…  அடுத்த மேட்ச்ல நீ செஞ்சுரி அடிக்கணும்” என்று உற்சாகப்படுத்துகிறார். 

கிரிக்கெட் விளையாடி சம்பாதித்த பணத்தில் புதிதாக பைக் வாங்கிக் கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றுகிறார்.  தனக்கு ஹெலிகாப்டர் ஷாட் கற்றுத்தந்த நண்பன் மது அருந்துவதை பார்த்ததும் எரிச்சலாகி நண்பனை கண்டிக்கிறார். 

 

அடுத்தடுத்து உயரத்திற்கு செல்லும்போது தன்னைவிட பெரிய பலசாலிகளை பார்க்கிறார் தோனி. அப்படிப்பட்ட பலசாலிகளில் ஒருவர்தான்  யுவராஜ் சிங்.  யுவராஜ் சிங்’கம் தோனியும் சந்திக்கும் முதல் களத்திலேயே, யுவ்ராஜ் சிங் வீசிய முதல் பந்தை தோனி சிக்சருக்கு அடிக்கிறார். தோனியை வியந்து பார்க்கிறார் யுவராஜ் சிங். யுவராஜ் சிங்கின் பவுலிங்கை தோனியும் வியந்து பார்க்கிறார். 

அன்றைய இரவு பாஸ்கெட்பால் மைதானத்தில் தோனியும் யுவராஜ் சிங்கும் பார்த்தும் பார்க்காதது போல் செல்கிறார்கள். அந்த மேட்சில் குறைந்த ரன்னில் அவுட்டாகி வீட்டிற்கு வருகிறார்.  நண்பர்கள் தோனியின் வீட்டிற்கு தேடி வந்து என்ன நடந்தது என்று கேட்கிறார்கள். 

யுவராஜ் இடம் தோற்றுப் போனதை சொல்லிவிட்டு, அதில் இருந்து நான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறார். தோற்ற போதிலும் தோனிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை அவருடைய  நலம் விரும்பி ஒருவர் ஆசிரியரிடம் சொல்ல ஆசிரியர் மிகுந்த ஆர்வத்துடன் தோனியின் நண்பர்களைத் தேடி செல்கிறார். அந்தத் தகவலை பகிர்கிறார்.  தோனியின் நண்பர்கள் தங்களுக்கே இன்னொரு வாய்ப்பு கிடைத்து இருப்பது போல் வேக வேகமாக ஓடி வருகிறார்கள். 

 

தோனிக்கு கிடைக்கும் வாய்ப்பு தாமதமானால் நண்பர்களும் மனச்சோர்வு அடைகிறார்கள்.  நாளைக்கு மேட்ச் நடக்கிறது இன்றைக்கு எப்படி கொல்கத்தா போவீர்கள் என்று  அதிகாரி பயமுறுத்த கூட இருக்கும் நண்பர்கள்,  ரோடு வழியாக எப்படியாவது போயிடலாம் என்று தோனியை ஆறுதல் படுத்துகிறார்கள்.  கையில் காசில்லாத போதும் அங்கே இங்கே என்று அந்த நண்பர்கள் அலைந்து திரிந்து நேரங்காலம் பார்க்காமல் சொந்த சுகத்தை மறந்து பணத்தைப் புரட்டி தோனியை மேட்சுக்கு அழைத்துச் செல்ல படாதபாடு படுகிறார்கள். 

 

தோனி தூங்கினாலும் மற்ற நண்பர்கள் தூங்காமல்  விடிய விடிய கண்கள் விழித்து அசுர வேகத்தில் வாகனத்தை ஓட்டிச் செல்கிறார்கள். அப்படி நண்பர்கள் கஷ்டப்பட்டு அழைத்துச் சென்றபோதும் அந்த ஃபிளைட் அரை மணி நேரத்துக்கு முன்பாகவே சென்றுவிட்டது  என்றதும் தோனி மனம் கலங்குகிறார். 

 

தனியாகச் சென்று அழுது விட்டு பிறகு சில நிமிடங்களில் அழுகையை மறைத்து  புன்னகையுடன் நண்பர்களிடம் திரும்பி வருகிறார். தோனிக்கு ரயில்வேயில் வேலை கிடைத்ததும் அக்கம்பக்கத்தினர்  மகிழ்கிறார்கள், நண்பர்கள் மகிழ்கிறார்கள். ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்த நாட்களில் ஒரு ஒல்லிக்குச்சி அண்ணன் தோனிக்கு உறுதுணையாக இருக்கிறார்.  தோனியின் திறமையை தெரிந்த அந்த அண்ணன் தோனியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார். 

மூன்று மணி நேரம் எழுதவேண்டிய தேர்வை இரண்டரை மணி நேரத்தில் எப்படி எழுத முடியும், எழுதிவிட்டு எப்படி அங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன் போக முடியும் என்று அப்பா கேட்க அதற்கு சற்றும் தயக்கமில்லாமல் என்னால முடியும் என்கிறார் தோனி. 

 

தோனிக்கு அதிக மன உளைச்சல் அதிக மன அழுத்தம் கொடுக்கும் வகையில் அவருக்கு  டிக்கெட் கலெக்டர் வேலை கொடுத்து அவரை முடக்க பார்க்கிறார்கள்.  ஆனால் தோனி அத்தனை தடைகளில் இருந்தும் தன்னை மீட்டு வெளியே கொண்டு வந்து கொண்டே இருக்கிறார். 

ஒருநாள் இரவு ரயில்வே ஸ்டேஷனில் தனியாக அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார் தோனி.  அப்போது அவருக்கு பணிச்சுமை கொடுத்து  தொந்தரவு செய்யும் மேலதிகாரி தோனி அருகே வருகிறார். என்ன யோசிச்சிட்டு இருக்க ஏதா இருந்தாலும் மனசுவிட்டு பேசு என்கிறார். நான் இந்த வேலையை குறை சொல்றேனு நீங்க தப்பா நினைக்க வேண்டாம்.  ஆனால் இங்கிருந்து நான் எப்படி முன்னேறி போறதுன்னு தான் எனக்கு தெரியல சார் என்று தன்னுடைய நிலையை வெளிப்படையாக சொல்வார். 

 அவருடைய மேலதிகாரி ஆறுதல் சொல்லி, நீ எங்க வேணாலும் போய் விளையாடு,  எப்ப வேணாலும் வேலைக்கு வா அட்டனன்ஸ் பற்றி நான் பாத்துக்குறேன் என்று அவருடைய மேலதிகாரி உறுதுணையாக நிற்கிறார். தோனியும் இந்தியா முழுக்க போய் விளையாடிக் கொண்டே இருக்கிறார்.  அதனால் தோனி மீது புகார் எழுகிறது. அப்போது தோனி “சார் இங்க பவுன்சர்சுக்கு குறைவே இல்ல சார் மூணு வருஷமா குனிஞ்சு போய்க்கிட்டே தான் இருக்கேன் இதுக்கு மேல” என்கிறார். 

ஒரு கட்டத்தில் மேலதிகாரி சொல்லும் எந்த வார்த்தையும் தோனியின் காதில் விழவே இல்லை. தோனி வேலையை விட்டுவிட்டு வருகிறார். வேலை கிரிக்கெட் இரண்டிலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை என்று தன் அப்பாவிடம் சொல்ல அப்பா தோனியிடம் கோபித்துக் கொள்கிறார். வாய்ப்பு கிடைச்சா தான நிரூபிக்க முடியும்  என்று மனம் கலங்கிய தோனி அதன் பிறகு கிடைத்த வாய்ப்பு அத்தனையிலும் அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார். 

ஒரு கட்டத்தில் எல்லா அதிகாரிகளின் வாயிலிருந்தும் அவர்களை மீறி தோனி தோனி என்ற வார்த்தையே வெளிவர தோனிக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கிறது. இந்திய அணிக்கு முன்னேறிய போதும் தனக்கு ஹெலிகாப்டர் ஷாட் கற்றுத்தந்த நண்பன் சந்தோசை அவர் மறக்கவில்லை. அப்போதும் குடித்திருந்த தன்னுடைய நண்பனை கண்டிக்கிறார். அவர் சிக்சர் அடித்தால் அவருடைய நண்பர்கள்  குதூகலம் ஆகிறார்கள்.  அதிரடியாய் ஆடி பாதியில் அவுட்டானால் திட்டி தீர்க்கிறார்கள். தாங்களே சிக்ஸ் அடிப்பது போலவும் தாங்களே பெவிலியன் திரும்புவது போல உணர்கிறார்கள் தோனியின் நண்பர்களும் ஆசிரியர்களும். 

தனக்குத்தானே வாய்ப்பு கேட்பதைப் போல, தன்னைப்போல திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கேட்டு வாங்குகிறார்.  உலகக்கோப்பை போட்டிக்கு இன்னும் மூன்று வருடம் இருக்கும்போது எதுக்கு அவசரம் என்று அதிகாரிகள் சொல்ல இன்னும் மூன்று வருடங்கள் தான் இருக்கிறது என்கிறார் தோனி.  நம்ம நாட்டில் திறமையோடு இருக்கிற இளைஞர்கள் அதிகம் ஆனால் அவர்களை ஆதரிப்பவர்கள் தான் குறைவு என்கிறார் தோனி.  இன்னிக்கு இளைஞர்களை தட்டி கொடுத்து பாருங்க நாளைக்கு இந்தியாவுக்கே கைதட்டல் வாங்கி தருவாங்க என்கிறார். தோனிக்கு அந்த மாதிரி நண்பர்கள் கிடைக்க முக்கிய காரணம்?  தோனியிடம் சிறுவயது முதலே பொறாமையும், புறணி பேசும் தன்மையும், அடுத்தவரை வீழ்த்தும் தன்மையும், செய்த உதவியை சொல்லிக் காட்டும் தன்மையும் இல்லாததால்… தன்னைவிட வயதில் சிறியவராக இருந்தாலும் அல்லது தன்னுடைய சக வயது நண்பனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை ஈகோ பார்க்காமல் கற்றுக்கொள்ளும் தன்மையும், அவர்களின் வெற்றியை தனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக வைத்துக் கொள்ளும் தன்மையும், தான் எவ்வளவு பெரிய இடத்துக்கு போனாலும் தான் கஷ்டப்பட்ட காலத்தில் தனக்கு உதவியாக இருந்த மனிதர்களை என்றைக்கும் மறக்காத தன்மையும் இருப்பதால்…

அவரை எல்லோருக்கும் பிடித்திருந்தது. குறிப்பாக அவருடைய வயதை ஒத்த நண்பர்களுக்கு தோனியை ரொம்ப பிடித்தது. அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்ததால் தான், அவரால் பல இக்கட்டான சூழ்நிலையை சமாளித்து வெற்றியாளராக மாறி பல உள்ளங்களை கொள்ளை கொள்ள முடிந்தது. 

Related Articles

நீட் தேர்வில் நல்ல சதவீதம் பெற்ற உத்திரப... இந்த ஆண்டு நீட் தேர்வில் நல்ல சதவீதம் பெற்ற மாநிலமான உத்திரபிரதேசத்தைக் கண்டு வியக்காத ஆட்கள் இல்லை. " போயும் போயும் இந்த மாநிலம் எப்படிடா நீட் தேர்வு...
“சில்லுக்கருப்பட்டி” படம் தம... நடிகர் சூர்யா தரப்பில் ஹலீதா சமீம் இயக்கி இருக்கும் படம் சில்லுக்கருப்பட்டி. இந்தப் படம் எப்படி இருக்கு என்பதை பார்ப்போம். மொத்தம் நான்கு கதைகள் என்பத...
பில்லா2 இயக்குனரின் அடுத்த படம் எப்படி இ... கமலின் உன்னைப் போல் ஒருவன், அஜீத்தின் பில்லா 2 படங்களை இயக்கிய இயக்குனரின் மூன்றாவது படம். இவருடைய முந்தைய இரண்டு தமிழ் படங்களும் ஆங்கில படங்களுக்கான ...
போக்குவரத்து நெரிசலால் ஆட்டோவிலேயே குழந்... போக்குவரத்து நெரிசல், பயணம் செய்பவர்கள் எவரும் விரும்பாதா ஒன்று. போக்குவரத்து நெரிசலில் சிக்குவது என்பது அன்றைய ஒட்டுமொத்த நாளையே பதற்றம் நிறைந்த ஒன்...

Be the first to comment on "தோனிக்கு கிடைத்த மாதிரி நண்பர்கள் நமக்கும் கிடைத்தால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்?"

Leave a comment

Your email address will not be published.


*