பார்ட் டைம் வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் மாணவர்களை ஊக்கப் படுத்திய சினிமாக்கள்! – அந்த மாணவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

Movies that encourage students to study while working part time!

அம்மா கணக்கு படத்தில் புட்டி கண்ணாடி போட்டுக் கொண்டு ஒரு மாணவன் இருப்பான். அந்த மாணவனை நியாபகம் இருக்கிறதா? அந்த மாணவனை பற்றி பார்ப்போம்.  ஆசிரியர் போர்டு அருகே சென்றதும் நோட்டை விரித்து வைத்துக் கொண்டு குறிப்பு எடுப்பதற்காக ஆவலாக அமர்ந்திருப்பான் அந்த மாணவன். அவனை பார்த்து கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் மாணவ மாணவிகள், “அங்க பாரேன்  சரியான கால்குலேட்டர்,  ஃபுல் சார்ஜ் ஓட உக்காந்துட்டு இருக்கான் பாரேன்…”  என்று கேலி பேசி கிண்டலடிப்பார்கள்.  படத்தின் ஆரம்ப காட்சிகளில் அந்த மாணவன் மட்டும் முதல் பெஞ்சில் தனியாக அமர்ந்திருப்பான். அவன் அருகே யாரும் அமர விரும்பாமல் இருப்பார்கள். 

அமலாபால் மாணவி உடை அணிந்து கொண்டு தன் மகளுடைய வகுப்பறைக்கு செல்வார்.  அப்போது அவர் மாணவர்களுக்கு மத்தியில் நடுவில்  அமர அவர்கள், தள்ளி உட்காருங்க எங்களுக்கெல்லாம் மறைக்குது என்பார்கள். அப்போது அவர் அந்த முதல் பெஞ்ச் மாணவனிடம் செல்வான், அவன் எந்த தயக்கமும் இல்லாமல் தள்ளி உட்கார்ந்து அவருக்கு இடம் கொடுப்பான். அமலாபாலுக்கு புரியாத கணக்கை அவன் எளிமையாக புரிய வைப்பான். இருவரும் நண்பர்களாகி விடுவார்கள்.  அப்போது ஒருநாள் அமலாபால் அந்த மாணவனிடம் நீ ஏன் சாப்பாடு எடுத்துக்கொண்டு வர மாட்டிங்குற என்று கேட்பார்.  அதற்கு அந்த மாணவன் வீட்ல சாப்பாடு செய்ய யாரும் இல்லை என்பான். அதற்கு அடுத்த நாள் அந்த மாணவனுக்கு அமலாபால் சாப்பாடு சேர்த்து எடுத்து வருவார். அதற்கு அந்த மாணவன் என்னை பார்த்தா பாவமா இருக்கா என்பான். அந்த சாப்பாட்டை சும்மா சாப்பிட மாட்டேன் இந்த சாப்பாட்டுக்கு சமமா உங்களுக்கு நான் கணக்கு சொல்லி தரேன் என்பான். 

பட இடைவெளிக்குப் பிறகு அமலாபாலின் மகளும் முதல் பெஞ்சில் வந்து அமர விரும்புவாள். பிறகு அந்த மகள் முதலில் யாரைப் பார்த்து கேலி பேசி சிரித்தாலோ அந்த முதல் பெஞ்ச் மாணவன் புட்டிக்கண்ணாடி வகிடு எடுத்த தலை “அன்பு” அருகில் வந்து அமர்ந்து கொள்கிறாள். அவனும் எந்த ஈகோவும் இல்லாமல் அவளை தன் அருகில் அமர வைத்துக் கொள்கிறான். 

இப்போது அம்மா மகள் இருவருக்குமே எளிமையாக புரியும்படி வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன சம்பவங்களை உதாரணங்கள் ஆக்கி கணிதத்தை அருமையாக புரிய வைக்கிறான் அன்பு. இப்போது அம்மாவுக்கும் மகளுக்கும் கணித பாடம் சொல்லிக் கொடுத்த  அன்பு ஆரம்ப கட்டத்தில் தன்னை கேலி பேசி சிரித்த கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கும் சொல்லித் தர ஆரம்பிக்கிறான். 

உனக்குள்ள நிறைய கேள்விகள் இருக்கு…  ஆனா அதுல ஒரு கேள்விக்கு கூட நீ பதில் கண்டுபிடிக்க முயற்சி பண்ணவே இல்ல…  நான் சொன்னது ஞாபகம் இருக்கா…  எப்பவுமே ஒரு கேள்விக்கான பதில் அந்த கேள்விக்கு உள்ளயே தான் இருக்கும்… என்று சொல்லிவிட்டு தான் பார்ட் டைமாக வேலை பார்க்கும் மெக்கானிக் கம்பெனிக்கு வரச் செல்கிறான்.  படிப்புக்காக ஒவ்வொருவரும் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை அவளுக்கு புரிய வைக்கிறான். தானே உழைத்துச் சம்பாதித்து தானே படித்து மற்றவர்களின் வாழ்க்கையையும் மாற்றுகிறான் இந்த “அன்பு”. 

அதே படத்தில் அமலாபால் ஒரு ஐஏஎஸ் ஆபிசரை அவர் வீட்டில் போய் சந்திப்பார்.  அந்த ஐஏஎஸ் ஆபிஸர் யு பி எஸ் சி எக்ஸாம் பற்றி விளக்கம் கொடுப்பார். கோச்சிங் சென்டர் பற்றி தெரிவிப்பார்.  நீங்க கோச்சிங் சென்டர் போய் தான் படிச்சீங்களா என்று அமலாபால் கேட்க இல்லை என் கிட்ட அந்த அளவுக்கு பணம் இல்லை வசதி இல்லை அதனால் நான் ஒரு வருடம் வீட்டிலேயே உட்கார்ந்து எங்கேயும் போகாமல் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தினேன் என்பார். அப்படி கஷ்டப்பட்டு வந்த ஒருத்தருக்கு தான் இன்னொருவரின் கஷ்டம் புரிகிறது. இவரும் இன்னொரு அன்பு தான். 

ஒழுக்கமாக இருக்க முயற்சி செய்யும் நான் பட விஜய் ஆண்டனி,  சலீம் ஆக வாழ்ந்து வருகிறார்.  அப்பா அம்மா ஆதரவின்றி வாழும் சலீம் படித்துக்கொண்டே பார்ட் டைம் ஜாப்க்கு ஒரு பீஷா ஷாப்பில் வேலை செய்கிறார். பீட்சா ஷாப்பில் வேலை செய்யும் தன் மாணவனை பார்த்த ஆசிரியர் சலீமை பாராட்டி தன்னுடைய ஆராய்ச்சியில் வந்து பார்ட் டைம்க்கு பணியாற்றுமாறு கேட்கிறார். 

இதே அமலாபால் நடித்த ஆடை என்கிற படத்தின் நங்கேலி என்கிற கிராமத்துப் பெண் நகரத்திற்கு வந்து ஸ்விக்கியில் பார்ட் டைம் வேலை செய்துகொண்டே  யுபிஎஸ்சி தேர்விற்கு படிப்பார் என்பது  குறிப்பிடத்தக்க ஒன்று. இதேபோல காதல் கொண்டேன் படத்தில்  தனுஷ் பார்ட் டைம் வேலை பார்த்துக்கொண்டே படிக்கும் மாணவனாக இருப்பார்.  சிறுவயதிலேயே அப்பா அம்மாவை இழந்து விட்டதால்   பள்ளிக் காலத்திலேயே வேலை பார்த்துக்கொண்டே படிக்கும் மாணவனாக இருக்கிறார்.  கல்லூரிக்கு வந்த பிறகும் பார்ட் டைமுக்கு வேலைக்கு போகும் அவருடைய குணம் மாறவில்லை.  இரவு முழுக்க வேலை செய்துவிட்டு பகலில் அசதியில் கல்லூரியில் வந்து தூங்கிக் கொண்டிருப்பார்.  அது தெரியாமல்  வகுப்பு ஆசிரியர் அவரை கண்டபடி திட்டி அவர் முகத்தில் விட்டெறிந்து இதுங்கெல்லாம் எதுக்கு காலேஜுக்கு வருது என்று  கத்துவார்.  ஆனால் தனுஷோ அப்போது தான் தூங்கி எழுந்திருந்தாலும் சலவாயைத் துடைத்துக் கொண்டு  போர்டுக்கு சென்று அந்த கணக்கை விறுவிறு என எழுதி தீர்ப்பார். வறுமையில் வாடினாலும் அவர் கல்வி நிலையில் பின் தங்கவில்லை. 

விக்ரமாதித்யா என்று ஒரு மலையாள படம். இந்தப் படத்தில் நிவின்பாலி,  துல்கர் சல்மான் நமிதா போன்றோர் நடித்திருப்பார்கள்.  துல்கர் சல்மானின் அம்மா போலீஸ் கான்ஸ்டபிள்.  அப்பா ஒரு திருடன்.  அப்பா காணாமல் போய்விடுகிறாரா அல்லது இறந்து விடுகிறாரா என்பது தெரியவில்லை. அம்மா போலீசாக இருந்தாலும் அப்பா திருடன் என்பதால் அவனைத் திருடன் மகன் திருடன் மகன் என்றே அக்கம்பக்கத்தினர் சொல்கின்றனர். இதற்காகவே எப்படியாவது போலீசாக வேண்டும் என்று நினைப்பார் துல்கர் சல்மான்.  ஆனால் அவரைச் சுற்றியிருக்கும் காவல்துறை  அதிகாரிகள் அவரை போலீசாக விடவே மாட்டார்கள். அவருக்கு காவல்துறை தேர்வுக் குழுவில் இருந்து கடிதம் வந்துவிடும்.  ஆனால் நீ போலீஸ் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்டால்  சுற்றியிருக்கும் அதிகாரிகள் உனக்கு தொடர்ந்து மன உளைச்சல் தந்து கொண்டே இருப்பார்கள் என்று அவருடைய தாயாரே அந்த கடிதத்தை மறைத்துவிடுவார்.  இதனால் மனமுடைந்து போன துல்கர் சல்மான் எல்லோரையும் வெறுத்து விட்டு  யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறுகிறார். 

வேகமாகப் போய்க் கொண்டிருக்கும் ரயிலின் படிக்கட்டுகளில் நின்று இந்த உலகத்தை வெறுமையுடன் பார்ப்பார். இனி எதற்கு வாழனும் இனிமேல் இந்த வாழ்க்கை வேண்டாம் என்று படிக்கட்டிலிருந்து குதிக்கலாம் என்று போக  அதை எதர்ச்சியாக பார்க்கும் நிவின்பாலி அவரை அழைத்துக் கொண்டு சென்று தன் அருகே அமர வைப்பார்.  இருவரும் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இருவரும் இறங்குகிறார்கள். பிறகு   இருவரும் பிரிய வேண்டிய நேரத்தில்,  நிவின் பாலி தன்னுடைய நம்பரை கொடுத்து எதுவாக இருந்தாலும் என்னை அழையுங்கள் என்கிறார்.  ஆனால் துல்கர் சல்மானோ வெறுப்புடன் அந்த காகிதத்தை தூக்கி எறிகிறார். அதை கவனிக்கும் நிவின்பாலி  அவரருகே ஓடிச்சென்று அவரை தன்னுடன் வருமாறு அழைக்கிறார்.  இருவரும் ஒன்றாக சேர்ந்து பயணித்து ஒரே அறையில் தங்குகிறார்கள்.  அப்போது தான் தெரிகிறது நிவின் பாலி யுபிஎஸ்சி எக்ஸாம்க்கு படித்துக் கொண்டு இருப்பவர் என்று.  நிவின்பாலி கோச்சிங் சென்டர் போக துல்கர் சல்மான் தினமும் வேலைக்குச் செல்வார். 

நிவின் பாலி தான் வகுப்பறையில் எடுத்துவரும் நோட்ஸ்களை  வேலை செய்யும் இடங்களில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கிறார் துல்கர். நம்பிக்கையே இல்லாமல் துல்கர் சல்மான் தேர்வு எழுதுகிறார். ரிசல்ட் வருகிறது. நிவின்பாலி தன்னுடைய லேப்டாப்பில் செக் பண்ணுகிறார். நிவின் பாலியின் பெயர் அந்த லிஸ்டில் இருக்கிறது.  துல்கர் உடனே மகிழ்ச்சியாக எழுந்து செல்கிறார். ஆனால் நிவின் பாலி விடவில்லை. அந்தப் பட்டியலில் துல்கருடைய பெயரும் இருக்கிறது. துல்கர் வியந்து பார்க்கிறார்.  தன்னை போலீஸ் ஆக்க விடாமல் செய்த அவர்கள் முன் ஐபிஎஸ் ஆபீஸராக சென்று நிற்கிறார் துல்கர். 

பிளாக் ஷீப் யூடியூப் சேனல் இன் நான் கோமாளி வித் நிஷாந்த் என்ற நிகழ்ச்சியில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவன் படும் சிரமங்களை ரத்தினச் சுருக்கமாக சொல்லி இருப்பார்கள். கிரிக்கெட் உலகில் சாதிக்கத் துடிக்கும் ஜீவா பட விஷ்ணு விஷால்  கூட அப்பாவை சிரமப் படுத்தக் கூடாது அவரிடம் இருந்து காசு வாங்க கூடாது என்று  ஹோட்டலில் எச்சில் தட்டுகள் எடுக்கும் வேலையை பார்க்க செய்து வருவார் ஜீவா. இப்படி சினிமாக்களில் காட்டப்பட்டது போல் பார்ட் டைம் வேலை பார்த்துக்கொண்டே படிக்கும் இளைஞர்கள் நிஜத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை நாம் அன்றாடம் கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறோம். பேக்கரிகளில், மெடிக்கல் ஷாப்களில், பேன்சி ஸ்டோர்களில், மெக்கானிக் கடைகளில், ஹோட்டல்களில், காபி ஷாப்களில் போன்ற நிறைய இடங்களில் நிறைய மாணவர்கள் படித்துக் கொண்டே பார்ட் டைம் வேலை செய்து வருகிறார்கள். 

இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இங்கு சொல்ல வருவது, அந்த மாதிரி படிக்கும் மாணவர்கள் பார்ட் டைம் வேலையாக நீங்கள் பயணிக்கும் பேக்கரிகளில், ஹோட்டல்களில்,  காபி ஷாப் களில் வேலை செய்பவராக இருந்தால் நீங்கள் அவர்களிடம்  அன்பாக பேசவில்லை என்றாலும் பரவாயில்லை, முகத்தை கடுகடுவென்று காட்டாதீர்கள். படிக்கும் மாணவர் என்று தெரிந்து விட்டால் அவர்களுடைய படிப்பை பற்றி விசாரித்துவிட்டு அதைவிட வேறு ஏதாவது இடத்தில் நல்ல வேலை கிடைக்கும் என்றால் அந்த வேலையை தயவு செய்து அந்த மாணவனுக்கு பரிந்துரை செய்யுங்கள்.  அதேபோல பார்ட் டைம் வேலை பார்த்துக் கொண்டே படிக்கலாம் என்று நினைக்கும் மாணவர்களுக்கு வேலை கொடுக்கும் முதலாளிகளே நீங்கள் தயவு செய்து அவர்களுக்கு சம்பளத்தை சரியான நேரத்தில் கடன் வாங்கியாவது கொடுத்துவிடுங்கள். சம்பள விஷயத்தில் உங்களுடைய ஈகோவை எதற்காகவும் அவர்களிடம் காட்டி விடாதீர்கள், ஏனென்றால் இந்திய தேசத்தில் உள்ள பல மாணவர்களுக்கு இந்த மாதிரி பார்ட் டைம் வேலை பார்த்துக்கொண்டே படிக்கும் மாணவர்கள் தான் உண்மையான இன்ஸ்பிரேஷன்கள்.

Related Articles

சினிமாவில் உதவி இயக்குனர் ஆவது எப்படி? &... சினிமாவைப் பற்றி கொஞ்சம்... இது ஒரு இலக்கணம் இல்லாத தொழில். காரணம் ஒரு படத்தை இப்படித் தான் எடுக்க வேண்டும் என்று யாராலும் கற்றுத்தர முடியாது. இது ஒர...
பெங்களூரு விமான நிலைய பேருந்துகளில் இனி ... பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் (BMTC) சார்பில் பல்வேறு வழித்தடங்களில் விமான நிலையத்திற்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது பயணிகளின் எண்ணிக...
வேலையில்லா பட்டதாரி மகன்களின் அம்மாக்களி... வேலையில்லா பட்டதாரிகளின் அம்மாக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று தமிழ் சினிமா காட்டியதை பார்ப்போம்.  வேலையில்லா பட்டதாரி என்ற வார்த்தையை கேட்டால...
“உணவின் வரலாறு” புத்தக விமர்... குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்து பிறகு பாதியில் நிறுத்தப்பட்டு இப்போது முழு புத்தகமாக வடிவம் கொண்டிருக்கும் புத்தகம்தான் "உணவின் வரலாறு".ம...

Be the first to comment on "பார்ட் டைம் வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் மாணவர்களை ஊக்கப் படுத்திய சினிமாக்கள்! – அந்த மாணவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?"

Leave a comment

Your email address will not be published.


*