பெண்களுக்கு ஸ்கூட்டி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? – பெண்களுக்கு பைக் ஓட்ட கற்றுத்தர வேண்டிய கடமை யாருடையது?

 

அந்த காலகட்டங்களில் சைக்கிள் வைத்திருப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.  அப்படி பட்ட காலத்தில் ஆண்கள் தான் பெரும்பாலும் சைக்கிளை ஓட்டிக் கொண்டே இருப்பார்கள். எப்போதாவது ஒரு பாவாடை தாவணி அணிந்த பெண் அல்லது சேலை கட்டிய ஒரு பெண் சைக்கிளில் ஏறி மிதித்தால் ஊரே ஆச்சரியமாக பார்க்கும். பொம்பள பிள்ளைக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம் என்றும் கூட சிலர் விமர்சிப்பார்கள். ஆனால் ஒரு சில பெண்கள் அவற்றையெல்லாம் மீறி தங்களுடைய ஆசைக்காக சைக்கிள்களில் ஏறி மிதித்து கீழே விழுந்து காயம்பட்டு சைக்கிளை கற்றுக் கொண்டனர். அப்படி மெல்ல மெல்ல பரவி வளரும் தலைமுறை பெண்கள் எல்லாரும் “சைக்கிள் கற்றுக் கொள்வது ஒரு அடிப்படையான தற்காப்பு விஷயம்” என்று புரிந்துகொண்டு சைக்கிளை கற்றுக் கொண்டனர். அதன் தொடர்ச்சியாக அப்பா தன் மகளுக்கு சொந்தப் பணம் போட்டு சைக்கிள் வாங்கித் தருவது,  அல்லது மகள்களே தங்களுடைய பாக்கெட் மணியில் சில்லறைகளை சேகரித்து வைத்து அதன் மூலம் சைக்கிள் வாங்குவது என்று சைக்கிளை எப்படியாவது தங்களுக்கான  வாகனமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பெண்கள் ஆவலாக இருந்தனர். இப்படியே நாட்கள் செல்ல செல்ல  பெண்களுக்கு கண்டிப்பாக குறைந்தபட்சம் சைக்கிள் என்கிற இரு சக்கர வாகனமாவது வேண்டும் என்று அரசாங்கமே புரிந்துகொண்டு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் தந்தது. 

இப்படி பெண்கள் சைக்கிளில் பயணிக்க தொடங்கியதால் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பது, சில வக்கிர புத்தி காரர்களின் காம இச்சைகளுக்கு ஆளாவது  போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு சுதந்திரப் பறவையாக சைக்கிள்களை ஓட்டி மகிழ்ந்தனர். ஆனால் காலம் மாறிக் கொண்டு செல்ல செல்ல சைக்கிளின் பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டது. அதனால் நிறைய பெண்கள் டிவிஎஸ் மற்றும் எக்ஸெல் போன்ற வாகனங்களை ஓட்டி பழகிக் கொண்டனர். ஆனால் எல்லா பெண்களுக்கும் இந்த மாதிரி டூவீலர்களை ஒட்டி பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம் அவர்களுடைய வீட்டில் சொந்தமாக ஒரு டூவீலர் இருக்காது அல்லது சொந்த பந்தங்களில்  டூ வீலர் வைத்திருப்பவர்களில் பெண்களுக்கு கற்றுத்தர முன்வராமல் இருப்பது. எப்படியோ டூவீலர் கற்றுக் கொண்ட பெண்கள் யாரையும் எதிர்பார்க்காமல் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் பயணித்து வந்தனர்.  ஆனால் அந்த மாதிரி வாய்ப்பு கிடைக்காத பெண்கள் டூவீலர்களில் சந்தோசமாக பயணிக்கும் பெண்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். 

 அப்படிப்பட்ட பெண்கள்  எங்காவது தூராமான இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அல்லது தன்னுடைய தனிப்பட்ட தேவைக்காக டூவீலரில் பயணிக்க வேண்டும் என்றால் அப்போது அந்த பெண்கள் எல்லாம் ஏதோ ஒரு ஆண்களைத்தான் சார்ந்திருந்தனர். ஆண்களோ அந்த பெண்களின் தேவைக்கு தகுந்த மாதிரி உடனடியாக வந்து வண்டியை எடுக்க மாட்டார்கள் ரொம்ப நேரம் கெஞ்ச விடுவார்கள்.  எனக்கு வேலை இருக்கு என்னால இப்போதைக்கு வரமுடியாது நீ வேற ஆள பாரு இல்லன்னா பஸ்ல போ என்று சொல்வார்கள்.  அதே சமயம் தன் வீட்டில் இருக்கும் அண்ணன் அல்லது தம்பிகளின் பைக்குகளை  அந்தப் பெண்கள் எளிதில் கற்றுக் கொள்ள முற்படும் போது இதெல்லாம் எதுக்கு உனக்குல்லாம்… இந்த வண்டியை தாங்கி கூட பிடிக்க முடியாது என்று அதட்டி அவர்களை கற்றுக் கொள்ளாமல் செய்து விடுகின்றனர். இப்படி தொடர்ந்து பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் கொடுக்கப்படாமல் பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்டு கொண்டே வந்ததால் பல பெண்கள் இக்கட்டான சூழல்களில் பேருந்து ஆட்டோ என்று  கூட்டத்திற்குள் சிக்கி நசுங்கி வியர்த்துப் போய் வெளியே வருவார்கள். டிவிஎஸ் மற்றும் எக்ஸெல் போன்ற இரு சக்கர வாகனங்களை ஸ்டார்ட் செய்வதற்கு ஒரு சில சமயங்களில் படாதபாடு பட வேண்டும்.   அவ்வளவு சீக்கிரம் இந்த வாகனங்கள் ஸ்டார்ட் ஆகாது கால்கள் வலிக்க வலிக்க மிதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.  உடல் வலுவில்லாத பெண்கள் அந்த வண்டியை ஸ்டார்ட் பண்ணுவதற்கு கூட யாராவது ஆண்களின் உதவியை தான் பெற வேண்டி இருந்தது. அதுபோல சில பெண்களால் சாலை திருப்பங்களில் சரியாக வண்டியை ஓட்ட முடியாது. திடீரென்று வண்டி முன் ஏதாவது வந்துவிட்டால் சட்டென பிரேக் பிடிக்கத் தெரியாமல் கால்களை தேய்த்துகொண்டே செல்வது, வண்டிகள் அதிகம் வரும் சாலைகளில் பயத்தில் ஒலட்டியபடியே வண்டிகளை ஓட்டிச் செல்வது, மேட்டிலிருந்து பள்ளத்தில் வண்டியை ஓட்டிச் செல்லும் போது கடவுளை வேண்டிக் கொண்டே பிரேக்கை விட்டுவிட்டு பள்ளத்தில் ஸ்கூட்டியை ஓட்டுவது  போன்ற பிரச்சினைகள் எல்லாம் பெண்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டி பழகும்போது தொடக்க நிலை பிரச்சினைகளாக இருக்கின்றன. 

பெண்களுக்கு தகுந்த படி செல்ஃப் ஸ்டார்ட் வசதியுடன்  ஸ்கூட்டிகள் வரத் தொடங்கிய பிறகுதான் இருசக்கர வாகனங்கள் மீது பெண்களுக்கு இன்னும் அதிக ஆர்வம் வந்தது. வேலைக்குப் போகும் பெண்கள் தங்களுடைய சொந்த வருமானத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக ஸ்கூட்டி வாங்கி தங்களுடைய சுதந்தரத்தை அனுபவித்தனர். அதேசமயம் வேலைக்கு போகும் எல்லா பெண்களாலும் ஸ்கூட்டியை வாங்க முடியாது.  அவர்கள் சம்பாதிக்க தொடங்கிய பிறகும் பயணத்திற்கு ஏதோ ஒரு ஆணை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் ஸ்கூட்டி ஓட்டி பார்க்க வேண்டும் என்ற ஆசை கொண்ட பெண்கள் தங்களுடைய தோழிகளிடம் ஸ்கூட்டியை கடன் வாங்கி ஓட்டி மகிழ்ந்தனர். இருந்தாலும் அவர்களுக்கு சொந்தமாக ஒரு ஸ்கூட்டி வாங்க முடியவில்லையே என்ற ஏக்கங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் பட்டம் படித்து வேலைக்கு போய்க் கொண்டு இருக்கும் பெண்களுக்கு ஸ்கூட்டி வாங்க அரசு குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்குகிறது என்று ஒரு அறிவிப்பு வந்ததும் கிட்டத்தட்ட எல்லோருடைய பெண்களின் மனதில் உள்ளேயும் பூக்கள் பூத்து குலுங்கின. ஆனால் அரசு அதற்கு சில விதி முறைகளை விதிக்க  உற்சாகத்தில் இருந்த பல பெண்கள் அப்படியே வாடி போயினர். அதற்கு காரணம் அவர்களுக்கு நிலையான வேலை இல்லாமல் இருப்பது அல்லது டூவீலர் சுத்தமாக ஓட்டத் தெரியாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் காரணமாக இருந்தன.  பட்டம் படித்து வேலைக்குப் போய்க் கொண்டு லைசென்ஸ் வைத்திருக்கும் பெண்களுக்குத்தான் ஸ்கூட்டி கிடைக்கும் என்று சொல்லிவிட,  நிறைய பெண்கள் லைசென்ஸ் இல்லாத காரணத்தினால் அந்த அறிவிப்பு வந்த காலங்களில் அங்கே இங்கே என்று அலைந்து திரிந்தனர்.  எப்படியாவது சீக்கிரம் லைசென்ஸ் வாங்கி சீக்கிரம் ஸ்கூட்டி வாங்கிவிட வேண்டுமென்று முனைந்தனர். அப்போது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம் என்ற விஷயம் கேளிக்கை உள்ளானது. அதுமட்டுமில்லாமல் அந்த சமயத்தில் பேருந்து கட்டணம் இரண்டு மடங்கு உயர்ந்ததால் பெண்கள் இந்த அரசு கொடுக்கும் ஸ்கூட்டியை புறக்கணித்துவிட்டு பேருந்து கட்டண உயர்வுக்காக எதிர்த்துப் போராட வேண்டும் என்று சிலர் குரல் கொடுத்தனர். ஆனால் பெண்கள் ஸ்கூட்டி என்கிற விஷயத்தில் இருந்து தவறவில்லை. காரணம் அது பெண்களுக்கு மிக முக்கியமான தேவையாக இருந்தது. ஆண்கள் அப்படிப்பட்ட பெண்களை குந்தானிங்களுக்கு எதற்கு ஸ்கூட்டி? அவளுங்க கொண்டு போயி ஏதாவது குட்டைலையும் குளத்துக்குள்ளயும் உற்றுவாளுங்க, பாருங்கள்… ஒழுங்கா பிரேக் பிடிச்சு வண்டிய நிறுத்த தெரியாது, மத்தவங்க சப்போர்ட்டு இல்லாம சென்டர் ஸ்டேண்ட் போட முடியாது, உங்களுக்கு எதுக்கு ஸ்கூட்டி என்று பலரும் கலாய்த்து தள்ளினர். இப்படி பல ஆண்கள் கலாய்ப்பார்கள் என்பதற்காகவே இன்னும் சில பெண்கள் தயங்கிக்கொண்டே டூவீலர் ஓட்டிக் கற்றுக் கொள்ளாமல் இருக்கின்றனர்.  அவர்களுக்குள் எப்படியாவது ஒரு ஸ்கூட்டியை சொந்தமாக வாங்கி விட வேண்டும் என்கிற ஒரு ஏக்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

காதல் கண் கட்டுதே, உறியடி2 போன்ற படங்களில் பெண்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டி பழகுவது போன்ற காட்சிகள் இருக்கும். பெண்கள் ஏன் இருசக்கர வாகனங்களை ஓட்டி பழக வேண்டும் என்பதையும் அந்த படங்களில் அழுத்தமாக சொல்லி இருப்பார்கள்.  இந்த படங்களுக்கு எல்லாம் முன்னோடியாக, அன்பே சிவம் படத்தில் உமா ரியாஸ் கான் டூவீலர் ஓட்டுவார். அப்போது கமலஹாசனை பின்னாடி உட்கார சொல்லிவிட்டு நான் வண்டி ஓட்டுகிறேன் என்று சொல்ல அதற்கு கமலஹாசன் தயங்குவார். அப்படிப்பட்ட செயல்கள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்கள் வண்டி ஓட்டும் போது ஆண்கள் பின்னாடி உட்கார்ந்து இருந்தால் அது ஆண்களுக்கு அவமானம் என்கிற ஒரு பார்வை இன்றும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மகளிர் மட்டும் படத்தில் இடம்பெற்றிருக்கும் அடி வாடி திமிரா பாடலில் ஜோதிகா நகர வீதிகளில் எந்த பயமும் இல்லாமல் புல்லட்டை ஓட்டிக் கொண்டு வருவார். ஆடை படத்தில் இளைஞர்கள் விரும்பும் டுக்காட்டி என்கிற ரேஸ் பைக்கை நகர வீதிகளில் எந்த பயமும் இல்லாமல் மின்னல் வேகத்தில் அமலா பால் ஓட்டுவது போல் காட்சிகள் இருக்கும். 

இதுபோல பல இளம் பெண்கள் தங்களுடைய ஸ்கூட்டி களை தங்களின் காதலன் போல நினைத்துக் கொண்டு அவர்களை கண்ணும் கருத்துமாக  கவனிக்கிறார்கள். இன்னும் சில பெண்கள் ஸ்கூட்டியை புருஷன் என்று கூட அழைக்கிறார்கள்.  இயக்குனர் ராமின் தரமணி படத்தின் தொடக்க காட்சிகளில் ஆண்ட்ரியா தன்னுடைய  செல்லமாக வைத்திருக்கும்  ஸ்கூட்டி தன் வாழ்விற்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது என்பதை விவரிப்பார்.  இன்னும் சில பெண்கள் தங்களுடைய ஸ்கூட்டிகளுக்கு செல்லப்பெயர் மொதக்கொண்டு வைத்திருக்கிறார்கள். பிளாக் ஷீப் என்கிற யூடியூப் சேனலில் ஒரு வீடியோவில் ஒரு பெண் தன் ஸ்கூட்டிக்கு வெள்ளைச்சாமி என்று பெயர் வைத்து மனிதனை பராமரிப்பது போல் பராமரிப்பார். 

 இன்றைய தலைமுறையில் உள்ள பெண்களில் பலர் சிறுவயதிலேயே தங்களுடைய அப்பாவிடம் அடம்பிடித்து கற்றுத் தரச்சொல்லி எடுத்ததும்  எக்ஸெல் ஸ்கூட்டி போன்ற வாகனங்களை ஓட்டி பழகாமல் நேரடியாகவே பைக்கை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றனர். இது நம் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றம். அப்படி இளம்வயதிலேயே கியர் வண்டிகளை ஓட்டி பழகி கொள்ளும் பெண்கள் அதற்குப் பிறகு எவ்வளவு வாகனங்கள் ஓடக்கூடிய நகர விதியாக இருந்தாலும் அங்கு எந்த பயமும் இல்லாமல் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். அப்படி கியர் பைக், ரேஸ் பைக்கை ஓட்டிச் செல்லும் பெண்களை ஏதோ அதிசய விலங்கை பார்ப்பது போல் பார்க்காமல் இயல்பாக பாருங்கள். உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் முடிந்தவரை கியர் வண்டியை கற்றுக்கொடுங்கள், அதற்குப் பிறகு ஸ்கூட்டியை அவர்களே கற்றுக் கொள்வார்கள். 

Related Articles

கடைசி தேர்வு முடிந்ததும் பாட புத்தகங்களை... கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட பண்ணிரண்டாம் வகுப்பு தேர்வுகளும், பத்தாம் வகுப்பு தேர்வுகளும் கேள்வித்தாள்கள் கடினமாக இருந்தது என்ற குறைகளுடன...
“நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிடு ச... இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட படம் சிவாஜி. அதில் அனைத்தையும் ரஜினி இழந்த பிறகு நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி என்...
புழுதி படிந்துக் கிடைக்கும் பேன்சி ஸ்டோர... மௌனம் பேசியதே படம் பார்த்திருக்கிறீர்களா? அந்த படத்தில் தன் மனதுக்குப் பிடித்தமானவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் காதலை தெரிவிக்கும் அட்டைகள் போன்ற க்ரீட்...
புதிதாக வாட்சப் குரூப் தொடங்க வேண்டுமென்... வாட்சப் போன்ற சமூக வலை தளங்கள் மூலமாக தொடர்ந்து குற்றங்கள் நடந்து வருகின்றனர். குறிப்பாக பல ஊர்களில் பொய்யாக பரப்பப்பட்ட வாட்சப் வதந்திகளால் பலருடைய உ...

Be the first to comment on "பெண்களுக்கு ஸ்கூட்டி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? – பெண்களுக்கு பைக் ஓட்ட கற்றுத்தர வேண்டிய கடமை யாருடையது?"

Leave a comment

Your email address will not be published.


*