” இவர் தான் உன் அப்பாவா… “
” ஆமா சார்… “
“இப்படியொரு அப்பாவியான அப்பாவ வச்சிக்கிட்டு ஆள மாத்தி கூட்டி வந்துருக்கியேடா… “
” உனக்கொரு விஷியம் தெரியுமா… எங்கப்பா ரோட்ல செருப்பு தைக்கறவரு… அவருடைய பிள்ளை நான்… உனக்கு பிரின்சிபில்… என்னிக்கும் எப்பவும் அப்பாவ மாத்தாதடா… பீ திங்கற பன்னி மாதிரி என்ன அடிச்சு அடிச்சு விரட்டுனாங்க… ஓடி ஒளிஞ்சுப் போய்டன்னா… அப்றம் எது அவசியம்னு தெரிஞ்சிக்கிட்டு பேய் மாதிரி படிச்சேன்… அன்னைக்கு என்ன அடக்கனம்னு நினைச்சவன்லா இன்னிக்கு ஐயா சாமின்னு கும்புட்றான்… உங்கப்பாவ பாத்ததால நான் சொல்றேன்… உன்ன சுத்தி நடக்குற எல்லா விஷியத்தையும் மீறி என்னை மாதிரி நீயும் ஜெயிச்சு வருவன்னு நான் நம்புறேன்… இத மனசுல வச்சிக்கிட்டு உனக்கு என்ன தோனுதோ செய்… ” – “பரியேறும் பெருமாள்” படத்தில் வரும் இந்த வசனத்தை நாம் அவ்வளவு எளிதில் மறக்கப் போவதில்லை. காரணம் அது மாரி செல்வராஜின் எழுத்தாக இருந்தாலும் அதை ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதியும் வகையில் வலி கலந்த உணர்ச்சியுடன் பேசிய அந்த குரலுக்கும் மிக முக்கியமான பங்கு உண்டு.
முதலில் பூ ராமைப் பற்றி பார்ப்போம். அவர் பல வருடங்களாக, மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்க கூடிய வீதி நாடகங்கள், புரட்சி நாடகங்கள் போன்றவற்றை செய்து வருகின்றார். சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் பற்றியும், அவர்கள் தொடர்ந்து இந்த முதலாளித்துவ ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாக்கப் பட்டுக்கொண்டே இருக்கும் விதத்தை தோலுரித்துக் காட்டுவது, இந்திய நாடு எந்தெந்த நாடுகளுக்கு அடிபணிந்த நாடாக இருக்கிறது என்பதனை எளிய மக்களுக்கு விளக்குவது என்கிற நோக்கங்களை அடிப்படையாக வைத்து இவர் மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்க கூடிய வகையில் நாடகங்களை இயற்றி நடித்துள்ளார். “அன்பே சிவம்” படத்தில் முதலாளித்துவம் மற்றும் அது சார்ந்த கொள்கைகள், தொழிலாளிகள் ஏமாற்றப்படும் விதம் அவர்கள் தங்களுடைய உரிமைகளை கேட்டு வாங்கக்கூடிய விதம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து கதை அமைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட படத்தில் வருகின்ற வீதி நாடகம் முழுக்க முழுக்க “பூ ராமு” அவர்களின் எண்ணத்தில் இருந்து உருவானவை. அதற்கு முன்பு வரை அந்த மாதிரி வீதி நாடகம் மற்றும் களத்தில் இறங்கி போராட கூடிய “தோழர்”, இந்த இரண்டு விஷயங்களும் அன்பே சிவம் படத்தில் இல்லாமல் இருந்தது. அந்த சமயத்தில்தான் வீதி வீதியாக சென்று ஏழை மக்களுக்கு புரியும்படி கலைத் தன்மையுடன் மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றியும் முதலாளித்துவம் பற்றியும் சுரண்டல் பற்றியும் வீதி நாடகம் அரங்கேற்றி கொண்டு இருந்த போது “பூ ராமு” அவர்களைப் பற்றி கமல் கேட்டு தெரிந்து கொள்கிறார்.
“பயணம்” என்கிற தலைப்பில் ராமு அவர்கள் அந்த வீதி நாடகங்களை அரங்கேற்றி கொண்டு இருக்க, இந்த கலையை இன்னும் நான் என்னுடைய சினிமாவில் பயன்படுத்தாமல் இருக்கிறேன் அதனால், இந்த மாதிரியான கலையை என்னுடைய அன்பே சிவம் படத்தில் சேர்த்துக் கொள்கிறேன் இந்த வீதி நாடகம் குறித்த நடிப்பு பயிற்சியை முறையாக கற்றுத் தரும்படி ராமு அவர்களிடம் கமல் கேட்டுக்கொள்ள வீதி நாடகங்கள் மற்றும் அந்த மாதிரியான நாடகங்களின் நோக்கம் என்ன என்பது மக்களுக்கு பெரிய அளவில் போய் சென்றால் அது மென்மேலும் நன்மை பயக்கும் என்று பயணம் என்கிற அந்த நாடகத்தை அப்படியே அன்பேசிவம் படத்திற்கு கொடுத்துவிட்டு மேலும் அந்த வீதி நாடகம் வீதி நாடகத்தில் நடிப்பவர்கள் எப்படி எல்லாம் நடிப்பார்கள் என்பது குறித்து அந்தப் படக் குழுவினருக்கு பயிற்சி அளித்தவர் நம் பூ ராமு.
இப்படி மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக, எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி எந்தவித விளம்பரமும் இன்றி உண்மையான உணர்வுடன் களத்தில் இறங்கி போராடிக் கொண்டு இருக்கும் இந்த மனிதரை “பூ” திரைப்பட இயக்குனர் சசிகுமார், நீங்கள் கண்டிப்பாக என்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, நாடகங்கள் மட்டுமே தனக்கான கலை என்று நம்பிக்கொண்டு இருந்த ராமு அவர்கள் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். பேனா காரர் என்கிற கதாபாத்திரத்தில் தன் மகனை சிரமப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கும் ஒரு எளிய மனிதராக சாதாரண அப்பாவாக நடித்திருப்பார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழக மக்களின் உள்ளங்களை வென்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். காரணம் அவருடைய நடிப்பு அவ்வளவு யதார்த்தமாகவும் மக்களின் நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான தாகவும் இருந்தது. ஒரு சிலர் இந்த பேனா காரர் கதாபாத்திரம் அப்படியே எங்களுடைய அப்பாவை நினைவுக்கு கொண்டு வந்தது என்று சொல்லும் வகையில் அந்த கதாபாத்திரத்தை மிக சிறப்பாக நடித்திருந்தார் ராமு. பார்வதி, சசிகுமார், ஸ்ரீகாந்த் போன்றவர்களுக்கு இந்த படம் மிகப் பெரிய அளவில் பெயர் பெற்று தர .இந்தப் படத்தில் அப்பாவாக நடித்து இருந்த ராமு அவர்கள் “பூ ராமு” என்கிற அடையாளத்தை பெற்றார். “பூ” படத்திற்காக சிறந்த குணசித்திர நடிகர் (தமிழ் ஊடகங்கள் விருது) என்கிற விருதும் ராமு அவர்களுக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து இயக்குனர் ராம் அவர்களின் இரண்டாவது படமான தங்க மீன்கள் படத்தில் கல்யாணி என்கிற மகனுக்கு ராமு அப்பாவாக நடித்து இருந்தார். “பூ” படத்தில் பேனா காரராக தொழிலாளியாக நடித்திருந்த “ராமு” இந்தப்படத்தில் நல்லாசிரியர் விருது வென்ற ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியராக நடித்திருந்தார். “பூ” படத்தில் தன் மகனுக்கு நல்ல வேலை போட்டுத் தரும்படி கெஞ்சும் அப்பாவாக நடித்திருக்கும் ராமு இந்த படத்தில் சரியான வேலைக்கு சென்று சரியான வருமானம் பெற முடியாமல் அலைந்து கொண்டிருக்கும் தன் மகனை கண்டிக்கும் அப்பாவாக நடித்திருப்பார். உன் மகளை நீ தான் படிக்க வைக்கணும் அது கூட முடியவில்லை என்றால் நீ எல்லாம் ஒரு அப்பனா என்று இயக்குனர் ராம் கன்னங்களில் பளார் பளாரென அறையும் காட்சி அவ்வளவு வலி நிறைந்ததாக இருக்கும். இதைத் தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி அவர்களின் இயக்கத்தில் உருவான “நீர்ப் பறவை” படத்தில் தனது முந்தைய படங்களைப் போலவே ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சரியாக வேலைக்கு செல்லாமல் வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் விஷ்ணுவிஷால், நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று அடித்துக்கொள்ளும் ஒரு மனிதராக, விஷ்ணு விஷாலை தொடர்ந்து துரத்தி துரத்தி அடித்துக்கொண்டே இருக்கும் மனிதராக, விஷாலுக்காக வேலை கேட்டு அலையும் மனிதராக நடித்திருப்பார் ராமு. இப்படி அவர் நடித்த முதல் மூன்று படங்களிலுமே தன்னுடைய மகனை நினைத்து வருத்தப்படும் ஒரு அப்பாவாக நடித்து இருந்தார். இதுபோல இயக்குனர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் உருவான நண்பன் படத்தில் விஜய் வசந்த் என்கிற பொறியியல் கல்லூரி மாணவனுக்கு, கிராமப்புறத்தில் வாழும் ஒரு அப்பாவாக நடித்து இருப்பார் ராமு. சிவப்பிரகாசம் என்கிற கதாபாத்திரத்தில் கிராமப்புறத்தில் கோழிப்பண்ணை வைத்திருக்கும் ராமு தன் மகனை பொறியியல் பட்டதாரி ஆக்கி பார்க்க வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால் கல்லூரி முதல்வர் சத்யராஜ் உங்கள் மகன் கோழி மேய்ப்பதற்கு தான் லாய்க்கு என்று சொல்லிவிட ராமு உடைந்து அழும் இடம் அவ்வளவு வலிகள் நிறைந்ததாக இருக்கும்.
மிகக் குறைந்த அளவில் மட்டுமே படங்களில் நடித்திருந்தாலும், அவர் நடித்திருக்கும் இந்த அப்பா கதாபாத்திரங்கள் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான அப்பாக்களின் நிலைமையை அப்படியே உண்மையாக பிரதி பலித்ததால், அவர் நம் மனதில் ஆழமாக அப்பா என்கிற தோற்றத்துடன் பதிந்துவிட்டார். அதைத் தொடர்ந்து இயக்குனர் ராமின் பேரன்பு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வந்து செல்வார். மனநல வளர்ச்சி இல்லாத மகனுக்கு அப்பாவாக நடித்திருப்பார். மன நல காப்பகத்தில் உங்கள் மகனை அடிக்கிறார்களே என்று மம்முட்டி கேட்க, அடிச்சாலும் அவன் பத்திரமான இடத்துல இருக்கானே இதே வெளியே விட்டா ரோட்டுல கண்ட இடத்திலும் சுத்துவான் போறவன் எல்லாம் கல்லெடுத்து அடிப்பான் அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லி மனதை தேற்றிக் கொள்ளும் அப்பாவாக நடித்து இருப்பார் ராமு. இப்படியே தொடர்ந்து அப்பா கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த பரியேறும் பெருமாள் படத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் கல்லூரி பிரின்சிபாலாக நடித்து இருப்பார். அதிலும் குறிப்பாக அவர் தான் வளர்ந்த விதத்தை சொல்லும் இடம் நிறைய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாக இருந்தது.
ரூம்ல போய் தூக்கு போட்டு சாவுறதுக்கு பதிலா, சண்டை போட்டு சாகுறது எவ்வளவோ மேல்…, மற்றவனை அடக்க முடியாது என்று நினைக்கும் நீங்கள் இவனை மட்டும் ஏன் அடக்கணும் அடங்கிப் போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்… என்று ராமு பேசும் வசனங்கள் தியேட்டரில் அவ்வளவு கைதட்டல்களும் விசில்களையும் பெற்றன. இதைத்தொடர்ந்து “நெடுநல்வாடை” என்கிற சின்ன படத்தில் தாத்தாவாக நடித்திருப்பார். இந்தப் படத்தின் உயிரே நடிகர் ராமு அவர்கள் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் நடிப்பு அவ்வளவு பிரமாதமாக இருந்தது. இயக்குனர் சசிகுமாரின் “பூ” படத்திற்கு பிறகு கிராமத்தில் வேதனைப்படும் ஒரு எளிய மனிதராக நெடுநல்வாடை படத்தில் வாழ்ந்திருப்பார். “நெடுநல்வாடை” படத்தின் போஸ்டர்களில் கூட ஹீரோ ஹீரோயின்களின் படங்களை பெரிதாக போடாமல் நடிகர் ராமு அவர்களின் படத்தை தான் முதன்மையாகவும், பெரிதாகவும் போட்டு படத்திற்கு விளம்பரப்படுத்தினர். இவர் நடித்த பூ, தங்கமீன்கள், நீர்ப்பறவை, பேரன்பு, பரியேறும் பெருமாள், நெடுநல்வாடை போன்ற படங்கள் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்ட படங்களாகவும் சர்வதேச விருதுகளை வென்ற படங்களாகவும் இருக்கிறது. எளிய மக்களின் வலிகளை உணர்ந்த ஒரு நாடகக் கலைஞன் சினிமா கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் போது அந்த சினிமா படைப்புகள் மேலும் தரமானதாக வலிமையானதாக மாறி மாறி போவதற்கு பூ ராம் அவர்கள் நடித்த மேற்கண்ட படங்கள் நல்ல உதாரணம். இப்படி தமிழின் ஆகச் சிறந்த திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் அதற்குப் பிறகு சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயல்படாமல் மீண்டும் பழையபடி தன்னுடைய பயணத்தை வீதி நாடகங்கள் மூலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார், எளிய மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் இன்றும் கூட தெருவில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார் பூ ராமு.
Be the first to comment on "பூ ராமு” – நம் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு உன்னதக் கலைஞன்"