இரா. பார்த்திபன் ஒரு பார்வை! – காந்தியே ஆட்சி செய்தாலும் நம் நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் தீர்வுக்கு வராது!

about Director Parthiepan

இப்போது வரும் இளம் தலைமுறையினர் ஏதாவது ஒரு சின்ன விஷயத்தில் வெற்றி பெற்றுவிட்டாள், ஏதோ அவர்கள் பெரிய சாதனையை படைத்து விட்டது போல், உடனடியாக அடுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். நான் கடந்து வந்த பாதை என்று அதற்குள் ஒரு சுய வரலாறு எழுத ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கிய இயக்குனர் பார்த்திபன் கடந்த 30 ஆண்டுகளாக சினிமா துறையில் நடிகராக இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதான் முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கியாச்சே, இனிமேல் எதற்கு இப்படி அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்று இல்லாமல் ஒவ்வொரு காலகட்டத்தின் போதும் சினிமா துறையில் சாதிக்கும் இளம் சாதனையாளர்களை பார்த்து வியந்து அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு அவர்களிடம்  போட்டி போடும் முனைப்புடன் ஓடிக் கொண்டிருக்கிறார். ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் “மேயாத மான்” மற்றும் “ஆடை” திரைப்பட இயக்குனர் ரத்ன குமார், இயக்குனர் பார்த்திபனை பார்த்து நாங்கள் இந்த காலகட்டத்தில் இரண்டு படங்கள் வெற்றிப் படங்களாக தருவதற்கே சிரமப்படுகிறோம். ஆனால் இயக்குனர் பார்த்திபன் ஒரு இயக்குநராக நடிகராக இத்தனை வருடங்கள் சினிமா துறையில் தனித்தன்மையுடன் விளங்குவது வியப்பாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். 

அப்படி அவர் இவ்வளவு வருடங்கள் தனித்தன்மையுடன் விளங்க என்ன காரணம்? என்று யோசித்து பார்த்தால் அவருடைய சிந்தனைத் திறன் தான். எப்படி அவரால் தொடர்ந்து புதிய புதிய விஷயங்கள் குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்க முடிகிறது என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டும், புதிய புதிய விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டும், யாரும் பேச நினைக்காத விஷயங்களை எடுத்து வெளியே பேச பேசிக்கொண்டும்… இருப்பவர்களுக்கு இந்த பொது சமூகம் கிறுக்கன் என்கிற ஒரு பட்டம் கொடுத்து விடும். அப்படிப்பட்ட கிறுக்கன்கள் பேசுவதை எப்போதாவது ரசிக்கலாம், எதிர்பாராத தருணங்களில் ரசிக்க முடியும், ஆனால் எந்நேரமும் அவர்களுடைய உரையை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க முடியாது. கேட்கும் நமக்கு எரிச்சல் ஆகிவிடும். ஐயோ இவனா, இவன் ஏதாவது வித்தியாசமா பண்றேன் என்கிற பெயரில் தாலியை அறுப்பானே என்று அவனை பார்த்து விலகி வந்து விடுவோம். அப்படிப்பட்ட விமர்சனங்கள் இயக்குனர் பார்த்திபன் மீது ஆரம்ப காலம் முதல் இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் எத்தனை விமர்சனங்கள் வந்த போதிலும் அவர் தன்னுடைய தனித்தன்மையான தொடர்ந்து புதிய விஷயங்கள் குறித்து சிந்திப்பதும் அது குறித்து பேசுவதையும் நிறுத்தவே இல்லை. 

நிறைய பேர் லொட லொட என்று எந்நேரமும் பேசிக் கொண்டே இருக்கும் தன்மை உடைய மனிதர்களாக இருப்பார்கள். ஆனால் அப்படி பேசுபவர்களின் வார்த்தைகளில் எந்த ஒரு பயனும் பொருளும் இருக்காது. பேச வேண்டுமே என்று பேசுவார்கள், அல்லது சுற்றியிருப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக தன்னை ஒரு அறிவாளியாக காட்டிக்  கொள்வதற்காக பேசித் தீர்ப்பார்கள். ஆனால் தீவிர சிந்தனை யாளர்களும் வாசிப்பாளர்களும் படைப்பாளிகளும் அந்த மாதிரி லொட லொட என்று பேசும் போது அவர்களை அறியாமலேயே வாயிலிருந்து வரும் வார்த்தைகள்

எக்கச்சக்க வாழ்க்கை தத்துவ மொழிகளாக, வசனங்களாக உருமாறி வெளியே வருகின்றன. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான மாஸ் படத்தில் பார்த்திபன் ஒரு சில காட்சிகளில் மட்டுமே போலீஸாக வந்து செல்வார். அப்படி சில காட்சிகளில் வந்தாலும் அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் கடுகுபோல் பட்டு பட்டென தெறிக்கும். அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது வெங்கட் பிரபுவும் நடிகர் சூர்யாவும் ஒன்று சேர்ந்து சொன்ன வார்த்தைகள்: 

பார்த்திபன் சார் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போதெல்லாம் கலகலவென்றும் எனர்ஜி ஆகவும் இருக்கும். உட்கார்ந்து தீவிரமாக யோசித்து எழுத கூடிய வசனங்கள் எல்லாம் அவர் ஆன் தி ஸ்பாட்டில் அசால்டாக அடித்து தள்ளுவார். படம் முடியும் வரை நாங்கள் அவர் பேசிய வசனங்களை எல்லாம் பார்த்து வியந்து கொண்டே இருந்தோம் என்று வெங்கட் பிரபுவும் சூர்யாவும் இணைந்து ஒரு சேர கூறினார். 

விஜய் டிவி நடத்தி வந்த விருது விழாவிற்கு  பார்த்திபன் வந்திருக்கிறார் என்றால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கண்டிப்பாக “சிறந்த வசனம்” என்ற விருதை அறிவிக்க அவர் மேடை ஏறி தன்னை ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக மாற்றிக்கொள்வார். கிட்டத்தட்ட எல்லா விருது மேடைகளிலும்  பார்த்திபனின் நிகழ்ச்சி தொகுப்பாளர் அட்ராசிட்டிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று கூட சொல்லலாம். அப்படி ஒருமுறை, விஜய் டிவி விருது விழாவில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்காக சிறந்த வசனகர்த்தா என்ற விருது வாங்கும்போது  அவர் சொன்ன வார்த்தைகள். என்னுடைய படைப்புகள் ஏற்கனவே தேசிய விருது வாங்கி இருக்கிறது. ஆனாலும் என்னுடைய புதிய முயற்சியான இந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. என்னுடைய முன்னோடியான கமல்ஹாசன் அவர்கள் கையில் இருந்து வாங்கும் இந்த விருதை நான் தேசிய விருதாக கருதிக் கொள்கிறேன் என்று பார்த்திபன் சொல்ல, கமல்ஹாசன் அதற்கு “தொடர்ந்து முயன்று கொண்டே இருங்கள்” என்று சொன்னார். அந்த வார்த்தை முழுக்க முழுக்க பார்த்திபனுக்கு அப்படியே பொருந்தும். எவ்வளவு வயதானாலும் “முயற்சி” என்கிற ஒரு விஷயத்தை பார்த்திபன் என்றைக்கும் கைவிட்டதாக தெரியவே இல்லை. அப்படி கமல்ஹாசனிடம் இருந்து விருது வாங்கிய பார்த்திபன் அந்த விருதை, “சமூக வலைதளங்களில் தொடர்ந்து புதிய புதிய கருத்துக்களை பதிவிடும் புதிய சிந்தனையாளர்கள் அனைவருக்கும் இதை நான் சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.   30 வருடங்களாக சினிமா துறையில் வெற்றிகரமான ஒரு மனிதனாக வாழ்ந்து வந்த போதிலும் இன்னும் அவர் வாடகை வீட்டில்தான் வசித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் வாடகை வீட்டில் வசிப்பதை ஏதோ ஒரு ஏழ்மை நிலையில் இருப்பதைப் போல எந்த இடத்திலும் அவர் சொல்லிக்கொண்டது இல்லை. இவ்வளவு ஆண்டுகள் நடிகராகவும் இயக்குனராகவும் சம்பாதித்த பணம் எல்லாம் என்ன ஆனது என்று கேட்டால் அந்தப் பணத்தை நான் மீண்டும் ஒரு புதிய சினிமா எடுப்பதற்காக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன் என்று தெரிவிப்பார். 

 “ஆடுகளம்” படத்தில் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் முதலில் பார்த்திபன் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் “ஆயிரத்தில் ஒருவன்” படத்திற்காக பார்த்திபன் முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரத்திமாக மாறி இருந்ததால் “ஆடுகளம்” படத்தை தவிர்க்க வேண்டியதாகி விட்டது. அவர் தவிரவிட்ட அந்த பேட்டைக்காரன் கதாபாத்திரம் தேசிய விருது வாங்கி இருந்தது. அதே சமயம்,  ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பார்த்திபன் நடித்த அந்த மன்னன் வேடத்தை வேறு யாருக்காவது பொருந்தி இருக்குமா? என்று யோசிக்க கூட முடியாத நிலையில் அந்த கதாபாத்திரத்தை அவ்வளவு சிறப்பாக செய்திருந்தார் இயக்குனர் பார்த்திபன். 

இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில், ஐயப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்காகவும் அவர் தயாராகிக் கொண்டு வருகிறார். ஒரு சில மேடைகளில் “புதிய சிந்தனையாளரான” பார்த்திபன் பல வருடங்களுக்கு முன்பு சொன்ன அதே வார்த்தைகளை திருப்பி சொல்லியது உண்டு. எல்லோரும் பார்த்திபன் ஜாலியாக பேசுவார் அர்த்தமாக பேசுவார் என்று நம்பிக் கொண்டிருக்கும் தருணத்தில் யாரும் எதிர் பார்க்காத மாதிரி கோபமாக நக்கலாக பேசி செல்வார். இப்படியும் பார்த்திபன் தன்னுடைய முகத்தை காட்டி இருக்கிறார். இன்னும் ஒரு சில மேடைகளில் அவர் பேசும் வார்த்தைகளை கேட்கும்போது அவர் பாராட்டுகிறாரா? கலாய்க்கிறாரா? கோபமாக பேசுகிறாரா? என்று எதுவுமே புரியாத படி இருக்கும். குறிப்பாக மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பார்த்திபன் பேசியது எந்தவிதமான பேச்சு என்று இன்றுவரை நிறைய பேருக்கு புரியவில்லை. அவர் உண்மையிலேயே விஜய்யையும் அவருடைய ரசிகர்களையும் பாராட்டினாரா அல்லது அவர்களை கலைத்தாரா என்று தெரியவில்லை. 

ரஜினி, கமல், விஜய், அஜித் யாராக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய நடிகராக எவ்வளவு பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் நிஜத்தில் என்ன நடந்தது என்பதை உண்மையாக சொல்லக்கூடிய, அவர்களை அறச்சீற்றத்துடன் விமர்சிக்கக் கூடிய ஒரு நபர் என்றால் அது கண்டிப்பாக பார்த்திபன் தான். மேடைகளில் அல்லது பேட்டிகளில்,  போகிற போக்கில் அவர் சொன்ன வார்த்தைகளில் வசனங்களில் ஆழமான அர்த்தம் பொருந்திய சில வசனங்கள் இங்கே: 

  1. ஃபீமேலாக பொறப்பதே மேல்.  லேடி ஆண்டாள் என்கிறார்கள் ஆண்டாள் என்பது ஏதோ இறந்த காலத்தைக் குறிப்பது போல் இருக்கிறது லேடி ஆளுகிறாள்.  ஒவ்வொரு வீட்டையும் ஒரு லேடி ஆளுகிறாள், ஒவ்வொரு மனிதனையும் ஒரு லேடி தான் ஆளுகிறாள். ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் எப்போது வந்து கொஞ்சம் பெண்மை இருக்கோ  அப்போதான் அவன்கிட்ட கருணை இருக்குனு அர்த்தம். எப்ப ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் தாய்மை இருக்கோ,  அப்போதுதான் அவன் மனுஷனாவே இருக்கான்னு அர்த்தம். அதுபோல ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும் இருந்தால்தான் ஒவ்வொருத்தரின் உள்ளே இருந்தும் மென்மையை வெளிப்படுத்த முடியும்.
  2. கோர்ட்டுக்கு பொய், உண்மை என்றெல்லாம் எதுவுமில்லை. சாட்சி தேவை அவ்வளவுதான்! 
  3. ஒரிஜினலாவே நாம பாசிட்டிவ் திங்க் பண்ணனும். ஏதோவொரு வகையில் ஒரிஜினலாக இருக்கணும்னு நினைப்பேன். 
  4. கடவுளை நம்பினோர் கைவிடப்படார். ஆனால் காதலை நம்பியவர்கள் அந்தக் கடவுளைக் கூட கைவிட்டுவிட்டு இயற்கையோடு இணைந்து  சந்தோஷமாக இருப்பார்கள். காதலிப்பதற்கு காதலனோ காதலியோ தேவை இல்லை, காதல் மட்டுமே போதுமானது! 
  5. இந்தியாவை காந்தியே ஆட்சி செய்தாலும் இந்தியாவில் உள்ள எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விட முடியுமா என்பது தெரியவில்லை.
  6. எந்த பிரச்சனையாக இருந்தாலும் மயிரே போச்சுன்னு விட்டு விடலாம் ஆனால் தலை மயிர் போறத மயிரே போச்சுன்னு விட்டுற முடியாது. 
  7. யார் வேண்டுமானால் ஆயிரம் படம் கூட எடுக்கலாம், ஆனால் “ஆயிரத்தில் ஒருவன்” மாதிரி ஒரு படம் யாராலும் எடுக்க முடியாது. 

எவ்வளவு வயதானாலும், “முயற்சி” செய்வதற்கு வயது தேவையில்லை என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கும் பார்த்திபன், அடுத்ததாக “சட்டப்படி காதலிக்கிறேன்” என்று ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அதே போல ஒரே ஷாட்டில் எடுக்கக் கூடிய ஒரு முழுநீளப் படத்தை இயக்க இருக்கிறார்

Related Articles

மனிதம் போற்றும் 3 Roses விளம்பரம்! vs மன... சமீபத்தில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்று வரும் இரண்டு விளம்பரங்களைப் பற்றி இங்கு பேச உள்ளோம். ஒன்று 3 Roses டீத்தூள் விளம்பரம் மற்றொன்று 5 Star சாக...
நீங்க சினிமாவில் கேமரா மேன் ஆக வேண்டுமா?... Technical DetailsClose up - காமிரா கிட்டத்தில் பார்ப்பது Close shot - கொஞ்சம் விலகிப் பார்ப்பது Two shot - இரண்டு தலைகள் Three Shot...
கமல் – கலையும் கலைசார்ந்த இடமும்! ... காதலா காதலாஇயக்கம்: சிங்கீதம் சீனிவாசராவ்நடிகர்கள்: கமல், பிரபுதேவா(ஓவியர்), ரம்பா & சௌந்தர்யா(ஓவியக்கல்லூரி மாணவிகள்)கதை: ஒரு பொய் பல...
உத்தர பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகாரி... உத்திரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னல் தாக்கி ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் . ஆறு பேர் காயமடைந்தனர்.நேற்று இரவு உன்னாவ் மாவட்டத்தின்...

Be the first to comment on "இரா. பார்த்திபன் ஒரு பார்வை! – காந்தியே ஆட்சி செய்தாலும் நம் நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் தீர்வுக்கு வராது!"

Leave a comment

Your email address will not be published.


*